Published:Updated:

எப்போதும் விலை குறையாத ஆர்கானிக் காய்கறிகள்... காரணம் இதுதான்!

துரை.நாகராஜன்

ஆர்கானிக் உணவுக்காக சில சிரமங்களை ஏற்றுக் கொண்டால், பல மடங்கு உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. ஆர்கானிக் பொருள்கள் வாங்குவோரின் முக்கிய குற்றச்சாட்டு, விலை அதிகம் என்பதுதான்.

organic vegetable
organic vegetable

இன்றைக்குப் பெரும்பாலானோர் ஆர்கானிக் பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதற்குக் காரணமாக சொல்லப்படுவது, ஆர்கானிக் உணவுப் பொருள்களில் உடலுக்குத் தேவையான சத்துகள் அதிகமாக இருக்கின்றன என்பதுதான். இதனால் உடலில் சத்துகள் சேர்ந்து உடல்நலம் ஆரோக்கியம் பெறும். பெரும்பாலானோருக்கு இன்றைய மாசுபட்ட சூழலில் ஆர்கானிக் ஏன் தேவை என்பது பற்றிய கேள்வி எழலாம். அதற்கு ஆரோக்கியம் என்பதுதான் ஒரே விடையாக இருக்கமுடியும். இன்று பலரிடமும் ஆர்கானிக் பொருள்கள் குறித்து மற்றொரு சிக்கல், அது எப்போதும் விலை அதிகமாகவே இருக்கிறது என்பதுதான். அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முன்பு இயற்கைவழி விவசாயத்தால் உருவாகும் ஆர்கானிக் பொருள்களால் என்னென்ன நன்மை எனப் பார்த்துவிடுவோம்.

வீட்டிலேயே அமைக்கலாம் ஆர்கானிக் தோட்டம்!

விளைநிலங்களில் ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லிகளோ குறைந்தால் சூழல் மாசடைவதும் குறையும். இதனால் விளைநிலங்களைச் சுற்றிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் சுத்தமாகும். அதேநேரம் ஆர்கானிக் உணவு கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் விலங்குகளிலிருந்து அதிகளவு இறைச்சி, பால், மற்றும் முட்டையைப் பெறமுடியும்.

ஆர்கானிக் பொருள்களை வாங்குவதில் பல சிரமங்கள் இருக்கின்றன. ஆர்கானிக் உணவுப்பொருள்களை வாங்குவதற்கு அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. இயற்கை விவசாயத்தில் குறைந்த அளவிலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளதே அதற்குக் காரணம். இதுதவிர, இயற்கை விளைபொருள்களின் விலை அதிகம் என்கிற கருத்தும் தவறான கருத்து. நீங்கள் ரசாயனத்தில் விளைந்த அரிசியை 10 கிலோ வாங்க வேண்டியிருந்தால், இயற்கை முறையில் விளைந்த அரிசியை 6 முதல் 7 கிலோ வாங்கினாலே போதுமானதாக இருக்கும். இதுவே 10 கிலோ அரிசிக்கு இணையான சாதத்தைத் தரும். இதை ஒப்பிடும்போது, இயற்கை அரிசியின் விலையும் கிட்டத்தட்ட சரியாகத்தான் இருக்கும்.

organic vegetables
organic vegetables

நாம் வழக்கமாக உண்ணும் பொருள்களை எல்லா இடங்களிலும் வாங்கலாம். ஆனால் ஆர்கானிக் உணவுப்பொருள்கள் எல்லா இடங்களிலும், எல்லாக் கடைகளிலும் கிடைப்பதில்லை. ஆர்கானிக் என்று எல்லா இடங்களிலும் கிடைப்பதும் முழுமையான ஆர்கானிக் அல்ல.

ஆர்கானிக் உணவுக்காக சில சிரமங்களை ஏற்றுக் கொண்டால், பல மடங்கு உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. ஆர்கானிக் பொருள்கள் வாங்குவோரின் முக்கிய குற்றச்சாட்டு, விலை அதிகம் என்பதுதான். இதற்காக சில வழிமுறைகளும் இருக்கின்றன. ஆர்கானிக் உணவுப்பொருள்களை கடைகளில் வாங்குவதற்குப் பதிலாக நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கலாம். அப்போது நீண்டகாலம் சேமித்து வைக்கக் கூடிய தானிய வகைகளை மொத்தமாக வாங்கி வைக்கலாம்.

`நிஜ ஆர்கானிக் பொருள்களை எப்படி கண்டுபிடிப்பது?’ - விளக்கும் இயற்கை விவசாய ஆர்வலர்
organic vegetables
organic vegetables

ஆர்கானிக் உணவுகள் நல்லது என்று சொல்லும்போது, `நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர் என எல்லாவற்றிலும் ரசாயனம் கலந்துவிட்ட நிலையில், உணவை மட்டும் இயற்கையானதாக எடுத்துக்கொள்வது எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்கிற கேள்வி வரலாம். காற்றின் மூலம் குறைந்த அளவு நஞ்சு நம் உடலில் சேரும். குடிக்கும் தண்ணீரைச் சுத்தப்படுத்திக் குடிக்கலாம். ஆனால் உணவுப் பொருள்களை தேர்ந்தெடுப்பது நமது கையில்தான் இருக்கிறது. உணவு என்பது, நம் உயிருக்கும் ஆரோக்கியத்துக்கும் அத்தியாவசியமானது. காற்று, தண்ணீர் போன்ற காரணிகளால் ஏற்படும் நோய்களுடன் மல்லுக்கட்டும் எதிர்ப்புச் சக்தியை நம் உடலுக்குத் தரக் கூடியதே உணவுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, அதிலும் ரசாயனத்தைக் கலக்காமல் இயற்கையை நாடுவது, மற்ற பிரச்னைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளக்கூடிய அரணாக அமையும்.

பொதுவாகவே இயற்கையான காய்கறிகளைத்தான் நாம் உண்ண வேண்டும். அதற்கு மூன்று வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று இயற்கை விவசாயம் செய்வது, இரண்டாவது இயற்கை விவசாயப் பொருள்களை நம்பத்தகுந்த விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெறுவது, இறுதியாக மாடித்தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம் மூலமாக இயற்கையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்வதுதான். இந்த வழிகளில் நகரவாசிகளில் பெரும்பாலானோர் இறுதி வழியான மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பையே பின்பற்றி வருகிறார்கள். இதனால் நம் மருத்துவச் செலவு குறைவதோடு, உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

மழைக்காலத்தில் மாடித்தோட்ட பராமரிப்பு... செய்யவேண்டியது இவைதாம்!

இன்றைக்குச் சில கடைகளில் விற்கப்படும் போலி ஆர்கானிக் பொருள்கள் மக்களின் தேவையைப் பயன்படுத்தி அதிகமான விலை வைத்து விற்கப்படுகின்றன. இது நிஜமான இயற்கை விவசாயப் பொருள்களின் மீதும் தாக்கம் செலுத்துகிறது. இதெல்லாம் தாண்டி வருங்காலத்தில் இயற்கை விவசாயத்தின் அளவும், அரசின் ஆதரவும் அதிகரிக்கும்போது ஆர்கானிக் பொருள்களின் விலையும் தானாகக் குறையும்.