Published:Updated:

மாடித்தோட்டத்துல காய்கறிகள் மட்டுமல்ல; பூக்களும் நிச்சயம் இருக்கணும்... ஏன்? - வீட்டுக்குள் விவசாயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காய்கறிகள்
வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காய்கறிகள்

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவசாயி உருவாக வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 11

3ஜி கரிசல் பற்றிப் போனமுறை பேசினோம். வீட்டுத் தோட்டம் என்பது அனுபவம்தான். அதுல இருந்து தெரிஞ்சுக்கிற மாதிரி, யார் சொல்லிக் கொடுத்தும் வராது. இருந்தாலும் அதற்கான சின்னச் சின்ன டிப்ஸ் தேவைப்படுது. அதைத்தான் இந்தப் பகுதியில நாம் பேசிக்கிட்டு இருக்கோம். இந்த முறை திருச்சி கே.கே.நகரைச் சார்ந்த அம்ரீஸ் செங், அவருடைய வீட்டுத் தோட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகிட்டார். அதோட சில டிப்ஸ்களையும் கொடுத்தார்.

அம்ரீஸ் செங்
அம்ரீஸ் செங்

``நான் பாரம்பர்ய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சின்ன வயசுல பெரும்பாலான நேரம் தோட்டத்துலதான் இருப்போம். காலையில பாட்டியைத் தோட்டத்தில விட்டுட்டு அங்கிருந்து காய்கறிகளை வீட்டுக்குக் கொண்டு வருவேன். அப்படி இருந்த நேரத்தில் ஒரு கட்டத்துல தோட்டத்தை வித்திட்டோம். அது அந்த வயசுல எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மறுபடியும் தோட்டம் போடணும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல வீட்டிலேயே ஒரு தோட்டத்தை ஆரம்பிச்சேன். அதுல நான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். என்னோட மாடித்தோட்டத்தைப் பார்த்து என்னோட நண்பர்கள், அவங்களோட நண்பர்கள்னு சிலர் ஆலோசனைக் கேட்டாங்க. அவங்களுக்கு ஆலோசனை கொடுத்தேன். சிலருக்கு நானே அமைச்சுக் கொடுத்திருக்கேன்.

என்னோட அனுபவத்துல நான் சொல்ல வர்றது ரெண்டே விஷயம்தான். ஒண்ணு வீட்டுத்தோட்டத்தைப் புதுசா தொடங்க போறவங்க, அகலக்கால் வைக்கக் கூடாது. முதல்ல 8 பையிலிருந்து ஆரம்பிக்கலாம். 2 பையில தக்காளி, 2 பையில முள்ளங்கி, 2 பையில வெண்டிக்காய், 2 பையில கீரைனு ஆரம்பிக்கலாம். எடுத்தவுடனே அதிக அளவு பையில காய்களை நடவு பண்ணி, அதுல பராமரிப்பு செய்யும்போது பல கஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரும். ஆரம்ப கட்டத்தில இருக்கிறவங்களுக்கு அது மன சங்கடத்தைக் கொடுக்கும். ஒருகட்டத்துல வீட்டுத்தோட்டத்தில ஆர்வம் இல்லாமப் போயிடும். அதனால நான் மேலே சொன்ன மாதிரி சின்ன அளவுல 8 பைகள்ல இருந்து ஆரம்பிக்கலாம்.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்
மாடித்தோட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்த 3G மந்திரம்... தெரிஞ்சுக்கலாமா? - வீட்டுக்குள் விவசாயம் -10

பொதுவா ஒரு பயிரில் பூ எடுக்கும்போது, பிஞ்சு வரும்போது, காய் காய்க்கும்போது என்னென்ன பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படுகிறதோ அதுதான் ஒவ்வொரு முறையும் இருக்கும். அதனால ரெண்டு சீஸனுக்கு சின்ன அளவுல பயிர்களை வளர்த்தா, அதிலிருந்து கத்துக்கலாம். செடி வளரும்போது என்ன மாதிரியான பாதிப்பு வருது, பிஞ்சு வரும்போது என்ன பாதிப்பு வரும், காய், பழம் வரும்போது என்ன பாதிப்பு வரும்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம். இதை எல்லாம் ஒரு டைரியில் எழுதி வைக்கணும். ரெண்டு சீஸன்ல ஒரு பயிரைப் பற்றின முழுமையான பூச்சி, நோய் தாக்குதல் விவரங்கள் நமக்குக் கிடைச்சிடும். அதுக்குப் பிறகு, நம்ம பைகளோட எண்ணிக்கையைக் கூட்டலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கை விவசாயத்துல ஒரே விஷயம்தான். வருமுன் காப்போம்தான் அடிப்படை. இதைப் பல தடவை சொல்லி இருப்பாங்க. நானும் அதையேதான் சொல்றேன். முன்னெச்சரிக்கையாக வேப்ப எண்ணெய் கரைசல், 3ஜி கரைசல்னு தெளிச்சுக்கிட்டே இருக்கணும். அதைச் செஞ்சா போதும் பூச்சிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. மாடித்தோட்டத்துல பூக்கள், மூலிகைகள் அதிகம் வளர்க்கணும். பலபேர் காய்கறிகளை மட்டும்தான் வளர்க்குறாங்க. அப்படி பண்ணக் கூடாது. வீட்டுத்தோட்டத்தைச் சுற்றிலும் செண்டுமல்லி இருக்கணும். அது பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும். அதனால மெயின் பயிருக்குப் போற பூச்சி, செண்டுமல்லிக்குப் போயிடும். மெயின் பயிருக்கு எந்தப் பிரச்னையும் வராது. இதைப் பல பேரு செய்றதே இல்லை.

வீட்டுத்தோட்டத்தில் விளைந்த தக்காளி
வீட்டுத்தோட்டத்தில் விளைந்த தக்காளி

அதேபோலத் தக்காளி நடவு செய்த பையில கொத்தமல்லி நடவு பண்ணலாம். தக்காளி வர்றதுக்குள்ள கொத்தமல்லி அறுவடைக்கு வரும். அதேநேரம் தக்காளியைத் தாக்கக்கூடிய வேர் சம்பந்தமான புழுக்களைக் கொத்தமல்லி செடி அழித்துவிடும்.

இப்படி ஒவ்வொரு செடியையும் தாக்கக்கூடிய பூச்சிகளுக்கு எதிரான வினைபுரியக்கூடிய செடிகள் இருக்குது. அதை நாம தெரிஞ்சுக்கணும். அதை ஒவ்வொரு செடியிலும் நடணும்.

குறிப்பா, பயிர் இருக்குற பையில ஒரு வெங்காயத்தை கட்டாயம் நடணும். இது மாதிரி விஷயங்களை எல்லாம் ஒவ்வொன்னா செய்யும்போதுதான் வீட்டுத்தோட்டம் வெற்றிகரமான விவசாயமாகும்.

பூச்சி தாக்குதலைத் தடுக்க இப்ப மஞ்சள் வண்ண அட்டை கடைகள்ல ரெடிமேடா கிடைக்குது. அதைத் தோட்டத்துல அங்கங்க கட்டி தொங்க விடலாம். பூச்சிகள் இந்த அட்டையில் ஒட்டிச் செத்துப் போயிடும். இது சாதாரண விஷயம். இதையும் ரொம்ப பேர் செய்றதில்லை. மஞ்சள் அட்டை கடையில போய் வாங்க யோசிக்கிறவாங்க, ஒரு தகரத்தில மஞ்சள் கலர் பெயின்ட் அடிச்சு, அதுல எண்ணெய் அல்லது கிரீஸ் தடவி அங்கங்கே கட்டி வைக்கலாம்.

காய்கறி பயிர்களுக்கு இடையில் அவரைக் குடும்ப பயிர்களை நடவு செய்யலாம். குத்து அவரை, கொத்தவரை செடிகளை நடவு செஞ்சா பூச்சிகளை இந்தச் செடிகள் கவர்ந்திழுக்கும். மெயின் பயிருக்கு எந்தச் சிக்கலும் வராது.

பயிர்களுக்குத் தேவையான உரத்தை நம்ம வீட்டுல கிடைக்கக்கூடிய கழிவுகள்ல இருந்து தயாரிச்சு பயன்படுத்திக்கலாம். நான் கடைப்பிடிக்கிற ஒரு முறையை இங்கே பதிவு பண்ண விரும்புறேன். 100 லிட்டர், 50 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பேரல் எடுத்துக்கங்க. அதுல அடியில 3 இன்ச் உயரத்துக்கு மரத்தூள் அல்லது பேப்பர் பரப்பிவிடணும். அதுக்கு மேல காய்ந்த இலைதழைகளைப் போடணும். அதுக்கு மேல காய்கறி கழிவுகளைப் போட்டுட்டு புளித்த மோரை தெளிச்சு விடணும். இது ஒரு லேயர். அடுத்தடுத்து போடக்கூடிய காய்கறி கழிவுகளை இதே மாதிரிதான் போடணும். ரெண்டாவது தடவை போடுறதுக்கு முன்ன பழைய கழிவுகளை லேசா கிண்டி விட்டுத்தான் அடுத்த லேயர் போடணும்.

தக்காளி, செண்டுமல்லி
தக்காளி, செண்டுமல்லி
தோட்ட உரம் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்... எப்படி? வாங்க கத்துக்கலாம் - வீட்டுக்குள் விவசாயம்- 9

இப்படி ஒவ்வொரு லேயரா பேரல் நிறையிற வரைக்கும் போடணும். அது நிறைஞ்சதும் மூடி ஓரமாக வெச்சிடலாம். மூடிகள்ல லாக் இருக்குற மாதிரியான பேரல்கள் இப்ப கடைகள்ல கிடைக்குது. அதை வாங்கி பயன்படுத்தலாம். ரெண்டு பேரல் வெச்சுக்கணும். ஒண்ணு நிரம்பியதும் அடுத்த பேரல்ல கழிவுகளைக் கொட்டலாம். முதல் பேரலை ஓரமா வெச்சுட்டு, அடுத்த பேரல்ல கொட்டணும். முதல் பேரலை 30 நாளுக்குப் பிறகு எடுத்து உள்ளே இருக்குறதை உரமா பயன்படுத்தலாம்'' என்றார்.

வரும் வெள்ளிக்கிழமை மாடித்தோட்டத்துல தக்காளி சாகுபடி செய்றதைப் பற்றி முழுமையா பார்க்கலாம்.

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு