ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஆண்டுக்கு ரூ.11 லட்சம் நெல் முதல் நெய் வரை... மதிப்புக்கூட்டலில் மகத்தான வருமானம்!

ஆனந்தவள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்தவள்ளி

வெற்றிநடைபோடும் பெண் விவசாயி!

மகசூல்

சென்னையில் வசித்து வருபவர், ஆனந்த வள்ளி. இவர், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே உள்ள பிளேஸ்பாளையத்தில் இயற்கை வேளாண் பண்ணையம் நடத்தி வருகிறார். இவருடைய விவசாய அனுபவம் குறித்து ‘பாறையில் நெல் விதைத்தோம்... பலன் கிடைக்கப் போராடினோம்!’ என்ற தலைப்பில் 25.2.22 தேதியிட்ட இதழில் ஒரு சிறுபகுதி வெளியாகியிருந்தது.

தற்போது இப்பண்ணையில் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள ஒரு பகல்பொழுதில் இங்கு சென்றோம். உள்ளே நுழைந்ததும் நாய்கள் நம்மைப் பார்த்து குரைத்துக்கொண்டே ஓடி வந்தன. அவற்றை அமைதிப்படுத்திய ஆனந்தவள்ளி, இன்முகத்துடன் நம்மை வரவேற்று பண்ணையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

உற்சாகமாகப் பேசத் தொடங்கியவர், “எங்களுக்கு பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டுக்குப் பக்கத்துல உள்ள தெக்கூர் கிராமம். விவசாயம்தான் எங்க குடும்பத் தொழில். என்னோட கணவர் சென்னையில வழக்கறிஞர் தொழில் செய்யத் தொடங் கினாரு. அதனால குடும்பத்தோட சென்னை யில் குடியேற வேண்டியதாகிடுச்சு. கிராமத் திலேயே வாழ்ந்து பழகினதால நகரத்து வாழ்க்கை, உணவுப் பழக்க வழக்கம் எனக்கு ஒத்து வரலை. மனசுக்கு ரொம்ப விரக்தியா இருந்துச்சு. அந்தச் சூழ்நிலையிலதான் விவசாயம் செய்யணும்ங்கற முடிவுக்கு வந்து, 2006-ம் வருஷம், இந்த 10 ஏக்கர் நிலத்தை வாங்கினோம்.

அறுவடையான நெல்லுடன் ஆனந்தவள்ளி
அறுவடையான நெல்லுடன் ஆனந்தவள்ளி

இது 35 வருஷமா விவசாயமே செய்யாம கிடந்த நிலம். இந்த நிலத்தை நாங்க வாங்கினப்ப, எங்க பார்த்தாலும் கூழாங் கல்லும் முள் புதரும் கிடந்துச்சு. அதை யெல்லாம் அப்புறப்படுத்திட்டு, உழவு ஓட்டி நிலத்தைப் பக்குவப்படுத்தி 2011-ம் வருஷம் விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 10 ஏக்கர். இதுல 4 ஏக்கர்ல நெல், 2 ஏக்கர்ல மா, 1.5 ஏக்கர்ல தீவனப்புல், 1 ஏக்கர்ல சம்பங்கி, கொத்தவரை, உளுந்து, கம்பு, பச்சைப்பயறு சாகுபடி செய்வேன். அரை ஏக்கர்ல மீன் குளம் இருக்கு. மீதியுள்ள ஒரு ஏக்கர்ல மாட்டுக்கொட்டகை, கோழிகளுக்கான கொடாப்பு, ஆட்டுக்கொட்டகை, இடு பொருள்கள், விளைபொருள்கள் வைக்குறதுக் கான அறை, விவசாயத் தொழிலாளர்கள் தங்குறதுக்கான வீடு இருக்கு.

நெல் சாகுபடி

4 ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்களும், நவீன நெல் ரகங்களும் சாகுபடி செய்றேன். 60 நாட்டு மாடுகள் வளர்க்குறதுனால, அபரிமிதமா சாணமும், சிறுநீரும் கிடைக்குது. இதனால பண்ணைக்கு வெளியில இருந்து எந்தவோர் இடுபொருளும் விலைக்கு வாங்குறதில்லை. நெல் சாகுபடிக்கு... எரு, பஞ்சகவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம் பயன்டுத்துறேன். இதனால மண்ணு நல்லா வளமாகி, செழிப்பான விளைச்சல் கிடைக்குது. பாரம்பர்ய நெல் ரகங்கள்ல ஏக்கருக்கு 25 - 30 மூட்டை நெல் (70 கிலோ) மகசூல் கிடைக்குது. நவீன நெல் ரகங்கள்ல 30 - 35 மூட்டை நெல் மகசூல் கிடைக்குது. 4 ஏக்கர்ல கிடைக்குற நெல்ல, அரிசியா மதிப்புக்கூட்டுறது மூலம் ஒரு வருஷத்துக்குச் சராசரியா 4,700 கிலோ அரிசி கிடைக்குது. ஒரு கிலோவுக்கு சராசரியா 70 ரூபாய் வீதம் 3,29,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வைக்கோலையும் தவிடையும் எங்களோட மாடுகளுக்குத் தீவனமா பயன்படுத்திக்கிறேன்.

பண்ணையில் நாட்டு மாடுகள்
பண்ணையில் நாட்டு மாடுகள்

சொந்த டிராக்டர் சோலார் பம்ப்செட்

எங்ககிட்டயே டிராக்டர் இருக்கிறதால நாங்களே உழுவு ஓட்டிக்குறோம். இடுபொருள் களை நிலத்துக்குக் கொண்டு போறதுக்கும், விளைபொருள்களை வெளியில கொண்டு போறதுக்கும் டிராக்டர் பயன்படுத்திக்குறோம். இதனால நிறைய செலவு குறையுது. எங்க பண்ணைக்கு விவசாயத்துக்கான மின்சார இணைப்பு இன்னும் கிடைக்கலை. அதனால சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்தித் தண்ணீர் பாய்ச்சிறோம். பண்ணையில உள்ள மின்சார விளக்குகளுக்கும் சோலார் மின் சாரம்தான் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். 60 சதவிகித அரசு மானியம் மூலமா சோலார் மின்சார அமைப்பு நிறுவியிருக்கோம்.

மாம்பழங்களுடன்
மாம்பழங்களுடன்

மா சாகுபடி

2 ஏக்கர்ல மா சாகுபடி செய்றேன். நீலம், பங்கனபள்ளி, இமாம் பசந்த், பெங்களூரா உட்பட 7 ரகங்கள் இருக்கு. வருஷத்துக்கு சராசரியா 8 டன் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 45 ரூபாய் வீதம் 3,60,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மா மரங்கள்ல செழிப்புத் தன்மை குறைஞ்சா, பஞ்சகவ்யாவும் எருவும் கொடுப்போம். மாம்பழங்கள்ல கறுப்புப் புள்ளிகள் விழாமல் இருக்க, தேமோர் கரைசல் தெளிப்போம்.

பசுந்தீவனம்

ஒன்றரை ஏக்கர்ல தீவனப்புல் சாகுபடி செய்றேன். எங்களோட மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இங்கேயே கிடைச்சிடுது. பசுந்தீவன சாகுபடிக்கு மாடு களோட எருவை மட்டும்தான் உரமா கொடுக்குறேன். வேற எந்த இடுபொருளும் கொடுக்குறதில்லை. ஆனாலும், தீவனப்புல் நல்லா செழிப்பா விளையுது.

ஆடுகளுடன்
ஆடுகளுடன்

செண்டுமல்லி முதல் பச்சைப்பயறு வரை

ஒரு ஏக்கர்ல, கோடைப்பட்டத்துல கம்பு, பச்சைப்பயறு சாகுபடி செய்றேன். அதை அறுவடை செஞ்ச பிறகு... செண்டுமல்லிப் பூ சாகுபடி செய்வேன். அதுல மகசூல் எடுத்து முடிச்சதும், அந்தச் செடிகளை மடக்கி உழுதுட்டு, கொத்தவரை பயிர் பண்ணுவேன். இந்த ஒரு ஏக்கர்ல ஒரு வருஷத்துக்கு மூணு போகம் சாகுபடி செய்றது மூலமா 80,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

மீன் குளம்

மழைநீரைச் சேமிக்குறதுக்காகவும், மீன் வளர்ப்புக்காகவும்... அரை ஏக்கர்ல குளம் அமைச்சிருக்கேன். பெண் விவசாயிகளுக் கான மானிய திட்டம் மூலம் 100 சதவிகித மானியத்துல வேளாண் பொறியியல் துறையினர் போன வருஷம் இந்தக் குளத்தை வெட்டிக் கொடுத்தாங்க. சோதனை முயற்சியா 1,000 மீன் குஞ்சுகள் விட்டேன். குளத்துல அதிகமா தண்ணி நின்னதுனால, மழை பெய்ஞ்சு, குஞ்சுகள் வெளியேறிடுச்சு. இந்த வருஷம் கரைகளை உயர்த்தி, தண்ணி மட்டத்தையும் குறைச்சு 4,000 குஞ்சுகள் விட்டுருக்கேன். வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்னு எதிர் பார்க்குறேன்’’ என்று சொன்னவர், சற்றுத் தூரம் நம்மை அழைத்துச் சென்று, ஓர் இடத்தைக் காட்டினார்.

