Published:Updated:

`ஆரோக்கியம் மட்டுமல்ல, சுறுசுறுப்பும்கூட!' - மாயம் செய்யும் மாயன் கீரை; அப்படி என்ன ஸ்பெஷல்?

``இப்ப கிரீன் டீ பிரபலமாகிட்டு வருது. அதிக பணம் கொடுத்துக் கிரீன் டீ சாப்பிடுறதுக்குப் பதிலா மாயன் கீரையை 5 - 6 இலைகளைத் தண்ணியிலப் போட்டுக் கொதிக்க வெச்சு, வடிகட்டி டீ மாதிரி குடிக்கலாம். இது ஒரு நாள் முழுக்க நம்மைச் சுறுசுறுப்பா இயங்க வைக்கும்." - பிரியா

கீரைகள் இயற்கை அளித்துள்ள அருட்கொடை. உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறது மருத்துவம். அந்த வகையில் பல்வேறு கீரைகள் நமது ஊரில் பயன்பாட்டில் இருக்கிறது. ஆரோக்கியம் மட்டுமல்லாமல் நாள் முழுக்க சோர்வு இல்லாமல் உழைக்கக்கூடிய ஒரு வகை கீரையை மெக்ஸிகோவில் உள்ள மாயன் பழங்குடிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். உடல் வலிமை, நோய் எதிர்ப்புச் சக்தி, ஆரோக்கியம் கொடுக்கும் அந்தக் கீரை, அந்தத் தொல்குடிகளின் பெயரால் மாயன் கீரைகள் என்று அழைக்கப்படுகிறது. இன்றைக்கு உலகின் பல பகுதிகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்காக அந்தக் கீரையைப் பயன்படுத்திவருகிறார்கள். நமது அண்டை மாநிலமான கேரளாவில் மாயன் கீரைகள் மிகவும் பிரபலம். தமிழகத்திலும் மாயன் கீரை பயன்பாட்டில் இருக்கிறது. அதை 500-க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொடுத்து வளர்க்கச் செய்ததுடன், அது தொடர்பான விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த `விதைத்தீவு' பிரியா ராஜ்நாராயணன்.

பிரியா
பிரியா

மாயன் கீரைகள் பற்றிப் பிரியாவிடம் பேசினோம். ``இந்தக் கீரையில இருக்குற சத்துக்கள்ல வைட்டமின் சி, 2 வது இடத்துலயும், கால்சியம் 5வது இடத்துலயும், இரும்பு சத்து 6வது இடத்துலயும் இருக்கு. பீட்டா கரோட்டீன், ஆன்டி ஆக்சிடென்டும் அதிக அளவுல இருக்கு. அதனால இந்தக் கீரையைச் சாப்பிடறதால ரத்த அணுக்கள் அதிகமாகும்.

ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவும் அதிகமாகுதுன்னு சொல்றாங்க. ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி கீரையே போதுமானது. பொதுவா கீரை சமைக்கிற மாதிரியே இதைச் சமைக்கலாம். கசப்புத்தன்மை எதுவும் இருக்காது. இலையை உடைக்கும்போது பால் வரும்.

மாயன் கீரை
மாயன் கீரை
முடங்கிய இணையதள சர்வர்; சம்பா பயிர் இன்ஷூரன்ஸ் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்; உதவுமா அரசு?

அதுனால இலையைச் சுத்தமா கழுவாம பயன்படுத்தக் கூடாது. அதே மாதிரி சமைக்காம பச்சையா சாப்பிடக் கூடாது. இலையைச் சின்ன சின்னதா நறுக்கி, வழக்கமான கீரையை சமைக்குற மாதிரியே சமைக்கலாம். பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டு செய்துச் சாப்பிடலாம். இதோட இலையை மட்டும்தான் பயன்படுத்தணும். காம்பைப் பயன்படுத்தக் கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்ப கிரீன் டீ பிரபலமாகிட்டு வருது. அதிக பணம் கொடுத்துக் கிரீன் டீ சாப்பிடுறதுக்குப் பதிலா மாயன் கீரையை 5 - 6 இலைகளைத் தண்ணியிலப் போட்டுக் கொதிக்க வெச்சு, வடிகட்டி டீ மாதிரி குடிக்கலாம். இது ஒரு நாள் முழுக்க நம்மைச் சுறுசுறுப்பா இயங்க வைக்கும். இதை நான் அனுபவத்துல உணர்ந்திருக்கிறேன். அந்த டீயில கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும்போது, அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும்.

பயிற்சியளிக்கும் பிரியா
பயிற்சியளிக்கும் பிரியா

இதைச் சூப் செஞ்சும் குடிக்கலாம். அதிக புத்துணர்ச்சி கிடைக்கும். இது, எப்பேர்ப்பட்ட விஷகாய்ச்சலையும் மட்டுப்படுத்தும். இந்த மரக்கீரையை கால்நடைகளுக்குத் தீவனமா கொடுக்கலாம். இலையை நிழல்ல காய வெச்சு, பொடி பண்ணி, மீன், கோழி தீவனத்திலும் கலந்து கொடுக்கலாம்.

இந்தக் கீரையை வீட்டுத்தோட்டத்திலேயே வளர்க்கலாம். அதிகபட்சமா 12 அடி உயரம் வரைக்கும் வளரும். ஆனா, உயரமா வளர விடாம, நாம கீரைகளைப் பறிச்சிட்டு, கிளைகளை உடைச்சி விடலாம். இதோட கிளைகளைக் கையால உடைச்சாலே உடைஞ்சிடும். வீட்டுத்தோட்டமே இல்லைன்னு சொல்றவங்கக்கூட ஒரு பழைய 20 லிட்டர் வாட்டர் கேனை வெட்டி அதுல மண் கலவையைப் போட்டு இதை வளர்க்கலாம். மரவள்ளி மாதிரி, இதோட குச்சியை மண்ணுல நட்டு வெச்சாப் போதும். தன்னால முளைக்கும்.

மாயன் கீரை
மாயன் கீரை
சான்றிதழ் கேட்கும் விவசாயிகளிடம் ₹100 கேட்ட வி.ஏ.ஓ; வைரலாகும் லஞ்சம் பெறும் வீடியோ!

நிழல், வெயில் பிரச்னை இல்ல. எந்த இடமா இருந்தாலும் வளரும். கேரளாவுல இந்தச் செடிகளை நர்சரியில விற்பனை செய்றாங்க. நம்ம ஊர்ல இலவசமாகவே கிடைக்குது. என்னோட வீட்டுத்தோட்டத்தைப் பார்க்க வர்றவங்களுக்கு மாயன் கீரை குச்சிகளை உடைச்சு கொடுத்து விடுவேன். ஒரு சின்னக் குச்சி போதும். உங்க வீட்டுலயும் மாயன் கீரையை வளர்க்கலாம். பயன்படுத்தலாம். சுறுசுறுப்பா ஆரோக்கியமா இருக்கலாம்'' என்றார் பிரியா.

தாவரவியல் பெயர் : Cnidoscolus aconitifolius.

பொதுப்பெயர் : Mayan spinach, Tree spinach, Chayaman

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு