Published:Updated:

சாதனை-15 : “இளைஞர்களை விவசாயத்தை நோக்கி அழைத்து வந்தது!”

இளைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
இளைஞர்கள்

இளைஞர்கள்- ம.செந்தமிழன் நிறுவனர், செம்மை வனம்

சுமை விகடன் இதழின் பங்களிப்புகள், தமிழ்ச் சமூகத்தில் நிலைத்த தன்மையை அடைந்துள்ளன.

இவ்விதழ் தொடங்கப்பட்டபோதே இயற்கை வேளாண்மை எனும் ஒற்றைக் கருத்தினை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. வேளாண்மையை நோக்கி இளைஞர்களை ஈர்த்த இதழ் என்பதைக் காட்டிலும், ‘நிலத்தின் உயிர் தன்மையை’ நோக்கி ஈர்த்த இதழ் பசுமை விகடன் என நான் கருதுகிறேன். ஏனெனில், இயற்கை வேளாண்மையை வெறும் தொழில்நுட்பமாக முன்வைக்காமல், இயற்கையின் ஓர் அங்கமாக நிலத்தை அறிமுகப்படுத்தியது இவ்விதழ். அதன் விளைவாக, இளைஞர்கள் மனதில் இயற்கை வேளாண்மை எனும் கருத்து ‘பல்லுயிருக்கும் அன்பு செய்தல்’ எனும் பண்புடன் வளர்ச்சியடைந்தது.

ஐயா நம்மாழ்வாரைத் தமிழகத்தின் பெரும்பான்மையினருக்கு நன்கு அறிமுகப்படுத்திய இதழ், பசுமை விகடன். அவர்தம் கொள்கைகளை இவ்விதழ் வெளியிட்ட முறையில், வணிகத்தன்மை இருக்கவில்லை. ஐயா நம்மாழ்வார் ஏறத்தாழ எல்லா வணிக நோக்கங்களுக்கும் அப்பாற்பட்டவர். அவரை அவர்தம் இயல்புடன் அறிமுகப்படுத்துதல் என்பது பெரும் பொறுப்பு. அவ்வகையில் பசுமை விகடன் பொறுப்புடன் செயல்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நான் சென்னையிலிருந்து ஊர் திரும்பியபிறகு, என்னையும் என் குடும்பத்தினரையும் பற்றிய முகப்புக் கட்டுரை பசுமை விகடனில் வெளியானது. அக்கட்டுரையை இப்போதும் கூடச் சிலர் இணையதளங்களில் பகிர்வதைக் கண்டிருக்கிறேன். என் போன்றோருக்கு அவ்வாறான ஊக்கமாகப் பசுமை விகடன் அமைந்தது உண்மை. ‘ஊர் திரும்புங்கள்’ என்பதனை ஒரு வழிகாட்டலாக முன்வைத்து, இப்போது நான் வினையாற்றிக் கொண்டுள்ளேன். எனது இவ்வாழ்க்கையின் தொடக்கத்தில் பசுமை விகடன் துணை நின்றது. இன்றைக்குப் பல இளைஞர்கள் ஊர் திரும்பிக்கொண்டுள்ளனர். அவர்களை இயற்கை நேயத்தை நோக்கி அழைப்பதற்குப் பசுமை விகடன் தேவைப்படுகிறது.

இளைஞர்கள்
இளைஞர்கள்

பசுமை விகடன் 14 ஆண்டுகளில் எண்ணற்ற மாற்றங்களுக்கு அடிப்படையாக இருந்துள்ளது. மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதனால் பதினைந்து ஆண்டுகள் என்பது நீண்ட காலமே. எந்த மாற்றமும் இல்லாத வகையில் ஒரு நூற்றாண்டு இதழ் வெளியானாலும் அது மிகக் குறுகலானதே. அவ்வகையில் பசுமை விகடனில் பணியாற்றிக்கொண்டுள்ள அனைவரும் ஒரு நீண்ட காலத்தினை வடிவமைத்துள்ளனர். இவ்வடிவமைப்பின் விளைவுகளைத் தமிழகமெங்கும் உள்ள எண்ணற்ற இயற்கை அங்காடிகளிலும், பூச்சிக்கொல்லி இல்லா தோட்டங்களிலும், இயற்கை மருத்துவ மையங்களிலும் காணலாம். தமிழர் மரபுகளின் பல அங்கங்களை இயற்கை நேயம் எனும் கருத்தின் வழியாக நம் சமூகம் மீட்டெடுத்துள்ளது. அவ்வாறான மீட்புகளில் பசுமை விகடன் விதையாகவோ, உரமாகவோ இருந்து வருகிறது.