மாம்பழங்களுடன்
மாம்பழங்களுடன்

அங்கு கொழிஞ்சி, சணப்பு வளர்ந்துகொண்டிருந்தது. ‘‘இது ரொம்ப பள்ளமான பகுதி... 20 - 25 சென்ட் பரப்பு இருக்கும். மழைக் காலத்துல இங்க அதிகமா தண்ணி தேங்கிடும். இங்க கொழிஞ்சி, சணப்பு விதைகளைப் பரவலா தூவிடுவேன். பசுந்தாள் உரப்பயிர்கள் நல்லா வளர்ந்த பிறகு உழவு ஓட்டி காய்கறிகள் பயிர் பண்ணிடுவேன். அதுல விளையுற காய்கறிகளை எங்களோட வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்திக்குவேன். எங்க தேவைக்குப் போக, நிறைய காய்கறிகள் மிச்சமாகுது. அதை வத்தலா மதிப்புக்கூட்டுறதுக்காக, சூரிய கூடார உலர்த்தியை 40 சதவிகித மானியத்துல அமைச்சிருக்கேன். இனிமேதான் காய்கறிகள் மதிப்புக்கூட்டலை தொடங்கப் போறேன்” எனத் தெரிவித்தார். அடுத்ததாக மாட்டுக் கொட்டகை அமைந்துள்ள பகுதிக்கு சென்றோம்.

72 மாடுகள்

“மாடுகள், கன்றுக்குட்டிகள் உட்பட மொத்தம் 72 இருக்கு. எல்லாமே நாட்டு மாடுகள்தான். தார்பார்க்கர், ஓங்கோல், காங்கிரேஜ், காஞ்சிபுரம் குட்டைனு பல ரகங்கள் இருக்கு. இந்த மாடுகளைப் பசுமை விகடன் மூலமாத்தான் வாங்கினேன். பசுமை சந்தை பகுதியில, விவசாயி ஒருத்தர் தன்கிட்ட உள்ள நாட்டு மாடுகளை விற்பனை செய்யத் தயாரா இருக்குறதா தெரிவிச்சிருந்தார். 8 வருஷத்துக்கு முன்னாடி அவர்கிட்ட இருந்து, 5 மாடுகள் வாங்கினேன். அது படிபடியா பெருக ஆரம்பிச்சிது. இதுக்கு இடையில வெளியில இருந்தும் மாடுகள் வாங்கினேன். இந்த மாடுகள்ல இருந்து கிடைக்குற பாலை நெய்யா மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கேன். ஒரு மாசத்துக்கு 15 லிட்டர் நெய் விற்பனை செய்றேன். நாட்டு மாட்டு நெய்ங்கிறதால கூடுதல் விலைக் கிடைக்குது. ஒரு லிட்டருக்கு 2,000 ரூபாய் வீதம் மாசம் 30,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வருஷத்துல 6 மாசம் நெய் தயார் பண்ணி விற்பனை செய்றது மூலமா, 1,80,000 வருமானம் கிடைக்கும். மாடுகளோட சாணத்தை... எருவாவும், மண்புழு உரமாவும் பயன்படுத்திக்குறேன். பஞ்சகவ்யா தயாரிக்குறதுக்கும் மாடுகளோட கழிவுகள் பயன்படுது.

மண்புழு உரம்
மண்புழு உரம்

மண்புழு உரம்

மண்புழு உரம் தயார் பண்றேன். மூணு மாசத்துக்கு ஒருமுறை 5 டன் மண்புழு உரம் விற்பனை செய்றேன். ஒரு டன் 7,000 ரூபாய்னு விற்பனை செய்றேன். அதுமூலமா 35,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வருஷத்துக்கு 4 முறை மண்புழு உரம் தயார் செஞ்சு விற்பனை செய்றது மூலமா 1,40,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

நாட்டுக் கோழிகள்

45 நாட்டுக்கோழிகள் வளர்க்குறேன். முட்டை விற்பனை மூலம் நிறைவான வருமானம் கிடைக்குது. மாசம் 400 முட்டைகள் விற்பனை செய்றேன். ஒரு முட்டை 15 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா மாசம் 6,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு வருஷத்துக்கு 72,000 ரூபாய் வருமானம் பார்க்குறேன்.

நிறைவான லாபம்; நிம்மதியான வாழ்க்கை

இந்தப் பண்ணை மூலம் எனக்கு வருஷத்துக்கு 11,61,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவுகளும் போக, 6 லட்சம் ரூபாய் லாபமா கிடைக்குது. இது எனக்கு நிறைவான லாபம். விவசாயத்துல இறங்கின துனால, எங்க குடும்பத்துக்கு ஆரோக்கியமான உணவும், எனக்கு மன நிம்மதியும் கிடைச் சிருக்கு. பெரும்பாலான நாள்கள் இந்தப் பண்ணையிலதான் என்னோட பொழுது போயிக்கிட்டு இருக்கு’’ என்றவர் நிறைவாக,

கோழிகள்
கோழிகள்

“விவசாயத்தை இந்த அளவுக்கு வெற்றி கரமா செஞ்சுட்டு வர்றதுக்குக் காரணம் பசுமை விகடன்தான். நெல் சாகுபடி பத்தி மட்டுமே தெரிஞ்சிருந்த எனக்கு... மா, காய் கறிச் சாகுபடி, மண்புழு உரம் தயாரிப்பு, கால்நடைகள் வளர்ப்பு, மதிப்புக்கூட்டுதல்ல பல நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்துப் பசுமை விகடன்தான் என்னை ஊக்கப் படுத்துச்சு. இதுமட்டுமல்ல... நான் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருள்களை விற்பனை செய்றதுக்கும் உறுதுணையா இருக்கு’’ என நெகழ்ச்சியோடு தெரிவித்தார் ஆனந்தவள்ளி.

தொடர்புக்கு, ஆனந்தவள்ளி,

செல்போன்: 90942 74209

மண்புழு உரம்... பாலைவிட அதிக வருமானம்!

“எங்க பண்ணையில மாட்டுச்சாணமும் சிறுநீரும் நிறைய கிடைக்குது. இதுல சாணத்தை மட்டும் மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்துறோம். மாட்டுச் சாணத்தை ரெண்டு வாரங்கள் வரை திறந்தவெளியில் சேமித்து வைப்போம். அப்போது சாணத்திலிருக்கும் மீத்தேன் வாயு, நீர்த்தன்மை நீங்கிவிடும். இந்தச் சாணத்தை 10 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் கொண்டு மண்புழு உர பெட்டுக்குள் அரை அல்லது முக்காவாசி அளவுக்குள் நிரப்பி, தாய் மண்புழுக்களை விட வேண்டும். பிறகு தினந்தோறும் தண்ணீர் தெளிச்சுகிட்டு வரணும். இது மட்கி 3 மாதத்துக்குள் தரமான மண்புழு உரம் கிடைத்துவிடும். ஒரு பெட் மூலமா அரை டன் (500 கிலோ) அளவுக்கு மண்புழு உரம் கிடைக்குது. வருஷத்துக்கு 4 முறை மண்புழு உரம் எடுப்போம். நிறைய மாடு வளர்க்கிறவங்க மண்புழு உரம் தயார் பண்ணி விற்பனை செஞ்சா பாலைவிட அதிக வருமானம் எடுக்கலாம்” என்கிறார் ஆனந்தவள்ளி.

பண்ணையில் மாடுகள்
பண்ணையில் மாடுகள்

நர்சரிகளுக்குப் பஞ்சகவ்யா

“பஞ்சகவ்யா தயார் பண்ணி நர்சரி களுக்கு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இந்தப் பகுதிகள்ல நிறைய நர்சரிகள் இருக்குறதுனால, பஞ்ச கவ்யாவுக்கு நிறைய வரவேற்பு இருக்கு’’ எனத் தெரிவித்தார்.

திண்டிவனத்தில் 50 ஏக்கர் பண்ணை!

‘‘இந்தப் பண்ணையை முழுநேரமா இங்கயே இருந்து கவனிச்சிக்குறதுக்காக, விவசாயப் பணியாளர் குடும்பத்தை இங்கேயே தங்க வச்சிருக்கேன். அவங்களுக்கு சம்பளம் கிடையாது. பண்ணையில விளையுறதைப் பயன்படுத்தி அவங்க சமைச்சு சாப்பிட்டுக்கலாம். அவங்க பிள்ளைகளோட படிப்புச் செலவுகள் உட்பட மத்த உதவிகளை நான் செஞ்சுக் கொடுத்துடுவேன். மாம்பழத்துல ‘மேங்கோ கேண்டி’னு சொல்லப்படுற மிட்டாய் தயாரிக்கும் முயற்சியில இப்ப இறங்கியிருக்கேன். மாம்பழங்களைத் துண்டு துண்டாக நறுக்கி, தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில அரைச்சு கூழாக்கி ஒரு டிரேயில ஊத்தி, சூரிய உலர்ப்பான்ல காய வச்சு, துண்டு துண்டா நறுக்கினால், மேங்கோ கேண்டி தயாராயிடும்.

ஆடுகள்
ஆடுகள்

இந்தப் பண்ணையில கத்துக் கிட்ட அனுபவங்கள வெச்சு திண்டிவனம் பக்கத்துல 50 ஏக்கர்ல பாரம்பர்ய நெல் சாகுபடி தொடங்கியிருக்கோம். அதேமாதிரி ஒரத்திங்கற ஊருக்குப் பக்கத்துல 15 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியிருக்கிறோம். கத்துக்கவும் உழைக்கவும் தயாரா இருந்தா விவசாயம் கஷ்டமானது கிடையாது” என்கிறார் ஆனந்தவள்ளி.