கால்நடை
நாட்டு நடப்பு
Published:Updated:

எருமைகளுக்கு மரியாதை... கர்நாடகாவில் களைகட்டும் கம்பளா போட்டி!

கம்பளா போட்டியில் எருமைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பளா போட்டியில் எருமைகள்

பழைமை

ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சு விரட்டு போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே நமக்கு சிலிர்ப்பும், பெருமித உணர்வும் மேலோங்கும். கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான இந்த வீர விளையாட்டுகள் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன.

இதே போன்றதொரு வீர விளையாட்டான கம்பளா போட்டி, கர்நாடக மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படத்தில் இந்த கம்பளா போட்டி இடம்பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த கம்பளா பற்றிய தேடல் அதிகரித்துள்ளது.

தக்‌ஷின கன்னடா என்று அழைக்கப்படும், அரபிக் கடலோர கர்நாடகா மற்றும் இதையொட்டி யுள்ள கேரள மாநில பகுதிகளிலும் இப்போட்டி மிகப் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.

கம்பளா போட்டி
கம்பளா போட்டி

கம்பளா போட்டியை கண்டு களிக்க, கர்நாடக மாநிலம் மங்களூரு அடுத்த, தக்‌ஷின கன்னடா மாவட்டத் துக்குச் சென்றோம். இந்தப் போட்டி நடைபெறும் ஹோக்கடிஹோலி கிராமத்தில்... திரும்பிய பக்கமெல்லாம் பிரமாண்ட கட் அவுட்டுகள்... சேற்று நீர் நிறைந்த களத்தில் சீறிப்பாய்ந் தோடும் கிடா எருமைகளோடு அதை ஓட்டி வரும் வீரர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. கம்பளா போட்டி நடைபெறுவதால் இந்த ஊர் முழுவதும் திருவிழா கோலத்தில் காட்சியளித்தது. ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன... விதவிதமான தின்பண்டங்கள், பாரம்பர்ய மட்டை அரிசியில் சமைக்கப்பட்ட உணவு வகைகள், பொம்மைகள் விற்பனை எனக் களைகட்டியிருந்தது.

ஆங்காங்கே டென்ட் கொட்ட கைகள்... அருகில் சென்று பார்த்தால், உடல் முழுதும் எண்ணெய் தேய்க்கப்பட்ட கிடா எருமைகள்... அடர் கறுப்பு நிறத்தோடும், கட்டுக்கோப் பான உடல்வாகோடும் கம்பீரமாகக் காட்சி அளித்தன. தங்களுடைய மாடுகளுக்குக் கொள்ளு ஊட்டி விட்டுக்கொண்டிருந்தார் விவசாயி ஒருவர். இப்படியாக அனைத்து டென்ட் கொட்டகைகளிலுமே கம்பளா போட்டிக்காக எருமைகள் தயாராகிக்கொண்டிருந்தன. ‘கம்பளா டிராக் எல்லிதே (எங்கே)?’ என, கன்னடத்தில் அவர்களிடம் பேசி, போட்டி நடக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு களத்தை அடைந்தோம்.

கம்பளா போட்டியில் பங்கேற்கும் எருமைகள்
கம்பளா போட்டியில் பங்கேற்கும் எருமைகள்

சுமார் 5 மீட்டர் அகலம், 140 மீட்டர் தூரத்துக்கு இரண்டு டிராக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பள்ளம் பறிக்கப்பட்டுச் சேற்று நீர் நிரப்பப் பட்டிருந்தது. இதில்தான் போட்டியாளர் தன்னுடைய கிடா எருமையை வேகமாக இழுத்துக் கொண்டு ஓட வேண்டும். எத்தனை நொடிகளில் எல்லைக் கோட்டை அந்த மாடு சென்றடைந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய நவீன சென்சார் கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன.

போட்டி தொடங்குமிடத்தில்... அலங்கரிக் கப்பட்ட எருமை மாடுகளோடு விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி இயற்கையையும் மஞ்சுநாத சுவாமியையும், மனமுருக வணங்கினர். துளு மக்களின் பாரம்பர்ய இசைக்கருவிகளான் கொரகா டோலு, கொம்பு இசைக்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

கம்பளா போட்டி
கம்பளா போட்டி

இங்கு அமைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கி யில் பட்டரே... (சும்மா விடு...) என வர்ணணையாளரின் குரல் சத்தமாக ஒலித்ததும், இங்கு கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களும் கரவொலி எழுப்பினர். வீரர்கள் தங்களுடைய எருமை மாடுகளை வேகமாக இழுத்துக்கொண்டு ஓடினர். சேறு நிறைந்த பள்ளம்... 140 மீட்டர் தூரம்... ஆனாலும்கூட எருமைகள் சீறிப் பாய்ந்தோடி, 13 - 16 விநாடிகளில் இலக்கை அடைந்தன. எருமைகள் என்றாலே சோம்பேறிகள் என்ற தவறான கருத்து இங்கு தவிடுபொடியாகிறது. இதைத் தவிர, இன்னும் இரண்டு விதமான போட்டிகள் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தின. வீரர், தன்னுடைய ஒரு கையில் கலப்பை யையும், இன்னொரு கையில் எருமையையும் பிடித்து இழுத்துச் செல்லுதல்... சேற்றுநீரில் மிதக்கும் பலகையின் மீது வீரர் ஏறி நின்று, தனக்கு முன்னால் எருமையை நிறுத்தி, வேகமாக ஓட்டிச் செல்ல வேண்டும். இந்தப் போட்டிகள் நம்மை மெய் சிலிர்க்க வைத்தன. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் இரவு-பகலாக நடைபெற்ற இப்போட்டிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கிடா எருமைகள் கலந்துகொண்டன. மிகவும் குறைவான நேரத்தில் இலக்கை அடைந்த எருமைகளுக் கும், இவற்றைத் திறமையாகக் கையாண்ட வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இப்போட்டிகளைக் கண்டுகளித்தனர்.

போட்டியைக் காண வந்திருந்த விவசாயி சஞ்ஜீவ ஷெட்டி குண்ட்யாருவிடம் பேச்சு கொடுத்தோம். ‘‘பல நூறு வருஷத்துக்கும் மேல கம்பளா போட்டி நடந்துட்டு வருது. ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாசம் பெய்யுற மழையைப் பயன்படுத்தி, கடலோர கர்நாடகா, இதை ஓட்டியுள்ள கேரள மாநில கிராமங்கள்லயும் நெல் நடவுப்பணிகள் நடக்கும்.

கம்பளா போட்டி ஏற்பாடுகள்
கம்பளா போட்டி ஏற்பாடுகள்

நெல் சாகுபடியில எந்தப் பிரச்னையும் ஏற்படாம நல்ல மகசூல் கிடைக்கணும், கால்நடைங்க நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா இருக்கணும்னு இயற்கை யையும், கத்ரி மஞ்சுநாத சுவாமியையும் (சிவன்) வேண்டி இந்தத் திருவிழாவை கொண்டாடுவோம். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியெல்லாம், இங்க பருவ மழை துவங்குற டிசம்பர் மாசம், இந்த விவசாயிகள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஒரே நாள்ல ஒற்றுமையா ஆயிரக்கணக்கான ஏக்கருல நெல் நடவு செஞ்சு திருவிழாவைத் தொடங்கினாங்க.

திருவிழா தொடங்குன முதல் நாளுல இருந்து கிட்டத்தட்ட, 90 நாள்கள் வரைக்கும் தக்‌ஷின கம்பளா போட்டி நடத்திக்கிட்டு வந்தாங்க. அந்தக் காலத்துல போட்டிகள்ல ஜெயிக்கிறவங்களுக்குத் தேங்காய், அரிசினு விளைபொருள்கள் பரிசா வழங்கப்பட்டுச்சு. அந்த வழக்கம் இப்ப வரைக்கும் தொடர்ந்து கிட்டு இருக்கு.

இந்த உலகம் எவ்ளோதான் நவீனமா மாறினாலும், இன்னமும் உற்சாகம் குறையாம, கம்பளா போட்டியை நடத்துறோம். ஒவ்வொரு வருஷமும், டிசம்பர் – பிப்ரவரி வரைக்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல விடிய விடிய இந்தத் திருவிழா நடக்குது.

சில வருஷங்களுக்கு முன்னாடி, இந்தியா முழுக்கவே கால்நடைகள் தொடர்பான இது மாதிரியான போட்டிகளுக்கு நீதிமன்ற தடை விதிச்சப்ப... தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டுக்கு போராடுன மாதிரி, இங்க நாங்களும் ரோட்டுல இறங்கி பல மாதங்கள் தொடர்ச் சியா போராடினோம். 2017-ம் கம்பளா போட்டிய நடத்துறதுக்கு அனுமதி கிடைச்சது. இந்த வருஷம் ரொம்ப சிறப்பா இந்தப் போட்டி நடந்துகிட்டு இருக்கு. கம்பளா போட்டி நடத்துறதுனால, எருமை மாடுகள் உற்சாகமடையுது’’ எனத் தெரிவித்தார்.

ஹக்கா கம்பளா, நெகிலு கம்பளா, அடடா ஹலகே...

பார்வையாளர்கள்
பார்வையாளர்கள்

‘‘மாடுகளோட வயசுக்கு ஏத்த மாதிரி, தனித் தனி பிரிவுகளாக இந்தப் போட்டிக்களை நடத்துறோம். ரெண்டு பல்லு, நாலு பல்லுனு எண்ணிக்கையைப் பார்த்து வயசை உறுதிப்படுத்திக்கிட்டு போட்டியில அனுமதிப்போம் மாடுகளைக் கயிறுல கட்டி, அதைப் பிடிச்சுட்டு இலக்கு நோக்கி ஓடுறது ஹக்கா கம்பளா. கயிறோட சேர்த்து சின்ன அளவுல இருக்கக் கலப்பைய இணைச்சு அத புடிச்சுட்டு ஓடுறது ‘நெகிலு கம்பளா. பலகை மேல நின்னுக்கிட்டு, மாடுகளை ஓட்டிக்கிட்டு போயி இலக்கை அடையுறது, அட்டா ஹலகே. பெரிய அளவிலான மரப்பலகையை அமைச்சு அதுல ஒத்தக்காலுல நின்னுட்டு, இன்னொரு கால மரக்குச்சியில வெச்சுட்டுப் போறது கானே ஹலகே. மரப்பலகையோட பக்கவாட்டு பகுதிகள்ல இருந்து எவ்ளோ உயரத்துக்குத் தண்ணீர் மேல எழும்புதோ, அதை வெச்சுதான் வெற்றியாளரை முடிவு பண்ணுவோம். 5 அடி உயரத்துக்கு மேல கூட தண்ணீர் எழும்பும். இதைத் துல்லியமா கண்டுபிடிக்க, டிராக்கோட ரெண்டு பக்கமும் துணி கட்டப்பட்டுருக்கு’’ என்கிறார் கம்பளா போட்டியின் கௌரவ ஆலோசகர் பாபு ராஜேந்திர ஷெட்டி அஜ்ஜாடி.

கல்யாண ஆல்பத்தில்
எருமை மாடுகள்

“இந்த எருமை மாடுகளை எங்களோட குடும்ப உறுப்பினர்கள் மாதிரி பார்த்துக்குறோம். இதுங்களும் எங்ககிட்ட ரொம்ப அன்பா இருக்கும். கல்யாண ஆல்பத்துலகூட, குடும்பப் போட்டோவுல இந்த மாடுகள் இருக்கும். தீவனத்தைப் பொறுத்தவரைக்கும் கொள்ளு, புண்ணாக்கு, பசுந்தீவனம் கொடுப்போம். நெல் அறுவடை செஞ்ச வயலுல தண்ணீரை நிரப்பியும், இல்லைன்னா, திடல்கள்ல சேற்றுநீரை நிறுத்தியும் வருஷம் முழுவதும், ஓடுறதுக்குப் பயிற்சி கொடுக்குறோம். போட்டியில மாடுகளை ஓட்டுற வீரர்களும் நல்லா ஆரோக்கியமா சாப்பிட்டு, தொடர்ந்து ஓட்டப்பயிற்சியில ஈடுபடுவாங்க’’ என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.