Published:Updated:

விவசாயிகளும் கோடீஸ்வரர் ஆகலாம்! - இது மரப்பயிர்களின் பொற்காலம்!

நாட்டு நடப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டு நடப்பு

நாட்டு நடப்பு

டந்த அக்டோபர் 6-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் புதிய இடையூரிலிருக்கும் தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணையில், கரிம வேளாண் கட்டமைப்பின் முப்பெரும் வேளாண் விழா கோலாகலமாக நடைபெற்றது. 21-ம் ஆண்டு விழா, முன்னோடி கரிம விவசாயிகளுக்குப் பாராட்டு விழா, வேளாண்-வாழ்வியல் கருத்தரங்கு மற்றும் மலர் வெளியீடு என நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பசுமை விகடன் இதழ் ஊடக ஆதரவு வழங்கியிருந்தது.

கரிம வேளாண் கட்டமைப்பின் நிறுவனர், முனைவர் அரு.சோலையப்பன் பேசும்போது, ‘‘21 ஆண்டுகளுக்கு முன்னர், `என் பிறந்தநாளில் ஏதாவது நல்ல செயல் செய்ய வேண்டும்’ என நினைத்தேன். அன்று உதித்ததுதான் இந்த அமைப்பு. நல்ல செயலைச் செய்யும்போது, நல்லவர்கள் இணைந்துகொள்வது வழக்கம். அப்படிப் பல நல்ல உள்ளங்களின் பங்களிப்புடன், கரிம வேளாண்மையைக் கழனிகளில் கொண்டு சேர்த்துவருகிறோம். இந்தக் கட்டமைப்பு வளர ஆசி வழங்கி உரமூட்டிய உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்தினருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்’’ எனக் குறிப்பிட்டார்.

விவசாயிகளும் கோடீஸ்வரர் ஆகலாம்! - இது மரப்பயிர்களின் பொற்காலம்!

மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் பேசும்போது, ‘‘இயற்கைச் சூழலில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், ஒரு முறையாவது இந்தப் பண்ணையைச் சுற்றிப்பாருங்கள். இயற்கை வேளாண்மையில் பலவிதமான பயிர்கள் உள்ளன. இந்த நிலத்தின் மண் நலமாக இருக்கிறது. அதனால், பயிர்களும் சிறப்பாக வளர்கின்றன. மண்ணைப் போற்றிப் பாதுகாத்தால், அது விவசாயிகள் விரும்பும் விளைச்சலைக் கொடுக்கும்’’ என்றார்.

திருக்கழுக்குன்றம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (தி.மு.க) தமிழ்மணி, ‘‘விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு என்று பேசுகிறோம். ஆனால், இப்போது ஆளும் மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டுவருவதில்தான் முனைப்புக் காட்டிவருகின்றன. இயற்கையுடன் போராடி விளைச்சலைப் பெருக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் வளமுடன் வாழ வேண்டும். இடுபொருள் செலவு குறைவான, இயற்கைவழி விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்’’ என்றார்.

முன்னோடி இயற்கை விவசாயிகள் ‘அரியனூர்’ஜெயச்சந்திரன், ‘மதுராந்தகம்’ டி.டி.சுப்பு ஆகியோர் செய்துவரும் இயற்கை விவசாயப் பணிகளைப் பாராட்டி பொற்கிழியும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.

சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து மட்டுமல்ல, வெளி மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் வந்து கலந்துகொண்டனர். சென்னையில் பணியாற்றும் மென்பொருள் வல்லுநர்களும் குழுவாக வந்திருந்தனர்.

உழவுக் கருவிகள், விதைகள், இடுபொருள்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப் பட்டிருந்தன. சித்த மருத்துவர் கு.சிவராமன், ‘‘இப்போது மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு உணவே முக்கியக் காரணம். ரசாயன நஞ்சுகளைக் கொட்டி உற்பத்தி செய்யப்பட்ட உணவுதான் அதற்குக் காரணம். இதற்கு ஒரே தீர்வு கரிம(இயற்கை)வழி விவசாய முறைதான்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

செம்மர வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த விவசாயி ஆர்.பி.கணேசன் பேசும்போது, ‘‘ஆரம்பத்தில் வனத்துறை ஆலோசனையுடன் புளிய மரம் வளர்த்தேன். அதில் பலனில்லை. மரப் பயிர்கள் வளர்ப்பில் முன்னோடியாக இருக்கும் ஈ.ஆர்.ஆர்.சதாசிவம் எனக்குச் செம்மரம் சாகுபடி செய்ய ஆலோசனை வழங்க, 2004-ம் ஆண்டில் செம்மரச் சாகுபடியைத் தொடங்கினேன். செம்மரத்தை ஏ, பி, சி, டி என நான்கு வகையாகத் தரம் பிரிப்பார்கள். அரிதான வகையைச் சேர்ந்த `ஏ’ வகைச் செம்மரத்துக்கு ஒரு டன்னுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விலை கிடைக்கும். செம்மரம் வளர்ப்பு என்பது நீண்டகாலப் பண டெபாசிட் போன்றது. கரடு முரடான மானாவாரி நிலத்தில்கூட செம்மரங்களை நட்டுவைத்தால், 20-25 ஆண்டுகளில் அவற்றை அறுவடை செய்யலாம். தற்போது ஒரு டன் செம்மரம் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விலை போகிறது. குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் 400 மரங்கள் சாகுபடி செய்யலாம். அதில், 10 லட்சம், 20 லட்சம்கூட வேண்டாம். மரத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைத்தாலும், நான்கு கோடி ரூபாய் வருமானம் எடுக்க முடியும். அதனால்தான், `இது மரப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் பொற்காலம்’ என்று சொல்கிறோம்.

‘‘மற்ற பயிர்களுடன், மரங்களையும் சேர்த்து வளர்க்கும் வகையில், மத்திய அரசு ‘மர மேம்பாட்டு வாரியம்’ அமைக்க வேண்டும்.’’

அந்தந்தப் பகுதி தட்பவெப்பத்தைப் பொறுத்து, குறைந்த அளவு நீர் இருந்தால் போதும். தென்னைக்குத் தேவையான நீரில் 20-ல் ஒரு பங்கு நீர் செம்மர வளர்ப்புக்குப் போதும். ஆடு, மாடு தின்றுவிடாமல் செம்மரச் செடிகளைப் பாதுகாக்க வேண்டும். அடி உரமிட்டால் வேகமாக வளரும். சீனா, ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் செம்மரங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம். செம்மர ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்கப் போராடி, இப்போதுதான் வெற்றிப் பெற்றிருக்கிறோம். இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் செம்மரங்களை `அழிவை நோக்கிச் செல்லும் மரம்’ என்ற பட்டியலில் வைத்திருந்தது தெரியவந்தது. தமிழ்நாட்டில் மானாவாரி நிலங்களில்கூட வளரும் இந்த மரத்தின் அருமை பெருமைகளைச் சொல்லி, செம்மரத்தை அழிவு மரப்பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறோம்.

ஆண்டுதோறும் இந்தியாவின் மரத் தேவையில் 90 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். மர வளர்ப்பு மூலம் மரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியும் ஈட்டலாம். வனப் பகுதிகளின் பரப்பை அதிகரிப்பது சிரமம். அதே சமயம், விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கலாம். தற்போது மரம் வளர்ப்பு, மரம் வெட்டுதல் போன்றவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் பல்வேறு நிபந்தனைகளும் சிக்கல்களும் உள்ளன. இதனால் மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுவதில்லை. ஆகையால் மற்ற பயிர்களுடன், மரங்களையும் சேர்த்து வளர்க்கும் வகையில், மத்திய அரசு ‘மர மேம்பாட்டு வாரியம்’ உருவாக்க வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்தார்.

நிகழ்ச்சியில் ‘தமிழ்ப்பண்ணை’ இறையழகன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குமாரவேல், ‘எழில்சோலை’ மாசிலாமணி, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்தூர் பாரி, இயற்கை விவசாய ஆர்வலர்கள் ‘பசுமை சாகுல்’ சரோஜா குமார், இயல்வாகை அழகேஸ்வரி, வானவன் மாலதி.... போன்றவர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். நாள் முழுவதும் செவிக்குச் சிறந்த கருத்துகளும் மதியம் சிறுதானிய உணவுகளும் சிறப்பாக வழங்கப்பட்டன.