Published:Updated:

4 ஏக்கர், ரூ. 3,72,000 சொல்லியபடி வருமானம் கொடுக்கும் சொர்ணமசூரி!

நெல் வயலில் முகேஷ் சதாசிவம்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் முகேஷ் சதாசிவம்

மகசூல்

4 ஏக்கர், ரூ. 3,72,000 சொல்லியபடி வருமானம் கொடுக்கும் சொர்ணமசூரி!

மகசூல்

Published:Updated:
நெல் வயலில் முகேஷ் சதாசிவம்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் முகேஷ் சதாசிவம்
‘‘சொந்தமா தொழில் செய்யலாம்னு நினைச்ச என்னை, பாரம்பர்ய நெல் விவசாயத்தைச் செய்ய அறிவுறுத்தியதோடு சரியான பசுமைப் பாதையை எனக்கு அடையாளம் காட்டியவர் நம்மாழ்வார் ஐயாதான்” என்று நெகிழ்கிறார் விருதுநகரைச் சேர்ந்த விவசாயி முகேஷ் சதாசிவம்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள சேதுநாராயணபுரத்தில் உள்ளது சதாசிவத்தின் தோட்டம். தென்னந்தோப்பில் கீழே விழுந்துகிடந்த தேங்காய் நெற்றுகளைச் சேகரிக்கும் பணியில் இருந்தவரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘பரம்பரையா விவசாயம் செய்யுற குடும்பம். இப்ப 5 ஏக்கர்ல 400 தென்னை மரங்கள் இருக்கு. 4 ஏக்கர்ல சொர்ணமசூரி நெல் பால் பிடிக்கிற பருவத்துல இருக்கு. நான் கல்லூரிப் படிப்பு முடிச்சிட்டு தனியார் கம்பெனிகள்ல வேலை பார்த்தேன். ஒரு கட்டத்துல முதுகுவலியால சிரமப்பட்டேன். ஆபரேஷன் செய்யணும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. ஆபரேஷன் இல்லாம வேற தீர்வு இருக்குதான்னு யோசிச்சப்பதான் உணவுமுறை, வாழ்வியல் குறித்துத் தேடல்ல இறங்கினேன்.

களை பறிக்கும் பணியில்
களை பறிக்கும் பணியில்

2003-ம் வருஷம் வத்திராயிருப்பு பக்கத்துல இருக்க ஆயர்தர்மம் கிராமத்துல பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு, ‘இயற்கை வாழ்வியல் பயிற்சி’ அளிக்க நம்மாழ்வார் ஐயா வந்தார். அவரை விருதுநகர்ல இருந்து அழைச்சுட்டு வர்ற பொறுப்பை என்கிட்ட கொடுத்தாங்க. அவரை அழைச்சுகிட்டு பஸ்ல வரும்போதே, இயற்கை, மழை, விவசாயம்னு பல விஷயங்களைப் பேசிகிட்டே வந்தவரு, ‘உங்க ஊருக்குப் பேரு ‘வற்றாத இருப்பு’. அந்தளவுக்கு ஒரு காலத்துல தண்ணி செழிப்பா இருந்துச்சு. ‘வற்றாத இருப்பு’தான் பேச்சுவழக்குல ‘வத்திராயிருப்பு’ன்னு ஆயிடுச்சு. ஆனா, இப்போ இங்கயே தண்ணி வற்றிப் போகக்கூடிய நிலையிலதான் இருக்கு’னு சொன்னார்.

நெல் வயலில் முகேஷ் சதாசிவம்
நெல் வயலில் முகேஷ் சதாசிவம்

நிகழ்ச்சியில் பேசும்போதும் வாழ் வியலோடு, ரசாயன விவசாயத்தோட தீமைகளையும், இயற்கை விவசாயத்தோட முக்கியத்துவம், நன்மைகளைப் பற்றியும் விளக்கமா பேசினார். அதுவரைக்கும், சொந்தமா ஏதாவது தொழில் செய்யலாம்ங்கிற எண்ணத்துல இருந்த நான், அவர் பேச்சைக் கேட்ட பிறகுதான் விவசாயம் செய்யலாம்ங்கிற முடிவுக்கு வந்தேன்.

2004-ம் வருஷம் மறுபடியும் வத்திராயிருப்புல ஒரு பயிற்சி நடந்துச்சு. பயிற்சிக்குப் பிறகு வீட்டுக்கும் தோட்டத்துக்கும் ஐயாவை அழைச்சுட்டுப் போனேன். ‘தென்னையெல்லாம் பட்டுப் போகுற நிலைமையில இருக்குப்பா. மூடாக்கு போடு. அமுதக்கரைசலைக் கொடு சரியாப் போகும்’னு சொன்னார். ‘எதுக்கு ஒட்டுரக நெல்லாப் போட்டிருக்க?’ன்னு கேட்டார். ‘குறைவான நாள்கள்ல அதிக மகசூல் கிடைக்கும் ஐயா?’ன்னு சொன்னேன். ‘குறைவான நாள்கள்னு சொல்லி, இப்ப குறைவான நாள்கள்ல நோய்களும் வந்திடுது. இயற்கை ஒருபோதும் தவறு செய்யுறதில்ல. உடலும் ஒருபோதும் தவறு செய்யுறதில்ல. பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்யுப்பா. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு மருத்துவக் குணமிருக்கு’ன்னு சொன்னவர், பாரம்பர்ய நெல் ரகங்களோட பெருமைகளை எடுத்துச் சொன்னார்.

தென்னையைச் சுற்றி மூடாக்கு.
தென்னையைச் சுற்றி மூடாக்கு.

தோட்டம் முழுக்கச் சுத்திப் பார்த்தவர், போகும்போது கிணத்தை எட்டிப் பார்த்தார். ‘கிணத்துல இப்போ தண்ணி இருக்கு. தண்ணி இல்லன்னா என்ன செய்வ?’ன்னு கேட்டார். ‘தண்ணி இல்லன்னா என்ன செய்ய முடியும்யா. அடுத்த மழைக்காகக் காத்திருக்க வேண்டியதுதான்’னு சொன்னேன். ‘சரி... பெய்யுற மழைத்தண்ணிய எப்படிச் சேமிப்ப?’ன்னு கேட்டார். அதுக்கு பதில் சொல்லத் தெரியாம நின்னேன். சத்தமாச் சிரிச்சவர், ‘நிலத்தோட ஒரு மூலையில பண்ணைக்குட்டைய வெட்டி வை. மழைத்தண்ணியைச் சேமி. தேவைப்படும்போது வறட்சி ஏற்பட்டாலும் பயன்படுத்திக்கலாம்’னு சொன்னார்.

பண்ணைக்குட்டை
பண்ணைக்குட்டை

ஐயா சொன்ன மாதிரியே தென்னைக்கு மூடாக்குப் போட்டேன். பண்ணைக்குட்டை வெட்டினேன். பாரம்பர்ய நெல் ரகத்தை விதைச்சேன். சீரகச்சம்பா, கருடன் சம்பா, மாப்பிள்ளைச்சம்பா, தூயமல்லி, வெள்ளைப்பொன்னி, சொர்ணமசூரின்னு இதுவரைக்கும் 20 வகையான ரகங்களைச் சாகுபடி செஞ்சிருக்கேன். இப்போ மூணு வருஷமா சொர்ணமசூரியைத் தொடர்ந்து சாகுபடி செய்றேன்’’ என்றவர் வயலைச் சுற்றிக்காட்டியபடியே, “‘விவசாயி, வியாபாரியாகவும் மாறணும்’னு ஐயா அடிக்கடி சொல்வார். நான் அறுவடை செய்ற நெல்லை, அரிசியா மதிப்புக்கூட்டிதான் விற்பனை செய்றேன். அதுலயும், ‘அடுத்த விதைப்புக்கு எடுத்து வெச்சுட்டுதான் அரிசியாக்கணும்’னும் ஐயா சொல்வார். நானும் அப்படியே செய்றேன்’’ என்று சொல்லி, வருமானத்துக்குள் புகுந்தார்.

4 ஏக்கர், ரூ. 3,72,000 சொல்லியபடி வருமானம் கொடுக்கும் சொர்ணமசூரி!

‘‘என்கிட்ட மொத்தம் 400 தென்னை மரங்கள் இருக்கு. இது எல்லாமே 30 வருஷம் ஆன மரங்கள். இதுல 350 மரங்கள் பலன் தர்ற நிலையில இருக்கு. மரத்துல தேங்காய்கள வெட்டுறதில்லை. கீழே விழுறதைச் சேகரிச்சுதான் விற்பனை செய்றேன். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை 3,000 காய்கள் வரை கிடைக்கும். வருஷத்துக்கு 18,000 காய்கள். ஒரு காய் 10 ரூபாய்க்கு விற்பனையாகுது. அந்த வகையில ரூ.1,80,000 வரை வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. இதுல இடுபொருள், பராமரிப்புன்னு 20,000 வரை செலவாகிடும். மீதமுள்ள 1,60,000 ரூபாய் லாபம்தான்.

நெல் மகசூலைப் பொறுத்தவரைக்கும் போன வருஷம், ஏக்கருக்கு 28 மூட்டை வீதம் 4 ஏக்கருக்கு 112 மூட்டை (ஒரு மூட்டை 72 கிலோ) நெல் கிடைச்சது. மொத்தம் 8,064 கிலோ. அந்த நெல்லை அரைச்சதுல 4,704 கிலோ அரிசி கிடைச்சுது. ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்தேன். 4,704 கிலோ விற்பனை மூலமா ரூ. 3,52,800 கிடைச்சுது. வைக்கோல் விற்பனை மூலமா ரூ.20,000 கிடைச்சது. ஆக, மொத்தம் ரூ.3,72,800 வருமானமாக் கிடைச்சுது. இதுல, செலவுகள் ரூ.1,45,360 போக, ரூ.2,27,440 லாபமாக் கிடைச்சுது. நான் அரிசியை உள்ளூர்லயும், நண்பர்கள் வட்டாரத்திலுமே விற்பனை செஞ்சுடுறேன். அதனால, விற்பனையைப் பொறுத்தவரைக்கும் எந்த வில்லங்கமுமில்ல” என்று மகிழ்ச்சியுடன் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, முகேஷ் சதாசிவம், செல்போன்: 96559 20480

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கர் பரப்பில் சொர்ணமசூரி ரக நெல் சாகுபடி செய்வது குறித்து முகேஷ் சதாசிவம் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

கார் (ஜூன்), பிசானம் (செப்டம்பர்) ஆகிய பட்டங்களுக்கு ஏற்றது சொர்ணமசூரி நெல். வயது 120 முதல் 125 நாள்கள். நடவு செய்வதற்கு முந்தைய மாதத்திலே உழவுப்பணிகளைத் தொடங்கி விட வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். முதல் உழவின்போதே, ஒரு ஏக்கர் நிலத்துக்கு 5 டன் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்ய வேண்டும். இந்த உழவின்போதே நாற்றங்காலைத் தயார் செய்துவிடலாம்.

ஒரு ஏக்கர் பரப்பில் ஒற்றை நாற்று நெல் நடவு முறையில் சாகுபடி செய்ய 3 கிலோ விதைநெல் போதுமானது (வழக்கமான நடவு என்றால் 30 கிலோ விதைநெல் தேவை). 8 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். விதைகளை நெருக்கமாக இல்லாமல் சற்று இடைவெளிவிட்டு விரல்களால் வரிசையாக நெல் மணிகளை விதைக்க வேண்டும். இந்த இடைவெளியால், நாற்றுத் தடிமனாகவும் உயரமாகவும் வளரும். விதைக்கும் முன்பாக விதைநெல்லை, தண்ணீரில் சுத்தப்படுத்திப் போலி விதைகள், பொக்கு, சாவி போன்றவற்றை நீக்கிவிட வேண்டும். தரமான விதைநெல்லைச் சணல் சாக்கில் போட்டுப் பாத்திரத்திலோ தொட்டியிலோ சாக்கை மிதக்க விட வேண்டும். 12 மணி நேரம் தண்ணீரிலும், அடுத்த 12 மணி நேரம் தனி அறையிலும் வைத்து வைக்கோலால் மூடிவிட வேண்டும்.

இந்தச் சூட்டினால் நெல் விதைகள் முளைப்புவிடும். அதை மறுநாள் நாற்றங்காலில் விதைக்க வேண்டும். 5 முதல் 7 நாளில் முளைப்புத் தெரியும். 10-ம் நாள், 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 15 முதல் 20 நாளில் நாற்றுகளை வயலில் நடவு செய்ய வேண்டும். நாற்றங்காலிலிருந்து பறிக்கப்படும் நாற்றுகளைப் பஞ்சகவ்யாவில் (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா) அதன் வேர்ப்பகுதி மூழ்குமாறு முக்கி எடுத்த பிறகு, நாற்றுக்கு நாற்று ஒரு அடி, வரிசைக்கு வரிசை ஒரு அடி இடைவெளியில் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும். பஞ்சகவ்யாவில் நாற்றுகளை நேர்த்தி செய்வதால், வேர் சம்பந்தமான நோய்கள் வராது.

ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்தால் போதும். 10 நாள்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை அமுதக்கரைசலை (10 லிட்டர் தண்ணீர், 1 லிட்டர் அமுதக்கரைசல்) கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 30 மற்றும் 50-ம் நாளென இரண்டு களை எடுக்க வேண்டும். 70 முதல் 75-ம் நாளில் கதிர்விடத் தொடங்கும். அப்போது 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் தேமோர்க்கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

85 முதல் 90 நாளில் கதிரில் பால் பிடிக்கும். இந்த நேரத்தில் சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் இருக்கும். 80-ம் நாள் முதலே 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மூலிகைப்பூச்சிவிரட்டி கலந்து கைத்தெளிப்பானால் 5 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளித்தால் போதும். தாக்குதல் தென்பட்டால் கூடுதலாக ஒருமுறை தெளிக்கலாம். 95-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். 115 முதல் 120-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.

நிலத்தின் உயிரே மூடாக்குதான்!

“நி
லத்தடி நீரை உயர்த்துவது, தண்ணீரைச் சேமிப்பது, களைகளைக் கட்டுப்படுத்துவது, மகசூலை அதிகரிப்பதுனு பலதுக்கும் ஒரேவழி மூடாக்குதான். ‘வீடுதான் சுத்தமா இருக்கணும். காடு குப்பையாத்தான் இருக்கணும்’னு ஐயா அடிக்கடிச் சொல்வார். இதுல ‘காடு’ன்னு சொல்றது காட்டை மட்டும் குறிக்காது. பண்ணையையும் குறிக்கும். தென்னை மட்டைகள், தேங்காய் உரிக்கப்பட்ட கூடுனு பண்ணையில கிடைக்கிற பொருள்களை மூடாக்காகப் போடலாம். நாளாக நாளாக அது மட்கி உரமாகிடும். மரத்தோட வேர்ப்பகுதியில 4 டிகிரி அளவுக்கு வெப்பத்தைக் குறைக்குது. வெப்பத்தையும் காத்தையும் மரத்தோட தரைப்பகுதியில் தடுக்குறதால பாசன நீர் எளிதில் ஆவியாகாது. நிலத்தில வளர்ற எதையுமே வெட்டிடக் கூடாது. கோரை, கொழிஞ்சி, அவுரி, துத்தினு எல்லாமே நிலத்தை வளமாக்கக்கூடியதுதான். கோரைப்புல் நிலத்தில இருக்க உப்புத்தன்மையை உறிஞ்சிட்டு நல்ல தண்ணியை மட்டும் இறக்குது. மண் வளமும் அதிகமாகுது. செடிகள், மரங்கள் வளரத் தண்ணீர் அதிகம் தேவையில்லை. குறைந்தபட்சம் ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. மூடாக்கு போடுறதால, நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்” என்கிறார் முகேஷ் சதாசிவம்.

