Published:Updated:

8 ஏக்கர் 3,75,000 ரூபாய்... நவீன நெல் ரகங்களையும் மதிப்புக்கூட்டலாம்!

பரந்து விரிந்த நெல் வயலில் இளங்கோ
பிரீமியம் ஸ்டோரி
பரந்து விரிந்த நெல் வயலில் இளங்கோ

மகசூல்

8 ஏக்கர் 3,75,000 ரூபாய்... நவீன நெல் ரகங்களையும் மதிப்புக்கூட்டலாம்!

மகசூல்

Published:Updated:
பரந்து விரிந்த நெல் வயலில் இளங்கோ
பிரீமியம் ஸ்டோரி
பரந்து விரிந்த நெல் வயலில் இளங்கோ

பாரம்பர்ய நெல் ரகங்கள் மட்டுமே இயற்கை விவசாயத்திற்கும், மதிப்புக்கூட்டுதலுக்கும் ஏற்றது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இதனாலேயே அதிக பரப்பில் நவீன நெல் ரகம் சாகுபடி செய்யும் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறத் தயங்குகிறார்கள். ஒருசிலர் மட்டும் நவீன ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்கிறார்கள். ஆனால், அவர்களும் மதிப்புக்கூட்டும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. இதனால் நிறைவான லாபம் கிடைக்காமல் போய்விடுகிறது. பாரம்பர்ய ரகம், வீரிய ரகம் எதுவாக இருந்தாலும், மதிப்புக்கூட்டினால் லாபம் நிச்சயம் என்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூரைச் சேர்ந்த இளம் விவசாயி இளங்கோ.

உம்பளாச்சேரி மாடுகள், நெல் கதிர்கள்
உம்பளாச்சேரி மாடுகள், நெல் கதிர்கள்

இவர் இயற்கை விவசாயத்தில், நவீன ரகமான ஆடுதுறை-43(ஏ.டி.டீ-43) நெல்லை சாகுபடி செய்வதோடு, மதிப்புக்கூட்டி விற்பனையும் செய்துவருகிறார். ஒரு மாலைவேளையில் இளங்கோவைச் சந்திக்கச் சென்றோம். பரந்து விரிந்து செழிப்பாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த ஆடுதுறை-43 நெற்பயிர்கள், காற்றில் அழகாக அசைந்தாடிக்கொண்டிருந்தன. வயலில் தேங்கியிருந்த மழைநீரை வடித்துக்கொண்டிருந்த இளங்கோ, நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றார். ‘‘இந்தப் பகுதியில் பல விவசாயிகள் இதே ரகம் சாகுபடி செஞ்சிருக்காங்க. அவங்களோட பயிர்கள் எல்லாம், மழையில கீழே சாய்ஞ்சிடுச்சி. ஆனா, என்னோட நெற்பயிர்கள் மட்டும் கம்பீரமா நிக்கிது பாருங்க. இதுதான் இயற்கை விவசாயத்தோட மகிமை. தண்டு நல்லா ஊக்கமா, திடகாத்திரமா இருக்கு. மண்ணு நல்லா வளமா இருக்கு. போதுமான இடைவெளியில நடவு செஞ்சிருக்கோம். கோனாவீடர் ஓட்டுனோம். இதனால வேர்கள் படர்ந்து, அதிக எண்ணிக்கையில தூர்கள் வெடிச்சி, பயிர்கள் உறுதியா வளர்ந்திருக்கு. கதிர்கள் நல்லா நீளமா, வாளிப்பா இருக்கு. நெல்மணிகள் திரட்சியா இருக்கு” என நெகிழ்ச்சியோடு பேசும் இளங்கோ, ஏற்கெனவே பசுமை விகடன் வாசகர்களுக்கு அறிமுகமானவர். 10.2.2017 தேதியிட்ட இதழில், ‘அன்று விரிவுரையாளர், இன்று விவசாயி’ என்ற தலைப்பில், இவரது நிலக்கடலைச் சாகுபடி பற்றிய கட்டுரை வெளியானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பரந்து விரிந்த நெல் வயலில் இளங்கோ
பரந்து விரிந்த நெல் வயலில் இளங்கோ

எங்க அப்பா, தாத்தா இரண்டு பேருமே அரசு ஊழியர்கள். நான் சிவில் இன்ஜினீயரிங் படிச்சிட்டு, தனியார் நிறுவனத்துல சில நாள் வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு பாலிடெக்னிக்ல விரிவுரையாளரா இருந்தேன். பசுமை விகடன் ஏற்படுத்திய தாக்கத்தால, இயற்கை விவசாயத்துல ஆர்வம் ஏற்பட்டு, முழுமையா இதுல இறங்கிட்டேன். எனக்குச் சொந்தமா நிலம் கிடையாது. 2016-ம் வருஷம் குத்தகைக்கு 4 ஏக்கர் நிலம் பிடிச்சி, இயற்கை விவசாயத்தைத் தொடங்கினேன். சம்பாப் பட்டத்துல பாரம்பர்ய நெல் ரகங்கள், கோடையில நிலக்கடலை, எள்ளு, உளுந்து, குறுவையில நவீன ரக நெல்லும் பயிர் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

நான் உற்பத்தி செய்யக்கூடிய விளைப்பொருள்களை நானே மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதுனால, ஓரளவுக்கு நிறைவான வருமானம் கிடைச்சிடுது. இதனால, சாகுபடி பரப்பைப் படிப்படியா அதிகரிச்சிக்கிட்டே வர்றேன். போன வருஷம் என்னோட குத்தகை நிலத்தோட அளவு எட்டு ஏக்கரா இருந்துச்சு. இந்த வருஷம் 13 ஏக்கரா விரிவுபடுத்தி யிருக்கேன். இயற்கை விவசாயத்துக்காகவே 2 உம்பளாச்சேரி கிடை மாடுகள வளர்க்குறேன். கன ஜீவாமிர்தம், ஜீவாமிர்தம், இயற்கைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம் தயார் செஞ்சி பயன்படுத்துறதுனால, இடுபொருள்களுக்கான செலவு ரொம்ப குறையுது.

ஏக்கருக்கு 30 மூட்டைக்கு மேல மகசூல் கிடைக்கும்னு உறுதியா நம்புறேன். ஒரு மூட்டைக்கு 2,340 ரூபாய் வீதம் மொத்தம் 65,520 ரூபாய் வருமானம் கிடைச்சது.

பாரம்பர்ய நெல் ரகங்கள உற்பத்தி செய்றதுதான் என்னோட முதன்மையான நோக்கம். அதேசமயம், சாப்பாட்டுக்கு சன்னரக வெள்ளை அரிசியை விரும்பக் கூடியவங்களையும் வாடிக்கையாளர்களாகத் தக்க வெச்சிக்கணும்ங்கறதுக்காகக் குறுவையில ஆடுதுறை-43 ரக நெல்லைச் சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன். இதுதான் குறுவைக்கு ஏற்ற, குறைஞ்ச வயசுடையது. போன வருஷம் ஏக்கருக்கு 28 மூட்டை மகசூல் கிடைச்சது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
8 ஏக்கர் 3,75,000 ரூபாய்... நவீன நெல் ரகங்களையும் மதிப்புக்கூட்டலாம்!

இந்த வருஷம் மழை நல்லா பெய்ஞ்சதுனால, பயிரோட வளர்ச்சி சிறப்பா இருக்கு. கதிர்கள் நல்லா வாளிப்பா, நெல்மணிகள் திரட்சியா இருக்குறதுனால, ஏக்கருக்கு 30 மூட்டைக்கு மேல மகசூல் கிடைக்கும்னு உறுதியா நம்புறேன்” என்று சொன்னவர், மதிப்புக்கூட்டுதலில் தான் மேற்கொள்ளும் தனித்துவம் குறித்தும் விற்பனை குறித்தும் விவரித்தார்.

“நான் விற்பனை செய்யக்கூடிய சன்னரக சாப்பாட்டு அரிசியை மக்கள் விரும்பி வாங்குறாங்க. இயற்கை முறையில சாகுபடி செய்றதுனால, இதோட தனித்துவமான சுவையை நல்லாவே உணர முடியும். கடைகள்ல வழக்கமாகக் கிடைக்கக்கூடிய சாப்பாட்டு அரிசி, சமைக்குறப்ப சாதம் குலைஞ்சிப்போகும். மறுநாள் பழைய சோற்றுக்குத் தாங்காது. நொதிச்சிப் போயி, நாத்தம் வர ஆரம்பிச்சிடும்.

8 ஏக்கர் 3,75,000 ரூபாய்... நவீன நெல் ரகங்களையும் மதிப்புக்கூட்டலாம்!

அறுவடை செஞ்ச நெல்லை அப்பவே புழுங்கல் அரிசியா மாத்துறதுனாலதான் அதுமாதிரியான குறைபாடு வருது. வியாபாரிகள் அதைப்பத்தியெல்லாம் கண்டுக்கமாட்டாங்க. ஆனா, நான் உற்பத்தி செய்யக்கூடிய அரிசி, அதுமாதிரி ஆகறதில்லை. காரணம் நெல்லை, ஆறுமாசத்துக்கு மேல இருப்பு வெச்சிருப்பேன். ‘நெல்லு இருக்க இருக்க பொன்னு’னு கிராமங்கள்ல சொல்லுவாங்க. இதை நான் அனுபவபூர்வமா உணர்றேன். நெல்லுக்குள்ளார இருக்கக்கூடிய பால், நல்லா கெட்டித்தன்மை அடைஞ்சி, பச்சை வாசனை போற வரைக்கும் காத்திருப்பேன். அதுக்குப் பிறகுதான் நெல்லை அவிச்சி, சரியான பதத்துல காயவெச்சி அரைப்பேன். இதுமாதிரி செஞ்சாதான் தரமான அரிசி கிடைக்கும்.

‘‘சாப்பாட்டுக்கு சன்னரக வெள்ளை அரிசியை விரும்பக்கூடிய வாடிக்கையாளர்களுக்காகக் குறுவையில ஆடுதுறை-43 ரக நெல்லை சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன்.’’

உடைசல் இல்லாம எல்லாமே முழு அரிசியா கிடைக்கும். எனக்கு ஒரு மூட்டை (60 கிலோ) நெல்லுல 36 கிலோ புழுங்கல் அரிசி கிடைக்குது. தவிடும், குருணையும் அரவை கூலிக்குச் சரியாயிடுது. ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் வீதம் 36 கிலோ அரிசிக்கு 2,340 ரூபாய் வருமானம் கிடைக்குது.

போன குறுவையில எனக்குக் கிடைச்ச 28 மூட்டை நெல்லை, புழுங்கல் அரிசியா மாத்தி விற்பனை செஞ்சதுல, ஒரு மூட்டைக்கு 2,340 ரூபாய் வீதம் மொத்தம் 65,520 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல செலவுப்போக, ஏக்கருக்கு 47,070 ரூபாய் நிகரலாபமாகக் கிடைச்சது. எட்டு ஏக்கருக்கு 3,76,560 ரூபாய் லாபம் கிடைச்சது. இந்தளவுக்கு லாபம் பார்க்கணும்னு நினைச்சா, விவசாயிகள் ஒரு வருஷம் வரைக்கும் காத்திருக்கணும். நெல்லை அறுவடை செஞ்ச உடனே விற்பனை செஞ்சிடணும்னு நினைக்குறதுனால, உழைப்புக்கேத்த லாபம் இல்லாமல் போயிடுது’’ என்றார் தெளிவாக.

தொடர்புக்கு, இளங்கோ, செல்போன்: 95002 68744

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு ஏக்கரில் குறுவைப் பட்டத்தில் ஆடுதுறை-43 ரக நெல் சாகுபடி செய்வதற்கான செயல்முறைகள்

நாற்று உற்பத்தி

ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 சென்ட் வீதம் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 25 கிலோ கன ஜீவாமிர்தத்தை நன்கு தூளாக்கி, அடிவுரமாக இட வேண்டும். (ஆங்காங்கே கட்டிகள் இருந்தால், நாற்றுப் பறிக்கும்போது, கடினமாக இருக்கும்) பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்யப்பட்ட 20 கிலோ விதைநெல்லை, நாற்றங்காலில் பரவலாகத் தூவ வேண்டும். 7-ம் நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீரில் கலந்துவிட வேண்டும். 10-ம் நாள் 5 கிலோ கடலைப் பிண்ணாக்கைப் பாசனநீரில் கலந்துவிட வேண்டும். 12-ம் நாள் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி, நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், 5 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து நாற்றுகள் மீது தெளிக்க வேண்டும். 15-ம் நாள் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும்.

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி, அடி உரமாக 500 கிலோ கன ஜீவாமிர்தம் போட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்டி, நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். வரிசைக்கு வரிசை முக்கால் அடி, குத்துக்குக் குத்து அரையடி இடைவெளிவிட்டு நாற்று நடவு செய்ய வேண்டும். 12-ம் நாள் கோனாவீடர் உருட்டி, களைகளை மண்ணுக்குள் புதைக்க வேண்டும். 13-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை வயல் முழுவதும் பரவலாக விசிறி அடிக்க வேண்டும்.

பாசனநீரில் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட்டால், அனைத்துப் பகுதிக்கும் போய்ச் சேர்ந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியாது. தெளிப்பான் மூலம் தெளித்தால் கூடுதலாகச் செலவாகும். இதனைத் தவிர்ப்பதற்காக விசிறி அடிக்க வேண்டும். 30-ம் நாள் மீண்டும் ஜீவாமிர்தம் விசிறி அடிக்க வேண்டும். 45-ம் நாள் 120 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டிக் கலந்து தெளிக்க வேண்டும். 65-ம் நாள் 120 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 80 நாள்களுக்குப் பிறகு கதிர்கள் உருவாகி, நெல்மணிகள் முற்றி, 110-ம் நாள் நெல் அறுவடைக்கு வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism