Published:Updated:

``பனைக்கும் காளி வழிபாட்டிற்கும் தொடர்பு இருக்கிறது!" - பனையைத் தேடி பயணிக்கும் காட்சன் சாமுவேல்

பனை மர ஆராய்ச்சியாளர் காட்சன் சாமுவேல்
பனை மர ஆராய்ச்சியாளர் காட்சன் சாமுவேல்

பனையை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென்று தொடர்ந்து பனையோடு இயங்கிக்கொண்டிருப்பவரிடம் பேசினோம்.

பனைமர வேட்கைப் பயணம் என்ற கருத்தை மையப்படுத்தி மோட்டார் சைக்கிள் மூலம் மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை சுமார் 3,000 கிலோமீட்டர் பயணித்திருக்கிறார் கிறிஸ்துவ மத போதகர் காட்சன் சாமுவேல். தன் பயண அனுபவங்களை `பனைமரச் சாலை' என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். சாதி, மத பேதமின்றி பனையை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென்று தொடர்ந்து பனையோடு இயங்கிக்கொண்டிருப்பவரிடம் பேசினோம்.

Palm Tree
Palm Tree

பனைமர வேட்கைப் பயணம் செல்ல வேண்டும் என்ற முதல் விதை எப்போது விழுந்தது?

``சிறு வயது முதலே பனை மரங்கள் மீது தீராத காதல் உண்டு. பெங்களூரில் இறையியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது 1999-ம் ஆண்டு பனை மரத்தின் பொருளாதாரம், 2003-ல் சமய மற்றும் சடங்கு சார்ந்த பனையின் முக்கியத்துவம் என இரண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தேன். அந்தச் சமயத்தில்தான் பனைமரம் என்பது சமயம், கலாசாரம், மொழி, சூழலியல் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
அதற்குப் பிறகு, மும்பையில் போதகராக இருந்த சமயம், பனைமரங்களைத் தேடி சிறிய சிறிய பயணங்களை முன்னெடுத்திருக்கிறேன்.

2011- 2014 வரை மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, கம்போடியா, மாலத்தீவு ஆகிய இடங்களில் பனை என்ற கருத்தாக்கத்தைப் பரப்புவதற்காகப் பனை ஓலை ஓவியங்கள் கண்காட்சியை நடத்தினேன். அது கிட்டத்தட்ட மேல்தட்டு மக்களை ஈர்ப்பதற்கான முயற்சி என்றே கூறலாம். பின்னர் மேல்தட்டு மக்கள் அல்ல; அடித்தட்டு மக்கள்தாம் பனையோடு ஒன்றியிருப்பவர்கள் என்ற புரிதல் ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை எப்படிக் கொண்டு வர முடியும் என்ற சிந்தனை மேலெழுந்தது. பனை மரங்கள் பற்றிய 25 வருட தேடலின் உச்சம்தான் இந்தப் பயணம். 2016-ல் நான் மேற்கொண்ட இந்தப் பயணம் எனக்குள் ஓர் உருமாற்றத்தை ஏற்படுத்தியது.

Godson Samuel
Godson Samuel

பனை சமயங்களை இணைக்கிறதா?

ஆம்! மனிதனைப் போல பனையும் குடும்பமாக இருக்கின்றன. பனை மரக் குடும்பத்தில் சேர்ந்த 2,000 வகை மரங்கள் உள்ளன. உணவுப் பழக்கவழக்கம், தனிநபர் உரிமை என்பதை மீறி இன்று ஏதோ ஒரு கட்டமைப்புக்குள் போய் சிக்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு சமயங்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கின்றன. ஆனால், பனை என்பது சமயங்களை இணைக்கிறது. எல்லாரும் கொண்டாடும் மரமாகப் பனை மரம் இருக்கிறது. எந்தச் சமயமும் பனை மரத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை.

உங்கள் பயணத்துக்கு பனை மரங்கள் எவ்வாறு வழிகாட்டின?

மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி என ஆறு மாநிலங்களிலும் பனை மரங்களைத் தேடிய பயணம். பயணித்த வழியெல்லாம் ஆச்சர்யங்களாக நிறைந்திருந்தன. வீட்டில் இருந்து மளிகைக்கடைக்கு பொருள் வாங்கச் செல்லும் குழந்தை, வரும் வழியில் எதையாவது வேடிக்கை பார்த்து, தாமதமாக வீடுவந்து சேர்வதைப் போன்றுதான் பயணித்தேன்.

Palm Fruit
Palm Fruit

பயணத் திட்டமிடலின்போது 1,800 கி.மீ தூரம் என்று கணக்கிட்டேன். ஆனால், பயணித்தது சுமார் 3,000 கி.மீ. சில இடங்களில் பனை மரங்கள் இருக்கும் என்று தெரிந்தே சென்றேன். எனக்குத் தெரியாத பல இடங்களிலும் பனை மரங்கள் காணப்பட்டன. பயணித்த மற்ற மாநிலங்களில் ஆங்காங்கே பனை காணப்பட்டாலும், ஆந்திரா தொடங்கி நாகர்கோவில் வரை இடைவிடாமல் தொடர்ந்து பனை மரங்களோடு பயணித்தேன்.

புத்தகத்தில் பனைமரத்தைக் காளியுடன் ஒப்பிட்டதைப் பற்றி...

அன்னை என்பவள் அன்பும் காட்டுவாள், கோபமும் கொள்வாள் என்பதைத்தான் காளியின் சாராம்சமாகப் பார்க்கிறேன். காளி என்பது பெண் தெய்வம். கனிவாக இருப்பாள். ஆனால், அவளுக்குள் ஓர் உக்கிரம் இருக்கும். அந்த உக்கிரத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

காளி என்ற கருத்துருவாக்கமே பனையில் இருந்துதான் வந்திருக்கும் என்றுதான் பார்க்கிறேன். பனை மரம் தாயைப் போன்றது. அதன் கை வாள் போள் கூர்மையாக இருக்கிறது. பார்ப்பதற்கு அச்சுறுத்தும் தோற்றம் இருக்கிறது. ஆனால், கனிந்து அதன் உணவை ஊட்டுகிறது. கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் காளியை வழிபடும் வழக்கம் எல்லாரிடமும் இருக்கிறது. காளி மிக அதிகமாக வழிபடப்படுவது கடற்கரை ஓரங்களில், பனை இருக்கும் பகுதிகளில்தான்.

பனை மரங்கள்
பனை மரங்கள்
``நாலு பனைமரத்தை நட்டுட்டுப் போங்க... உங்க சந்ததி நல்லா இருக்கும்!'' - `பனை' பாண்டியன்

பனை உணவுகளின் மரபு என்ன?

இலை, தழைகளைச் சாப்பிட்ட மனிதன் பஞ்ச காலத்தில் பனையின் குருத்தைச் சாப்பிட்டிருக்கிறான். பனைக்கு பஞ்சம்போக்கி என்ற பெயரும் உண்டு. தன்னுடைய உணவை பனை ஓலையில் பொதிந்துகொண்டு போனான். அதிலேயே சாப்பிடவும் செய்தான். நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பனை ஓலையில் வைத்து உணவைச் சமைக்கும்போது சுவையும் ஊட்டச்சத்து அதிகமாகக் கிடைக்கிறது என்று கண்டறிகிறான். கார்த்திகை மாத கொழுக்கட்டை, தொன்மையான சடங்கில் பனங்குருத்து என்ற தொன்மையான மரபு இதுவரை நிலைத்து நிற்கிறது.

உங்கள் வேட்கைப் பயணம் தொடருமா?

இந்த புத்தகத்தைத் தொகுப்பதற்கே ஆசிய கண்டம் முழுவதும் பயணிக்க வேண்டும் என்ற பேராவல் இருந்தது. உலகில் இரண்டு கண்டங்களில் பனைமரங்கள் இருக்கின்றன. என் கனவு தேசம் ஆப்பிக்காதான். காரணம், பனையின் ஆரம்ப காலகட்டம், உற்பத்தி எல்லாமே ஆப்பிரிக்க தேசம்தான். அங்கும் பனையோடு பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பனை மரம் என்பது குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்ற மனப்பான்மை இருக்கிறது.

பனை மரம் தேடிய பயணத்தில் காட்சன் சாமுவேல்
பனை மரம் தேடிய பயணத்தில் காட்சன் சாமுவேல்
amirtharaj stephen
ஒவ்வொரு மரமும் எங்களுக்கு உசுரு! - பனை ஏறும் சகோதரிகள்

தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் ஆசிய கண்டத்தில் பிற நாடுகளிலும் பனையின் வேர்கள் இப்போதும் இருக்கின்றன. எனவே, அதை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முடியாது. பனை மரத்துடனான 25 ஆண்டுக்கால மரபு என்னிடம் இருந்ததால் அந்த நகர்வைச் சரியாக எடுத்து வைக்க முடிந்தது. எனது இயக்கமே மாற்றங்களை உருவாக்கும் என்ற பொதுப்புரிதலோடு தொடர்ந்து பயணிக்கிறேன். பனையின் பொதுத்தன்மையை வெளியே எடுத்து வைக்கும்போதுதான் அதற்குள் நிறைய பேர் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அப்படித்தான் பனையின் எதிர்காலத்தைக் கட்டமைக்க முடியும்."

அடுத்த கட்டுரைக்கு