Published:Updated:

`ஒரு கிலோ எலிக்கறி 200 ரூபாய்!' - எதிர்காலத்தில் இந்தியாவிலும் வளருமா எலிக்கறி வியாபாரம்?

Rat (Representational Image)

நைஜீரியா, லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், தைவான் போன்ற நாடுகளில் எலிக் கறி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவிலும்கூட, அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு கிலோ எலியை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அளவுக்குப் பிரபலமாகச் சாப்பிடப்படுகிறது.

`ஒரு கிலோ எலிக்கறி 200 ரூபாய்!' - எதிர்காலத்தில் இந்தியாவிலும் வளருமா எலிக்கறி வியாபாரம்?

நைஜீரியா, லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், தைவான் போன்ற நாடுகளில் எலிக் கறி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவிலும்கூட, அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு கிலோ எலியை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அளவுக்குப் பிரபலமாகச் சாப்பிடப்படுகிறது.

Published:Updated:
Rat (Representational Image)

நைஜீரியாவில் புல்வெட்டி எலி (Nigerian Grasscutter) என்றொரு வகை எலி உண்டு. மிகவும் லாபகரமான தொழிலாக இந்த வகை எலி வளர்ப்பு நைஜீரிய விவசாயிகளால் பார்க்கப்படுகிறது.

நைஜீரிய மக்களிடையே நாடு முழுக்க, இந்த வகை எலியின் மாமிசம் விரும்பி உண்ணப்படுகிறது. ஆகவே, இதற்கான சந்தையும் அங்கு நன்றாகவே வளர்ச்சியடைந்துள்ளது. நன்கு வளர்ச்சியடைந்த ஒரு எலி, 3,500 நைஜீரிய நைரா (நைஜீரிய நாணயம்) முதல் 5,000 நைஜீரிய நைரா வரை, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், 633 ரூபாய் முதல் 902 ரூபாய் வரை விற்பனையாகிறது.

Nigerian Grasscutter farming
Nigerian Grasscutter farming

ஒரு நைஜீரிய புல்வெட்டி எலி, பிறந்து 6 மாதங்களிலேயே நன்கு வளர்ந்து, இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். அவை அந்த வயதில், ஒரு முறைக்கு 10 குட்டிகள் வரை ஈனுகின்றன. விரைந்து வளரக்கூடியதாகவும் அதிக குட்டிகளை ஈனக்கூடியதாகவும் நைஜீரிய மக்களின் உணவுப் பழக்கத்தில் விருப்பத்துக்கு உரியதாகவும் இருப்பதால், அது நைஜீரிய கால்நடை விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பிசினஸ் குரூப் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, முழுதாக வளர்ந்த ஒரு பெண் எலி கர்ப்பம் தரித்து ஐந்து மாதங்களில் குட்டி போடுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை கர்ப்பம் தரிக்கும் இவை, ஒருமுறைக்கு குறைந்தபட்சம் 6 முதல் அதிகபட்சமாக 10 குட்டிகள் வரை ஈனுகின்றன. அதாவது ஓராண்டில், ஒரு பெண் புல்வெட்டி எலியால், 12 முதல் 20 குட்டிகள் வரை உற்பத்தி செய்ய முடியும். அப்படிப் பிறக்கும் அவை, பிறந்து 6 மாதங்களிலேயே, குட்டி ஒன்று இந்திய மதிப்பில் 900 ரூபாய் வரைக்கும் விற்பனையாகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம் மக்களிடையே எலிக் கறி என்றாலே, ஒருவித முகச் சுளிப்பைக் காண முடியும். எலி மாமிசத்தைச் சாப்பிடுவதா என்ற அருவருப்பு மனநிலைதான் நம்மில் பலருக்கும் இருக்கும். இவ்வளவு ஏன், விவசாயிகள் வறுமையில் சாப்பிட உணவில்லாமல், எலிக்கறி சாப்பிடுவதாக ஆங்காங்கே செய்திகளையும் நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆனால், ஊர்ப்புறங்களில் எலிகளை உணவுக்காக வேட்டையாடுவது பல ஆண்டுகளாகவே மக்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாக இருந்துவந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமன்றி பீகார் போன்ற வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் இது நடைமுறையில் உள்ளது. நைஜீரியாவில் எப்படி புல்வெட்டி எலிக் கறி பெருவாரியான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறதோ, அதேபோல் இந்தியாவிலும் ஆங்காங்கே எலிக் கறி விற்பனை நடந்து வருகிறது.

நைஜீரிய எலிப் பண்ணை
நைஜீரிய எலிப் பண்ணை
Jovana Integrated Farms

அவ்வளவு ஏன், ஒருகாலத்தில் எலிக் கறி விற்பனையை மாநிலம் முழுக்க பிரபலமாக்குவதற்குக்கூட பீகார் மாநில அரசு முயன்றது.

2008-ம் ஆண்டில் பீகார் அரசு, எலிக் கறியை பிரபலப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை முன்னெடுத்தது. அந்த மாநிலத்திலுள்ள பட்டியல் சாதியான முசாஹர் என்ற சாதியைச் சேர்ந்த மக்கள் எலி வேட்டையில் வல்லவர்கள். பீகாரில் வாழும் 23 லட்சம் முசாஹர் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்யும் வகையிலும் மிகக் குறைந்த விலையில் தரமான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடிய எலிக் கறியை மக்களுக்கு வழங்கவும் அப்போதைய அரசு முயன்றது. ஆனால், அதற்குக் கிடைத்த வரவேற்பைவிட எதிர்ப்பே அதிகமிருந்ததால், அந்தத் திட்டம் பெரியளவில் வெற்றியடையவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது பீகாரின் பழங்குடியின நல அமைச்சராக இருந்த ஜித்தன் ராம் மாஞ்சி இதுகுறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ``இதை மக்கள் ஏற்றுக்கொள்ள சில காலம் ஆகலாம். ஆனால், மிகக் குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்து நிறைந்த இதை, மக்கள் முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளுவதற்கான காரணம் எதுவும் இருப்பதுபோல் எனக்குத் தெரியவில்லை" என்று கூறியிருந்தார். உலகின் பல பகுதிகளில் இருப்பது போலவே, இந்தியாவிலும் எலிகள் பயிர்களை அழிக்கும் பிரச்னைக்குரிய உயிரினமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அவரைப் பொறுத்தவரை, எலிகளுக்கும் கோழிகளுக்கும் உணவுரீதியாக, சரி நிகர் மதிப்பு இருக்கிறது. புரோட்டீன் மட்டுமன்றி, அனைத்து வகையான ஊட்டச்சத்துகளுமே கோழிகளில் கிடைப்பதைவிட அதிகமாகவே எலிக் கறியில் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.

வயல்வெளியில் அமைக்கப்பட்ட பொறியில் சிக்கிய எலிகள்
வயல்வெளியில் அமைக்கப்பட்ட பொறியில் சிக்கிய எலிகள்

எலிக் கறிக்கு நல்ல வியாபாரச் சந்தையை உருவாக்கி, எலி பண்ணைகளை உருவாக்க முசாஹர் மக்களுக்கு கடன் உதவி வழங்குவது முதல், எலி வேட்டையை ஊக்கப்படுத்தி, பயிர்களைப் பாதுகாக்கவும் பீகார் அரசு அப்போது திட்டமிட்டது. நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழும் மக்கள் சுமார் 40 சதவிகிதம் இருக்கும் மாநிலத்தில், சிக்கன், மட்டனுக்கு நிகரான புரதச் சத்தை வழங்குகிற ஒரு மாமிச உணவை ஊக்குவிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்று அப்போதைய அரசு திட்டமிட்டது.

ஆனால், அதை முசாஹர் (சம்ஸ்கிருதத்தில் எலி பிடிப்பவர்கள் என்று பொருள்) மக்களின் தொழிலாகவே சாதிய அடிப்படையில் சுருக்கியதால் முற்போக்காளர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது, எலிக் கறி சாப்பிடுவதன் நன்மையை அனைவருக்கும் எடுத்துரைப்பதில் தோல்வியடைந்தது ஆகிய காரணங்களால், இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதில் அப்போதைய அரசு தோல்வியடைந்தது.

