Published:Updated:

‘‘நாட்டையே கூட்டுப் பண்ணையாக மாற்றணும்!’’ நம்மாழ்வார் கண்ட கனவு...

எழுத்தாளர் பொன்னீலன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்தாளர் பொன்னீலன்

எழுத்தாளர் பொன்னீலனின் அனுபவங்கள்!

நினைவுகள்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பொன்னீலன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நண்பர். அவரது வீட்டில் நம்மாழ்வார் தங்கியிருக்கிறார். பொன்னீலன் தோட்டத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஒரு காலைப் பொழுதில் பொன்னீலன் வீட்டுக்குச் சென்றோம். நம்மை வரவேற்றவர், விரிவாகப் பேசினார்.

“நம்மாழ்வார் என்னுடைய நெருங்கிய நண்பர். நான் திருநெல்வேலி நாகலாபுரத்தில பள்ளிக்கூட ஆய்வாளரா வேலை பார்த்துக் கிட்டு இருந்தேன். அப்ப பேராசிரியர் வானமாமலையோடு நெருக்கமான தொடர்பு இருந்த காலம். அவர் மூலமாக நம்மாழ்வார் தொடர்பு கிடைச்சது. அந்தச் சமயத்தில வானமாமலை டுடோரியல்ல மாசம் ஒரு கருத்தரங்கு கூட்டம் நடத்து வாங்க. அந்தக் கூட்டத்துக்கு நான் போவேன். அந்தக் கூட்டத்தில நிறைய பேர் மார்க்சியத்தைப் பற்றிப் பேசுவாங்க. அந்தக் கூட்டத்துக்கு நம்மாழ்வாரும் வருவார். அவர் சுற்றுச்சூழல் பற்றியும், இயற்கை விவசாயம் பற்றியும் பேசுவார்.

நம்மாழ்வார் சாதாரண ஆள் இல்ல. பெரிய விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவங்க அண்ணன் எம்.எல்.ஏ-வா இருந்தார். நம்மாழ்வார் விவசாயத்தில் பட்டம் பெற்றவர். களக்காடு விவசாயப் பண்ணையில் பொறுப்பு அதிகாரியாக இருந்தபோது அந்தப் பண்ணையிலயும் மாசம் ஒருநாள் கூட்டம் போடுவார். அந்தக் கூட்டத்துக்கும் நான் போவேன். எனக்கும் கூட்டத்தில பேசுறதுக்கு வாய்ப்பு தருவார். நிறைய பேசிகிட்டிருப்போம். நம்மாழ்வார் என்கிட்ட ரொம்ப நெருக்கமா பழகிட்டார். அடிக்கடி என்னைத் தேடிவருவார். ‘இப்பிடி கிடந்து தூங்கிட்டு இருக்கீங்களே, நீங்க எல்லாம் மார்க்சியத்தைக் கொண்டு இந்த உலகத்த மாற்ற வேண்டாமா’னு சண்டைக்கு வருவார். அந்த அளவுக்குத் தீவிரமான ஓர் ஆளா இருந்தார். வானமாமலை டுடோரியல் எங்களுக்கு முதல் மையமாகவும், நம்மாழ் வாரின் களக்காடு பண்ணை இரண்டாவது மையமாகவும் இருந்தது.

இயற்கை வேளாண்மை செய்யுறதுல அவருக்கு நிறைய அனுபவங்கள் இருந்தது. நிறைய பேர் அவரைத் தேடிவந்தாங்க.

அவர் பல ஊர்களுக்குப் போனார். அங்க நிறைய மக்களைச் சந்திச்சு இயற்கை விவசாயத்தைப் பற்றி பிரசாரம் பண்ணினார்.

என்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது மார்க்சியம் பற்றி அதிகமா பேசுவார். ‘சோசலிசத்தைக் கொண்டு வரணும், அதோட விவசாயத்த மக்கள் விவசாயமா மாத்தணும்’னு பேசிகிட்டிருப்பார். மக்கள் ஒண்ணுசேர்ந்து, கூட்டுப்பண்ணை மூலம் விவசாயம் செய்து, அதைப் பங்குவச்சுச் சாப்பிடணும்ங்கிறது அவரோட திட்டமா இருந்தது. மார்க்சியத் தோட அடிப்படை அதுதானே. ஒரு கட்டத்துல எல்லாத்தையும் விட்டுட்டு இயற்கை வேளாண்மையை மட்டும் கையில எடுத்தார். அதன் பிறகு, இயற்கை வேளாண் புரட்சிக்குப் போயிட்டார். ‘நாம புரட்சி செய்யணும்’ அப்படீன்னு என்கிட்ட சொன்னார்” என நம்மாழ்வாருடன் பழகிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பொன்னீலன், அவரால் தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தை விவரித்தார்.

“எனக்கும் விவசாயத்துக்கும் அதிக சம்பந்தம் கிடையாது. ஏன்னா, எங்களுக்கு இருந்தது மேட்டுநிலம். வீட்டையொட்டி இருக்கிற ஒரு ஏக்கர் நிலத்தில மா, பலா, தென்னை எல்லாம் வச்சிருக்கோம். அவருடைய தூண்டுதலால கட்டாயம் இயற்கை விவசாயம் வேணும், அதைப் பிரசாரம் பண்ணணும், பரப்பணும்ங்கிற எண்ணம் எனக்கு வந்தது. அவர்கிட்ட பழகினதால என் மனசில பதிஞ்ச ஒரு எண்ணத்தை நான் இப்பவும் செயல்படுத் திட்டு வர்றேன். ‘மண் வளப்படணும், அதுக்கு இலை சருகுகளைக் கூட்டி தீ வச்சிரப்பிடாது. எல்லாமே அப்படி அப்படியே மட்கி மண் வளப்படணும். சருகை அகற்றி மண்ணைத் திறந்துவிடுறது தப்பு. இந்த மண்ணை மறைக்க மூடாக்கு போட்டு, சருகுகளை அப்பிடியே விட்டிரணும்’னு சொன்னார். அதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் என்னுடைய தோட்டத்தில எங்கயுமே சருகுகளைக் கூட்ட மாட்டேன். அப்பிடியே கிடக்கும். இதனால மண் வளமாகிட்டே இருக்குது.

தோட்டத்தில்
தோட்டத்தில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பத்து வருஷமா நான் அதைக் கடைப் பிடிச்சுட்டு வர்றேன். இன்னைக்கு வரைக்கும் நான் தோட்டத்தைச் சுத்தம் செஞ்சதே இல்ல. அதனால, எவ்வளவு வெயில் அடிச்சாலும் மண் சூடாகாது. இது நம்மாழ்வார் சொல்லித் தந்த பாடம். என்னைப் பார்க்க வர்றவங்ககிட்ட எல்லாம் இந்த விஷயத்தைச் சொல்லி, என் தோட்டத் தைக் காட்டுவேன்” என்றவர், அவரது மனதிலிருந்த வருத்தமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

“நம்மாழ்வாரிடம் ஆச்சர்யமான எளிமையை நாம் காண முடியும். அந்தச் சமயத்தில நான் இந்த விஷயங்களை எல்லாம் பதிவு செய்யல. அதைப் புத்தகமா எழுதியிருக்கலாம். அந்த ஒரு காரியத்தைச் செய்யத் தவறிவிட்டதுக்காக இப்போ நான் வருத்தப்படுறேன். யோசிச்சு பார்க்கும்போது அது பெரிய சங்கடமா இருக்கு. நம்மாழ்வார் கூட இருந்த காலங்களையும், நாங்க எங்கெல்லாம் போனோம், என்னென்ன செய்தோம்கிறதைப் பதிவு செய்திருக்கணும். அவரைப் பற்றி நிறைய எழுதணும்னு நினைச்சேன். அந்த நேரத்தில எழுதாம விட்டது இப்போ பெரிய நஷ்டமா தெரியுது. இப்ப எழுதலாம்னா வயசு ஆனதுனால நினைவுகள் தடுமாறுது’’ என்றவர் சற்று நேரம் மெளனமானார்.

சிறிது நேரம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு பேசியவர், ‘‘நாகர் கோவிலுக்கு வந்தார்னா என்னைத் தேடி வருவார். நாஞ்சில்நாட்டு விவசாயிகள் கூட்டத்துக்குப் போகும்போது என்னையும் கூப்பிடுவார். ‘நீங்க நஞ்சு விவசாயத்த பண்ணாதீங்க, இயற்கை முறையிலேயே பயிர் செய்யுங்க, அந்த உணவைச் சாப்பிடுங்க’ன்னு நாஞ்சில்நாட்டு விவசாயிகள்கிட்ட பேசுவார். நான் அவரோட வீட்டுக்கும் போயிருக்கேன். வீட்டுல உள்ளவங்க ரொம்ப அன்பா இருப்பாங்க. நம்மாழ்வாரோட நடவடிக்கை வீட்டுல உள்ளவங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனா, வரக்கூடியவங்களை உபசரிக்கிறதுல அவங்க கடவுள் மாதிரி. அவர் இறந்துபோன பிறகு, பேரப்பிள்ளையோட கல்யாணத்துக்குச் சாவித்திரி அம்மா (நம்மாழ்வாரின் துணைவியார்) கூப்பிட்டாங்க. அப்ப பயங்கர மழை இருந்ததால என்னால போக முடியல. அது என் நெஞ்சில உறுத்தலாவே இருந்துகிட்டிருக்கு” என்றவர், நம்மாழ்வாரிடம் அவர் கண்ட ஆச்சர்ய குணாதிசயங்களைப் பற்றிப் பேசினார்.

‘இப்பிடி கிடந்து தூங்கிட்டு இருக்கீங்களே, நீங்க எல்லாம் மார்க்சியத்தைக் கொண்டு இந்த உலகத்த மாற்ற வேண்டாமா?’னு சண்டைக்கு வருவார்.

“சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாத மாமனிதர் நம்மாழ்வார். நிறைய கனவுகள் வச்சிருந்தார். இந்த நாட்டையே கூட்டு விவசாயப் பண்ணையா மாற்றணும்ங் கிறது அவருடைய ஆசையா இருந்தது. களக்காட்டில் அவருடைய செயல்பாடுகள் தான் என்னை ரொம்ப பாதிச்சது. அங்குள்ள தோட்டத்தில கட்டடம் இருந்தது. அதுல மாசம் ஒரு கூட்டம் நடத்துவார். அதுக்கு நாங்களும் போவோம். கூட்டத்துக்கு வர்றவங்களோட, விவசாயிகளையும் அமர வச்சு சமத்துவ சாப்பாடு போடுவார். இந்த மாதிரி ஒரு பொதுவுடைமை சிந்தனை அவர்கிட்ட இருந்தது.

எனக்குப் பதவி உயர்வு கிடைச்ச பிறகு, அவரைச் சந்திக்கிற வாய்ப்பு குறைஞ்சிடுச்சு. ஆனாலும், நாகர்கோவிலுக்கு வந்தார்னா யார்கிட்டையாவது சொல்லிவிடுவார், நான் பார்க்கப் போவேன். நாகர்கோவிலிலேயே ஒரு விவசாயக் கூட்டமைப்பை உருவாக்கினார். எங்க வீட்டுக்குப் பல தடவை வந்திருக்கிறார். வரும்போதெல்லாம் சாப்பிட்டுதான் போவார். நிறைய நேரம் பேசிகிட்டு இருப்பார். என் வீட்டிலேயே சிலநாள்கள் தங்கியிருக்கிறார்.

இந்த வீடு கட்டி கிட்டதட்ட 140 வருஷம் ஆகுது. அவரு வரும்போது இந்த வீட்ட பார்த்துட்டு, ‘நல்லா இருக்கு’னு சொல்வார். ஓர் இடத்துக்குப் போகும்போது, அந்த இடத்தில வசதி இருக்கா, இல்லியான்னு எல்லாம் பார்க்க மாட்டார். அங்கேயே தங்குவார். ரொம்ப எளிமையான மனிதர். அவர் காலமாவதற்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நாகர்கோவில்ல நாஞ்சில் நாட்டு விவசாயிகள் கூட்டம் போட்டார். அதுல நானும் கலந்துகிட்டேன். அதுதான் நாங்க கடைசியா சந்திச்ச கூட்டம்” எனச் சோகமானவர், சற்று இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

“இயற்கை விவசாயத்தில பெரிய ஆசானாகவும் இருந்தார். அதற்காக ஊர் ஊராகத் திரிந்தார். அவர் தமிழ்நாட்டுக்கு உரியவரா மாறிட்டார். குடும்பத்தைத் துறந்துட்டு, தாடியெல்லாம் வளர்த்துகிட்டு துறவியாகவே இயற்கை விவசாயம் பற்றிப் பிரசாரம் செய்தார். அவருடைய துறை வேற... என்னுடைய துறை வேற... ஆனா, இடது சாரி சிந்தனைதான் எங்களை ஒண்ணு சேர்த்தது. இடது சாரி என்பது கட்சி சார்ந்த சிந்தனை அல்ல, இயக்கம் சார்ந்த சிந்தனை” என்று சொல்லி முடித்தார்.