Published:Updated:

``குற்றவாளிகளாக உள்ளே சென்றோம், விவசாயிகளாக வெளியே வருவோம்!” - நெகிழும் புதுச்சேரி சிறைவாசிகள்

அறுவடை செய்த காய்கறிகளுடன் சிறைவாசிகள்

”நாங்கள் அனைவருமே விவசாயிகளாக மாறிவிட்டோம். விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதால் இரவில் நிம்மதியாக தூங்குகிறோம். தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் எங்களுக்கு அரசு கருணையுடன் விடுதலை வழங்கினால் மீதி காலத்தை விவசாயம் செய்து கழிப்போம்.”

``குற்றவாளிகளாக உள்ளே சென்றோம், விவசாயிகளாக வெளியே வருவோம்!” - நெகிழும் புதுச்சேரி சிறைவாசிகள்

”நாங்கள் அனைவருமே விவசாயிகளாக மாறிவிட்டோம். விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதால் இரவில் நிம்மதியாக தூங்குகிறோம். தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் எங்களுக்கு அரசு கருணையுடன் விடுதலை வழங்கினால் மீதி காலத்தை விவசாயம் செய்து கழிப்போம்.”

Published:Updated:
அறுவடை செய்த காய்கறிகளுடன் சிறைவாசிகள்

புதுச்சேரி காலாப்பட்டில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனை பெற்ற சிறைவாசிகள் சுமார் 300 பேர் இருக்கிறார்கள். அவர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்கும், தண்டனைக் காலம் முடிந்து வெளியே செல்லும்போது சுயதொழில் செய்து குடும்பத்தை நடத்து வதற்கும் பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்து வருகிறது புதுச்சேரி யூனியன் பிரதேச சிறைத்துறை. அந்த வகையில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த ‘ஶ்ரீ அரபிந்தோ சொசைட்டி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் குறைந்தபட்ச தண்டனை பெற்றவர்களுக்கும், ஆயுள் தண்டனை பெற்றுப் பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் சிறைவாசிகளுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை அளித்து வருகிறது சிறைத்துறை.

பாரம்பர்ய விவசாயம்
பாரம்பர்ய விவசாயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்காகச் சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி புதர்மண்டிக் கிடந்த அந்த இடத்தை இரண்டே வாரத்தில் சீரமைத்து, மண்ணை உழுது, பாத்திகள் பிரித்து, தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்து அசத்தியிருக்கிறார்கள் சிறைவாசிகள். அதேவேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 60 வகைப் பழச் செடிகள், 50 வகை மூலிகைச் செடிகளையும் நட்டு இயற்கை விவசாயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இதுகுறித்து 25.04.2022 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் சிறைவாசிகளின் அனுபவங்களுடன் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் நேற்று முன் தினம் நம்மை தொடர்புகொண்ட சிறைத்துறை உயரதிகாரிகள், “எங்கள் சிறைவாசிகள் பாரம்பர்ய விவசாயத்தில் அறுவடையை தொடங்கிவிட்டார்கள். அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். வர முடியுமா?” என்று கேட்க, உடனே வருகிறோம் என்று கூறிவிட்டு மறுநாள் காலையிலேயே சிறையில் ஆஜரானோம். நாம் வருகிறோம் என்றதும் சிறைத்துறை ஐ.ஜி.ரவிதீப் சிங் சாகரும், சிறைவாசிகளுக்கு பாரம்பர்ய விவசாய பயிற்சியை அளித்த முன்னோடி விவசாயி வெற்றிச்செல்வனும் அங்கு வருகை தந்தனர்.

சிறையில் விவசாயம்
சிறையில் விவசாயம்

மூன்று மாதங்களுக்கு முன்பு மண்ணை உழுது, பாத்திகள் பிரித்து, நடவு செய்யப்பட்டிருந்த அந்த இடம் தற்போது, முழுமையான விவசாய பண்ணையாக மாறியிருந்தது. ஆளுயரத்திற்கு வளர்ந்து நின்ற சூரியகாந்தி செடிகளில் உள்ளங்கை அகலத்தைவிட இரண்டு மடங்கு அதிகமான அளவில் பூத்து நிற்கின்றன பூக்கள். பூத்துக்குலுங்கிய சாமந்திப் பூக்களும், காய்த்து தொங்கிய கத்திரி மற்றும் வெண்டைக்காய்களும் நம்மை பிரமிக்க வைத்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்களை ஊக்கப்படுத்தியதற்காக பசுமை விகடனுக்கும், அதன் வாசகர்களுக்கும் மகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்தார்கள் சிறை விவசாயிகளாக மாறிவிட்ட சிறைவாசிகள். அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் அவர்களின் உழைப்பை வெளிப்படுத்தின. நம்மிடம் பேசிய சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர், “புதர் மண்டிக் கிடந்த இடத்தை விவசாய நிலமாக மாற்றிய எங்கள் சிறைவாசிகள், பாரம்பர்ய விவசாயத்தைக் கற்றுக்கொண்டு அதில் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

சிறைத்துறை ஐ.ஜி ரவிதீப்சிங் சாகர்
சிறைத்துறை ஐ.ஜி ரவிதீப்சிங் சாகர்

ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி தன்னார்வ அமைப்பின் துணையுடன் எங்கள் சிறைத்துறை ஐ.ஜி ரவிதீப் சிங் சாகர் முன்னெடுத்த முயற்சியால் முழுநேர விவசாயிகளாக மாறி நிற்கிறார்கள் எங்கள் சிறைவாசிகள். 1,000 சாமந்தி செடிகளை நட்டிருந்தோம். இதுவரை அதிலிருந்து சுமார் 600 கிலோவுக்கு தரமான சாமந்திப் பூக்களை அறுவடை செய்திருக்கிறோம். இந்த அளவுக்குப் பெரிய, தரமான சாமந்திப் பூக்களை நான் இதுவரை சந்தைகளில் பார்த்ததில்லை. சந்தையில் கிடைப்பதைவிட கிலோவுக்கு 5 ரூபாய் நாங்கள் குறைவாகவே விற்பனை செய்கிறோம். அதேபோல இதுவரை சுமார் 400 கிலோ கத்திரிக்காயை அறுவடை செய்திருக்கிறோம். ஒரு கத்திரிக்காயில் கூட பூச்சிகள் கிடையாது. இந்த கத்திரிக்காய்கள் அவ்வளவு சுவையாக இருக்கிறது.

எங்கள் சிறைவாசிகள் அதில் சூப் வைத்து குடிக்கிறார்கள். முள்ளங்கியைப் பொறுத்தவரை வெறும் 300 கிராம் விதைகளைத்தான் போட்டோம். இதுவரை 150 கிலோ முள்ளங்கியை அறுவடை செய்திருக்கிறோம். அதேபோல 1 கிலோ வெண்டை விதையை போட்டோம். 100 கிலோ வெண்டைக்காயை அறுவடை செய்திருக்கிறோம். இன்னும் அறுவடை செய்வோம். பச்சைப் பயிரை பொறுத்தவரையில் ஒரு அறுவடைக்கு 10 முதல் 15 கிலோ கிடைக்கிறது. அன்னாசி, கருணைக் கிழங்கு போன்றவையும் நன்றாக வளர்ந்து வருகின்றன. பலபயிர் சாகுபடியில் 67 பயிர்களை நட்டிருக்கிறோம். அடுத்தடுத்த நாட்களில் அவற்றிலும் அறுவடையை ஆரம்பிப்போம். கடந்த மூன்று மாதங்களில் இங்கு பெற்ற அனுபவத்தில், தற்போது சிறை வளாகத்திலேயே வேறொரு இடத்தில் ஒன்னே முக்கால் ஏக்கர் பரப்பளவில் யார் துணையும் இன்றி பாரம்பர்ய விவசாயத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

அறுவடை செய்த காய்கறிகளுடன் சிறைவாசிகள்
அறுவடை செய்த காய்கறிகளுடன் சிறைவாசிகள்

அதற்காக அந்த மண்ணை தயார் செய்து 60 படுக்கைகளை அமைத்திருக்கிறார்கள். அதிலும் அவர்கள் வெற்றிபெறுவார்கள்” என்கிறார் நம்பிக்கையுடன். ”புதுச்சேரி சிறைத்துறை இதுவரை குற்றவாளிகளை உருவாக்கும் தொழிற்சாலையாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது எங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல அதிகாரிகளின் முயற்சியால் சிறைச்சாலை விவசாய பண்ணையாக மாறியிருக்கிறது. இனி நாங்கள் அனைவருமே விவசாயிகள். விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதால் இரவில் நிம்மதியாக தூங்குகிறோம். தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் எங்களுக்கு அரசு கருணையுடன் விடுதலை வழங்கினால் மீதி காலத்தை விவசாயம் செய்து கழிப்போம்” என்கின்றனர் சிறை விவசாயிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism