Published:Updated:

காய்கறிகள், கால்நடை, மேட்டுப்பாத்தி... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த களப்பயிற்சி!

பண்ணையில் செந்தில் குமரன்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணையில் செந்தில் குமரன்

பயிற்சி

'விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை’ என்ற முதுமொழிக்கான எண்ணற்ற உதாரணங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமரன் என்ற இளைஞரும் ஒருவர். 29 வயதாகும் அவர் பொறியியல் பட்டதாரி. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட செந்தில், தற்போது இயற்கை விவசாயப் பயிற்றுநர்.

கோயம்புத்தூரை அடுத்த சூலூர் பகுதியில் செஞ்சோலை இயற்கை வழி வேளாண் பண்ணை என்ற பெயரில், இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறார். நம்மாழ்வாரால் தூவப்பட்ட விதை, இன்று தமிழ்நாடு முழுவதும் விருட்சமாக வளர்ந்து வருகிறது.

நம்மாழ்வார் சிறப்பிதழுக்காக செஞ்சோலை இயற்கை வேளாண் பண்ணைக் குச் சென்றோம். 30 வயது இளைஞர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை பலரும் களப்பயிற்சியில் ஈடுபட்டிருந்திருந்தனர். பயிற்சிக்கு இடைப்பட்ட நேரத்தில் நம்மிடம் பேசத் தொடங்கினார் செந்தில் குமரன்.

பண்ணையில் செந்தில் குமரன்
பண்ணையில் செந்தில் குமரன்

‘‘வயது வித்தியாசம் இல்லாம, எல்லா தரப்பு மக்களும் என்கிட்ட பயிற்சி எடுக்க வர்றாங்க. இதுக்கு அடிப்படை காரணம், வானகத்துல நம்மாழ்வார் ஐயாக்கிட்ட நான் கத்திக்கிட்ட தொழில்நுட்பங்கள்தான். அவரோட அதிகம் பேசிப்பழக்கம் இல்ல, ஆனா, கூட சேர்ந்து நிறைய வேலை செய்திருக்கேன். வானகத்துல இருந்த ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கத்துக்கிட்டேன்’’ என்று முன்னுரைக் கொடுத்து, பேசத்தொடங்கினார்.

‘‘என்னோட சொந்த ஊர் கோவைதான். விடுமுறை நாள்கள்ல அம்மாவோட ஊரான ஊத்துக்குளிக்குப் போவோம். அங்க விவசாயம்தான் எல்லாமே. அப்ப இருந்தே விவசாயம் சார்ந்த வாழ்வியல் வேணும்ங்கற ஆசை வந்துடுச்சு. அதுக்கப்புறம் வாய்ப்பு கிடைக்கறப்ப எல்லாம் விவசாயம் பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். பசுமை விகடன்ல நம்மாழ்வார் ஐயாவோட கட்டுரைகள் படிச்சுருக்கேன். கல்லூரி படிக்கும்போது, நூலகத்துல ஐயாவோட புத்தகங்களைத் தொடர்ச்சியா படிச்சேன். 2010-ம் வருஷம், செம்மொழி மாநாடு நடந்தப்ப, ஐயாவை நேர்ல பார்த்தேன். ஒரு விதமான தயக்கத்துல அப்ப அவர்கிட்ட பேசல. மேற்கு மண்டலத்துல ஐயா எங்க பேசினாலும் நேர்ல போயிடுவேன்.

தோட்டத்தில் காய்கறிகள்
தோட்டத்தில் காய்கறிகள்

ஈரோட்டுல நடைபெற்ற ஒரு நிகழ்ச்சில, ‘மக்களுக்கு உண்மையை எடுத்துக்கிட்டு போறதைத் தவிர வேற எதையும் நாம பண்றதில்லை’னு ஐயா பேசினார். அதே மாதிரி, ‘இப்ப தாய்ப்பால் நஞ்சாகிடுச்சு’னு பேசியிருக்கார். ஐயா, சொன்ன மாதிரி என் சொந்தக்காரப் பெண்மணிக்கும் தாய்ப்பால்ல பிரச்னை ஏற்பட்டுச்சு. நம்ம வீட்டு பிரச்னையையும் சேர்த்துதான் ஐயா பேசறார்னு முடிவு பண்ணி வேலையை விட்டுட்டு, கரூர் மாவட்டம், சுருமான்பட்டியில நம்மாழ்வார் ஐயா உருவாக்கின வானகம் பண்ணைக்கு போயிட்டேன். அங்க கால்நடை பராமரிப்பு, மேட்டுப்பாத்தி அமைக்கிறது, மரம் வளர்க்கிறது, இயற்கை விவசாயப் பயிற்சி கொடுக்கறதுனு கத்துக்கிட்டேன்” என்றவர் செஞ்சோலை குறித்த தகவலுக்குள் புகுந்தார்.

ஒரு நாள் பயிற்சி, மூன்று நாள் பயிற்சி, ஐந்து நாள் பயிற்சி, ஒரு மாச பயிற்சி, நிறைய பயிற்சிகள் கொடுத்துக்கிட்டு வர்றோம்.


“குறிப்பிட்ட ஓர் இடத்துல வேலை பார்த்தா மாற்றம் நிலையானதா இருக்கும்னு தோணுச்சு. சொந்த ஊருங்கறதால கோயம்புத்தூர்ல வேலை பார்க்கலாம்னு முடிவு பண்ணேன். ‘நம்ம திண்ணை’னு ஒரு திட்டம் கொண்டு வந்தேன். மாசத்துக்கு ஒரு நாள் ஏதாவது ஓர் இடத்துல சந்திப்பு ஏற்பாடு பண்ணி வாழ்வியல் சார்ந்து பேசுவோம். அப்பறம் பயிற்சி பண்ணை தொடங்கலாம்னு யோசிச்சேன். மலைக் கிராமத்துல பயிற்சி பண்ணிக்கிட்டு இருந்தப்ப, இயற்கை வேளாண்மையில ஈடுபாட்டோட இருந்த தீபன் சக்கரவர்த்தினு ஒருவர் பழக்கமானார். அவரோட பண்ணைதான் இது. குத்தகை அடிப்படையிலதான் பேசினோம். அப்புறம், நான் செய்ற வேலைகளைப் பார்த்துட்டு எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டார்.

பயிற்சியில்
பயிற்சியில்

கால்நடை பயிற்சி

2019-ம் வருஷம், செஞ்சோலை இயற்கை வேளாண்மைப் பயிற்சி பண்ணையை ஆரம்பிச்சோம். மானாவாரி விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்த இடம். கோவை மாநகருக்கு அருகிலேயே இருக்கிற பகுதி. உடனடியா பயிற்சியைத் தொடங்கிட்டேன். நலவிதினு ஒரு விவசாயக் குழு கறவையில இருக்கிற ரெண்டு மாடுகள கொடுத்தாங்க. வந்த 15-வது நாள்லயே கால்நடை பயிற்சி கொடுத்தோம். ‘பயிற்சினா ரொம்ப எளிமையா இருக்கணும்’னு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வார். ‘3 மணி நேரம் பயிற்சி முடிஞ்சு உடனடியா அவங்க வீட்டுக்குப் போற மாதிரியான பயிற்சிதான், வெகுஜன மக்கள்கிட்ட போய்ச் சேரும்’னு சொல்வார்.

விஷ உயிர்களை எப்படி அணுகுறதுனு பயிற்சி கொடுத்தோம். அப்படியே படிப் படியா ஒரு நாள் பயிற்சி, மூன்று நாள் பயிற்சி, ஐந்து நாள் பயிற்சி, ஒரு மாச பயிற்சி, மூன்று மாச பயிற்சினு நிறைய பயிற்சிகள் கொடுத்துக்கிட்டு வர்றோம். 80 பேருக்கு இங்க பயிற்சி கொடுக்க முடியும். 10 பேர் வரை தங்கலாம்.

சலிப்பு தட்டக் கூடாதுனு தினசரி காலையில சிலம்பம் பயிற்சி கொடுப்போம். பிறகு, கோழிகள திறந்து விடறது, தண்ணி காட்டறது, தீனி வெக்கிறது, மாடு கட்டறது, சாணி அள்ளறது, ஆட்டைப் பார்த்துக்கறது, சுத்தம் பண்றது, உடம்பு சரியில்லாட்டி மருந்து பண்றதுனு கால்நடை பயிற்சி கொடுப்போம். தோட்டத்துல களப்பயிற்சி கொடுப்போம். மண்வெட்டி பிடிச்சு மானாவாரியா விதைக்கறது, களை எடுக்கறது எல்லாம் பண்ணுவோம். எல்லாரும் சேர்ந்து சமையல் பண்ணுவோம். பாத்தி, பந்தல் கட்டுறது, கால்நடை மேய்க்கற வேலை செய்வோம்.

மூடாக்கு விவசாயம்
மூடாக்கு விவசாயம்

முதல் மூன்று நாளுக்கு எல்லாரும் சேர்ந்து வேலை செய்வோம். அப்புறம் எல்லாருக்கும் தனித்தனியா வேலை கொடுத்துட்டு வந்துடுவேன். ஏதாவது உதவி கேட்டா நான் பண்ணுவேன்’’ என்றவர், பண்ணையைப் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

தண்ணீர் பிரச்னையைச் சமாளிக்கும் மூடாக்கு

‘‘இது மொத்தம் மூன்றரை ஏக்கர். தங்குற இடம், சிலம்பப் பயிற்சி மைதானம், மரங்கள் இதுவே முக்கால் ஏக்கர் வந்துடும். அரை ஏக்கர்ல கால்நடை, மானாவாரி விவசாயம் பண்ணிகிட்டு இருக்கோம். காய்கறி ஒரு ஏக்கர்ல போட்டிருக்கோம். இந்தப் பகுதியில தண்ணி ரொம்பக் குறைவு. மூடாக்கு போட்டுப் பண்றதால சமாளிக்க முடியுது. மழை இல்லாட்டி அரை ஏக்கர்லதான் பண்ணுவோம். வெண்டை, தக்காளி, கத்திரி, மிளகாய், காலிஃப்ளவர், குச்சிக்கிழங்கு, வெள்ளைப் பூசணி போட்டிருக்கோம். மானாவாரியில சோளம் போட்டிருக்கோம். 20 தென்னை மரங்கள் இருக்கு.

தோட்டத்தில் காய்கறிகள்
தோட்டத்தில் காய்கறிகள்


இங்க விளையுற காய்கறிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் விற்பனை பண்ணிடுவோம். எந்தக் காயா இருந்தாலும் 200 கிராம் 10 ரூபாய். கிலோ 50 ரூபாய். இந்தக் காய்கறி உற்பத்தியைவிட இங்க பயிற்சிதான் முதன்மை. பயிற்சியை இலவசமாத்தான் கொடுக்கிறேன். சாப்பாடு, தண்ணி, மின்சாரம் மாதிரியான அடிப்படை செலவுகளுக்காக சிறு தொகையை பங்கேற்பு கட்டணமா வாங்குறோம். பெங்களூரு, தஞ்சாவூர், ராமநாதபுரம்னு நிறைய இடங்கள்ல இருந்து வர்றாங்க. ஓய்வுபெற்ற அரசு அதிகாரிங்க, ஐ.டி நிறுவனத்துல பணியாற்றினவங்க, கல்லூரி மாணவர்கள், ‘பிசியோதெரபி’ மருத்துவர்கள்னு பல துறையினரும் வந்து கலந்துகுறாங்க’’ என்றவர் நிறைவாக,

தோட்டத்தில் காய்கறிகள்
தோட்டத்தில் காய்கறிகள்

சுயநலமா இருக்கணும்

‘‘கோவை மாவட்டத்துல காய்கறிக்கு நல்ல சந்தை இருக்கு. அதனால, காய்கறிகள்ல எளிமையா வருவாய் எடுக்கலாம். இதே மாதிரி அந்தந்தப் பகுதிக்கு எது எளிமையோ அதைச் செஞ்சாலே போதும். மக்கள் பொதுநலமா இருக்க வேண்டாம். சுயநலமா இருங்கணும்தான் சொல்வேன். நான் நல்ல உணவைச் சாப்பிடணும், நல்ல தண்ணி வேணும், நல்ல காத்து வேணும் இதுதான் சுயநலம். ஆனா, யாரும் சுயநலமா இருக்கற தில்ல. அதனால, சுயநலமா யோசிச்சா அது அப்படியே விரிவடையும். உணவு நம்ம சாப்பிட அப்புறம், ரத்தமும் சதையுமா மாறிடும். அதுக்குதான் நம்ம அதிக மதிப்பு கொடுக்கணும்” என்றார் அழுத்தமாக.

தொடர்புக்கு, செந்தில் குமரன்,

செல்போன்: 95666 65654

நிலம் இல்லை

“எங்க குடும்பம் சராசரி குடும்பம்தான். ஆரம்பத்துல வானகம் பயிற்சிக்குப் போகக் கட்டணம் செலுத்த பணம் இல்ல. வேலைக்குப் போய்க் கஷ்டப்பட்டு, கட்டணம் கட்டி பயிற்சிக்குப் போனேன். கடன் வாங்கிதான் என்னை படிக்க வச்சாங்க. எங்க குடும்பத்துக்கு நிலம் இல்ல. என் அண்ணனுக்குக் கொஞ்சம் நல்ல வேலை கிடைச்சதால குடும்பத்தைச் சமாளிக்க முடியுது. ஒரு தடவை நான் படிச்ச பள்ளியில பயிற்சி கொடுக்கற வாய்ப்பு கெடைச்சது. காலை ‘பிரேயர்’ல என்னை கௌரவப்படுத்தினாங்க. நான் ‘பாஸ்’ ஆவேனானு வீட்ல பயந்த காலம் இருக்கு. அன்னிக்கு இவங்கதான் செந்திலோட அப்பா, அம்மானு சொன்னப்ப அப்பா, அம்மா ரெண்டு பேரும் அழுதுட்டாங்க. அதுக்கப்புறம், வீட்ல எனக்குத் துணை நிக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்கிறார் செந்தில்.

ஆடுகள்
ஆடுகள்

உடல் உழைப்பை விடவே இல்லை

நம்மாழ்வாருடனான அனுபவம் குறித்து செந்தில் கூறுகையில், “ஐயாகிட்ட பெருசா பேசிப்பழக்கம் இல்ல. அவர் எப்பவும் வேலை செஞ்சுகிட்டே இருப்பார். கொஞ்சம் அனுபவம் வந்தாலே, சிலர் வேலை செய்யறதை விட்டுருவாங்க. ஆனா, ஐயா கடைசி வரை உடல் உழைப்பை விடவே இல்ல. எப்ப பார்த்தாலும் வேலை செஞ்சுகிட்டே இருப்பார். ஒரு வேலைய முடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா தூங்ககூட மாட்டார். டார்ச் அடிச்சுகிட்டு அவர் மூடாக்கு போட்டுகிட்டு இருந்ததைப் பார்த்துருக்கேன். வானகத்துல நம்மாழ்வார் ஐயா 5 மணிக்கு எந்திருச்சு வேலையைத் தொடங்கிடுவார். கூட போறவங்க அப்படியே பயிற்சிக்குப் போய்க்கலாம். ஒரு நாள் ஐயா கூட நானும் இன்னொருத்தரும் போனோம். வேலை முடிச்சுட்டு உக்காந்தப்ப, ஐயாவுக்குத் தேநீர் கொடுத்தாங்க. அப்ப ஐயா, ‘எனக்கு மட்டும் கொடுக்கறீங்க..? காலைலயே என் கூட ரெண்டு பேர் வந்து வேலை பார்த்தாங்க. நான் மட்டும் குடிச்சா நல்லாருக்காது. அவங்களுக்கும் கொடுங்க’னு சொன்னார். எங்களுக்குத் தேநீர் வந்தப்புறம்தான், அவரும் குடிச்சார். சின்ன விஷயத்துலகூட மத்தவங்கள சமமா நடத்துறது ஆச்சர்யத்தைக் கொடுத்துச்சு” என்றார்.