பிரீமியம் ஸ்டோரி
கொரோனா என்ற கோவிட்-19 தடைக்காலத்தில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுவான முன்னெச்சரிக்கைகள் குறித்தும், கறவை மாட்டுப் பண்ணையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறார், நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் அகிலா.

‘‘கோடைப் பருவத்தில் நெல் தரிசு வயலிலுள்ள பயறு வகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் வராமல் தடுப்பதற்கு முறையான வெள்ளை ஈ மேலாண்மை முறைகளைப் பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பயிர் விதைகளும் தனியார் விதை நிறுவனங்களின் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும். விதை நிறுவனங்கள் விவசாயிகளுக்கு அனைத்து விதைகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை 180 நாள்கள் வரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலுள்ள சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்கலாம். இதற்கு 30 நாள்கள் வரை வாடகை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நெல்
நெல்

விவசாயிகள் விளை பொருள்களின் சந்தை மதிப்பில் 75 சதவிகிதம் அல்லது ரூபாய் 3 லட்சம் வரை (எது குறைவானதோ) கடனாகப் பெறலாம். கடனைத் திருப்பிச்செலுத்தும் காலம் 180 நாள்கள்; அவற்றில் முதல் 30 நாள்களுக்கு ஐந்து சதவிகிதம் வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். அழுகும் பொருள்களைச் சேமிக்க விவசாயிகள் குளிர் சேமிப்புக் கிடங்கு வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கால்நடைகள், கோழி, மீன், முட்டை, இறைச்சி, கால்நடை, கோழித் தீவனம் ஆகியவற்றின் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது” என்றவர், பயிர் சாகுபடிக்கான ஆலோசனைகள் குறித்துப் பேசினார். “நிலக்கடலை மற்றும் எள் பயிர்கள் முதிர்ச்சியடைந்து அறுவடையாகும் நேரத்தில் உள்ளன. நிலக்கடலையை ஆட்கள் மூலம் அறுவடை செய்த பிறகு இயந்திரத்தைக் கொண்டு காய்களைப் பிரித்தெடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது தனிநபர் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உபகரணங்களை முறையாகச் சுத்தம் செய்வதை உறுதிசெய்ய வேண்டும். பயறு வகைப் பயிர்கள் முதிர்ச்சிப் பருவத்திலிருந்து அறுவடை பருவம் வரை உள்ளன. ஆட்கள் மற்றும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்கள் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அறுவடை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றவர் இறுதியாக, கொரோனா நோய்த் தாக்கத்தால் நிலவிவரும் தடைக்காலத்தில், கறவை மாட்டுப் பண்ணையாளர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்துப் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘பண்ணையில் புதிய ஆட்களைச் சேர்க்கக் கூடாது. கால்நடைகளைத் தாக்கும் கிருமிகள் மாடுகளை அண்டாத வண்ணம் மாட்டுக் கொட்டகையைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மாடுகளுக்குத் தீவனம் அளிக்கும் முன்னரும் பின்னரும், பால் கறக்கும் முன்னரும் பின்னரும் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

கொரோனா நேரம்... விவசாயப் பணிகளில் எதைச் செய்யலாம்?

பால்காரர்கள் மூலம் கறக்கும் போது அவர்களுக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, ஆரோக்கியமான பால்காரர்களை மட்டுமே பால் கறக்க அனுமதிக்க வேண்டும். புதிய பால்காரர்களை இந்தச் சமயத்தில் தேர்வு செய்யக் கூடாது. பால்கறக்கும் பாத்திரங்கள் மற்றும் பால் கறவை இயந்திரங்களை அடிக்கடிக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. கோடைக்காலத்தில் அதிக அளவு வெப்பம் கலப்பினக் கறவை மாடுகளைத் தாக்குவதால், அவற்றின் பால் உற்பத்தி குறைவது மட்டுமல்லாமல், அவை சினைப் பிடிப்பதில் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கறவை மாடுகளை வெப்பத்தின் தாக்குதலிலிருந்து தடுக்க வெப்பம் அதிகமுள்ள வேளைகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. வெப்பம் குறைவாக இருக்கும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கலப்புத் தீவனம் கொடுக்க வேண்டும். மாட்டுக் கொட்டகையைச் சுற்றி நிழல் தரும் மரங்கள் இருக்க வேண்டும். கொட்டகையின் கூரைமேல் தென்னங்கீற்றுகளைப் போட்டும், செயற்கை முறையில் நீர் தெளித்தும் வெப்பத்தைக் குறைக்கலாம்.

தீவனத்துடன் சிறிது வெல்லப் பாகைக் கலந்து கொடுத்தால் மாடுகளின் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும்.

குளிர்ந்த, தரமான குடிநீர் தொடர்ந்து மாடுகளுக்குக் கிடைக்குமாறு வசதி செய்ய வேண்டும். ஒரு மாட்டுக்கு 60-70 லிட்டர் குடிநீர் தினமும் வழங்க வேண்டும். பண்ணையின் பக்கவாட்டில் தண்ணீரில் நனைத்த ஈரமான சாக்குப்பைகளைக் கட்டித் தொங்கவிடலாம். காலை மற்றும் மதிய வேளைகளில் பால் கறப்பதற்கு முன்னர் மாடுகளைத் தண்ணீரால் கழுவிவிடலாம்.

மாடு
மாடு

மாடுகளைக் காற்றோட்டமான நிழலான இடத்தில் கட்ட வேண்டும். தினமும் ஒரு கறவை மாட்டுக்கு 40 கிராம் தாது உப்பு கலவையைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். மேலும், தினமும் ஒரு கறவை மாட்டுக்கு 30-50 கிராம் சமையல் உப்பையும் சேர்த்துக் கொடுக்கும்போது அவற்றை வெப்பத்தின் அயர்ச்சியிலிருந்து பாதுகாக்கலாம்” என்று ஆலோசனை வழங்கினார்.

கட்டாயம் செய்யணும் கோடை உழவு!

நாட்டையே முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனோ வைரஸ். இந்த ஊரடங்கு காலத்தில் பண்ணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் தருமபுரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் உதவி இயக்குநர் மதுபாலன்.

கொரோனா நேரம்... விவசாயப் பணிகளில் எதைச் செய்யலாம்?
‘’இந்தக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பணி கோடை உழவுதான்.

ஒவ்வொரு கிராமத்திலும் மாடுகள் மூலமோ, டிராக்டர் மூலமோ கோடை உழவு செய்தால், நிலங்களில் களைகளைக் கட்டுப்படுத்திவிடலாம்; பூமியில் இருக்கக்கூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்திவிடலாம். இதை எல்லோரும் சேர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இனிமேல் வரக்கூடிய கோடை மழையில் நாம் சாகுபடிக்குத் தயாராகிவிடலாம். தானியங்களைச் சேமிக்கும்போது அது கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ரசாயனங்களைப் போட வேண்டியதில்லை. வெயிலில் இரண்டு நாள்கள் காயவைத்து, தானியத்தில் வேப்பிலையைப் போட்டுச் சேமித்தாலே எந்தப் பூச்சியும் புழுவும் அண்டாது. துவரம் பருப்புக்கு செம்மண் கட்டும் முறையை நடைமுறைப்படுத்திக்கொள்ளலாம்.

தக்காளி அறுவடை செய்தவர்கள் அது விற்பனையாகாமல் அதிகம் தங்கிவிட்டால் அதில் ஊறுகாய், ஜாம், கெட்ச்அப் போன்றவற்றைத் தயார் செய்யலாம். இப்படி மதிப்புக்கூட்டி பொருள்களைச் சேமித்து வைக்கலாம். தென்னந்தோப்பில் கொப்பரைத் தேங்காய் கிடைத்தால், அந்தத் தேங்காயை உடைத்து கொப்பரையை எடுத்து, காயவைத்துச் சேமிக்கலாம். முன்புதான் விவசாயிகள் மதிப்புக்கூட்டுவதற்கு நேரமில்லை என்று சொல்லிவந்தார்கள். இப்போது கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தக்காளி அறுவடை
தக்காளி அறுவடை

தென்னந்தோப்பு வைத்திருக்கும் விவசாயிகள், ஒரு தென்னை மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையில் குழிகளை வெட்டி அதில் காய்ந்த சருகுகள், தென்னை ஓலைகளைப் போட்டு மண் போட்டு அணைத்துவிடுங்கள். அப்படிச் செய்தால், வெயிலின் தாக்கம் தோப்பில் குறைந்துவிடும். மண்ணின் ஈரம் காக்கப்படும். அதனால் தென்னை மரங்கள் வாடாமலிருக்கும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு