Published:Updated:

Farmers Protest: `வேளாண் சட்டங்கள் வாபஸ் ஆகும் வரை போராட்டம் தொடரும்!' - விவசாயிகள் உறுதி

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்

40 விவசாயச் சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு, மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள் ஆறு மாதங்கள் ஆகியும் வெயில், மழை, கொரோனா என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு விவசாயச் சங்கங்கள் டெல்லி - பஞ்சாப் எல்லையில் கூடாரங்களை அமைத்துப் போராடிக்கொண்டிருக்கின்றன.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்கிறது. அதோடு, நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதையொட்டி சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் அமைப்பு, இன்றைய நாள் 26-ம் தேதியை, கறுப்பு தினமாக அனுசரித்து வருகிறது. டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் அழைப்பை ஏற்று, இன்றைய நாள் நாடு முழுவதும் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் மூன்று விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் வீடுகள், வாகனங்களில் கறுப்புக் கொடி ஏற்றிக் கறுப்பு தினத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.மு.க, காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளும் விவசாயிகளுக்குத் தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. தமிழக விவசாயிகளும் கறுப்புக் கொடி ஏந்தி விவசாயிகளுக்கு ஆதரவை வழங்கி வருகிறார்கள்.

டெல்லி சிங்கு எல்லையில் உள்ள விவசாயப் போராட்டக் களத்தில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங்கிடம் பேசினோம். ``மே 26-ம் தேதியைக் கறுப்பு நாளாகக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாள் வாகனங்கள், வீடுகள் என அனைத்திலும் கறுப்புக் கொடி கட்டி எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து கொண்டு இருக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்கள். மத்திய அரசு இதுவரை எங்களது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை. மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை டெல்லி போராட்டம் தொடரும்" என்றார்.

ரஜ்விந்தர் சிங்
ரஜ்விந்தர் சிங்

40 விவசாயச் சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு, மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு