தனிநபர் ஊட்டச்சத்தில் கடைசி இடம்... பருப்பு சாகுபடிக்கு முக்கியத்துவம் தருமா அரசு? #WorldPulsesDay

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 10-ம் நாள் கொண்டாடப்படும் உலக பருப்பு தினத்திற்கு, இந்த ஆண்டின் கருப்பொருளாக “நிலையான எதிர்காலத்திற்கான சத்தான விதைகள்” பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சாதாரண மனிதனின் உணவில் பருப்பின் முக்கியத்தை உணர்த்தி மக்களை விழிப்புணரச் செய்யும் நோக்கில் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ம் நாள் உலக பருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. “நிலையான எதிர்காலத்திற்கான சத்தான விதைகள்” என்ற கருப்பொருளை மய்யமாக கொண்டு எதிர்வரும் காலத்தில் உணவு பழக்க முறையில் பருப்பின் மகத்துவத்தை உணர்த்தும் நோக்கத்தில் ஐ.நா. சபையின் அங்கமான உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) 2019-ம் ஆண்டு பருப்பு தினத்தை அறிவித்தது.

அந்த அமைப்பினுடைய அறிக்கையின்படி உலகளவில் தனிநபர் ஊட்டச்சத்து அட்டவணையில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் உற்பத்தி அளவுகோலில், இந்தியாவின் நிலை நேர்மாறாக உள்ளது.
உலகளவில் அதிக பருப்பு உற்பத்தி செய்யும் நாடுகளில் 25 சதவீதத்துடன் இந்தியா முதல் இடத்தில உள்ளது. அதேநேரம் அரிசி, கோதுமை போன்ற பயிர்களை காட்டிலும் பருப்பு வகைகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் உரம் மற்றும் மனித உழைப்பு முதலீடுகள் குறைவாக தேவைப்படும் என்ற சூழலிலும் அதற்கேற்ப செயல் திட்டங்கள் இல்லாத காரணத்தாலும் தக்க அரசு உதவியின்மையாலும் உலக அளவில் இறக்குமதியிலும் 27 சதவீதத்துடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 70 சதவீத தொழிலாளர்கள் விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய துறையில் பணி புரிந்தும், நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழலில் இந்தியா உள்ளது.
'தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் விவசாயத் துறை வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், விவசாய நிலப்பரப்பளவை உயர்த்தினால், உள்நாட்டு பருப்பு உற்பத்தி உயரக்கூடும். இதன்மூலம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி குறைவதுடன், உள்நாட்டு மக்களின் உணவுத் தேவை குறைந்து வேலைவாய்ப்பு உயர்ந்து, மத்திய அரசின் '2022 -க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிக்கப்பட வேண்டும்' என்ற திட்டத்தையும் நிறைவேற்ற முடியும்.