Published:Updated:

வண்ண வண்ண பிளாஸ்டிக் வலைக்குடில்கள்

வலைக்குடில்கள்
பிரீமியம் ஸ்டோரி
வலைக்குடில்கள்

சிறிய நுட்பம்... பெரிய லாபம்! - வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்! - 5

வண்ண வண்ண பிளாஸ்டிக் வலைக்குடில்கள்

சிறிய நுட்பம்... பெரிய லாபம்! - வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்! - 5

Published:Updated:
வலைக்குடில்கள்
பிரீமியம் ஸ்டோரி
வலைக்குடில்கள்

மிகச் சுலபமான, சிறிய வேளாண் தொழில்நுட்பங்கள் எப்படி மிகப்பெரிய மாற்றங்களையும் லாபத்தையும் கொடுக்கின்றன என்பதை உதாரணங்களுடன் சொல்லும் தொடர் இது. உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமான விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்.

பருவமில்லா பருவத்தில் பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து, கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இங்கே இடம் பெறுகிறது.

பிளாஸ்டிக் வலைக்குடில்களின் பக்கவாட்டுச் சுவர்கள் வலைகளாலும், மேற்கூரை பிளாஸ்டிக் மூடாக்குகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த மேற்கூரை வளைவு கூரைகளாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த வளைவுக் கூரையின் மையப்பகுதியில் நீளவாக்கில் ஓரடி அகலத்துக்கு வலைகளையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக் வலைக் குடில்களுக்குள் போதுமான காற்றோட்டம் கிடைக்கும். இந்த வலைகளும் காற்று மற்றும் பெருமழையால் சேதம் அடையும் அபாயம் இருக்கிறது. அதனால், முழுவதும் பிளாஸ்டிக் மூடாக்குகளால் மூடிவிட்டு, கூரையின் ஒன்றிரண்டு இடங்களில் காற்றிலேயே இயங்கும் உறிஞ்சு விசிறிக் காற்றுப்போக்கிகளை (Roof Exhaust Fan) பொருத்திக் கொள்ளலாம்.

இளஞ்சிவப்பு வண்ண பிளாஸ்டிக் வலைக்குடில்
இளஞ்சிவப்பு வண்ண பிளாஸ்டிக் வலைக்குடில்

இப்படி அமைக்கப்படும் பிளாஸ்டிக் வலைக்குடில்கள் சர்வசாதாரணமாக நான்கைந்து ஆண்டுகள் வரை எவ்வித சேதமும் அடையாமல் பலன் கொடுக்கும். அதனால் தைவானில் இந்தத் தொழில்நுட்பம் மளமளவெனப் பரவியது. இது ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு பயிர் விளைவிக்க ஏதுவானதாக இருக்கிறது. இன்றைக்கு, தைவானில் மட்டும் 30,000 ஏக்கர் பரப்பில் பிளாஸ்டிக் வலைக்குடில்களில் விவசாயம் நடைபெறுகிறது. தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் லாவோஸ் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் பரவலாக, இந்த பிளாஸ்டிக் வலைக்குடில் விவசாயத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. எனவே, அவையெல்லாம் பருவத்தை வென்று பயிர் உற்பத்தி செய்கின்றன. அதன் பலன் - விவசாயி களுக்கு நல்ல வருமானம்; நுகர்வோர்களுக்குத் தடையின்றிக் காய்கறி மற்றும் பழங்கள் கிடைப்பது.

வண்ண வண்ண வலைக்குடில்கள்

இந்த வலைக்குடில் தொழில்நுட்பத்தில் சமீபத்திய வரவு - வண்ண வலைக்குடில்கள். நிழல் வலைக்குடில்களில் பச்சை மற்றும் கறுப்பு வண்ண வலைகள் பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதேபோல வலைக்குடில்களில் பெரும்பான்மை யானோர் வெண்ணிற வலைகளைப் பயன்படுத்துவதையும் பார்த்திருக்கலாம். ஆனால், வலைக்குடில்களில் மற்ற வண்ணங்களில் வலைகள் என்பது மிகவும் அரிதாகவே இருந்தது. சமீபத்திய ஆய்வுகள், வேறு வண்ணத்திலான வலைகளைப் பயன்படுத்தினால், மகசூலில் பெரும் மாற்றங்கள் ஏதேனும் நடக்குமா? என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்டன. உதாரணத்துக்கு, மஞ்சள் நிற வலைகளைப் பயன்படுத்தும்போது, குடமிளகாயின் தரம் மேம்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இரண்டு அல்லது மூன்று நாள்களில் வாடி வதங்கிவிடும் மிளகாய், ஐந்தாறு நாள்களுக்கு வாடாமல் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும், இவ்வலைகளின் துளைகள் பெரிதாக இருப்பினும், பூச்சிகளால் பரவும் வைரஸ் நோய்களின் தாக்குதலும், பூஞ்சை நோய்களின் தாக்குதலும் குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. செந்நிற வலைகளைப் பயன் படுத்தும்போது, தக்காளிப் பழங்களின் தரம் கூடுவதால் நெடுந்தூரப் போக்குவரத்தில் சேதப்படாமல் சந்தைக்குக் கொண்டு வர முடிகிறது என்கிறது மற்றொரு ஆய்வு முடிவு.

வலைக்குடில்
வலைக்குடில்

தைவானிலும் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒருசில விவசாயிகள் இளஞ்சிவப்பு வண்ண வலைக்குடில்களை அமைத்துக் கீரை வகைகளைப் பயிரிட்டனர். கீரைச்செடிகள் பெரிதாக வளர்வதால், நல்ல விளைச்சல் கிடைக்கிறது என்றும் கூறினர். எனவே, நீண்ட பருவ காய்கறிகளான தக்காளி முதலானவற்றை, இந்த வண்ண வலைக்குடில்களில் பயிரிட இயலுமா என்ற ஆய்வை மேற்கொண்டோம். முதல் பருவத்தின் முடிவில், வெண்ணிற வலைக்குடில்களில் கிடைத்த தக்காளியின் மகசூலைவிட, இளஞ்சிவப்பு வண்ண வலைக்குடில்களில் இருமடங்கு மகசூல் கிடைத்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், இருவேறு வண்ண வலைக்குடில்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மகசூலே கிடைத்தது. மேலும், இளஞ்சிவப்பு நிறக்குடில்களுக்குள் சாம்பல் நோயின் தாக்கம் கூடுதலாக இருந்தது. எனவே, இன்னும் பலகட்ட ஆய்வை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையே அந்த ஆய்வு முடிவுகள் உணர்த்தின. இருப்பினும், இளஞ்சிவப்பு வண்ண வலைக்குடில்களில் வளர்க்கப்பட்ட தக்காளிச்செடியின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அப்படியானால், விரைவாக வளரக்கூடிய கீரை வகைகளைச் சோதித்துப் பார்த்தால் என்னவென்று தோன்றியது?

எனவே, கடந்த ஆண்டுக் கடுங்குளிர் காலத்தில் தண்டுக்கீரையை இந்தக் குடில்களுக்குள் வளர்த்துப் பார்த்தோம். என்ன ஆச்சர்யம்? திறந்தவெளி வயல்களில் வளர்க்கப்பட்ட கீரைச்செடிகள் அரையடி கூட வளரவில்லை. ஆனால், இளஞ்சிவப்பு வண்ண வலைக்குடில்களுக்குள் வளர்க்கப் பட்ட கீரைகள் அபரிமிதமாக வளர்ந்து, நல்ல மகசூலைக் கொடுத்தன. இந்த ஆய்வின் முடிவுகள் கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளன. இன்னும் பலகட்ட ஆய்வுக்குப் பிறகு, எந்தெந்தப் பயிர்களுக்கு என்னவிதமான வண்ண வலைக்குடில்கள் பொருந்தும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். அதுவரை, வெண்ணிற பிளாஸ்டிக் வலைக்குடில்களை அமைத்து, பருவமில்லா பருவத்தில் பயிர் சாகுபடியை நம்மால் சாத்தியமாக்கவும் அதிக லாபம் ஈட்டவும் முடியும். ஆனால், கீழ்க்கண்ட தகவல்களை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.

வலைக்குடில்
வலைக்குடில்

உங்களது பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற வகையிலான துளைகளைக் கொண்ட வலைகளைப் பயன்படுத்துவது அவசியம். தரமான வலைகளைப் பயன்படுத்த வேண்டும். அதில் உள்ள துளைகள் சீரான வரிசையிலும், எண்ணிக்கையிலும் இருக்கிறதா என்பதையும், வலை மற்றும் பிளாஸ்டிக் மூடாக்கு இரண்டும் புற ஊதாக்கதிர்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டவையா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வலைக்குடில்களின் நுழைவாயிலில் இரட்டைக் கதவுகள் அமைப்பதுதான் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து அதிகபட்ச பாதுகாப்பைக் கொடுக்கும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திறந்தவெளி வயல்களில் பயிரிட ஏதுவான பயிர்களை வலைக்குடில்களுக்குள் பயிரிடக் கூடாது. பருவமற்ற பயிர்களைப் பயிரிடுவதால் அதிக சந்தை விலைக்கு விற்று, பெரிய லாபம் அடையலாம்.

தரமான வலைகளைப் பயன்படுத்த வேண்டும். அதில் உள்ள துளைகள் சீரான வரிசையிலும், எண்ணிக்கையிலும் இருக்கிறதா என்பதையும், வலை மற்றும் பிளாஸ்டிக் மூடாக்கு இரண்டும் புற ஊதாக்கதிர்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டவையா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி

வலைக்குடில்கள் அமைப்பதற்கு அதிக பொருள்செலவு ஆகும் என்று கூறியிருந்தேன். பல்வேறு நாடுகளிலும் அதன் அரசுகள் விவசாயிகளுக்கு மானியங்கள், வங்கிக் கடனுதவிகள் போன்றவற்றை வழங்கி வருகின்றன. அப்படியானால், குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் ஓர் எட்டாக்கனியா என்ற கேள்வி எழும். இல்லவே இல்லை; அவர்களுக்கும் ஏற்ற வகையில் இந்தத் தொழில்நுட்பம் உருமாறியுள்ளது. எப்படி என்பதை வங்கதேசத்திலிருந்தும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் உதாரணங்களுடன் சொல்கிறேன்.

- வளரும்

பிளாஸ்டிக் வலைக்குடில்
பிளாஸ்டிக் வலைக்குடில்

வலைக்குடில் பிளாஸ்டிக்!

பிளாஸ்டிக் பயன்பாடு என்பது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், வலைக்குடில்களுக்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் மட்கக்கடிய பிளாஸ்டிக் (பாலி அமினோ அமிலங்கள், பாலிஹைட்ராக்சி பியூட்டிரெட், பாலிகேப்ரோ லேக்டோன், பாலிஹைட்ராக்சி அல்கனோயெட் மற்றும் பாலிலாக்டிக் அமிலங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்படுபவை) பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மட்கக்கூடிய பிளாஸ்டிக் வலைக்குடில் தயாரிப்பும் பயன்பாடும் ஒரு சதவிகிதத்துக்கும் கீழேதான் இருக்கின்றன. சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, அவற்றின் வணிகரீதியிலான தயாரிப்பை அதிகப்படுத்தப்பட வேண்டும். அதற்கு நிச்சயமாக அரசாங்கங்களின் முன்னெடுப்பும் ஒத்துழைப்பும் அவசியம்.