நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

புனுகுப் பூனையும் போலி கஸ்தூரியும்

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

"சொந்த ஊர் வேலூர் பக்கம். விடுமுறையில ஜவ்வாது மலைக்குப் போகப்போறேன். அப்படியே, ஜவ்வாது மரக்கன்றுகளும் கிடைச்சா வாங்கிட்டு வந்துருவேன். உங்களுக்குத் தெரிஞ்ச இடம் இருந்தா சொல்லுங்க..?’’

பசுமை ஆர்வலர்களில் பலரிடமிருந்து இப்படியான கேள்விகள் பல ஆண்டுகளாக வந்துகொண்டே இருக்கின்றன. ‘ஜவ்வாது மரத்துல கிடைக்காது ராஜா, புனுகுப் பூனையோட சுரப்பி’ என்று சொன்னால், பலரும் நம்புவதே இல்லை. அதுவும் எதைக் கேட்டாலும் தகவல்களை அள்ளிக் கொட்டும் கூகுள் தேடு பொறியில், ஜவ்வாது பற்றிய தகவல்கள் பலவிதமாக கொட்டிக் கிடக்கின்றன. அதில் எது மெய், எது பொய் என்று பிரித்துப் பார்க்க அதீத திறமை வேண்டும்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கேள்விக்கு விடை தேடி பல இடங்களில் அலைந்தோம். கடைசியில் வன உயிரினக் காப்பாளர் மற்றும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அப்போதைய துணை இயக்குநர் பத்தரசாமிதான், சரியான பதில் சொன்னார். அதைப் பசுமை விகடன் இதழில் வெளியிட்டிருந்தோம். மீண்டும், உங்கள் பார்வைக்கு இங்கே பகிர்கிறேன்.

‘‘ஜவ்வாது மலைக்கும், ஜவ்வாதுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஜவ்வாது, மரத்தில் கிடைப்பதில்லை. புனுகுப்பூனை என்ற விலங்கிடமிருந்துதான் நறுமணம் மிக்க ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது. காட்டில் திரியும் இந்தப் பூனையைக் கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில், தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப் பூனை அடிக்கடி தேய்க்கும். அந்தச் சமயத்தில் அதன் உடலிலிருந்து மெழுகு போன்ற பொருள் கம்பியில் ஒட்டிக்கொள்ளும். இதை ‘புனுகு’ என்பார்கள். இதனுடன் சந்தன பவுடரை கலந்துவிட்டால், ஆளை அசத்தும் வாசனை வீசும். இதுதான் ஜவ்வாது.

புனுகுப் பூனை
புனுகுப் பூனை

புனுகு எனும் நறுமணப்பொருள் ஆன்மிகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல் நலனையும் ஒருங்கே அடைய முடியும் என்கின்றனர் முன்னோர்கள்.

வனத்துறைச் சட்டப்படி இத்தகைய பொருள்களை விற்பனை செய்யத் தற்போது தடை அமலில் உள்ளது. இப்போது கடைகளில் கிடைக்கும் ஜவ்வாது பொருள்கள் பெரும்பாலும் செயற்கை யானவைதான். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்... போன்ற நாடுகளில் புனுகுப் பூனைகளை வளர்த்து ஜவ்வாது எடுக்கிறார்கள். ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். நம் ஊரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானதுதான். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இதைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.

புனுகுப்பூனைகள் காபிச் செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுகிறது. இந்தக் கொட்டைகளைச் சேகரித்துச் சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இது ‘சீவெட் காபி’ (Civet Coffee) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடனும் வாசனையுடனும் இருக்கும். தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில், புனுகுப் பூனைக் கழிவு காபி கொட்டை ஒரு கிலோ பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.’’

இதுதான் உண்மை. இணையவாசிகள் மொழியில் சொல்ல வேண்டுமானால், சரிபார்க்கப்பட்ட (Verified) தகவல். தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் புனுகுப் பூனைகள் இருக்கின்றன. அண்மையில்கூடச் சீர்காழிக்கு அருகில் உள்ள கிராமங்களில், கோழிக் குஞ்சுகளை விநோதமான ஒரு மிருகம் பிடித்துச் செல்கிறது என்று மக்கள் புகார் சொன்னார்கள். வனத்துறையினர் சென்று பார்த்தபோது, அது அரிய வகைப் புனுகுப்பூனை என்று ஆச்சர்யப்பட்டார்கள். உடனே, கூண்டு வைத்து பிடித்து அதைக் காட்டுக்குள் விட்டார்கள்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

இந்த வகையில் இன்னும் ஒரு தகவலும் உலா வருகிறது. ‘‘கஸ்தூரி என்ற செடியிலிருந்து நறுமணமிக்கப் பொருள் கிடைக்கிறது. அதைச் சிறிதளவு உடலில் பூசிக்கொண்டால் நாள் முழுக்க மணக்கும்.’’

‘கள்ளி வயிற்றி இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று

ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்

பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,

நல் ஆள் பிறக்கும் குடி?’


கள்ளிச்செடியில் உயர்ந்த பொருளான அகில் தோன்றும். மான் வயிற்றில் மணம் வீசக்கூடிய அரிதாரம் (கஸ்தூரி) பிறக்கும். கடலிலுள்ள சிப்பியில் ஒளி முத்து உருவாகும். இப்படி, சாதாரண உயிரினங்களில் உயர்வுடைய பொருள்கள் பிறக்கும். ஆகவே, மிகச் சிறந்த அறிவுள்ள மனிதர் எங்கே தோன்றுவார் என்பதை யார் அறிவார்? என்று இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு எழுதிய நான்மணிக்கடிகை பாடலில் கஸ்தூரி பற்றிய குறிப்புகள் உள்ளன.

கஸ்தூரி என்பது, இமயமலைப் பகுதிகளில் உள்ள மான்களில் சுரக்கும் நறுமணச் சுரப்பி. இரண்டாயிரம் கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து இதைத் தெரிந்துகொண்டேன். ஒரு முறை உத்தரப் பிரதேசம் மாநிலம், பரேலியில் உள்ள ஐ.வி.ஆர்.ஐ என்று அழைக்கப்படும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு (Indian Veterinary Research Institute - IVRI) சென்றிருந்தேன். இங்கிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்தால், இமயமலை அடிவாரத்துக்குச் சென்றுவிடலாம். கஸ்தூரி மான்கள் குறித்த ஆராய்ச்சியும் இங்கு நடைபெற்று வருகிறது. அங்குள்ள விஞ்ஞானிகளிடம் பேசியபோது, அது பற்றிப் பல சுவையான தகவல்களைப் பகிர்ந்தார்கள்.

புனுகுப் பூனை
புனுகுப் பூனை


‘‘இமயமலை சாரலில், கஸ்தூரி மான்கள் உள்ளன. இவை மலைப் பாறைகள் மேல் தாவிச் செல்லக்கூடியவை. சாய்வான மரத்தின் மீதும் ஏறி நடக்கக் கூடியவை. நாய், சிறுத்தை... போன்ற விலங்குகள் தன் வாழிடப் பரப்பை வரையறுத்துக்கொள்வதைப்போல, ஆண் கஸ்தூரி மானும், தான் வாழும் இட அளவை வகுத்துக்கொள்ளும். தன் உடலில் சுரப்பி வெளிப்படுத்தித் தன் எல்லையிலுள்ள பாறைகள், செடிகள், கொடிகள், மரங்களில் தடவி வைக்கும். இதன் மூலம் மற்ற மான்களுக் குத் தன் இடத்தை அறிவிக்கும். மேலும், ஆண் மான், பெண் மானைக் கவரவும் இந்தச் சுரப்பியை வெளியிடுவது வழக்கம்.

கொஞ்சம், விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஆண் கஸ்தூரி மானுடைய வயிற்றின் அடிப்பாகத்தில் ஒரு பை போன்ற உறுப்பு உள்ளது. அந்தப் பையில் வாசனை பொருள் சுரக்கிறது. அதுதான் கஸ்தூரி. சுகந்த நறுமணம் வீசும் பொருளான கஸ்தூரி, சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்தைக் கொண்டது. நறுமணப் பொருளாகவும் மருத்துவத்திற்காகவும் பயன்படுவதால் அதிக அளவில் கஸ்தூரி மான்கள் வேட்டையாடப்படுகின்றன. மான்களைக் கொன்று அதன் வயிற்றி லிருந்து கஸ்தூரி சுரப்பியைத் தனியாகப் பிரித்தெடுத்து அதை உலர வைப்பார்கள். உலர்ந்த பின் இதிலிருந்த நீர்பொருள் வற்றி, சிறு சிறு மணல் போன்ற வடிவம் பெறும். இன்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இதன் பாகங்கள், பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. கஸ்தூரி நறுமணத் திரவியம் ஒரு கிலோ 2 கோடி ரூபாய்க்கு மேல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப் படுகிறது. அப்படியென்றால், இதன் தேவை எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்’’ என்ற விஞ்ஞானிகள், ‘‘கஸ்தூரி பெயரில் போலியும் விற்பனை செய்யப்படுகின்றன. அதையும், உங்கள் பயணத்தில் பார்க்கலாம்’’ என்று சொல்லி முடித்தார்கள்.

டீர் மஸ்க்- Deer musk
டீர் மஸ்க்- Deer musk

இந்தச் சந்திப்பு முடிந்து, இமயமலைப் பகுதிக்குச் செல்லும்போது, குரங்கு குல்லாப் போட்டவர்கள் வழி நெடுக, ‘‘எங்களிடம் ஒரிஜினல் (டீர் மஸ்க்- Deer musk) கஸ்தூரி கிடைக்கும். ஒரு பை 1,000 ரூபாய்தான். வேறு எங்கும் கிடைக்காது. கடைகளில் 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்’’ என்று கொட்டாங்குச்சி வடிவிலிருந்த மான் தோல் பையைத் திறந்து காட்டினார்கள். சுமாராகக் கஸ்தூரி மணம் வந்தது.

இதற்கு முன்பு கஸ்தூரி மணத்தை நுகர்ந் திருந்தால் மட்டுமே, அது போலி என்று கண்டுபிடிக்க முடியும். பெரும் பாலானவர்கள் முதல் முறையாக அந்த மணத்தை நுகர்வதால், தனக்கு மட்டுமல்லாமல், சொந்தக் காரர்களும் நண்பர்களுக்கும்கூடப் போலி கஸ்தூரியை வாங்கிக் குவிப்பதைப் பார்க்க முடிந்தது. சுற்றுலா வரும் பயணிகளிடம் இப்படிப் போலியான கஸ்தூரி விற்பனை செய்வதைப் பரவலாகப் பார்க்க முடிந்தது. இந்திய வன விலங்கு சட்டப் படி, கஸ்தூரி வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்.

‘‘ஹிமாசலப் பிரதேச மாநிலம், குலு மணாலிக் குச் சுற்றுலா சென்றபோது, மலைவாசி யிடம், கஸ்தூரி வாங்கினேன்’’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டபோது வாக்குமூலம் கொடுத் திருந்தார். கையளவு இருந்த கஸ்தூரியை 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய ஆள் தேடிய போதுதான், காவல்துறை பிடியில் சிக்கியுள்ளார். ஆனால், மறுநாளே ஜாமீனில் வந்துவிட்டார், என்பதுதான் நம் வனச்சட்டங் களுக்கு இருக்கும் வலிமை.