Published:Updated:

கடலோரம் கோழி, முயல் பண்ணை... தற்சார்பு வாழ்வில் எழுத்தாளர் ஜோ.டி.குருஸ்!

வாத்துகள்
பிரீமியம் ஸ்டோரி
வாத்துகள்

தற்சார்பு

கடலோரம் கோழி, முயல் பண்ணை... தற்சார்பு வாழ்வில் எழுத்தாளர் ஜோ.டி.குருஸ்!

தற்சார்பு

Published:Updated:
வாத்துகள்
பிரீமியம் ஸ்டோரி
வாத்துகள்

லகின் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தாலும், இயற்கைப் பேரிடருக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அத்தனையும் செல்லாத செல்வங்களாக மாறிவிடும். அத்தகைய கொடூர பேரிடரான கொரோனா கடந்த ஆண்டு உலகம் முழுவதையும் உலுக்கிவிட்டது. அன்றாடக் கூலிகள் முதல் அதானி, அம்பானிகள் வரை முடக்கிப்போட்டது. பல லட்சம் பேரை வேலை இழக்கச் செய்தது. பெரும்பாலான வர்களின் தொழில் முறைகளை மாற்றியது. பிரபலங்கள் பலரையும் தாங்கள் சாதித்த துறைகளிலிருந்து மாற்றுப் பணிகளுக்குள் இழுத்துச் சென்றது. அத்தகைய பிரபலங்களில் ஒருவர் எழுத்தாளர் ஜோ.டி.குருஸ்.

திருநெல்வேலி மாவட்டம், உவரியில் எளிய மீனவர் குடும்பப் பின்னணியில் பிறந்த ஜோ.டி.குருஸ், ‘ஆழி சூல் உலகு’ எனும் நாவலின் மூலம் எழுத்தாளராக உருவெடுத்தவர். 2-வது நாவலான ‘கொற்கை’காகச் சாகித்ய அகாடமி விருதை வென்றவர். மீனவர், வணிகக் கப்பல் நிறுவன சிப்பந்தி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட ஜோ.டி.குருஸ், தற்போது கோழி, வாத்து, முயல் எனக் கால்நடைகள் மூலம் வருவாய் ஈட்டும் தற்சார்பு தொழிலில் தடம் பதித்திருக்கிறார்.

ஜோ.டி.குருஸ்
ஜோ.டி.குருஸ்

பாம்பன் - ராமேஸ்வரம் சாலையில் அமைந்திருக்கிறது அக்காள்மடம் எனும் மீனவர் கிராமம். இந்தக் கிராமத்தின் முழுமை பெறாத சாலைகளைக் கடந்து சென்றால் வடக்குக் கடற்கரையோரம் அமைந்திருக்கிறது தீக்குருசியார் குடில். அதன் உள்ளே சென்றால் இரு புறமும் வரவேற்கும் தென்னம்பிள்ளை களுக்கு இடையே தலையில் முண்டாசு கட்டியபடி கோழி - வாத்துகளுக்குத் தீவனம் இட்டுக்கொண்டிருக்கிறார் ஜோ.டி.குருஸ். பேனா பிடித்த கரங்களில் தென்னைகளுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சும் குழாயைப் பிடித்தபடியே பேசத் தொடங்கினார்.

‘‘பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக 2018-ம் ஆண்டு இந்தப் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினேன். கடற்கரைப் பகுதி என்பதால் மீனவர்கள் சென்று வர ஏதுவாகப் பாதி இடத்தைப் பாதைக்காக விட்டுவிட்டு எஞ்சிய 50 சென்ட் நிலத்தில் 70 தென்னம்பிள்ளைகளை நட்டு அதனிடையே சிறிய வீடும் அமைத்துள்ளேன். கடந்த மார்ச் மாதம் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இங்கு வந்து தங்க வேண்டிய நிலை உருவானது. தினமும் எவ்வளவு நேரம் கடலையும் வானையும் பார்த்துக்கொண்டே இருப்பது என மனம் சலித்துக்கொண்டபோது, ‘எதையாவது வளர்த்தால் என்ன’ என்ற எண்ணம் தோன்றியது.

‘‘எனக்குக் கிடைத்த இந்த அனுபவத்தின் மூலம் இந்தக் கடற்கரைப் பகுதியை முறையாகப் பயன்படுத்தினால் முழுமையான விவசாயப் பகுதியாக மாற்ற முடியும்."
நாட்டுக் கோழிகளுடன்
நாட்டுக் கோழிகளுடன்

சொந்த ஊரான உவரியில் இருந்து 5 நாட்டுக்கோழிகள், 3 வாத்துகள், ஒரு ஜோடி முயல் வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். இப்பகுதியில் சீரான மின் விநியோகம் இல்லாததால் தினமும் காலை 4 மணிக்கே எழுந்து தென்னைகளுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சிவிட்டுக் கோழிகளுக்குத் தீவனம் வைப்பது, தோட்டத்தைச் சீர்படுத்துவது எனக் காலை 9 மணிவரை பொழுது போய்விடும். ஒருகட்டத்தில் இதை ஏன் தற்சார்பு தொழிலாகச் செய்யக் கூடாது என யோசித்தேன். அதன் பிறகு மேலும் 20 கோழிகள் வாங்கி வந்து பண்ணையை விரிவுபடுத்தினேன். அவை இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளாகப் பெருகியுள்ளன. 13 ஜோடி முயல்கள் உள்ளன. நன்றாக வளர்ந்த கோழி ஒன்று 500 ரூபாய்க்கும், சேவல் 650 ரூபாய்க்கும், முயல் ஜோடி 1,000 ரூபாய்க்கும் வாங்கிச் செல்கிறார்கள். இதன் மூலம் எனக்கு நானே ஒரு தற்சார்பு பொருளாதாரத்தை ஏற்படுத்தியுள்ளேன்.

வாத்துகள்
வாத்துகள்
நாட்டுக் கோழிகளுடன்
நாட்டுக் கோழிகளுடன்

தென்னைக்கு ஊடுபயிராக வெண்டை வளர்த்தேன். குறைந்தபட்சமாகத் தினமும் 10 கிலோ வெண்டை விற்பனை செய்வதன் மூலம் 500 ரூபாய் கிடைக்குது. இதுதவிர நாட்டுக்கோழி முட்டை விற்பனை மூலமும் நாள்தோறும் நல்ல வருவாய் ஈட்ட முடிகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரை வாடை காற்றுக் காலம். அதனால் வெண்டைச் செடியில் காய்கள் கிடைக்காது. மற்ற 8 மாதமும் அதிக செலவில்லா வகையில் மாதம் 15,000 ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது. மொத்தத்தில் அரை ஏக்கர் நிலத்தில் கோழி, முயல், வாத்து போன்றவற்றுடன் வெண்டை விற்பனைமூலம் சுமார் 2.50 லட்சம் வரை வருவாய் ஈட்டியுள்ளேன். அடுத்த கட்டமாக ‘நிமோ’ வகை மீன் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளேன்.

தீவனமிடுதல்
தீவனமிடுதல்

செலவினத்தைப் பொறுத்தமட்டில் மின்கட்டணம் மட்டும்தான் அதிகம். அதுவும் 2 மாதத்துக்கு 3,000 ரூபாய். மற்றபடி கோழி, வாத்துகளுக்குத் தேவையான தீவனத்துக்கு மாதம் 1,500 ரூபாய் ஆகும். இவை தவிரக் கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் மீன் கழிவுகளை மொத்தமாக வாங்கி வந்து அவற்றை மிக்ஸியில் அரைத்துக் கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துகிறோம். அதிக சத்து நிறைந்த இந்த மீன் கழிவு தீவனத்துக்கு எனப் பெரிதாக விலை ஏதும் கொடுப்பதில்லை.

கடலில் மீன்களையும், கரையில் மல்லிகை நாற்றுகளையும் தரக்கூடியவை இந்தத் தீவின் கடலோரப் பகுதிகள் என நினைத் திருந்தேன். ஆனால், எனக்குக் கிடைத்த இந்த அனுபவத்தின் மூலம் இந்தக் கடற்கரைப் பகுதியை முறையாகப் பயன்படுத்தினால் முழுமையான விவசாயப் பகுதியாக மாற்ற முடியும்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு, ஜோ.டி.குருஸ், செல்போன்: 73388 11055