Published:Updated:

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை தேசிய வேளாண் மையம் எதிர்ப்பது ஏன்?

மத்திய அரசு ஆதரிக்கத் தயாராக இருக்கும் நிலையில், அதை விரும்பாத வியாபாரிகள், ஜீரோ பட்ஜெட் சித்தாந்தத்தை முடக்குவதாகச் சொல்கிறார்கள் ஜீரோ பட்ஜெட் விவசாயிகள்.

Zero Budget Farming
Zero Budget Farming

ஜூலை 5-ம் தேதி. 2019-20-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசியவர், ``பிற தொழிலாளர்களைப் போலவே விவசாயிகளுக்கும் தொழில் மற்றும் வாழ்க்கையை நடத்துவது எளிமையாக இருக்க வேண்டும். இதற்காக ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற முறையைப் பின்பற்ற ஊக்குவிக்க இருக்கிறோம். ஜீரோ பட்ஜெட் விவசாயம் மூலம் அடிப்படை விஷயங்களுக்குத் திரும்பப் போகிறோம். இது புதிய விஷயம் அல்ல. நாம் இந்த முறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். சில மாநிலங்களில் இந்தமுறை முன்னரே பின்பற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள விவசாயிகள் இதற்கான பயிற்சிக்குத் தயாராக இருக்கிறார்கள். இது போன்ற முயற்சிகள் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த உதவும்" என்றார்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

அது என்ன ஜீரோ பட்ஜெட்! விவசாயதுக்கு இடுபொருளின் விலை (உரங்கள், பூச்சி கொல்லிகள்) ஏறிக்கொண்டேபோகிறது. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி, வெளியிலிருந்து எந்த இடுபொருளும் வாங்க வேண்டியதில்லை. ஒரு விவசாயி, ஒரு நாட்டுப் பசுவை வைத்துக்கொண்டு 30 ஏக்கர் விவசாயம் செய்ய முடியும். எந்த விதமான இடுபொருளும் வாங்க வேண்டியதில்லை. மாட்டுச் சிறுநீர், சாணி, போன்றவையே போதும். இதுதான் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் அடிப்படை.

`ஜீரோ பட்ஜெட் என்பது எந்தவித வேதி இடுபொருள்களுக்கும் செலவு செய்யாமல், இயற்கையிலிருந்தே அவற்றை எடுத்துப் பயன்படுத்தும் பாரம்பர்ய விவசாய முறை.'
சுபாஷ் பாலேக்கர்
சுபாஷ் பாலேக்கர்

இதற்கு மத்திய அரசு ஊக்கம் கொடுத்த நிலையில், இதுகுறித்து அறிவியல்பூர்வமாக முழுமையாக ஆய்வு செய்து வருகிறது, தேசிய வேளாண் அறிவியல் மையம்.

நிதி ஆயோக் உறுப்பினரும் வேளாண் பொருளாதார வல்லுந‌ருமான ரமேஷ் சந்த், "இன்னும் 2 - 3 மாதங்களில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் மகசூல் விவரம், லாபம் போன்ற முழுமையான விவரங்கள் ஆய்வுசெய்து வெளியிடப்படும்" எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், திடீர் திருப்பமாக, `சரியான அறிவியல் மதிப்பீடு இல்லாத காரணத்தால், இப்போதைக்கு ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கடந்த வாரம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறது தேசிய வேளாண் அறிவியல் மையம்.

இதுகுறித்து தேசிய வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் பஞ்சாப் சிங், "விவசாயிகளின் வருமானம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகுறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். வேளாண் விஞ்ஞானிகள் என்ற வகையில், 10 சதவிகிதம் வேதியியல் அடிப்படையிலான விவசாயத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்கிறோம். ஆனால், முதலில் சரியான அறிவியல் சரிபார்ப்பு அல்லது மதிப்பீடு இருக்க வேண்டும். அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு முறையை அங்கீகரிப்பதில் தயக்கம் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் இயற்கை வேளாண்மை செய்தனர்.

Paddy Field
Paddy Field

ஆனால் காலப்போக்கில், நாட்டின் உணவுக்கான தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மேலும், விவசாயிகளுக்கும் பணம் சம்பாதிக்கக்கூடிய வசதியையும் உருவாக்கி இருக்கிறோம். ஒரு பசுவின் சாணம் 30 ஏக்கருக்கு போதுமானது என்ற அறிவியலற்ற கூற்றுகளை நிரூபிக்காத ஒரு முறைக்காக, இப்போதுள்ள அனைத்தையும் கைவிட முடியாது. சில சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், நீண்ட கால தாக்கத்தைத் தீர்மானிக்க ஒரு வருட சோதனை மிகக் குறைவுதான்” என்றார்.

இது தொடர்பாகத் தேசிய வேளாண் அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜீரோபட்ஜெட் தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு , ஜீரோ பட்ஜெட் முறை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Zero Budget Farming
Zero Budget Farming

அந்தக் குழுவில் விஞ்ஞானிகள், கொள்கை முடிவு எடுப்பவர்கள், தொண்டு நிறுவனங்கள், உரம், விதை மற்றும் பயிர் பாதுகாப்பு ரசாயன உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் உட்பட 75 நபர்கள் இடம் பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜீரோபட்ஜெட் விவசாயிகள் யாரும் இல்லை. ரசாயன நிறுவன பிரதிநிதிகள் ஜீரோபட்ஜெட் விவசாயத்தை எப்படி ஆதரிப்பார்கள்..? அந்த அறிக்கையின் பின்னணியில் வணிக நிறுவனங்கள் இருக்கலாம்' என்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்துப் பேசிய முன்னாள் வேளாண் இணை இயக்குநர் நாட்ராயன். '' சுபாஷ் பாலேக்கரின் ஜுரோபட்ஜெட் சித்தாந்தம் வெற்றிகரமானது. இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அதைப் பின்பற்றி வெற்றி விவசாயிகளாக இருக்கிறார்கள். அவர்களது வருமானத்தைப் பார்த்து மற்ற விவசாயிகளும் இந்த முறையைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். அனைத்து மாநில விவசாயிகளும் ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறும் நிலை உருவாகி விடும். இதை உணர்ந்துகொண்ட மத்திய அரசு, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்கத் தயாராகி வருகிறது.

நாட்ராயன்
நாட்ராயன்

ஏற்கெனவே ஜீரோபட்ஜெட் சித்தாந்தம் மற்றும் இயற்கை வழி விவசாய முறைகளால் உரம், பூச்சிக்கொல்லி விற்பனை குறையத் தொடங்கியுள்ளது. இது ரசாயன இடுபொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு ஆதரவு தெரிவித்தால் எதிர்காலத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என அச்சம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காகத் தற்போது, இது நிரூபிக்கப்படாத அறிவியல் முறையெனத் தேசிய அறிவியல் மையம் மூலமாக மத்திய அரசை அணுகுகிறார்கள்.

நான் ஜீரோ பட்ஜெட் விவசாயி. எனது தோட்டங்களில் விளைந்த செவ்வாழை எங்கள் பகுதி விவசாயிகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. எங்கள் பகுதியில் ஒரு செவ்வாழை தார் சராசரியாக 14 கிலோ எடை இருக்கும். ஆனால், எங்கள் தோட்டத்தில் விளைந்த தார் 40 கிலோ எடை இருக்கிறது. இதைவிட என்ன உதாரணம் வேண்டும்.
நாட்ராயன்
நாட்ராயன்
நாட்ராயன்

இப்படியொரு எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்ததுதான். இந்த எதிர்ப்பின் மூலம் இது மிகச் சிறந்த சித்தாந்தம் என்பது நிரூபணமாகியுள்ளது.

ஜீரோபட்ஜெட் விவசாயம் அதிகரித்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும். இதைப் புரிந்துகொண்ட வணிகர்கள் முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், இதற்கு யார் உதவியும் தேவையில்லை. தற்சார்பு முறை விவசாயமான ஜீரோ பட்ஜெட் விவசாயம் அதிகரிக்கவே செய்யும். இது காலத்தின் கட்டாயம்'' என்றார்.

செப்டம்பர் 15-ம் தேதி பசுமை விகடன் சார்பில் விழுப்புரத்தில் விவசாய பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் கலந்துகொண்ட வேளாண்துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி, '' ஜீரோபட்ஜெட் விவசாயத்தை முன்னெடுத்து வருகிறோம். பட்ஜெட்டில் அறிவித்தபடி ஜீரோபட்ஜெட் விவசாயத்தை முன்னெடுக்கும் முயற்சியில் இருக்கிறோம். ஒரு மாவட்டத்துக்கு நான்கு விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஆந்திராவில் பயிற்சி கொடுக்கப்படும். அதன் பிறகு, பயிற்சி பெற்ற விவசாயிகளை வைத்து மற்ற விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும்'' என்றார்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

அரசின் முயற்சிகளுக்கு முன்பாகவே நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை முழுவீச்சில் செயல்படுத்தி லாபம் பார்த்து வருகின்றனர். இருந்தாலும், அரசு இதுகுறித்து இதுவரை முழுமையான எந்த ஆய்வும் செய்ததில்லை என்பதால் தெளிவான ஆய்வு முடிவுகள் அரசிடம் இல்லை என்பதும் உண்மைதான். எதிர்காலத்தில் இதைப் பெருமளவில் ஊக்கப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் அரசுக்கு இது போன்ற அறிவியல்பூர்வமான ஆய்வுமுடிவுகள் மிக அவசியமும்கூட. ஆனால், அதற்காக ஆரம்பக் கட்டத்திலேயே அதிருப்தி தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் பல பயிர்கள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டுள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இதில் நல்ல லாபமும் பார்த்துவருகின்றனர். இயற்கையாகக் கிடைக்கும் உரங்களை மீண்டும் மண்ணிலேயே செலவிடுவதால் மண்வளம் பெருகும்; தேவையற்ற வேதி உரங்களின் பயன்பாடும் குறையும். முழு இயற்கை வழி விவசாயம் என்பதால் நல்ல லாபமும் பெறலாம்.

`ஐந்தாயிரம் ஏக்கர் விவசாயம் பாழாய்ப் போகிறது!’ - தூர்வாரப்படாத வாய்க்காலில் இறங்கிப் போராடிய மக்கள்

அதிக ரசாயன இடுபொருள்கள் பயன்பாடு காரணமாக மண்வளம் கெட்டுவிட்டது. எனவே, சூழலுக்கு ஏற்ற விவசாயம் தான் சிறந்த வழியெனத் தெரிவிக்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன். இன்றைக்குத் தேசிய வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடும் சுவாமிநாதனின் ஆரம்பகட்ட செயல்பாடு போலவே உள்ளது.

பசுமைப் புரட்சி வருவதற்கு முன்பு, இயற்கை விவசாயம்தான் அனைவரும் செய்து வந்தனர். ஆனால், அதில் அதிக மகசூல் எடுக்க முடியாது. எனவே, ரசாயன விவசாயத்துக்கு மாறுங்கள் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்படி அறிவுரை சொன்னவர்களில் முக்கியமானவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். இன்று அவரே, அதிக ரசாயன இடுபொருள்கள் பயன்பாடு காரணமாக மண்வளம் கெட்டு விட்டது. எனவே, சூழலுக்கு ஏற்ற விவசாயம்தான் சிறந்த வழியெனத் தெரிவிக்கிறார்.

இன்றைக்குத் தேசிய வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடும் சுவாமிநாதனின் ஆரம்பகட்ட செயல்பாடு போலவே உள்ளது. ஆனால், இந்த முறை விவசாயிகள் ஏமாறத் தயாராக இல்லை.

Vikatan