Published:Updated:

ரயில் பாதை கொண்டு வந்த பருத்தி... ஆங்கிலேயரை அசர வைத்த பாரம்பர்ய ரகங்கள்...

எழுத்தாளர் சோ.தர்மன்
பிரீமியம் ஸ்டோரி
எழுத்தாளர் சோ.தர்மன்

நினைவுகள் பகிரும் எழுத்தாளர் சோ.தர்மன்!

ரயில் பாதை கொண்டு வந்த பருத்தி... ஆங்கிலேயரை அசர வைத்த பாரம்பர்ய ரகங்கள்...

நினைவுகள் பகிரும் எழுத்தாளர் சோ.தர்மன்!

Published:Updated:
எழுத்தாளர் சோ.தர்மன்
பிரீமியம் ஸ்டோரி
எழுத்தாளர் சோ.தர்மன்

நினைவுகள்

‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் ஐந்தாவது நாவல் ‘வெளவால் தேசம்’. 18-ம் நூற்றாண்டில் பயணிக்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப் பற்றையும் விரிவாகப் பேசுகிறது. அதனூடாகத் தாமிரபரணி ஆற்றின் சிறப்பையும், கரிசல்மண் மைந்தர் களுக்கு அக்காலகட்டத்தில் முக்கிய வாழ்வா தாரமாக விளங்கிய பாரம்பர்ய பருத்தி வகைகளைப் பற்றியும், பருத்தியோடு இழைந் தோடிய வாழ்வியலையும் அழகாகப் பதிவு செய்துள்ளார் சோ.தர்மன்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட இவர், எழுத்தாளர் மட்டுமல்ல. நன்கு தேர்ந்த விவசாயி. வெளவால் தேசம் நாவலில் இழைந்தோடும் பருத்தி வாழ்வு குறித்து நாம் அவரிடம் பேசியபோது, “மானாவாரி வெள்ளாமையில முக்கியமான விளைபொருளே பருத்திதான். பருத்தியைப் பத்திப் பேசுறதுக்கு முன்னால கரிசல் மண்ணோட வளத்தைப் பத்தி சொல்லியாகணும்.

நாவல்
நாவல்

தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள்ல பெரும்பகுதி மானாவாரி. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள்ல குறிப்பிட்ட சில பகுதிகள் மானாவாரி. மழையை மட்டுமே நம்பியிருக்குற இந்த நிலங் களுக்காக, தண்ணியை சேமிச்சு வைக்கக்கூடிய கரிசல் மண்ணோட தனித்தன்மையை வேற எந்த மண்ணுலயும் பார்க்கவே முடியாது.

கரிசல்மண்ணின் வளத்தைக் கண்டு வியந்த
மேஜர் வேல்ஸ்

கட்டபொம்மன், ஊமைத் துரை படைகள்கிட்ட போர் புரிஞ்ச பிரிட்டிஷ் மேஜர் வேல்ஸ், 1790-ம் வருஷம் இந்தக் கரிசல் மண்ணின் வளத்தைப் பத்தி ஒரு பதிவை எழுதியிருக் கார். அதுல, ‘பசுவந்தனைக்கும் ஒட்டுரம்பட்டிக்கும் இடையில என்னோட படைகளை அன்னைக்கு வழி நடத்திக் கிட்டு இருந்தேன். முதல் நாள் ராத்தி பெய்ஞ்ச கனமழையை நான் கணக்குல எடுத்துக்கத் தவறிட்டேன். அதனால அன்றைய பொழுது எங்க படைக்குப் பாதமாக அமைஞ்சிடுச்சு.

ராத்திரி பெய்ஞ்ச கனமழையில, அந்தக் கரிசல் மண் நல்லா ஊறிப் பஞ்சுபோல ஆகி, தண்ணியை உறிஞ்சி வச்சிருந்துச்சு. எங்க படை வீரர்களோட பூட்ஸ் கால்கள் மூட்டு வரை மண்ணுக்குள்ள பதிஞ்சிடுச்சு. ஆனா ஊமைத்துரை படை வீரர்கள், வெறுங் கால்களோட ரொம்ப எளிதா நடந்து, எங்கள் படையைத் தாக்கினாங்க. இந்தளவுக்குத் தண்ணீரைச் சேமிச்சு வைக்கக்கூடிய வளமான மண்ணை நான் வேற எங்கயுமே பார்த்ததே இல்லை’னு மேஜர் வேல்ஸ் குறிப்பிட்டுருக்கார்.

பருத்தி
பருத்தி

கருங்கண்ணி, குப்பான்

பருத்தியில ‘கருங்கண்ணி’, ‘குப்பான்’னு ரெண்டு ரகங்கள்தான் அப்பெல்லாம் பயிர் செஞ்சாங்க. அந்த ரெண்டுமே சிறப்பானது. அந்தப் பருத்திச் செடிங்க எவ்வளவு உயரத்துக்கு வளர்ந்துருக்கோ, அதே அளவுக்கு மண்ணுக்குள்ளார ஆழமா வேர் ஊடுருவி போயிருக்கும். அந்தச் செடிகளை எளிதா பிடுங்கிட முடியாது. அறுத்துதான் எடுத்தாகணும். அந்தப் பருத்தி ரகங்கள் நல்லா வறட்சியைத் தாங்கி வளரும். நூற்புத்திறனும் அதிகம். வியர்வையை வேகமாக உறிஞ்சக்கூடிய தன்மையும் அதிகம். சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கும் பலவிதங்கள்ல உறுதுணையா இருந்துச்சு. பூச்சி, நோய் எதிர்ப்புத்திறன் அதிகம்.

ஊர்ல உள்ள விவசாயிங்க எல்லாரும் ஒரே நாள்ல உழுவாங்க, விதைப்பாங்க, களை எடுப்பாங்க. அதைப் பார்க்குறப்போ, ஏதோ திருவிழா போல இருக்கும். அறுவடை செஞ்ச விதைகளைக் களிமண், இல்லைனா, மாட்டுச் சாணத்துல போட்டு உருட்டி எடுப்பாங்க. காய்ஞ்ச பிறகு, பார்க்குறதுக்கு ஏதோ ‘பட்டாணிக் கடலை’ மாதிரி இருக்கும். அப்பெல்லாம் விதைகள் சேமிப்புங்கறது பெண்கள் கையிலதான் இருந்துச்சு. பருத்தி விவசாயத்துல பெரும் பாலும் நஷ்டமே வராது. அதனாலதான் இதை ராஜ மகசூல் பயிர்’னு அழைச்சாங்க.

கரிசல் நிலம்
கரிசல் நிலம்

பண்டமாற்று முறை

முன்னயெல்லாம் விவசாயிங்க தங்களோட விளைபொருள்களைப் பண்டமாற்று முறையில கொடுத்து வாங்கக்கூடிய பழக்கம் இருந்துச்சு. பருத்தியோட எடை எவ்வளவு இருக்குதோ அந்த எடைக்கு 6 மடங்கு அவிச்ச சீனிக்கிழங்கு தருவாங்க. பலாக் கொட்டையா இருந்தா ஏழு மடங்கு எடை, மொச்சப்பயிறுனா மூணு மடங்கு எடை.

ஒரு காலத்துல தங்கத்தோட விலையும் பருத்தி விலையும் ஒண்ணா இருந்ததா சொல்வாங்க. அதனாலதான் பருத்தியை ‘வெள்ளைத் தங்கம்’னு சொன்னாங்க. இந்தியாவோட மொத்த பருத்தி தேவையில குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தமிழ்நாட்டுல விளைஞ்ச பருத்தி ஈடு செஞ்சுச்சு.

பருத்தி பறிக்குற வேலையாள்களுக்கு அப்பெல்லாம் கூலியா பணம் கொடுக்குற பழக்கம் கிடையாது. அன்னைக்கு அவங்க பறிச்சு கொடுத்த பருத்தியில ஒரு குறிப்பிட்ட அளவு பருத்தியைதான் கூலியா கொடுப்பாங்க. ஆள் பற்றாக்குறையா இருந்தா ‘அஞ்சுக்கு ஒண்ணு’ங்கற கணக்குல, மொத்தப் பருத்தியில அஞ்சுல ஒரு பங்கு பஞ்சு கூலியா கொடுப் பாங்க... ஆள் அதிகமா இருந்தா ஏழுக்கு ஒண்ணு, எட்டுக்கு ஒண்ணுங்கற கணக்குல கூலி கொடுப்பாங்க. வயித்துப் பிள்ளைக்காரி பருத்தி பறிக்க வந்தா, வயித்துக்குள்ள இருக்குற பிள்ளைக்கும் ஒரு பங்கு உண்டு.

பருத்தி
பருத்தி

அதிகரித்த ஜின்னிங் பேக்டரிகள்

நம்மை ஆண்ட பிரிட்டிஷ் காரங்களுக்குத் தமிழ் நாட்டோட பாரம்பர்ய ரகப் பருத்தியோட தரம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. பருத்தி அதிகமா விளையுற ஊர்கள்ல யெல்லாம் ‘ஜின்னிங் பேக்டரி’ களை ஆரம்பிச்சாங்க.

அந்தக் காலகட்டத்துல விருதுநகர்ல உற்பத்தி செய்யப் பட்ட பஞ்சு தூத்துக்குடி துறைமுகத்தில இருந்து கப்பல் வழியாக இங்கிலாந்துக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டுச்சு. ஆரம்பத்துல கைமரம் மூலமாகத்தான் பருத்தியிலிருந்து பஞ்சு பிரிக்கப்பட்டுச்சு. பிறகுதான், மதுரா கோட்ஸ், ராலிஸ் இண்டியா, ஜப்பான் காட்டன் கம்பெனின்னு ஜின்னிங் பேக்டரி கள் ஆரம்பப்பட்டுச்சு. தூத்துக்குடியிலயும், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்துலயும் மதுரா கோட்ஸ் மில் ஆரம்பிக்கப்பட்டுச்சு. பாபநாசத்துல உள்ள மில், தாமிரபரணி தண்ணியில இருந்து தானே மின்சாரம் உற்பத்தி செஞ்சு இயங்கக்கூடிய அளவுக்கு அதிநவீனமானது.

பருத்தி கொண்டு செல்ல தனிப்பாதை

சரக்கு ரயில் ஒவ்வொரு ஜின்னிங் பேக்டரிக்குள்ளேயும் வந்து பஞ்சு மூட்டை களை ஏற்றும் வகையில ரயில்பாதையும் அமைக்கப்பட்டிருந்துச்சு. இன்னைக்கும் அந்தப் பாதைகள்ல சில கம்பெனிகள்ல பார்க்கலாம். விருதுநகர்ல முதல்ல சந்தை கூடினதே பருத்தி விற்பனைக்காகத்தான். தென் மாவட்டங்கள்ல முதல்கட்டமா ரயில் பாதை மதுரை, விருதுநகர், சாத்தூர், கடம்பூர், மணியாச்சி வழியாகத் தூத்துக்குடி வரைக்கும் அமைக்கப்பட்டுச்சு.

பருத்தி கொண்டு போறதுக்காக, சரக்கு ரயில்தான் முதல்ல ஆரம்பிக்கப்பட்டுச்சு. தூத்துக்குடியில உள்ள மில்லுக்குப் பருத்தியை விவசாயிங்க கொண்டு போகுறதுக்காகவே ரெண்டு பாதைகள் போடப்பட்டுச்சு. வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடுன்னு இன்னைக்கும் அந்தப் பெயர்கள் நடைமுறையில புழக்கத்துல இருக்கு.

சோ.தர்மன்
சோ.தர்மன்

அதிகரித்த வீரிய ரகங்கள்

இந்த நிலையிலதான் உகாந்தா, லெட்சுமி காட்டன், ஆர்.ஜி, ஹெச்.ஹெச்னு பல வீரிய ரகங்கள் அறிமுகமாச்சு. எங்க மண்ணோட பாரம்பர்ய பருத்தியான கருங்கண்ணி, குப்பான் பருத்தியைவிட வீரிய ரகப் பருத்தியில கூடுதலா மகசூல் கிடைச்சது. ஆனா, வீரிய பருத்திச் செடிகளுக்கு ஆணி வேர் கிடையாது. சல்லி வேர் மட்டும்தான் உண்டு. எவ்வளவு பூ கட்டுதோ அதுல பெருவாதி உதிர்ந்துடும். நோய்த் தாக்குதலும் அதிகம். விதை, உரம், பூச்சிக் கொல்லியை வாங்குறதுக்கும் விற்பனை செய்யுறதுக்கும் விவசாயிங்க வரிசையில நிற்குற நிலை ஏற்பட்டுச்சு.

நாட்டுப் பருத்தியில இருக்கக்கூடிய தரம் வீரிய ரகத்துல இருக்காது. ஆனா, மகசூல் அதிகமா கிடைக்குதுங்கறதுனால, விவசாயிங்க வீரிய ரகங்களையே அதிகமா சாகுபடி செஞ்சாங்க. காலப்போக்குல அது இன்னும் அதிகமாகிக்கிட்டே வந்துடுச்சு. ஆனா, சில கிராமங்கள்ல பாரம்பர்ய ரகப் பருத்தி சாகுபடி செய்யுற விவசாயிங்க இருக்கத்தான் செய்யுறாங்க.

பராமரிப்பு குறைவுங்கறதுனாலயும், நல்ல விலை கிடைக்குறதுனாலயும் பல பகுதிகள்ல விவசாயிங்க நெல் சாகுபடியைக் குறைச்சிட்டு பருத்திச் சாகுபடிக்கு மாறிட்டாங்க.

மகசூல் பெருக்கம்ங்கற மாய வார்த்தை யால, வீரிய ரகப் பருத்தியும், அதோட சேர்ந்து ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லியும் விவசாயத்துக்குள்ள எளிதா புகுந்து நிலைச்சிடுச்சு. இந்த நிலைமை சீக்கிரத்துல மாறணும். எங்க கரிசல் பூமியில முன்ன மாதிரியே எங்க பார்த்தாலும் கருங்கண்ணி, குப்பான் பருத்தி செழிப்பா விளைஞ்சு நிக்குறதை என் கண் குளிர பார்க்கணும்’’ என ஏக்கத்தோடு பேசி முடித்தார்.