இதேபோல், அஸ்ஸாம் மாநிலத்தில் விடுமுறைக் காலங்களின்போது எலிக் கறி உள்ளூர் சந்தைகளில் மிகவும் பிரபலமாக விற்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், விவசாய நிலங்களை ஊடுருவும் எலிகளைப் பொறி வைத்து வேட்டையாடும் மக்கள் அவற்றை உள்ளூர் சந்தைகளில் கொண்டு வந்து விற்பனையும் செய்கின்றனர். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள குமரிகட்டா என்ற கிராமத்தில் கோழி மற்றும் பன்றிக் கறிகளைப் போலவே, விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை சமையலில், எலிக் கறியும் பிரபலமாக இருக்கிறது.

உள்ளூர் விவசாயிகளிடமிருந்து, விவசாய நிலங்களிலிருந்து பிடிக்கப்படும் நூற்றுக்கணக்கான எலிகளை மாமிச விற்பனையாளர்கள் வாங்குகிறார்கள்.

அப்படி வாங்கப்படுபவை, அஸ்ஸாம் தேயிலைத் தோட்டங்களில் பணி புரியும் பழங்குடி மக்களின் உணவுப் பழக்கத்தில், புரதச்சத்துக்கான ஒரு முக்கிய உணவாகப் பங்கு வகிக்கிறது. அதோடு அவற்றைப் பிடித்து விற்பனை செய்வதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.

குளிர்காலங்களில் பழங்குடி மக்கள் நெல் பயிர்கள் போடப்பட்டிருக்கும் விளை நிலங்களுக்குச் சென்று பொறி அமைத்து எலிகளை வேட்டையாடுவார்கள். அப்படிப் பிடித்து வரப்படும் எலிக்கறி, ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அறுவடைக் காலங்களில் எலிகள் மூங்கிலில் செய்யப்பட்ட பொறிகளின் உதவியோடு இரவு நேரங்களில் வேட்டையாடப்படுகின்றன. சிலநேரங்களில் அப்படிப் பிடிக்கப்படுவதில் ஒரேயொரு எலியே ஒரு கிலோ வரை இருக்கும். இரவு நேர வேட்டையில் சராசரியாக 10 முதல் 20 கிலோ அளவுக்கு எலிகள் பிடிபடுகின்றன. அதை விற்பனை செய்வதில், தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் வடகிழக்கு மாநில பழங்குடிகளுக்கு குறிப்பிடத்தக்க வருமானமும் கிடைக்கிறது.

ஊர்ப்புறங்களில் தோட்டத்திற்குள் ஓடும் எலிகளை அவ்வப்போது பிடித்து, தோலுரித்து, துண்டாக்கி, நன்கு வறுத்து, கார சாரமாகச் சமைத்து சாப்பிடும் வழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் இருக்கிறது. வயல்வெளிகளில் ஓடும் எலிகளை வேட்டையாடிச் சாப்பிடுவது வறுமையின் அடையாளமாகவும் சாதிய அடையாளமாகவும் இருக்கிறது. மாமிச அரசியலில் ஒதுக்கப்பட்டனவற்றின் பட்டியலில் எலிக் கறியும் அடக்கம்.

ஆனால், நைஜீரியா, லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், தைவான் போன்ற நாடுகளில் எலிக் கறி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவிலும்கூட, அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு கிலோ எலியை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அளவுக்குப் பிரபலமாகச் சாப்பிடப்படுகிறது.

யார் கண்டது! ஒருவேளை விலை மற்றும் ஊட்டச்சத்துகளின் அடிப்படையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பதால், எதிர்காலத்தில் இது நல்ல வரவேற்பைப் பெற்று, எலி பண்ணைகள் அதிகமாகலாம். நல்ல தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரலாம். பீகார் அரசின் திட்டத்தை, ஏற்றத் தாழ்வுகளின்றி அனைவருக்கும் பொதுவான முறையில் கொண்டுவருவதற்கான முயற்சிகள்கூட எதிர்காலத்தில் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism