நமது முன்னோர்கள் பல்லாண்டு காலமாக மூலிகைகளின் பண்பை தெரிந்து பயன்படுத்தி எளிதில் நலம்பெற உதவும் உத்திகளைக் கையாண்டு வந்தனர். இன்று நம்மைச் சுற்றி பல மூலிகைகள் வளர்ந்திருந்தாலும் நமக்கு பயன்தெரியாது. அதனால் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. மேலும், முறையாக வளர்த்து தினமும் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டிய அற்புத மூலிகைகள் பல உள்ளன. வீட்டைச்சுற்றி இடமிருப்பின் நிலத்திலோ, தோட்டமிருப்பின் ஒரு சிறுபகுதியிலோ மூலிகைப்பூங்கா அமைத்தால் ஊரிலுள்ள எல்லோருக்கும் நன்மைகள் கிடைக்கும்.
வீட்டில் வேலிப்பகுதிகளில்கூட படரவிட சில மூலிகைகள் உதவும். நீர்நிலை இருப்பின் அதில் வளர்த்தும் பயன்படுத்த பல மூலிகைகள் உள்ளன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நமது இன்சுலின் செடி இலைகளைத் தினமும் உண்ணலாம். செம்பருத்தி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்துப் பருகலாம். நீரெரிச்சல் தீரும். செம்பருத்திப்பூவை உலர்த்தி பொடித்து பாலில் காலை மாலை பருகலாம். இதயபலவீனம், மார்புவலி குணமாகும். செம்பருத்திப்பூவை நல்லெண்ணெயில் காய்ச்சித் தடவி முடியை பேணலாம்.
கீழாநெல்லி இலையில் உப்பு சேர்த்து அரைத்து தடவிக் குளிக்க சொறி சிரங்கு நமைச்சல் தீரும், கண்பார்வைக்கும் நல்லது. ரத்த சர்க்கரையை சமன்படுத்திட சிறுகுறிஞ்சான் செடி இலைகள் உதவும். இதன் வேர், காய்ச்சல், இருமல், காசம் தீர்க்க உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்டநாள் கட்டிவர யானைக்கால், விரைவாதம், நெறிக்கட்டி, அறையாப்பு, கண்டமாலை தீரும். இலையை உலர்த்தி பொடிசெய்து 5 அரிசி எடை காலை மாலை நெய்யில் உட்கொள்ளுவதால், வாதம், வாயு, அண்டபித்தம், யானைக்கால், குப்பம், நெறிக்கட்டி, கண்டமாலை மேகரணம், சூதகத்தட்டு போக்கும் மூளை பலத்தையும் அறுசுவையையும் தரும்.

ஆடாதோடா இலைச்சாறும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை தந்தால் நுரையீரல் இரத்தவாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், ரத்தம் கலந்த கோழைவருதல் குணமாகும். இவை மட்டுமல்ல முடக்கறுத்தான், தூதுவளை, நந்தியாவட்டை, துளசி, அறுகம்புல், அம்மான்பச்சரிசி, நித்யகல்யாணி, அவுரி, நன்னாரி, பொன்னாங்கண்ணி முதலிய பல மூலிகைச் செடிகளை நம் தோட்டத்தின் தரைப்பகுதியிலோ, மாடித் தோட்டத்திலோ, செங்குத்துத் தோட்டத்திலோ நட்டு நோயற்ற வாழ்வு பெறலாம்.
டாக்டர் பா.இளங்கோவன்,
பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர்,
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், திருச்சி.