நிலத்தை வளமேற்ற பலதானிய விதைப்பு!

ண்டுக்கணக்கில் ரசாயன உரம் பயன்படுத்திய நிலம் என்றாலும் 6 மாதத்தில் வளமேற்றிவிடலாம் என்ற நம்மாழ்வார் சொன்ன தகவல் குறித்துப் பேசிய முகேஷ், “பயறு வகைகள், சிறுதானிய வகைகள், நறுமணப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள்னு 20 வகையான பயிர்கள தேர்வு செஞ்சுக்கணும். அதுல ஒவ்வொண்ணிலும் தலா 2 கிலோ எடுத்து நிலத்தில விதைக்கணும் (இது ஒரு ஏக்கருக்கான அளவு). பயிர் வளர்ந்து 20 நாள்கள்ல அப்படியே மடக்கி உழணும். அது மட்கின பிறகு இரண்டாம் முறையா மீண்டும் விதைச்சு 45-வது நாள்ல மடக்கி உழணும். மூணாவது முறையா மீண்டும் விதைச்சு 90 நாள்கள்ல வரை வளரவிட்டு, அப்படியே மடக்கி உழணும். இப்படி மூணு முறை விதைச்சு மடக்கி உழுதால் நிலம் வளமாயிடும். ஒருமுறை விதைச்சா மட்டும் போதாது. ஐயா சொன்னதுபோல மூணு முறை விதைச்சு உழுவது மிக அவசியம்” என்றார்.

வறட்சியில் கைகொடுக்கும் பண்ணைக்குட்டை!

ண்ணைக்குட்டை பற்றிப் பேசும் முகேஷ் சதாசிவம், “மழைநீரை நேரடியாகச் சேமிச்சு வறட்சி, தண்ணீர்த் தேவைப்படும் காலங்கள்ல பயன்படுத்துவதுதான் பண்ணைக்குட்டை அமைப்பதன் நோக்கம். சரிவானப் பகுதியை நோக்கி, நிலத்தோட மூலைப்பகுதியில அமைக்கணும். அதே நேரத்தில பண்ணைக்குட்டையிலிருந்து 200 மீட்டர் தொலைவில போர்வெல், கிணறு இருக்குமாறு பார்த்துக்கணும். தண்ணீரைச் சேகரிச்சு வைப்பது மட்டுமல்லாம, நிலத்தடி நீரோட அளவை அதிகரிக்கவும் உதவுது. பண்ணைக்குட்டைக்கு அருகில் எப்போதும் ஈரப்பதம் இருக்கிறதால, அதன் அருகில் பயிரிட்டுள்ள பயிர்கள் வறட்சியால் வாடாமல் பாதுகாக்கப்படுது. தண்ணீர் சேமிப்பு மட்டுமல்லாம, மீன்களையும் வளர்த்துத் தனி வருமானம் பார்க்கலாம். பண்ணைக்குட்டைகளைச் சுத்திப் பழ மரங்களையும் சாகுபடி செய்யலாம். குறைந்தபட்சம் 20 சென்ட் பரப்பிலாவது பண்ணைக்குட்டை அமைக்கிறது நல்லது. 40 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம், 4 மீட்டர் ஆழமுள்ள பண்ணைக்குட்டையில் 10 முதல் 12 லட்சம் லிட்டர் நீரைச் சேமிக்க முடியும். பண்ணைக் குட்டையோட கரைப்பகுதிகள்ல வெட்டிவேர் நடவு செய்யலாம். ஓர் ஆண்டுக்குப் பிறகு வெட்டிவேர் மூலமாக உபரி வருமானமும் பெறலாம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism