Published:Updated:

விரிவாக்கம் செய்யப்படுமா தலைவாசல் சந்தை!

வாகன நெரிசலில் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
வாகன நெரிசலில் சந்தை

பிரச்னை

விவசாய விளைபொருள்களை விற்க, போக்குவரத்துக்கு எளிதாக உள்ள சந்தைகள்தான் விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகின்றன. பல ஊர்களில் புதிய சந்தைகள் உருவாக்கப்பட்டாலும் பல ஆண்டுகளாக இருந்துவரும் பாரம்பர்ய சந்தைகளில்தான் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள், விவசாயிகள். அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் காலங்காலமாகச் செயல்பட்டு வரும் தலைவாசல் சந்தையை விரிவாக்கம் செய்து தற்காலிக கடைகளை அமைக்க அனுமதி வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள், விவசாயிகள்.

விரிவாக்கம் செய்யப்படுமா தலைவாசல் சந்தை!

இதுகுறித்துப் பேசிய வழக்கறிஞர் கோவிந்தன், “தலைவாசல் பகுதியில் 1972-ம் ஆண்டிலிருந்து தினசரி காய்கறிச் சந்தை செயல்பட்டு வருகிறது. சேலம், பெரம்பலூர், விழுப்புரம், தர்மபுரி கடலூர் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் இந்தச் சந்தைக்கு நேரடியாக வந்து காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள். ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 3,000 விவசாயிகள் வந்து செல்கிறார்கள். ஒட்டன்சத்திரம் சந்தை, பொள்ளாச்சி சந்தை ஆகியவற்றைப் போலவே தலைவாசல் காய்கறிச் சந்தையும் பெரியது, சிறப்புக்கு உரியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
‘‘மார்க்கெட்டுக்காக வழங்கப்படும் நிலம் தண்ணீர் தேங்காத மேடான பகுதி, இதனால், ஏரியில் தேங்கும் தண்ணீரின் அளவு குறையாது’ எனத் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது.’’

கீரைகள், காய்கறிகள், வாழை, தேங்காய்… எனப் பலவித விளைபொருள்களைக் கொண்டு வந்து வியாபாரிகளுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறார்கள், விவசாயிகள். இச்சந்தையிலிருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி மற்றும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கு விளைபொருள்கள் அனுப்பப்படுகின்றன. நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால் போக்குவரத்துக்கு எளிதாக இருந்தாலும் நெரிசல் அதிகமாக இருந்தது. தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 2002-ம் ஆண்டு, சந்தை விரிவாக்கத்துக்காகப் பொதுப்பணித்துறை வசமிருந்த ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தது, தமிழக அரசு. அப்போதைய மாவட்ட நிர்வாகம் முழுமையான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியது. ஆனால், இன்றுவரை சந்தையை விரிவாக்கம் செய்யமுடியவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

கோவிந்தன், லோகநாதன், வையாபுரி
கோவிந்தன், லோகநாதன், வையாபுரி

தொடர்ந்து பேசிய விவசாயி லோகநாதன், “காலையில் 5 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை சந்தை நடக்கும். ஒரு நாளைக்குச் சுமார் 5 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடக்கிறது. இச்சந்தையில் விவசாயிகள் எந்தவிதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால், சிரமம் இல்லாமல் வந்து செல்ல முடிகிறது. ஆனால், அரசு கொடுத்த இடம், நீர்நிலை நிலம் எனச் சிலர் வழக்குத் தொடுத்ததால் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் சந்தை விரிவாக்கத்துக்காக ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலம், சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள தலைவாசல் ஏரியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலமாகும். நீர்நிலைப்பகுதி என்பதால் கரைப்பகுதி அரிக்கப்படாமல் இருப்பதற்காக, ‘ரிவெட்மென்ட் சுவர்’ (தாங்குச் சுவர்) கட்டிக்கொடுத்தது, பொதுப்பணித்துறை. ஆனால், நீர்நிலைப் பகுதியை ஒதுக்கிக் கொடுத்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது, ‘நிரந்தரக் கட்டடங்கள் அமைக்காமல், தற்காலிக ஷெல்டர் அமைத்து மார்க்கெட்டை நடத்தலாம்’ என்று 2006-ம் ஆண்டில் நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

வாகன நெரிசலில் சந்தை
வாகன நெரிசலில் சந்தை

2008-ம் ஆண்டில், ‘ஏரி ஆக்கிரமிப்பு’ என மீண்டும் வழக்கு தொடர்ந்தது, ஒருதரப்பு. அந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதால், இன்று வரை தற்காலிக அமைப்புகள் அமைக்கக்கூட மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுப்பதில்லை.

கடந்த 31.5.2005-ம் ஆண்டில், ‘சர்வே எண். 49/3-ல் மார்க்கெட்டுக்காக வழங்கப்படும் நிலம் தண்ணீர் தேங்காத மேடான பகுதி, இதனால், ஏரியில் தேங்கும் தண்ணீரின் அளவு குறையாது’ எனத் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றைப் பயன்படுத்தி 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி நியாயம் பெற முடியும். இதை மாவட்ட ஆட்சித்தலைவர்தான் முன்னெடுக்க முடியும். இதுசம்பந்தமான விவரங்களைத் தொகுத்துப் பலமுறை புகார் அனுப்பிவிட்டோம். நேரடியாகவும் வலியுறுத்திவிட்டோம். இதுவரை பதிலில்லை. பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து ஒரு கூட்டம் நடத்தி, இந்தப் பிரச்னைக்குச் சுலபமாகத் தீர்வு காண முடியும். விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

திறந்தவெளியில் கடைகள்
திறந்தவெளியில் கடைகள்

இதுகுறித்துச் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் பேசினோம். “நீதிமன்றத்தின் உத்தரவைப் படித்துவிட்டு, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

தலைவாசல் சந்தைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கட்டும்.