நாட்டு நடப்பு
Published:Updated:

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.10 லட்சம்! பெரம்பலூரிலும் விளையும் பன்னீர் திராட்சை!

பன்னீர் திராட்சை
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீர் திராட்சை

மகசூல்

தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குளிர் மற்றும் மிதமான வெப்பம் நிலவும் பகுதிகளில் மட்டுமே திராட்சை சாகுபடியில் வெற்றிகரமாக விளைச்சல் எடுக்க முடியும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இந்நிலையில் தான் வெப்ப மண்டல பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தில் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சுருளிராஜ், இயற்கை முறையில் பன்னீர் திராட்சை பயிர் செய்து, நிறைவான வருமானம் பார்ப்பது கவனம் ஈர்க்கிறது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இவருடைய தோட்டத்துக்கே வந்து திராட்சை வாங்கிச் செல்கிறார்கள்.

பெரம்பலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எசனை கிராமத்தில் அமைந்துள்ளது, சுருளிராஜின் திராட்சை தோட்டம். மிகுந்த ஆர்வத்தோடு இத்தோட்டத் தைப் பார்வையிடச் சென்றோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பந்தலுக்குள் கறுநீல நிறத்தில் திராட்சைக் கொத்துகள் தொங்கிக் கொண்டிருந்தன. கத்தரிக்கோலால் திராட்சைக் கொத்துகளை லாகவமாக அறுவடை செய்துகொண்டிருந் தார்கள் பெண் தொழிலாளர்கள். அறுவடை செய்யப்பட்ட திராட்சைக் கொத்துகளை அட்டைப் பெட்டிகளில் அடுக்கும் பணியும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதை மேற்பார்வை செய்து கொண்டிருந்த சுருளிராஜ் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று, ஒரு டம்ளரில் திராட்சை ஜூஸ் கொடுத்து உபசரித்தார். “சார்... இந்த ஜூஸைக் குடிச்சுப் பாருங்க... இயற்கை விவசாயத்தோட மகத்துவம் என்னன்னு உங்களுக்குப் புரியும்” என்றார் சுருளிராஜ். அவர் கொடுத்த ஜூஸை நன்கு ருசித்துக் குடித்தோம். கடைகளில் விற்பனை செய்யப்படும் திராட்சை ஜூஸைவிட, இது கூடுதல் சுவையுடன் இருந்தது.

தோட்டத்தில் சுருளிராஜ்
தோட்டத்தில் சுருளிராஜ்

தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்த வாறே உற்சாகமாகப் பேசிய சுருளி ராஜ், “விவசாயம்தான் எங்களோட பிரதானத் தொழில். காய்கறிகள் கம்பு, சோளம், கொத்தமல்லி, மக்காசோளப் பயிர்களைச் சாகுபடி செய்றது வழக்கம். என்னோட அப்பா விவசாயத்தையும் கவனிச்சிக்கிட்டு, டெய்லராவும் வேலை பார்த்தார். எங்க குடும்பச் சூழல் காரணமா என்னால பத்தாவது வரைக்கும்தான் படிக்க முடிஞ்சது. குடும்பத்துக்கு நம்மால முடிஞ்ச ஒத்தாசையைச் செய்யணும்னு முடிவெடுத்து, லாரி ஓட்ட கத்துக்கிட்டு டிரைவரா வேலைப் பார்த்தேன். அடுத்த சில வருஷங்கள்லயே அதுல சலிப்பு ஏற்பட்டுச்சி. அதேசமயம் வேற வேலைக்குப் போகவும் விருப்பம் இல்லை. விவசாயம்தான் நமக்கு ஏத்தது... சுதந்திரமாவும் சுயமரியாதையோடும் வாழலாம்னு முடிவெடுத்து, விவசாயத்துப் பக்கம் திரும்பினேன்.

எங்க ஊர்ல உள்ள மத்த விவசாயிங்க மாதிரியே நானும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்திக் கத்திரி, தக்காளி, வெண்டைனு காய்கறிகள் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தேன். ரசாயன விவசாயத்துல விளைஞ்ச உணவுப்பொருள்களைச் சாப்பிடுறதுனாலதான் மக்களுக்கு இப்பெல்லாம் அதிகமா நோய் வர்றதா பேப்பர்ல படிச்சேன்.

அப்பதான் இயற்கை விவசாயம் செய்யணுங்கற எண்ணம் எனக்கு வந்துச்சு. இயற்கை விவசாயிங்களை நேர்ல சந்திச்சி ஆலோசனைகள் கேட்டேன். நபார்டு வங்கி நடத்துன இயற்கை விவசாயப் பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன் அந்தப் பயிற்சியில பேசின ஒருத்தர், ரொம்ப வருத்தமா ஒரு விஷயம் சொன்னார். ‘திராட்சை சாகுபடியில அதிகளவு ரசாயனம் பயன்படுத்துறதாவும் அந்தத் திராட்சையைச் சாப்பிடக் கூடியவங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்னு கவலையோடு சொன்னார். அப்பதான் எனக்கு இயற்கை விவசாயத்துல திராட்சை சாகுபடி செய்யணும்ங்கற எண்ணம் வந்துச்சு.

பன்னீர் திராட்சை
பன்னீர் திராட்சை

திராட்சை சாகுபடிக்கான அடிப்படையான விஷங்களைத் தெரிஞ்சுக்குறதுக்காக, தேனி மாவட்டத்துல இருக்குற திராட்சைத் தோட்டங்களுக்கு நேர்ல போனேன். இயற்கை விவசாயத்துல திராட்சை பயிர் பண்ணக்கூடிய ஒரு சில விவசாயிங்களையும் சந்திச்சி, அவங்களோட சாகுபடி முறைகளைக் கேட்டேன். ‘இந்தப் பகுதிகள்ல சீதோஷ்ண நிலை சாதகமா இருக்கு றதுனால திராட்சைச் சாகுபடி சிறப்பா நடக்குது. உங்க மாவட்டம் வெயில் அதிகமா அடிக்கிற ஏரியா. ஒத்து வருமான்னு தெரியலை’னு சொன்னாங்க.

ஒரு சிலர், ‘முதல் கட்டமா குறைவான எண்ணிக்கையில திராட்சைக் கொடி வச்சுப் பாருங்க. நல்லா விளைஞ்சதுனா, பெரிய அதிஷ்டம்தான். அதுக்குப் பிறகு அதிக பரப்புல திராட்சை பயிர் பண்ணிக் கலாம்னு சொல்லி என்னை ஊக்கப் படுத்தினாங்க. சோதனை முயற்சியா ரொம்பக் குறைவான பரப்புல பன்னீர் திராட்சை பயிர் பண்ணி பார்த்தேன் கொடி நல்லா செழிப்பா, வேகமா படர ஆரம்பிச்சது. காய்ப்பும் நல்லா இருந்துச்சு. அதைப் பார்த்ததும் எனக்கு முழு நம்பிக்கை வந்துடுச்சு. எனக்கு மொத்தம் 4 ஏக்கர் நிலம் இருக்கு. இயற்கை முறையில ஒரு ஏக்கர்ல பன்னீர்திராட்சை பயிர் செஞ்சேன். என்னோட தோட்டத்துல உள்ள இந்தத் திராட்சைக் கொடிகளுக்கு இப்ப ஆறு வருஷமாகுது. மீதி 3 ஏக்கர்ல சின்ன வெங்காயமும், தீவனச் சோளமும் இயற்கை முறையில் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன்’’ என்று சொன்னவர், பன்னீர் திராட்சை சாகுபடி குறித்த அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

அட்டவணை
அட்டவணை


‘‘இந்த ஒரு ஏக்கர் பரப்பை தலா 33 சென்ட் வீதம் மூணு பிரிவா பிரிச்சு, 50 நாள் இடைவெளியில தனித் தனியா திராட்சைக் கொடிகளைப் பயிர் பண்ணினேன். காரணம் காய்ப்பு ஓய்ஞ்ச பிறகு கவாத்து செஞ்சாகணும். அதுக்குப் பிறகு, அந்தக் கொடிகள்ல 40 - 50 நாள்கள் கழிச்சுதான், மறுபடியும் பழங்கள் பறிப்புக்கு வரும். கவாத்து செஞ்ச பகுதியில மகசூல் இல்லாத சமயத்துல, அடுத்த ரெண்டு பகுதிகள்ல உள்ள கொடிகள்ல இருந்து மகசூல் கிடைக்கும். கொடிகள் நடவு செஞ்ச எட்டாவது மாசத்துல இருந்து மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது. படிப்படியாக மகசூல் அளவு அதிகரிச்சு, ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு, அதிக மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது. தொடர்ச்சியா ரெண்டு மாசத்துக்குப் பழங்கள் கிடைக்கும். காய்ப்பு ஓய்ஞ்ச பிறகு, கவாத்து செய்வோம். ஒரு வருஷத்துக்கு 10 டன் திராட்சை மகசூல் கிடைக்குது. எங்க தோட்டத்துக்கு முன்னாடியே பேருந்து நிறுத்தம் இருக்குது. அதனால அங்கயே ஒரு கீத்துக் கொட்டகை போட்டு நேரடியா விற்பனை செஞ்சுட்டு வர்றேன். அந்த வகையில ஒரு கிலோ 100 ரூபாய்னு விற்பனை செய்றேன். இயற்கை முறையில விளைஞ்ச திராட்சைங்கறதுனால, அதுவும் பறிச்ச உடனே விற்பனை செய்றதுனால, மக்கள் ஆர்வமா வாங்கிக்கிட்டுப் போறாங்க. 10 டன் திராட்சை விற்பனை மூலமா எனக்கு வருஷத்துக்கு 10,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல செலவு போக, 7,10,000 ரூபாய் லாபம் கிடைக்குது’’ என்று சொல்லி விடைகொடுத்தார்.


தொடர்புக்கு, சுருளிராஜ்,

செல்போன்: 63795 80108

இப்படித்தான் திராட்சை சாகுபடி

ஒரு ஏக்கர் பரப்பில் பன்னீர் திராட்சை சாகுபடி குறித்து விவசாயி சுருளிராஜ் சொல்லிய தகவல்கள் இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பன்னீர் திராட்சைச் சாகுபடி செய்ய செம்மண் அல்லது மணல் கலந்த செம்மண் ஏற்றது. தேர்வு செய்யப்பட்ட நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் 5 முறை உழவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, 10 அடி இடைவெளியில் 6 அடி உயரம் கருங்கல்லை, கால்களாக ஊன்றி, இரும்புக் கம்பிகள் மற்றும் பிளாஸ்டிக் வயர்களைக் குறுக்கும் நெடுக்குமாகப் பயன்படுத்திப் பந்தல் அமைக்க வேண்டும். பறவைகள் தாக்குதலிலிருந்து திராட்சைக் கொடிகளைப் பாதுகாக்கப் பந்தலுக்கு மேல் பகுதியிலும் பந்தலைச் சுற்றியும் வலை அமைக்க வேண்டும்.

திராட்சை அறுவடையில்
திராட்சை அறுவடையில்

வரிசைக்கு வரிசை 5 அடி, குத்துக்குக் குத்து 5 அடி இடைவெளயில் 1.5 அடி சுற்றளவு, 1.5 அடி ஆழம் கொண்ட குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ எருவுடன் 20 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து இட வேண்டும். அதன் பிறகு, மண் போட்டு மூடி, ஒரு வாரம் வரை தண்ணீர் விட வேண்டும். இதனால் எருவில் உள்ள வெப்பம் தணிந்து ஈரப்பதம் உண்டாகும். அரை அடி உயரமுள்ள திராட்சைக் கொடியை, ஒரு குழிக்கு தலா இரண்டு கொடிகள் வீதம் ஊன்ற வேண்டும்.

ஒவ்வொரு கொடியின் தூர்ப்பகுதியிலும்... 6 அடி உயரம் கொண்ட தென்னங்குச்சி (ஈக்குகள் நீக்கப்பட்ட குச்சி) அல்லது மூங்கில் குச்சியை ஊன்றி, அதில் திராட்சைச் செடியைக் கட்டி விட வேண்டும். கொடி படர்ந்து, பந்தலை நோக்கி சென்றடையும். இரண்டரை மாதத்தில் கொடி, பந்தலின் மேல் ஏறிவிடும். கொடி பந்தலில் ஏறும் வரை தினமும் கண்காணித்துக் கொடி வளையாமல் நேராகச் செல்லும்படி வாழை நாரால் கட்டி வர வேண்டும். கொடியில் 7 இலைகள் வந்ததும் அதன் நுனியைக் கிள்ளி விட வேண்டும்.

திராட்சைத் தோட்டம்
திராட்சைத் தோட்டம்

25-ம் நாளில் இருந்து 10 நாள்களுக்கு ஒரு முறை 100 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ கடலைப் பிண்ணாக்கை கரைத்து... அதிலிருந்து 20 லிட்டர் கரைசல் எடுத்து அதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பாசன நீரில் விட வேண்டும். 2-ம் மாதத்தில் இருந்து 20 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பாசன நீருடன் கலந்து விட வேண்டும். அடுத்த 20-ம் நாள் 200 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் மீன் அமிலம் கலந்து பாசனநீரில் விட வேண்டும். இதுபோல் 20 நாள்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தத்தையும், மீன் அமிலத்தையும் சுழற்சி முறையில் பாசனநீரில் கலந்து விட வேண்டும்.

பூப்பூக்கும் தருணத்தில் வண்டுத் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் ஒவ்வொரு முறையும் காய்ப்பு ஓய்ந்து கவாத்து செய்தவுடனே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி மூலிகைக் கரைசல் கலந்து கொடிகள் மீது தெளிக்க வேண்டும்.

திராட்சைத் தோட்டம்
திராட்சைத் தோட்டம்

கவாத்து செய்த திராட்சைக் கொடிகளில் இருந்து 3 நாள்கள் வரை பிசுபிசுப்பான திரவம் சொட்டுச் சொட்டாக வடியும். அந்த நேரத்தில் தண்ணீர் விடக் கூடாது. அப்போது, ஒவ்வொரு கொடியின் தூரைச் சுற்றி அரையடிச் சுற்றளவுக்கு லேசாகப் பள்ளம் தோண்டி... தலா 200 கிராம் வேப்பம்பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்கு, தலா 100 கிராம் புங்கன்பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட வேண்டும். கொடிகளில் ஆங்காங்கே ஓரிரு பழங்கள் தென்பட்டதுமே ஒவ்வொரு கொடியின் தூரிலும் அடியுரமாக 5 கிலோ எரு இட வேண்டும்.

திராட்சை சாகுபடியைப் பொறுத்தவரை... சாம்பல்நோயை எதிர்கொள்வதுதான் மிகவும் சவாலானது. இந்த நோய் தாக்கினால் அதிக மகசூல் இழப்பை சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க ரசாயன விவசாயிகள் அதிக வீரியமுள்ள பூஞ்சணக் கொல்லியைத் தெளிப்பார்கள். ஆனால், இயற்கை முறையில் வேப்பங்கொட்டை- சுண்ணாம்புக் கரைசல் மூலமாகச் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நேரடி விற்பனை
நேரடி விற்பனை

1 கிலோ வேப்பங்கொட்டை தூளை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து, அதனுடன் 300 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பு சேர்த்து, ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால் வேப்பங்கொட்டைத்தூள்- சுண்ணாம்பு கரைசல் தயாராகிவிடும். அதை வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மி.லி வீதம் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். பூக்கள் பூத்து பிஞ்சு பிடிக்கத் தொடங்கியதும், பந்தலில் தொங்கும் கொத்துகளைக் கம்பியுடன் இழுத்துக் கட்ட வேண்டும். அறுவடைக்குப் பிறகு கவாத்துச் செய்துவிட்டு, களை எடுக்க வேண்டும். திராட்சை சாகுபடியைப் பொறுத்தவரை ஒரு முறை பயிர் செய்து, முறையாகப் பராமரித்து வந்தால், 15 ஆண்டுகளுக்கு மகசூல் கிடைக்கும்.

மூலிகைக் கரைசல்

நொச்சி, சோற்றுக்கற்றாழை, எருக்கு, வேம்பு, மலைவேம்பு, ஆடுதிண்ணாப்பாலை, ஊமத்தை ஆகிய இலைகளில் ஒவ்வொன்றிலும் தலா 1 கிலோ எடுத்து அதை 5 லிட்டர் பசுமாட்டுக் கோமியத்தில் 5 நாள்கள் ஊற வைத்து வடிகட்டினால் மூலிகைக் கரைசல் தயார்.