Election bannerElection banner
Published:Updated:

உற்பத்தியை சிதைத்த மழை, வேர் அழுகல் நோய்... வெங்காயம் விலை திடீரென உயர்ந்தது ஏன்?

Onion
Onion ( AP Photo/Mahesh Kumar A )

தற்போது பெய்து வரும் மழையால் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உற்பத்தி முறையே 25, 70 மற்றும் 15 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போதைய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

உலகுக்கே வெங்காயம் ஏற்றுமதி செய்த இந்தியா, தற்போது இறக்குமதியை நம்பியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், விலையைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் நிற்கிறது மத்திய அரசு. எப்போதாவது விலை எகிறும் வெங்காயம், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உச்சம் தொட்டு நிற்கிறது. குறிப்பாக, மத்திய அரசை மிரளச் செய்துவிட்டது வெங்காயம். `ஏற்றுமதிக்குத் தடை’ என்ற உச்சபட்ச ஆயுதத்தைப் பயன்படுத்தியும், விலை உயர்வுக்கு எதிரான போரில் தோல்வியடைந்துவிட்டது மத்திய அரசு.

இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் விவசாயிகளுக்குப் பயிர்களின் எதிர்கால விலையை அறிவித்து வருகிறது. அந்த மையம் இப்போது வெங்காயத்துக்கான இடைக்கால விலையையும் எதிர்வரும் காலத்தின் சந்தை விலையையும் அறிவித்திருக்கிறது. கூடவே வெங்காயம் விலை உயர்ந்ததற்கான காரணங்களையும் விளக்கியுள்ளது.

onion
onion

கடந்த இரு வாரங்களுக்குள் நாட்டின் வெங்காய விலை பெருமளவு உயர்ந்து நுகர்வோரைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. அதேபோல், தமிழகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சிறிய வெங்காயத்தின் விலையும் குறுகிய காலத்துக்குள் ஏறுமுகமாகக் காணப்படுகிறது. அவற்றுக்கான காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

``தற்போது பெய்து வரும் மழையால் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உற்பத்தி முறையே 25, 70 மற்றும் 15 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போதைய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் டிசம்பர் பாதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிரின் அறுவடையால் விலை விரைவில் குறைய வாய்ப்புள்ளது. மத்திய அரசின் குறித்த நேரத்தில் எடுக்கப்பட்ட வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடை காரணமாக இந்த விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் பெருமளவு தமிழகத்தில் பயிரிடப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது. தற்போது, பயிர் செய்த 40 நாள்களில் வேர் அழுகல் நோயால் பெருமளவு சேதம் அடைந்துள்ளது. இந்நோய் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வெங்காயம் பயிரிடும் பகுதிகளில் காணப்படுகிறது. மேலும், இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் அடுத்த 40 நாள்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய மொத்த இருப்பு 25,000 டன்களாகும். இது தமிழகத்தின் நாமக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, தேனி, அரியலூர், பெரம்பலூர், துறையூர், மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலிருந்து பெறப்படுகிறது. மேலும், வெங்காய சாகுபடிக்குப் பண்ணை எந்திரங்களின் பங்கேற்பு சற்றும் இல்லாததால் பண்ணை தொழிலாளர்களையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த விலை உயர்வு டிசம்பர் 20-ம் தேதி இறுதி வரை நீடிக்கும் எனவும், புதிய பயிரின் அறுவடைக் காலமாகிய ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விலை குறையும் என்றும் வர்த்தக மூலகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன" எனத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Onion
Onion
AP Photo/Mahesh Kumar A

வழக்கமாக வரத்துக் குறையும்போது விலை உயரும். பதுக்கல் காரணமாக விலை உயரும். ஆனால், இந்த முறை விலையேற்றத்துக்குச் சூழல் மாற்றம் பெரும் காரணமாக இருக்கிறது. மழை காரணமாகப் பல மாநிலங்கள், விளைச்சலை எடுக்க முடியாமல் தவித்துக்கிடக்கின்றன. விலையேற்றத்தால் மக்களும் தவித்து வருகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு