Published:Updated:

கால்நடைத் தீவனமாகும் புழுக்கள்! - குறைந்த செலவில் புரதம் நிறைந்த தீவனம்!

அறிமுகம்

பிரீமியம் ஸ்டோரி
‘‘விவசாயத்துடன் அது சார்ந்த உபதொழில்கள் தற்போது வளர்ந்துள்ளன. ஆனால், கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற தொழில் களில் தீவனங்கள் கிடைப் பதில் சிக்கல் மற்றும் அதிக செலவு ஆகிறது. தீவனப் பிரச்னை காரணமாகப் பலர் தொழிலைக் கைவிட்டு விடுகிறார்கள். இந்நிலையில், புழுக்களைத் தீவனமாகப் பயன்படுத்துவதன் மூலம் செலவைக் குறைக்கலாம்’’ என்கிறார் சுந்தரேஷ்வரன்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கால்பிரிவு கிராமத்தில் 15 சென்ட் நிலத்தில் மியாவாக்கி முறையில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட விதவிதமான மரங்கள் மற்றும் மூலிகைகளை வளர்த்து அசத்தி வருகிறார். அங்கேயே நாட்டுக்கோழி, கருங்கோழி, வாத்து, நாட்டு நாய்களையும் வளர்த்து அதற்குத் தேவையான உணவுகளைத் தானே உற்பத்தி செய்து தற்சார்பு முறையில் வாழ்ந்துவருகிறார்.

பூச்சி
பூச்சி

மட்கும் குப்பையைப் பயன்படுத்தி, ‘பிளாக் சோல்ஜர் ஃபிளை’ (Black Soldier Fly) என்று சொல்லப்படும் பி.எஸ்.எஃப்.எல் ஈக்கள் மூலம் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார். அதைப் பண்ணையில் வளர்க்கும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவாகவும், தாவரங்களுக்கு உரமாகவும் பயன்படுத்தி வருகிறார். இதனால் அவரது தீவனச் செலவு மற்றும் உரச் செலவு சுமார் 40 சதவிகிதம் குறைத்துள்ளதாகச் சொல்கிறார்.

இதுகுறித்து தெரிந்துகொள்வதற்காக ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்தோம்.

இடத்தைச் சுற்றி காட்டியபடியே பேசத் தொடங்கினார் சுந்தரேஷ்வரன். “நான் ஒரு மாற்றுத்திறனாளி. வித்தியாசமாக ஏதாவது படிக்கணும்னு ஆசைப்பட்டு புனேவுல தோட்டக்கலையில டிப்ளோமா படிச்சேன். அந்த மூணு வருஷம் விவசாயம் சார்ந்த பல விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து பல பன்னாட்டு நிறுவனங்கள்ல வேலை செஞ்சேன். 14 வருஷத்துல பல அனுபவங்கள் கிடைச்சது. பிறகு, மானாமதுரை பக்கத்துல நல்ல தண்ணி வசதி இருக்கிற கால்பிரிவு கிராமத்துல 15 சென்ட் இடம் வாங்கி மரக்கன்றுகளை வெச்சேன். தொடர்ந்து பல விவசாயிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விவசாயம் சம்பந்தமான ஆலோசனைகளைச் சொல்லிக்கிட்டு வர்றேன்.

முட்டை தொகுப்பு
முட்டை தொகுப்பு

கால்நடைத் தீவனச் செலவையும், பயிர்களுக்கான உரச்செலவையும் குறைக்கத் தீவிர ஆராய்ச்சியில இருந்தேன். அதனால பி.எஸ்.எஃப்.எல் பற்றித் தெரிஞ்சுகிட்டேன். அதை நம்ம நாட்டு தட்பவெப்ப நிலைக்கு எப்படி உற்பத்தி செய்றதுன்னு பல ஆராய்ச்சிகள் செய்து வெற்றி பெற்றேன். இந்தப் பி.எஸ்.எஃப்.எல் புழு, மக்கும் குப்பையை உணவாக எடுத்துக்கிட்டு தன்னையும் வளர்த்துகிட்டு, உடம்பை 40 சதவிகிதம் புரதமாகவும், 30 சதவிகிதம் கொழுப்பாகவும் மாத்திடும். இதனால குறைஞ்ச செலவுல கால்நடைத் தீவனமும், தாவர ஊட்டச்சத்துகளையும் பெற முடியும். மேலும் உலக வெப்பமயமாதலையும் தடுக்க முடியும்.

பி.எஸ்.எஃப்.எல் புழுக்கள்
பி.எஸ்.எஃப்.எல் புழுக்கள்

‘பிளாக் சோல்ஜர் ஃபிளை’ ஒரு வகை ஈ இனம். இது மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காது. உலக நாடுகள்ல அதிகளவு இதைக் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்திட்டு இருக்காங்க. இப்ப இந்தியாவுலயும் இந்தத் தொழில் வளர்ந்திட்டு வருது. தொழில் செய்றவங்களுக்கு நல்ல லாபத்தையும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாயும் இருக்குது. இப்ப அதை உற்பத்தி செய்து, நானும் பயன்பெற்று ஏற்றுமதியும் செய்யுறேன். இது சோயாவைவிட அதிகளவு புரதச்சத்து கொண்டது. விலைக் குறைவாக உற்பத்தி செய்ய முடியும். சிறிய இட வசதி இருந்தால் போதும். நாமளே இதை உற்பத்தி பண்ணிக்கலாம். போதுமான தட்பவெப்பம் இருந்தா வருஷம் முழுக்க உற்பத்தி செய்யலாம். பொதுவா மட்கும் குப்பைகள்ல இருந்து பயோ கேஸ் மற்றும் இயற்கை உரங்கள் எடுக்கிறோம். அதுபோல இதை வளர்த்து மக்கும் குப்பையைப் புரதச் சத்தாகவும், கொழுப்புச் சத்தாகவும், தாவரங்களுக்கான ஊட்டச் சத்தாகவும் மாற்ற முடியும்.

புழு உற்பத்தி
புழு உற்பத்தி

இதுக்கு இந்தியாவுல நல்ல வரவேற்பு இருக்கு. புரதம் தயாரிக்குறது இன்னிக்கு உலக நாடுகளுக்குச் சவாலான ஒரு விஷயம். ஒரு கிலோ சோயா தயாரிக்க 7,000 லிட்டர் ‘வெர்ச்சுவல் வாட்டர்’னு ஆங்கிலத்துல சொல்ற மறைநீர் தேவை. ஆனால் பி.எஸ்.எஃப்.எல் மூலம் புரதம் பெற 700 லிட்டர் தண்ணி இருந்தாப் போதும் ‘தீவனத்துல சேர்க்கும் கருவாடுகளைவிட இதில் அதிக புரதம் மற்றும் அமினோ அமிலம் கொண்டது’னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. எனவே விவசாயிகள் இந்த பி.எஸ்.எஃப்.எல் புழுவை நேரடியாகவும், மதிப்புக்கூட்டியும் பயன்படுத்தலாம். பி.எஸ்.எஃப்.எல் புழுக்கள்மூலம் ‘கைடின்’ என்ற மூலப்பொருள் கிடைக்கும். இது மருத்துவத் துறையிலும், அழகுசாதன பொருள்கள் தயாரிப்பிலும் அதிக பங்கு வகிக்குது. பி.எஸ்.எஃப்.எல் கழிவு மூலமா தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து 6:5:3 சதவிகிதத்தில கிடைக்குது.

கோழி வளர்ப்பு
கோழி வளர்ப்பு

அதனால விவசாயத்துக்கும் இதைப் பயன்படுத்திக்கலாம். முட்டை, புழு, புரத பவுடர், வறுத்த புழுனு பல வகையில லாபம் ஈட்டக்கூடிய ஒன்னு. இந்த ‘பிளாக் சோல்ஜர் ஃபிளை’யை 12 பெரும் கம்பெனிகள் அதிகளவு உற்பத்தி செய்றாங்க. இப்ப ‘ஆல் இந்தியா பிளாக் சோல்ஜர் ஃபிளை ஃபார்மர் அசோசியேஷன்’ என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்திட்டு வர்றோம். இந்தியா முழுவதும் ‘பிளாக் சோல்ஜர் ஃபிளை’ வளர்க்குற விவசாயிகள் மற்றும் தனியார் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களா இருக்காங்க. அதுல நான் செயலாளரா இருக்கிறேன். கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்புல இந்த பி.எஸ்.எஃப்.எல் புழுவைப் பயன்படுத்துவது மூலமா விவசாயிகள் குறைந்த செலவுல அதிக வருமானம் ஈட்ட முடியும். இது இயற்கை கொடுத்த கொடை.

பி.எஸ்.எஃப்.எல் மொத்தம் நான்கு நிலைகள்ல இருக்குது. முட்டை, புழு, கூட்டுப் புழு, பூச்சி. இதுல இரண்டாவது நிலையான புழுதான் தீவனமாகப் பயன்படுது. பூச்சி முட்டை இட்டவுடனே இறந்துடும். அதை வாத்து, கோழிகள் சாப்பிட்டுக்கும். கூட்டுப் புழுவிலிருந்துதான் ‘கைடின்’ எடுப்பாங்க. முட்டையை, உற்பத்தி மற்றும் விற்பனைக்குப் பயன்படுத்திக்கலாம். இந்த பி.எஸ்.எஃப்.எல் ‘பிற்காலத்தில மனிதர்களுக்குப் புரதச்சத்து பொருளா அதிகளவு பயன்படும்’னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லிட்டு இருக்காங்க. ஏற்கெனவே ஐ.நா சபை, பூச்சி, புழுக்கள் சாப்பிடலாம்னு சொல்லியிருக்கிறதைக் கவனத்துல வெச்சுக்கணும்’’ என்றவர், பி.எஸ்.எஃப்.எல் புழுக்களை உற்பத்தி செய்யும் முறை குறித்து விளக்கினார்.

சுந்தரேஷ்வரன்
சுந்தரேஷ்வரன்

“பி.எஸ்.எஃப்.எல்லை, ‘லவ் கேஜ்’ என்ற பிரத்யேக முறையின் மூலம் வளர்த்து அதிலிருந்து முட்டையைப் பெறலாம். முட்டையைப் பொறிக்க வைத்து, 5 நாள்கள் புழுக்களாக வளர்க்க வேண்டும். பிறகு, மட்கும் குப்பையில் சரிவிகித அளவில் 5 நாள்கள் புழுக்களை இட்டு, 15 நாள்கள் வளர்க்க வேண்டும். இந்த முறைகள் மூலம் 40 முதல் 45 சதவிகிதம் புரதமாகவும், 30 முதல் 35 சதவிகிதம் கொழுப்பாகவும் பெறலாம்.

பொரித்த புழு, 15 நாள்களில் மட்கும் குப்பையை உண்டு புரதச் சத்தாக மாற்றுகிறது. இந்தப் புழு, 21 முதல் 28 நாள்களில் ஈ ஆக மாறும். ‘ஈ’ ஆக மாறிய பிறகு, மீண்டும் அதுவே முட்டை போட ஆரம்பித்துவிடும். ஒரு பி.எஸ்.எஃப்.எல் ஈ, 500 முதல் 800 முட்டைகளை வெளியிடும். முட்டையிட்ட அந்த ஈ, 24 முதல் 48 மணி நேரத்துக்குள் இறந்துவிடும். முட்டைகளில் 75 சதவிகிதம் பொரிக்கும் திறன் இருக்கும். இப்படிச் சுழற்சி முறையில் உற்பத்தி செய்யலாம்” என்று விடைகொடுத்தார்.

பி.எஸ்.எஃப்.எல் மூலம் வருமானம்?

ருமானம் குறித்துப் பேசிய சுந்தரேஷ்வரன், “பி.எஸ்.எஃப்.எல் முட்டை, புழு, உலர்ந்த புழு, வறுத்த புழு, அதன் அரவை (மீல்), எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்யலாம். ஒரு மாசத்துக்கு ஒரு டன் முதல் ஒன்றரை டன் பி.எஸ்.எஃப்.எல் உற்பத்தி செய்றோம். மாசம் 10 டன் ஏற்றுமதி செய்றதுதான் எங்க இலக்கு. மெக்ஸிகோ, வளைகுடா நாடுகள், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு, பி.எஸ்.எஃப்.எல் புழுக்களை ஏற்றுமதி செய்றோம். பூச்சி முட்டையிட்டதும் குறிப்பிட்ட நேரத்தில் இறந்துடும். அதனால அதை ஏற்றுமதி செய்றது சிரமம்.

பி.எஸ்.எஃப்.எல் லார்வா (புழு) கழிவை உரமாகப் பயன்படுத்தலாம். பூச்சி முட்டையிட்ட தொகுப்பு ஒரு கிராம் 1,000 முதல் 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். ஒரு கிராம் முட்டை தொகுப்பில் 40,000 முட்டைகள் இருக்கும். இதில் 70 முதல் 80 சதவிகிதம் பொரிக்கக்கூடியது. நான் முட்டையாகத்தான் விற்பனை செய்றேன். இதன்மூலம் ஒரு மாசத்துக்கு 30,000-50,000 ரூபாய் வரை வருமானம் எடுக்கிறேன்” என்றார்.

லவ் கேஜ் என்றால் என்ன?

“பி.எஸ்.எஃப்.எல் புழு, பூச்சியாக மாறி இனப்பெருக்கம் செய்து முட்டையிடு வதற்கான இடமாக இந்த ‘லவ் கேஜ்’ பயன்படுகிறது. நான் தயாரித்த பிரத்யேக ‘லவ் கேஜ்’ நமது நாட்டின் தட்ப வெப்பத்துக்குத் தகுந்த மாதிரி வடிவமைச்சிருக்கேன். பல ஆராய்ச்சிகளோட முடிவுல இதைத் தயாரிச்சேன். இதன் மூலமா வருஷம் முழுக்க அதிக முட்டைகளைப் பெறலாம்” என்கிறார் சுந்தரேஷ்வரன்.

கால்நடைத் தீவனம்

ந்தப் புழுவை நேரடியாகத் தீவனமாகப் பயன்படுத்தலாம். விற்பனை வாய்ப்புக்காக கால்நடைத் தீவனமாக மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்யலாம். இந்தப் புழு 40 சதவிகிதம், மக்காச்சோளம் 30 சதவிகிதம், குறுணை 10 சதவிகிதம், சோயா 10 சதவிகிதம், பருத்தி அல்லது தேங்காய்ப் பிண்ணாக்கு 8 சதவிகிதம், மினரல் மிக்ஷர் 2 சதவிகிதம் கலந்து கொடுக்கலாம்.

இதை ஒரு மாதம்வரை சேமித்துப் பயன்படுத்த முடியும். வேதிப்பொருள்கள் சேர்த்தால் கூடுதலாகவும் பயன்படுத் தலாம். கோழிக்கு உணவைக் கொடுப் பதுபோல் பன்றி, நாய் என ஒவ்வொரு உயிரினத்துக்கும் பி.எஸ்.எஃப்.எல் உணவுக் கலவை மற்றும் அளவீடு மாறும்.

பி.எஸ்.எஃப்.எல் உரமாகப் பயன்படுத்துவது எப்படி?

பி.
எஸ்.எஃப்.எல் லார்வா கழிவுகள் உரமாகப் பயன்படும். மண்புழு உரம்போல இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மண்புழு உரத்தைவிட இதில் அதிக ஊட்டச்சத்துகளைத் தாவரங்கள் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு