இயற்கையைத் தழுவிய விவசாயத்தை செய்பவர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர்தான் ராஜஸ்தானின் மன்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹுகும்சந்த் படிதார். 10-ம் வகுப்பு படிப்பை பாதியிலே நிறுத்திய இவர், 2005-ம் ஆண்டு குடும்பம் மற்றும் நண்பர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இயற்கை விவசாயத்தை செய்ய ஆரம்பித்தார்.
தொடக்கத்தில் 25 ஹெக்டருள்ள சிறிய நிலப்பரப்பில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தவர், இன்று, மில்லியன் கணக்கில் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உற்பத்தி செய்த பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறார்.

வழக்கமாகச் செய்து வரும் விவசாயம் மக்களுக்கும் மண்ணுக்கும் ஆபத்தானது. அதன் தீங்கு விளைவிக்கும் தன்மைகளை அறிந்த பிறகே இயற்கை விவசாயம் செய்ய முடிவு எடுத்ததாக கூறிய அவர், முதலில் தனது கிராமமான மன்புராவை ரசாயனங்கள் இல்லாத பகுதியாக மாற்றவே இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியதாகக் கூறினார் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தனது பண்ணையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2018-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும், ராஜஸ்தானிலுள்ள விவசாய பல்கலைக்கழகங்களில் இயற்கை விவசாயம் குறித்த ஆலோசகராக உள்ளார்.
இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய பாடத்திட்டக் குழுவில், விவசாய பல்கலைக் கழகங்களுக்கு, இயற்கை வேளாண்மை குறித்த பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இயற்கை மற்றும் மாட்டுச் சாணம் தொடர்பான விவசாய தகவல்கள், பஞ்சகவ்யம் போன்ற பசுக்களில் இருந்து பெறப்படும் பொருள்களைப் பயன்படுத்தி மண்ணை வளமாக்கும் வழிகளையும், பயிர்களை வளமாக்கும் முறைகளையும் பள்ளி கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
பண்டைய நூல்களிலிருந்தே இயற்கை விவசாயம் பற்றி அறிந்து கொண்டதாகவும், அதைக் குழுவில் உள்ள தனது சக ஊழியர்களுடனும் பகிர்ந்துகொள்வேன் என்றும் கூறியுள்ளார்.