Published:Updated:

மரபணு மாற்று சோயாமீல் இறக்குமதி: அச்சாரம் போடும் அதிகாரிகள்; அனுமதித்துவிடுமா மத்திய அரசு?

Soya Meal (Representational Image)
Soya Meal (Representational Image) ( Image by Rajendra Singh from Pixabay )

``கால்நடைக்கான தீவனம்தானே என்று சொல்லி உள்ளே கொண்டு வரப் பார்க்கிறார்கள். மரபணு மாற்று பயிர்கள் எந்த வடிவத்திலும் உள்ளே நுழையக்கூடாது. இதற்கு மத்திய அரசு செவி சாய்த்துவிடக்கூடாது."

`மரபணு மாற்று பயிர்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை, இங்கிருக்கும் நாட்டு ரகங்கள், ஆராய்ச்சி ரகங்களே போதுமானது. மரபணு மாற்று பயிர்கள் மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும்' என்பதே பல்வேறு சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அதேசமயம் மரபணு மாற்று பயிர்கள் குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த நடவடிக்கை தொடங்கினாலும் அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கிடையே பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது. அதனால், மத்திய அரசு மரபணு மாற்று பயிர்கள் விஷயத்தில் அடக்கியே வாசித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது கால்நடைகளுக்கான உணவுப் பற்றாக்குறையான சூழல் நாடு முழுவதும் இருந்து வருகிறது. இது சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் மத்திய உணவுத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய கால்நடை பராமரிப்புத் துறையின் அதிகாரிகள், ``இந்தியாவில் கோடைக்காலம் முடிந்து இப்போதுதான் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. கால்நடைத் தீவனத்துக்கான மூலப்பொருள்கள் அக்டோபரில்தான் கிடைக்கும். சோயாவிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, மீதியிருக்கும் புரதப் பொருள்தான் சோயாமீல். எனவே கால்நடை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் இதைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்த வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இது மரபணு மாற்று சோயா என்றே சொல்ல முடியாது.

சோயா Representational Image
சோயா Representational Image
Image by wichai bopatay from Pixabay
சோயா பீன்ஸைவிட 20 மடங்கு அதிக புரதம், தாய்ப்பால் சுரப்பு - கடல்பாசிகளின் அற்புத பலன்கள்!

ஏனென்றால் மரபணு மாற்று சோயாவில் மூன்று வகைகள் உள்ளன. மரபணு மாற்று சோயா (ஜி.எம்.ஓ), உயிர் மாற்ற உணவு வகை(எல்.எம்.ஓ), உயிரற்ற ரீதியில் மாற்றம் செய்யப்பட்ட என்.எல்.எம்.ஓ ஆகியவைதான் அவை. இதில் கடைசியாக சொன்ன பிரிவில் வருகிறது என்.எல்.எம்.ஓ. இதன் பயன்பாட்டுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. ஆனால், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ என்று சொல்லப்படும் உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளிப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.

அதேபோன்று தற்போது 12 லட்சம் டன் சோயாமீலை அர்ஜென்டினா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. சோயாமீலை இறக்குமதி செய்வதற்கு வெளிநாடு கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதிக்க வேண்டும். இதற்கு அரசு ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்” என்றனர். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மத்திய கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு மரபணு மாற்று பயிர்கள் விஷயத்தில் ஆரம்பித்திலிருந்தே அடக்கியே வாசித்து வருகிறது. சமீபத்தில் பி.ஜே.பியின் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், `மரபணு மாற்று பயிர்களை கொண்டு வரக்கூடாது. இயற்கை விவசாயத்தைப் பரவலாக்க வேண்டும்' என்று பேசி வருகின்றனர். இதனால், மரபணு மாற்று பயிர்கள் விஷயத்தில் முடிவுகளை எடுக்க மத்திய அரசு சற்று தயங்கியே வருகிறது. ஆனால், அதிகாரிகள் உணவுப் பற்றாக்குறை, தேவை, அத்தியாவசியம் என்று சொல்லி மரபணு மாற்று பயிர்களை உள்ளே கொண்டு வர எத்தனிக்கிறார்கள்.

Soya (Representational Image)
Soya (Representational Image)
Image by egroll from Pixabay
தேங்காய்ப்பால், சோயா பால், பட்டாணிப் பால்... விலங்குப் பாலுக்கு சிறந்த மாற்றாகும் தாவரப் பால்கள்!

`இந்தியாவில் சோயாமீல் விலை உச்சத்தில் இருக்கிறது. ஒரு கிலோ 36 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருந்த சோயாமீல், இப்போது 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோழித்தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் சோயா சாகுபடி இப்போதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது வளர்ந்து அறுவடை முடிந்த பிறகே விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு தற்காலிகமானதே. ஆனால், கால்நடைக்கான தீவனம்தானே என்று சொல்லி உள்ளே கொண்டு வரப் பார்க்கிறார்கள். மரபணு மாற்று பயிர்கள் எந்த வடிவத்திலும் உள்ளே நுழையக்கூடாது. இதற்கு மத்திய அரசு செவி சாய்த்துவிடக்கூடாது’ என்பதே மரபணு மாற்று பயிர் எதிர்ப்பாளர்களின் கருத்தாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு