Published:Updated:

ஒன்றரை ஆண்டுகள், ₹2.5 லட்சம் வருமானம்; `செம்மறியாடுகளின் ராஜா' மேச்சேரி பற்றி தெரியுமா?

சேலம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த ஆடுகள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிகம் வளர்க்கப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆடு வளர்ப்பு என்றாலே பெரும்பான்மையானோருக்கு நினைவுக்கு வருவது வெள்ளாடுகள்தான். ஆனால், வெள்ளாடுகளுக்கு நிகராக செம்மறியாடுகளும் வளர்ப்புக்கு மிகவும் ஏற்றவை. இன்றைக்கு தயாரிக்கப்படும் மட்டன் பிரியாணியில் அதிகம் பயன்படுத்துவது செம்மறியாட்டுக் கறிதான். பிரியாணி தயாரிக்க, கொழுப்பு நிறைந்த செம்மறியாட்டுக் கறிதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காரணம் வெள்ளாடுகளில் கொழுப்புத் தன்மை குறைவு, செம்மறியாடுகளில் கொழுப்பு அதிகம். அதனால், செம்மறியாட்டுக் கறியைப் பயன்படுத்தி சமைக்கப்படும் பிரியாணி சற்றே சுவை கூடுதலாக இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பிரியாணிக்கு ஒரு வழவழப்பான தன்மையைக் கொடுத்து அதைச் சுவையுள்ளதாக மாற்றும் தன்மை செம்மறியாட்டுக் கறிக்கு உண்டு. தமிழ்நாட்டில் பரவலாகச் செம்மறியாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

மேச்சேரி செம்மறியாடுகள்
மேச்சேரி செம்மறியாடுகள்
பிரியாணிக்கு தொடைக்கறி, குழம்புக்கு நெஞ்சுக்கறி; என்ன சமையலுக்கு எந்தக் கறி வாங்கணும்?

அந்த வகையில் `செம்மறியாடுகளின் ராஜா' என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் ஆடு வளர்ப்போர் மேச்சேரி செம்மறியாடுகளைத் தேர்வு செய்கிறார்கள். சேலம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த ஆடுகள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிகம் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தச் செம்மறியாடுகளின் சிறப்புகள் குறித்து கால்நடை மருத்துவரும், மேச்சேரி செம்மறியாடுகள் குறித்து ஆய்வு செய்தவருமான முனைவர் திருவேங்கடனிடம் பேசியபோது, ``அங்கீகரிக்கப்பட்ட செம்மறியாட்டு இனங்களிலேயே அதிகம் வளர்க்கப்படுவது மேச்சேரி செம்மறியாடுகள்தான்.

இது செம்பழுப்பு நிறத்தில் வெள்ளைத் திட்டுக்களோடு காணப்படும் (வளர்ந்த ஆடுகளில் வெள்ளைத் திட்டுக்கள் தெரியாது). அதாவது, துவரம்பருப்பின் தோல் நிறத்தில் இருக்கும். இதற்காகவே ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆட்டை `துவரம்செம்பிளி’ என்று அழைப்பார்கள். `மேய்ச்சல் ஏரி’ என்பது மருவியே `மேச்சேரி’ என்றானது. அந்த அளவுக்கு சேலம் மாவட்டம், மேச்சேரி என்ற ஊரைச் சுற்றி மேய்ச்சல் சார்ந்த ஆடு வளர்ப்பு அதிகம். இங்கிருந்து பரவலாகி சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகள் என்று வளர்க்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் ஆடுகள் இருப்பதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது.

மேச்சேரி செம்மறியாடுகள்
மேச்சேரி செம்மறியாடுகள்
`ஆடு மேய்த்தலுக்கு அணுகவும்!' - வைரலான போஸ்டர்; காரணம் சொல்லும் ஆடு மேய்க்கும் தொழிலாளி

பொதுவாகச் செம்மறியாடுகள் களைகளைத்தான் அதிகம் சாப்பிடும். ஆனால், இந்த ஆடுகள் களைகளோடு மர இலைகள், வேலியில் வளரும் கொடிகளையும் அதிகம் சாப்பிடும். மற்ற ரக ஆடுகளைவிட இந்த ஆடுகளில் எலும்பைவிட சதைப்பகுதியின் அளவு அதிகம். அதே போன்று தோலும் வலுவானதாக இருக்கும். இது தோல் சார்ந்த பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த ரக ஆடுகளின் பெட்டை மற்றும் கிடாக்களில் கொம்பு முளைக்காது. இதன் உடல் அமைப்பில் உள்ள அத்தனை உறுப்புகளும் கணக் கச்சிதமாக இருக்கும். கட்டுக்கோப்பான உடலமைப்பைக் கொண்டது. அதனால் ஆடுகளின் வளர்ச்சி சீராக இருக்கும். கச்சைக்கட்டி, ராமநாதபுரம் வெள்ளை, கீழக்கரிசல், வேம்பூர், சென்னை சிவப்பு ஆகிய தமிழகச் செம்மறியாட்டு ரகங்களில், இறைச்சிக்காக அதிகம் வளர்க்கப்படுவது மேச்சேரி செம்மறி ஆடுகள்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேச்சேரி ஆட்டின் சிறப்புகளை உணர்ந்து தமிழ்நாடு அரசு 1978-ம் ஆண்டு 160 ஏக்கர் பரப்பளவில் சேலம் மாவட்டம், மேச்சேரியை அடுத்த பொட்டனேரியில் ஆடு ஆராய்ச்சி நிலையத்தை அமைத்தது. அங்கு இதனுடைய மரபணுவைச் சேகரித்துப் பரவலாக்கம் செய்து வருகிறார்கள். இதோடு சேலம் கறுப்பு என்ற வெள்ளாட்டினத்தையும் இந்த ஆராய்ச்சி மையத்தில் பரவலாக்கி வருகிறார்கள். கரூர், ஈரோடு சுற்றுவட்டார மாவட்டங்களில் கொரங்காடு என்று சொல்லப்படும் நிலங்களில் இதை அதிகம் மேய்க்கலாம். இனவிருத்திக்காக வளர்ப்பவர்கள் நல்ல தரமான கிடாக்களிலிருந்து இனவிருத்தியைப் பெருக்கலாம். இந்த ஆட்டைக் கொட்டகைக்குள் அடைத்துதான் வளர்க்க வேண்டும் என்பதில்லை. திறந்தவெளி பட்டிகளிலேயே அடைத்து வளர்க்கலாம். ஆடுகள் மூலமாகக் கிடைக்கும் எரு மூலமாகவும் வருமானம் பார்க்கலாம்” என்றார்.

ஒன்றரை ஆண்டுகள், ரூ.2.5 லட்சம் வருமானம்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், காட்டுவலவு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மேச்சேரி செம்மறியாடுகளை மேய்ச்சல் முறையில் வளர்த்து வருகிறார். அவரிடம் பேசியபோது, ``25 வருஷமா பட்டி அமைச்சு செம்மறியாடுகளை வளர்த்திட்டு வர்றேன். இந்த ஆடுகள் எங்க விட்டாலும் கிடைக்கிறத மேய்ஞ்சு நல்லா வளரும். இந்தப் பகுதில நிறைய மேட்டுநிலம்தான். ஆறு மாசத்துக்குத்தான் நிலத்துல வெள்ளாமை இருக்கும். மத்த நேரங்கள்ல இந்த நிலங்கள்ல புல் இருக்கும். அதைத்தான் இந்த ஆடுகள் மேயுது. என் அனுபவத்துல இந்த ஆடுகள்ல நோய்த் தாக்குதல் பெருசா ஏற்பட்டதில்ல.

நான் 27 ஆடுகள் வளர்க்கிறேன். ஒன்றரை வருஷத்துல 27 ஆடுகள் மூலமா 54 குட்டிகள் கிடைக்குது. ஒரு குட்டி 4,000 - 5,000 ரூபாய் விலை போகுது. 3 மாசம் வளர்த்து விற்பனை செஞ்சிடுவேன். இதுமூலமா கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சிடுது. அதனால, பிரச்னை இல்லாம வருமானம் எடுத்துட்டு இருக்கேன். எனக்கு இந்த ஆடுகள்தான் வாழ்க்கையே. பல நல்லது கெட்டதுகள இதை வெச்சுதான் செஞ்சிருக்கேன். எங்கள் பகுதி வறட்சியானது. இந்த வறட்சியிலயும் நல்லா வளருது. இதுக்குனு எந்த சிறப்பு கவனிப்பும் வேண்டியதில்ல. மேய்ச்சலுக்கு விட்டோமா, சாயந்திரம் ஆனா கொட்டகையில கட்டினோமானு இருக்கலாம். வளர்ப்புக்கு பிரச்னையில்லாத ஆடுகள். சந்தைக்குக் கொண்டு போக வேண்டிய அவசியமே இல்ல. வியாபாரிகள் தேடிவந்து வாங்கிக்கிறாங்க. காடு, மலை ஏற வேண்டிய அவசியம் இல்ல. வயல்காடுகளிலேயே மேய்ச்சுக்கலாம்” என்றார்.

மேச்சேரி செம்மறியாடுகள்
மேச்சேரி செம்மறியாடுகள்
மூடப்படும் புதுக்கோட்டை ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறுகள்; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

இந்த ஆடுகள் எங்கு கிடைக்கும்?

சேலம் மாவட்டம், கொளத்தூர், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம் பகுதிகளிலும், அங்கே நடைபெறும் சந்தைகளிலும் இந்த ஆடுகளை வாங்கலாம். மேச்சேரியில் உள்ள ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் முன்பதிவு அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம்.

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையம்,

பொட்டனேரி - 636453 தொலைபேசி: 04298 262023

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு