Published:Updated:

முட்டிமோதும் விவசாயிகள், ஒடுக்கும் அரசு... டெல்லி போராட்டத்தில் என்ன நடக்கிறது? #DelhiChalo

``இதே கோவிட் 19 காலத்தில் பீகார் தேர்தல் நடந்தது, ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது... அப்போதெல்லாம் வராத கொரோனா, விவசாயிகள் போராட்டம் நடத்தினால் மட்டும் வந்துவிடுமா?"

கடந்த செப்டம்பர் மாதம் மூன்று வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. அப்போதே இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் பஞ்சாப் விவசாயிகள். அதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம்... அழைக்கிறோம்... என்று சொல்லியே விவசாயிகளுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி வந்தது. பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், பஞ்சாப் விவசாயிகளோடு இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து `டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை அறிவித்தன. அதன்படி நவம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் (நேற்றும் இன்றும்) டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று பஞ்சாபிலிருந்து வந்த விவசாயிகளை ஹரியானா மாநில அரசு தடுத்தது. தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர் புகைகுண்டு, தடுப்புகள் கொண்டு தடுத்தல் என்று விவசாயிகள் புதுடெல்லியை நோக்கி செல்வதைத் தடுத்து நிறுத்தியது. இது ஊடகங்களில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்

இந்நிலையில் அகிய இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் டெல்லி பொறுப்பாளர் கலோனல் ஜெய்விர் சிங் பேசியபோது, ``இந்தியா முழுவதும் ஐந்நூற்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் களத்தில் நிற்கிறோம். இன்னும் லட்சக்கணக்கான விவசாயிகள் வந்து கொண்டிருக்கின்றனர். புதுடெல்லியைச் சுற்றியுள்ள ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பி.ஜே.பி கட்சி ஆளும் மாநிலங்கள். இந்த மாநிலங்கள் விவசாயிகளை டெல்லிக்கு செல்வதைத் தடுக்கின்றன. தடுப்புகளை வைத்து தடுத்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடுக்கின்றன. நேற்று மீரட்டில் போராட்டம் நடத்தினோம். இன்றும் உத்தரப் பிரதேச மாநில எல்லை வழியாக டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

பஞ்சாப் விவசாயிகள் ஹரியானா மாநிலம் எல்லை வழியாக வந்து கொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி எங்களை டெல்லிக்குள் அனுமதித்தே தீர வேண்டும். எங்களிடம் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ராம்லீலா மைதானத்துக்குள் விவசாயிகளை அனுமதித்து அங்கேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மூன்று விவசாய மசோதாக்கள், மின்சார சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றைப் பற்றி விவாதித்தே தீர வேண்டும். புதுடெல்லியில் 144 தடை உத்தரவு போட முயற்சி நடக்கிறது. அதை அனுமதிக்கக் கூடாது.

தடுத்து நிறுத்தும் போலீஸார்
தடுத்து நிறுத்தும் போலீஸார்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை குறைந்தபட்ச ஆதார விலைதான். அதையே நீர்த்து போக செய்துவிடும் இந்தச் சட்டங்கள். விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் வேலையை சத்தமில்லாமல் செய்து வருகிறது மத்திய அரசு. ஏற்கெனவே விவசாய விளைபொருள்களை கொள்முதல் செய்ய மண்டிகள் இருக்கின்றன. இதற்க பைபாஸ் ரூட்டாக தற்போதைய சட்டங்கள் உள்ளன. நானே கரும்பு விவசாயிதான். ஒப்பந்தத்தின் மூலம் படும் அவஸ்தையை நேரடியாக உணர்ந்து வருகிறேன். அப்படியிருக்கும்போது ஒப்பந்தப் பண்ணைய சட்டத்தின் மூலம் என்ன நன்மை விவசாயிகளுககு விளைந்துவிடும்? இத்தனை நாள்கள் மாநிலங்களுக்குள்ளேயே போராடிக் கொண்டிருந்தோம். இனியும் தாமதிக்கக் கூடாது என்றே இந்தப் போராட்டம். விவசாயிகளின் பலத்தை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்கு இதுவொரு வாய்ப்பாக அமையும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அகிய இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, ``கோவிட் 19-ஐ காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு தடுக்கப் பார்க்கிறது. இதே கோவிட் 19 காலத்தில் பீகார் தேர்தல் நடந்தது, ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது... அப்போதெல்லாம் வராத கொரோனா, விவசாயிகள் போராட்டம் நடத்தினால் மட்டும் வந்துவிடுமா? எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், விவசாயிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தை முடக்கிவிடலாம் என்று நினைக்கிறது மத்திய அரசு.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டத்தை நடத்துகின்றனர் என்று பி.ஜே.பி கட்சியினர் சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அந்தப் பலம் இருந்திருந்தால் அவர்கள் தேர்தலிலே வென்று ஆட்சியைப் பிடித்திருப்பார்களே? யாருடைய தூண்டுதலும் இல்லாமல் 550 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.

நெல், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருள்களை மண்டிகள், கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசே குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது. இதில் கார்ப்பரேட் கம்பெனிகளை அனுமதித்தால், அரசு கொள்முதல் செய்யும் விலைக்கு கம்பெனிகள் கொள்முதல் செய்யுமா? படிப்படியாக தனியார் நிறுவனங்களை அனுமதித்து, மொத்த கொள்முதலையும் தனியாரிடம் விடுவதுதான் மோடியின் திட்டம். கொள்முதல் செய்வதெல்லாம் தனியாரிடம் போய்விட்டால், எதிர்காலத்தில் ரேஷன் கடைகளே இருக்காது. தற்போது அரசு கொள்முதல் செய்யும் நெல், கோதுமை அனைத்தும் பொது விநியோக திட்டத்தின் மூலம் விளிம்பு நிலை மக்களுக்கும், வறுமையில் உள்ள மக்களுக்கும், பொருளாதார நிலையில் பின்தங்கியவங்களுக்கும் வழங்கப்படுகிறது. இனி, கார்ப்பரேட் கம்பெனிகள் வந்துவிட்டால் விளிம்பு நிலை மக்களுக்கு அரிசியும் கிடைக்காது, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையும் இருக்காது. பொது மக்கள் இதை எண்ணி விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷனின் உற்பத்தி செலவோடு 50 சதவிகித விலை வைத்து விளைபொருளை கொள்முதல் செய்ய வேண்டும். அதை அரசே செய்ய வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டுக்கு தஞ்சாவூர் நெற்களஞ்சியமாக இருப்பதுபோல், இந்தியாவுக்கு பஞ்சாப் நெற்களஞ்சியமாக இருந்து வருகிறது. வீரம் மிகுந்த மக்களிடமிருந்து இந்தப் போராட்டம் கிளர்ந்தெழுந்திருக்கிறது. மூன்று மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், படுக்கையோடு போராட்ட களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

பஞ்சாப் மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநில விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு கைவிட வேண்டும். அனைத்துப் பொருள்களுக்கும் குறைந்த ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்றார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
வேளாண் மசோதாக்கள்... அரசு விளம்பரங்கள் சொல்லும் பொய்களும், உண்மையும்!

இந்நிலையில் புராரி பகுதியில் உள்ள நிரன்கரி மைதானத்தில் விவசாயிகள் அமைதியாக போராட்டங்களை நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்குமா அல்லது விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கட்டும் என்று வேடிக்கை பார்க்குமா என்பது போக போகத்தான் தெரியும். விவசாயிகளின் இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால் விவசாயிகள் விடுவதாக இல்லை என்பது மட்டும் இந்தப் போராட்டங்களின் மூலம் உணரும் பாடம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு