Published:Updated:

நாட்டு மரங்களே நம் மண்ணை வளப்படுத்தும்! மண்... மரம்... மாற்றம்!

நாட்டு மரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டு மரங்கள்

இயற்கை

நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, முன்னே செல்லும் வாகனங்களை ஆர்வத் துடன் கவனிப்பதுண்டு. பெரும் பாலான லாரிகளில் சுற்றுச்சூழல் அக்கறையுடன், ‘மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!’ என்ற வாசகம் எழுதப்பட் டிருக்கும். மரம் வளர்த்தால் மழை கிடைக்கு மென்ற பொதுக் கருத்து சரிதான். ஆனால், மரமென்றால் மழை மட்டும்தானா? அவை மண்ணுடனும் சூழலுடனும் எப்படித் தொடர்புகொண்டுள்ளன? மரங்களின் முக்கியத்துவம் குறித்து உண்மையில் நமக்கு முழுமையான தெளிவு உள்ளதா?

நான் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த காலத்தில், காடுகள் அழிக்கப் படுவது (Deforestation) அறிவுத் தளத்தில் விவாதப் பொருளானது. அதைத் தொடர்ந்து, ஒருபக்கம் ‘காடுகளை வளர்ப்போம்’ (Afforestation) என்ற முழக்கத்துடன், அரசும் தொண்டு நிறுவனங்களும் ‘யூகலிப்டஸ்’ எனப்படும் தைல மரங்களைப் பரவலாக நடத் தொடங்கின. மறுபக்கம், சில தனியார் நிறுவன ஆட்கள், ‘உங்களுக்காகத் தேக்கு மரங்களை நாங்கள் வளர்த்துத் தருகிறோம், அவை வளர்ந்த பிறகு, கொள்ளை லாபம் கிடைக்கும்’ என்று மக்களிடம் பணம் வசூலிக்கத் தொடங்கினர். இந்த முயற்சிகள் அனைத்தும் காடு வளர்ப்பு என்ற லட்சியத்தை எட்ட உதவவில்லை.

நாட்டு மரங்கள்
நாட்டு மரங்கள்

இது ஒருபுறமிருக்க, விதைப் பந்துகள் மூலம் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் மரங்களை நடுகிறோம், மியாவாகி முறை மூலம் குறைந்த இடத்தில், குறுகிய காலத்தில் காடுகளை உருவாக்குகிறோம் என இளைஞர் பட்டாளம் கிளம்பியுள்ளதையும் நாம் கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

களிமண், சாணம் ஆகியவற்றைக் கலந்து, அதில் விதைகளைப் போட்டு விதைப் பந்துகளை உருவாக்குகிறார்கள். ஜப்பான் தாவரவியலாளர் அகிரா மியாவாகி உருவாக்கிய காடு வளர்ப்பு முறையில், இயற்கையாக மட்கும் தன்மையுள்ள குப்பைகளை மண்ணில் புதைத்து, நெருக்க மாக மரங்களை நடுகிறார்கள். அவை சூரிய ஒளிக்குப் போட்டி போட்டு வளர வேண்டும். ‘தக்கது தப்பிப் பிழைக்கும்’ என்ற டார்வினின் தத்துவம்தான் மியாவாகி முறையின் அடிப்படை. இந்த முறையின் நிறை குறை களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.

நடைமுறையில், மாநகரங்களில் இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே, அங்கே மியாவாகி முறைப்படி காடுகள் வளர்ப்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் பல லட்சக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்களும், தரிசு நிலங்களும் உள்ளன. இவை பயனற்ற நிலங்கள் என்ற புரிதல் உள்ளது. இயற்கை, பயனற்ற எதையும் உருவாக்குவதில்லை. இவை பயன் படுத்தப்படாத நிலங்களே தவிர, பயனற்ற நிலங்கள் அல்ல. அப்படியானால் இந்த நிலங்களில் பெருமளவு மரங்களை நட்டு காடுகளை வளர்க்கலாம்தானே? ஆம் வளர்க்கலாம்.

அதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், காடுகள் வளர்ப்பில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அறிவியலாளர்கள், இந்தியாவில் 33% காடுகள் அல்லது பசுமைப் போர்வை (Green Cover) இருக்க வேண்டுமென்கிறார்கள். தமிழகத்தில் பசுமைப் போர்வை 24 - 26 சதவிகிதமாக இருக்கிறது. 33 சதவிகிதமாக அதை உயர்த்த அரசும் பல நிறுவனங்களும் மெனக்கெடு கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங் களில் பச்சையாகத் தெரியும் பரப்பை அதிகரித்துவிட்டால், காடுகளை வளர்த்து விட்டதாகக் கருதலாம் எனக் கொள்கை வகுப்பவர்கள் மத்தியில் நினைத்துக் கொள்கிறார்கள். இதனால், எளிய காரியமாகச் சவுக்கையோ, தேக்கையோ அதிகம் வளர்க்கும் போக்கு உள்ளது.

நாட்டு மரங்கள்
நாட்டு மரங்கள்

இது, சூழலியல் சமநிலையைப் பாதிக்கும் என்பதை உணர வேண்டும். ஏற்கெனவே, சீமைக் கருவேல மரங்கள் தமிழகமெங்கும் பரவியிருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வந்த ‘லான்டனா’ எனப்படும் உண்ணி முள் போன்ற செடிகள் களைச் செடிகளாக வளர்ந்துள்ளன. ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பதைப் போல, பச்சையாகத் தெரிவதெல்லாம் பசுமைப் போர்வையல்ல. காடுகள் அல்ல. செயற்கைக்கோள் புகைப்படங்களை முன்னிறுத்தி எந்தத் தாவரத்தையும் மரத்தையும் வளர்த்து, 33% காடுகளை உருவாக்கிவிட்டோமெனக் கூறுவது நியாயமில்லை.

அப்படியானால், ‘என்னதான் வளர்க்க வேண்டுமென்கிறீர்கள்?

கள அளவில், தமிழகத்தின் புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களில் அந்தந்தப் புவியியல் சூழலுக்கு உகந்த நாட்டு மரங்களை நட்டுப் பராமரிப்பதை, நாம் ஓர் மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். நாட்டு மரங்கள் என்று அழுத்திச் சொல்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நம்மூரில், அரசுத் திட்டங்களிலும், மியாவாகி முறையிலும் சிலர் எந்த மரமாக இருந்தாலும் பரவாயில்லை என நட்டுவிடுகிறார்கள். எங்கு வேண்டு மானாலும் எந்த மரத்தை வேண்டுமானாலும் நடுவது சூழலுக்கும் அறிவியலுக்கும் புறம்பானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

‘மண்ணுக்கு மரம் பாரமா…

மரத்துக்கு இலை பாரமா?

கொடிக்குக் காய் பாரமா...

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?’

என்ற பழைய பாடல் உங்களுக்கு நினைவிருக்கும். மண் தாயென்றால், மரம் தான் சேய். மண்ணுக்கும் மரத்துக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு. தொப்புள் கொடியில் இருக்கும் ரத்த நாளங்களைப் போன்றவை மரத்தின் வேர்கள். மண்ணுக்கு மரம் நிச்சயம் பாரமில்லை. ஆனால், மண்ணுக்குச் சொந்தமான உள்ளூர் நாட்டு மரமாய் அது இருக்க வேண்டும்.

நாட்டு மரங்கள்
நாட்டு மரங்கள்

என் சொந்த ஊர் புதுச்சேரி. சிறுவயதில் புதுச்சேரியிலிருந்து சென்னை வரும்போது சாலையோரம் நிறைய புளிய மரங்களைப் பார்க்க முடியும். சில நேரங்களில் புங்கனையோ, வேப்ப மரத்தையோகூட பார்க்க முடியும். இவையெல்லாம் நம் நாட்டு மரங்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், சமீப காலமாக, நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளில் நாட்டு மரங்கள் பலவும் வெட்டி வீழ்த்தப்படுவது கவலைக்குரிய விஷயம்.

பல நாடுகளில், உள்ளூர் நாட்டு மரங்களையே நட்டுப் பராமரிக்கிறார்கள். மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பினாங்குத் தீவில் நிழற்சாலை மரங்களாக (Avenue Trees) மகிழ மரங்களையே வளர்க்கிறார்கள். அருமையான பூக்களையும் பழங்களையும் தரும் மகிழ மரம், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் தொன்மையான நாட்டு மரமாகும். என் தாத்தா வீட்டில் மகிழம் பழம் சாப்பிட்ட நினைவு வருகிறது. என்னுடைய வீட்டுத் தோட்டத்தில்கூட மகிழ மரத்தை நட்டு வளர்த்து வருகிறேன்.

நாட்டு மரங்களை முன்னிறுத்துவதற்கு அறிவியல்தான் முக்கியக் காரணம். மண்புழுக்கள் குறித்த ஆராய்ச்சிதான் என்னுடைய முதன்மையான ஆய்வுப் பணி. 1980-83 காலகட்டத்தில் கிண்டி தேசிய பூங்காவில், இலை, சருகுகள், குளம் ஆகியவற்றின் அருகே உள்ள மண்புழுக்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டேன். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து என்னுடைய ஆய்வு மாணவர்கள் கீதா சேஷன், ஜெகன் மோகன் ஆகியோர் அதே கிண்டி தேசிய பூங்காவில் மண்புழுக்கள் குறித்து ஆய்வு செய்தனர். முனைவர் கீதாவின் ஆய்வு இதில் முக்கியமானது. மரங்களிலிருந்து விழும் இலை, சருகுகள், மண்புழுக்களின் புரத உருவாக்கத்தில் எப்படிப் பங்கு வகிக்கின்றன என்ற ஆய்வை மின்பகுப்பு முறையில் (Electrophoretic Pattern) மேற்கொண்டார். இந்த ஆய்வில் முக்கியமானதொரு கண்டுபிடிப்பை நாங்கள் அறிந்து கொண்டோம்.

மண்புழுக்களின் வாழ்வை குழந்தைப் பருவம் (Juvenile), வளரிளம் பருவம் (Non-Clitellate) மற்றும் குமரப் பருவம் (Clitellate) என்று பிரிக்கலாம். குமரப் பருவத்துக்குப் பிறகுதான் மண்புழுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, இந்த மூன்று பருவங்களிலும், எந்தெந்த இலை, சருகுகள் மூலம் எந்தெந்த புரதச் சத்துகள் (அமினோ அமிலங்கள்) மண்புழுக்களுக்குக் கிடைக்கின்றன என்ற ஆய்வுகள் மேற்கொண்டோம். மனிதர்களுக்கு எப்படி அவசியமான அமினோ அமிலங்கள் உணவிலிருந்து கிடைக்கிறதோ, அதேபோல் மண்புழுக்களுக்கும் இலை-சருகுகளிலிருந்து புரதச் சத்து கிடைக்கும் வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் எங்கள் ஆய்வு அமைந்தது. நீண்ட ஆய்வின் முடிவில், குழந்தைப் பருவத்திலிருந்து, மண்புழுக்கள் குமரப் பருவத்துக்குச் செல்ல, குறிப்பிட்ட இலை, சருகுகளின் மட்கிலிருக்கும் புரத மூலப் பொருள்கள்தான் உதவுகின்றன என்ற புதிய விஷயத்தைக் கண்டறிந்தோம். முக்கியமாக, எங்கள் ஆய்வில் நாவல் மரத்தடியில், அதன் இலை, சருகின் மட்கில் ஏராளமான மண்புழுக்களும் நுண்ணுயிர்களும் வளர்வதைக் கண்டோம்.

குறிப்பிட்ட பகுதியின் மண்ணுக்கு உகந்த உள்ளூர் மரங்களை வளர்த்தால், அவற்றி லிருந்து விழும் இலை, சருகுகளின் மட்கும், அந்த மரங்களின் வேர்களின் சுரப்புகளும் (Exocrine Hormones) அங்கிருக்கும் மண்புழுக்கள் மட்டுமல்ல, மரவட்டைகள், பூரான்கள், நுண் கணுக்காலிகள் (Microarthropods), நூற்புழுக்கள் (Nematodes) மற்றும் ஏராளமான நுண்ணுயிர்கள் வளரவும், மண் உயிர்ப்புடன் நலமுடன் இருக்கவும், பல்லுயிர் பெருக்கத் துக்கும் உதவுகின்றன என்பது அறிவியல் ரீதியிலான உண்மை.

கிராமப் புறங்களில் இன்னும்கூட ஊர்த்தோப்புகளைப் பார்க்க முடியும். அந்த ஊர்த்தோப்புகளில் இருப்பவை நாட்டு மரங்கள்தான். கோயில் காடுகளைப் (Sacred Groves) பற்றியும் நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். நம் கலாசாரத்தில் கோயில் என்பது வெறும் சந்நிதி மட்டுமல்ல. அதனுடன் கோயில் காடும், குளமும் சேர்ந்தே இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்குமான தல விருட்சங்கள்கூட நம் நாட்டு மரங்கள்தான்.

குறிப்பாக, கோயில் காடுகளில் இருக்கும் நாட்டு மரங்களிலிருந்து விழும் இலைகளும் சருகுகளும் மட்கி, அங்கிருக்கும் மண்ணைப் பஞ்சுபோல மாற்றும். மழைநீர் இந்த மண்ணால் உறிஞ்சப்பட்டு, நிலத்தடி நீரை உயர்த்தி, குளத்தில் எப்போதும் நீரிருக்கும்படி செய்யும். கோயில் குளம் ஊரின் நீராதாரத்தை வளப்படுத்தும். மனிதர்களுக்கு மட்டு மல்லாமல், குளமும், கோயில் காடும் ஏராளமான பறவைகளுக்கும் உயிரினங் களுக்கும் வாழ்வு கொடுத்து, கண்ணுக்குக் குளிர்ச்சியான பல்லுயிர் சூழலுக்கு வழி வகுத்தன. ஆனால், இன்று பல கோயில் காடுகள் அழிக்கப்பட்டு, குளமும் வற்றி, பல்லுயிர்ச்சூழலும் பாதிக்கப்பட்டிருப்பது இந்தத் தலைமுறை நிச்சயம் கவலைகொள்ள வேண்டிய விஷயம்.

பல்லுயிர் சூழல் பற்றிக் கவலை கொள்ளாமல், மரம் வளர்ப்பதைத் தனித்த செயல்பாடாகப் பார்க்கும் தற்போதைய மனோபாவமும், எந்த மரத்தையும் வளர்க்கலாம் என்ற போக்கும் நம் சந்ததிகளுக்கும், இந்தப் பூவுலகுக்கும் பலனளிக்காது. பல்லுயிர் சூழலில், நாட்டு மரங்கள் அந்தப் பகுதியின் பல்வேறு உயிரினங்களுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கின்றன என்பதை நாம் அழுத்தமாக நினைவில் கொள்ள வேண்டும். மண்புழுக்கள் நம் மண்ணிலிருந்து காணாமல் போனதற்கு, செயற்கை உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் மட்டும் காரணமல்ல. காடுகள் வளர்க்கிறோம் என்ற பெயரில் நாட்டு மரங்களைக் காலி செய்யும் சில திட்டங்களும் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.”

என்ற வள்ளுவரின் வாக்கின்படி, நாட்டின் முக்கிய அரணாகக் காடு இருக்கிறது. ஆனால், நாட்டு மரங்களாலான காடாக அது இருக்கட்டும். மாற்றம் நோக்கி பயணிக்க, பசுமைப் போர்வையை அதிகரிக்க, காடுகள் வளர்க்க, நாட்டு மரங்களைத் தேர்ந்தெடுப் போம். புறம்போக்கு நிலங்களிலும், தரிசு நிலங்களிலும், அரசு, சூழலியலாளர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பங்கேற்புடனும் பங்களிப்புடனும், நாட்டு மரங்களை, குறிப்பாகப் பழமரங்களையும் கொண்ட உணவுக் காடுகளை அமைப்போம். அதன் மூலம், உண்மையான, உயிர்ப்பான, பல்லுயிர் பெருக்கத்தையும், மண் நலனையும் தமிழகத்தில் வளர்த்தெடுப்போம்.

முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில்,
முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில்,

மண்ணுக்கடியில் மாநாடு!

மண்ணுக்கடியில் கட்டுக்கோப்புடன் ஒரு மாநாடு நடந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் நாட்டு மரங்கள் ஒரு குறிப்பிட்ட உயிர்ச்சூழலில் மண்ணுக்கு அடியில் கைகளைக் கோத்து ஒரு சமூகமாகச் செயல்படுவதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாட்டு மரங்களின் வேர்கள், பூஞ்சைகளின் ‘மைசீலி’ய இழைகள் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுள்ளன. மேலும், வேர்களின் சுரப்புகள், அவற்றால் ஈர்க்கப் படும் நுண்ணுயிர்கள் எனப் பெரும் உயிர்ப்புள்ள வலைப்பின்னலை அவை மண்ணுக்கடியில் ஏற்படுத்துகின்றன.

கட்டுக்கோப்புடன் நடக்கும் மாநாட்டில் ஒரு பகுதியில் இருப்பவரிடம் உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தால், எப்படிக் கைகள் மாறி இன்னொரு பக்கத்தில் பசியுடன் இருப்பவருக்குக் கொண்டு சேர்க்கப்படுகிறதோ, அதே போல், போதிய சூரிய ஒளி அல்லது நீர் கிடைக்காமல் பட்டினியில் வாடும் நாட்டு மரங்களுக்கு, ஆரோக்கியமான நாட்டு மரங்களிலிருந்து உணவு கடத்தப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. முக்கியமாக, தங்கள் உயிர் சூழலுக்கு ஒவ்வாத மரங்களைத் தங்களுக்குள் கைகள் கோத்து காலி செய்யவும் நாட்டு மரங்கள் அஞ்சுவதில்லை என்பதையும் இந்த ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

நாட்டு மரத்தின் மதிப்பென்ன?

வீடு கட்டும்போது, ஜன்னலுக்கோ, கதவுக்கோ சில ஆயிரங்களைக் கொடுத்து நாட்டு மரங்களை வாங்கியிருப்பீர்கள். ஆனால், அவற்றின் உண்மையான மதிப்பு தெரியுமா உங்களுக்கு? வளர்ந்த நாட்டு மரம் ஒவ்வொன்றும் ஆண்டுக்குத் தோராயமாக 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. ஆனால், அம்மரங்களின் இலைகள், சருகுகள், வேர்களின் சுரப்புகள் மூலம் பெருகும் பல்லுயிர் சூழலுக்கும், உருவாகும் மண் நலனுக்கும் நம்மால் விலை நிர்ணயிக்க முடியுமா? யோசித்துப் பாருங்கள்.

- முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில்,

‘மண்புழு விஞ்ஞானி’

தொகுப்பு: க.சரவணன்