Published:Updated:

இயற்கை முறையில் தர்பூசணிச் சாகுபடி! - ஊரடங்கு நேரத்தில் நேரடி விற்பனை!

தர்பூசணிச் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
தர்பூசணிச் சாகுபடி

மகசூல்

இயற்கை முறையில் தர்பூசணிச் சாகுபடி! - ஊரடங்கு நேரத்தில் நேரடி விற்பனை!

மகசூல்

Published:Updated:
தர்பூசணிச் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
தர்பூசணிச் சாகுபடி

கோடைக்காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்கும் பழ வகைகளில் முக்கிய இடத்தில் இருக்கிறது தர்பூசணி. குளிர்ச்சியும் நீர்ச்சத்தும் மட்டுமல்லாமல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நிறைவான வருமானத்தைத் தருகிறது. குறைந்த நாள்களில் மகசூல் கொடுக்கும் தர்பூசணியைச் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் திருச்சியைச் சேர்ந்த தினேஷ், தர்பூசணிச் சாகுபடி செய்து ஊரடங்கு காலகட்டத்திலும், இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகவே விற்பனை செய்து கணிசமான வருமானம் எடுத்திருக்கிறார்.

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது திருநெடுங்குளம். இந்தக் கிராமத்தின் கடைசிப்பகுதியில் இருக்கிறது தினேஷின் தோட்டம். அங்கு அறுவடை செய்த தர்பூசணிப் பழங்களை விற்பனைக்காக, வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

தர்பூசணியுடன் தினேஷ்
தர்பூசணியுடன் தினேஷ்


புன்னகையுடன் நம்மை வரவேற்றவர், ஒரு தர்பூசணிப் பழத்தை வெட்டி நம்மிடம் சாப்பிடக் கொடுத்தபடி பேசத் தொடங்கினார். “தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துல உள்ள ஏலகிரி கிராமம்தான் என்னோட சொந்த ஊரு. எங்க குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். ஆனால், சொல்லிக் கொள்ளும்படி வருமானம் இல்ல. இந்த நிலையில நான் ஐ.டி.ஐ படிச்சு முடிச்சுட்டு, இப்ப திருச்சி ‘பெல்’ நிறுவனத்துல வேலை பார்த்துட்டு வர்றேன். வேலை நேரம் போக, மீதி நேரம் வீணாகத்தானே போகுது, வேற ஏதாவது தொழில் செய்யலாம்னு தோணுச்சு. இது விஷயமா நண்பர்களிடம் பேசிக்கிட்டிருந்தப்ப, ‘இயற்கை விவசாயம் செய்யலாமே’னு ஆலோசனை சொன்னதோடு பசுமை விகடனையும் அறிமுகப்படுத்துனாங்க.

வழிகாட்டிய விவசாயிகள்

பசுமை விகடன் வாங்கிப் புரட்டிப் பார்த்தேன். அதுல திருச்சி வட்டாரத்துல வாழை விவசாயம் செய்யுற விவசாயியைப் பத்தின ஒரு கட்டுரை வந்திருந்துச்சு. அதைப் படிச்சு பார்த்தேன். அந்த விவசாயியின் முழு விவசாய முறையைப் பற்றித் தெளிவா போட்டிருந்துச்சு. திருச்சி மட்டுமல்லாம தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்ல 15 விவசாயிகளோட பண்ணையைப் பார்வையிட்டேன். அவங்களோட இயற்கை விவசாய முறையைப் பத்தியும் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். என்னோட குடும்பம், பாரம்பர்ய விவசாயக் குடும்பம். எனக்கும் விவசாயம் ஓரளவுக்குத் தெரியும். அதனால இயற்கை விவசாயத்துல இறங்க முடிவு செஞ்சேன்’’ தான் விவசாயியான கதையைச் சொன்னவர், தனது வேலையை முடித்துவிட்டுத் தொடர்ந்தார்.

தர்பூசணி
தர்பூசணி


‘‘இந்த 2 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தேன். பலதானிய விதைப்பு செஞ்சேன். தொழுவுரம், மண்புழு உரம் போட்டு முதல்ல மண்ணை வளப்படுத்தி வச்சேன். முதல் தடவை, ஒரு ஏக்கர்ல செடி முருங்கைச் சாகுபடி செஞ்சேன். தண்ணி பிரச்னையால சரியான மகசூல் கிடைக்கல. அப்படி இருந்தும் செலவு செஞ்ச தொகை திரும்பக் கிடைச்சுடுச்சு.

‘பருவம், சந்தை தேவையைத் தெரிஞ்சுதான் சாகுபடி செய்யணும்’னு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா சொன்னதைப்போல, கோடைக்காலத்துல எந்த விளைபொருளுக்கு நல்ல தேவை இருக்கும்னு தகவல்களைச் சேகரிச்சேன். பல விவசாயிகளிடம் பேசுனதுல வெள்ளரி, தர்பூசணி, முலாம் பழங்களைச் சாகுபடி செய்யலாம்னு யோசனை சொன்னாங்க. அதுல தர்பூசணிச் சாகுபடி செய்யலாம்னு எனக்குத் தோணுச்சு. ஒரு ஏக்கர்ல தர்பூசணிச் சாகுபடி செஞ்சு முழு அறுவடையையும் முடிச்சுட்டேன். அடுத்ததா, சின்னவெங்காயம் சாகுபடி செய்யுறதுக்கு நிலத்தைத் தயார் செஞ்சு வச்சிருக்கேன்” என்றவர், வருமானம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

வயலில் தர்பூசணி
வயலில் தர்பூசணி“ஒரு ஏக்கர்ல 12,600 கிலோ தர்பூசணிப் பழங்களை அறுவடை செஞ்சேன். அறுவடை வந்தபோதே, ஊரடங்கு உத்தரவு போட்டுட்டாங்க. என்ன செய்யுறதுனு தெரியாம தவிச்சுப் போனேன். நான் வேலை செய்யுற ‘பெல்’ நிறுவனத்துல வேலை பார்க்குறவங்களுக்குத் தனியா குடியிருப்பு இருக்கு. அங்க கிட்டத்தட்ட 3,000 பேருக்கும் மேல இருப்பாங்க. அங்க விற்கலாம்னு யோசிச்சு அதுக்கான அனுமதி வாங்கினேன். மினி வேன்ல பழங்களை ஏத்தி குடியிருப்பு வாசல், திருச்சியில அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்குற பகுதிகள்னு அப்படியும் இப்படியுமா ஒரு வழியா விற்பனை செஞ்சிட்டேன்.

‘‘தர்பூசணியை, கார்த்திகை, தை மாதப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். எந்தப் பட்டத்தில் விதையை ஊன்றுகிறோமோ, அதற்கு முதல் மாதத்தில் நிலத்தைத் தயார்ப்படுத்த வேண்டும்.’’


12,600 கிலோ... 1,39,200 ரூபாய்!

நல்ல பெரிய பழங்கள் 6,600 கிலோ. அதை ஒரு கிலோ 12 ரூபாய், அதைவிடக் கொஞ்சம் சிறிய பழங்கள் 6,000 கிலோ. அதை ஒரு கிலோ 10 ரூபாய் விலையில விற்பனை செஞ்சேன். முழு ஊரடங்கு போட்ட கடைசி ஒரு வாரத்துல பழம் விற்க முடியல. அதனால, 1,500 கிலோ பழங்கள்வரை பறிக்காம அப்படியே கொடிகளிலயே விட்டுட்டேன். மொத்தம், 12,600 கிலோ விற்பனைமூலம் 1,39,200 ரூபாய் வருமானம் கிடைச்சுது. மொத்த செலவு 69,500 ரூபாய் ஆச்சு. செலவுத் தொகைப் போக 69,700 லாபமா கிடைச்சுது. பறிக்காம, கொடியிலேயே விட்ட 1,500 பழத்தை ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செஞ்சிருந்தாலும், 15,000 ரூபாய் கூடுதல் வருமானமா கிடைச்சிருக்கும்’’ என்றவர் நிறைவாக,

“இந்த ஊரடங்கால விளைபொருளை விற்பனை செய்ய முடியாம எத்தனையோ விவசாயிங்க புலம்பிக்கிட்டு இருக்காங்க. அந்த நிலைமையில விற்று கையில கிடைச்ச இந்த வருமானத்தை ரொம்பப் பெருசா நினைக்கிறேன்” எனக் கூறினார்.

தொடர்புக்கு, தினேஷ்,

செல்போன்: 91503 18833

இப்படித்தான் தர்பூசணிச் சாகுபடி

இயற்கை முறையில் தர்பூசணிச் சாகுபடி செய்வது குறித்து தினேஷ் சொல்லிய தகவல்கள் பாடமாக இடம் பெறுகின்றன.

தர்பூசணிச் சாகுபடி
தர்பூசணிச் சாகுபடி

தர்பூசணியை, கார்த்திகை, தை மாதப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். எந்தப் பட்டத்தில் விதையை ஊன்றுகிறோமோ, அதற்கு முதல் மாதத்தில் நிலத்தைத் தயார்ப்படுத்த வேண்டும். 5 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒரு ஏக்கருக்கு 2 டிராக்டர் செறிவூட்டிய தொழுவுரத்தைக் கொட்டி, மீண்டும் ஒரு முறை உழவு செய்ய வேண்டும். ஓர் அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில், மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். பாத்தி எடுத்தவுடன், களைகளைக் கட்டுப்படுத்த மல்ச்சீங் ஷீட் அமைத்து, சொட்டு நீர்ப்பாசனத்தையும் அமைத்துவிட வேண்டும்.

பாத்தியில் ஒன்றேகால் அடி இடைவெளியில் ஒரு விதை ஊன்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு 400 கிராம் விதை தேவை. 400 மி.லி ஜீவாமிர்தத்தில், விதையைப் போட்டு 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதற்குப் பிறகு 15 நிமிடங்கள் நிழலான பகுதியில் உலர வைத்து, ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும். 5 முதல் 8 நாள்களில் விதையின் முளைப்பு தெரியும். 10-ம் நாளிலிருந்து, 15 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைச் சொட்டுநீரில் கலந்து விட வேண்டும். 20 முதல் 25-ம் நாளுக்கு மேல் கொடி வீசிப் படரத் தொடங்கும்.

15 மற்றும் 25-ம் நாளில், அதிக கிளைகள் வீசிப் பரவுவதற்காக 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அரப்புமோர்க் கரைசல் மற்றும் 100 மி.லி தேங்காய்ப்பால் கலந்து கொடியின் மீது தெளிக்க வேண்டும். 35 முதல் 40-ம் நாள்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். அப்போது, 10 சென்ட் பரப்பளவுக்கு 4 மஞ்சள் அட்டை என்ற கணக்கில், ஒரு ஏக்கர் முழுவதும் 40 மஞ்சள் அட்டைகளைக் கட்டித் தொங்கவிட வேண்டும். இதில், பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும். சாறு உறிஞ்சும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, 35 மற்றும் 45-ம் நாளில், 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் கரைசலுடன் 20 மி.லி, வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.

தர்பூசணி வயலில்
தர்பூசணி வயலில்


காய்களுக்கு வடிவம் கொடுக்கும் எருக்கன்

45-ம் நாளுக்கு மேல் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். அப்போது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ எருக்கன் செடி இலைகளைத் துண்டுதுண்டாக வெட்டி, ஒரு வாரம் ஊறவைத்து அதைச் சொட்டுநீரில் கலந்து பாய்ச்ச வேண்டும். இதனால், காய்கள் நல்ல வடிவத்தில் இருக்கும். 50 மற்றும் 60-ம் நாள்களில் ஒரு சணல் சாக்கில் தலா 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்குப் போட்டு 200 லிட்டர் தண்ணீரில், ஊற வைக்க வேண்டும். அடுத்தநாள் காலையில், அதில் தலா ஒன்றரை லிட்டர் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஒரு லிட்டர் மீன் அமிலம் ஊற்றி, நன்கு கலக்கி சொட்டுநீர் மூலம் விட வேண்டும்.

இலைக்கருகல் காணப்பட்டால், 10 லிட்டர் தண்ணீரில் தலா 200 மி.லி சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி கலந்து தெளிக்க வேண்டும். அதிலிருந்து 4 நாள்கள் கழித்து, 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி லிட்டர் அசோஸ்பைரில்லம் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டு நாள்கள் கழித்து 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி பாஸ்போபாக்டீரியா கலந்து தெளிக்க வேண்டும். அடுத்த 2 நாள்களில் 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் இலைக்கருகல் நோய் பாதிக்காது. கட்டுப்படுத்திவிடலாம்.

இலைக்கு அடியில் மாவுப்பூச்சிகள்போல, வெள்ளை நிறப்பூச்சிகள் காணப்பட்டால், 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி புளித்தமோர், 150 கிராம் சூடோமோனஸ் பொடியைக் கலந்து கரைத்துத் தெளிக்க வேண்டும். 60 நாளுக்கு மேல் அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். சந்தையில் தேவையைப் பொறுத்துத் தொடர்ந்து, 5 நாள்களுக்கு ஒரு முறையோ, 7 நாள்களுக்கு ஒருமுறையோ அறுவடை செய்யலாம்.

செறிவூட்டிய தொழுவுரம்

நிழலான பகுதியில் 2 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி வைக்க வேண்டும். 200 லிட்டர் பிளாஸ்டிக் டிரம்மில் தலா 3 கிலோ அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போபாக்டீரியா, 2 கிலோ நாட்டுச்சர்க்கரை போட்டு, அதில் 30 லிட்டர் தண்ணீர் ஊற்றித் தண்ணீர் போலக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தொழுவுரத்தின் மீது தெளித்துக் கலவையாக்க வேண்டும். தினமும் காலையில் கிளறிவிட்டு, சணல் சாக்குப் பைகளால் மூடி வைக்க வேண்டும். ஒரு வாரம்வரை அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். இதுதான் செறிவூட்டப்பட்ட தொழுவுரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism