Published:Updated:

பாறையிலும் மரங்கள், மூலிகைகள்! விருட்சங்களை உருவாக்கும் விதை இயக்கம்!

மரம் வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் வளர்ப்பு

மரம் வளர்ப்பு

'மனுசனாப் பொறந்த ஒவ்வொருத்தரும் ஒரு மரக்கன்றையாவது நட்டுப் பராமரிக்கணும். இல்லேன்னா பொறந்த பொறப்புக்கு அர்த்தமே இல்ல. இளவட்டப் பயலுவ ஊருக்கு ஊரு ஒண்ணாச் சேர்ந்தாலே ஊரு சோலையாயிடும்’ எனச் சொல்வார் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். அவரின் வாக்குப்படியே விருதுநகரில் கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து பாறைப்பாங்கான நிலத்தில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருவதுடன் குப்பைக் கிடங்காக இருந்த கண்மாயையும் தூர்வாரியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது தெற்கு ஆனைக்கூட்டம். கிராமத்தின் நுழைவுப்பகுதியில் நம்மாழ்வார் உழவு செய்வதுபோல வரையப்பட்டிருந்த ஓவியத்துடனான பேருந்து நிலையம் நம்மை வரவேற்றது. ஊர் நெடுகிலும் நிழல் தரும் மரங்கள் அணி வகுத்து நின்றன. ஒவ்வொரு மரத்தின் தூர்ப்பகுதியிலும் சோற்றுக் கற்றாழை, ஓமவள்ளி, ஆடாதொடை, நொச்சி, பிரண்டை என மூலிகைச் செடிகளும் செழுமையாக வளர்ந்திருந்தன. கிராமத்தின் நடுவில் கடல்போலக் காட்சி அளித்த கண்மாயில், தண்ணீர் ததும்பி நின்றிருந்தது. கண்மாய் ஓரத்தில் வேலி அமைத்ததுபோல இளம் குருத்தோலைகளுடன் பனைகள், இடையிடையே அரளி, செம்பருத்திச் செடிகளில் பூக்களும் அசைந்தாட நந்தவனமாகவே காட்சி அளித்தது.

வளர்ந்து நிற்கும் மரங்கள்
வளர்ந்து நிற்கும் மரங்கள்

ஊர்க் கண்மாயிலிருந்து, சிறிது தூரத்தில் மரக்கன்று நடும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்களைச் சந்தித்தோம். முதலில் பேசத் தொடங்கினார் இயற்கை விவசாயியான அருண்சங்கர், ‘‘சிவகாசி தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கருப்பசாமி, எங்க ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜன், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் மூலம்தான் ரசாயன விவசாயத்தின் தீமைகளையும், இயற்கை விவசாயத்தின் நன்மைகளையும் தெரிஞ்சுகிட்டேன். அவர்தான், நம்மாழ்வார் தாத்தாவைப் பற்றிச் சொன்னார். ‘கரூர் மாவட்டம், சுருமான்பட்டியில நம்மாழ்வார் ஐயா உருவாக்குன வானகம் பண்ணை இருக்கு. அங்க இயற்கை விவசாயப் பயிற்சி நடக்குது. அந்த பயிற்சியில கலந்துக்கோ உனக்குத் தெளிவு கிடைக்கும்’னு சொல்லி அனுப்பி வச்சார்.

25 வருஷமா குப்பை கொட்டும் இடமாக இருந்த 2 ஏக்கர் கண்மாயை ஊராட்சி மன்றத்தின் அனுமதியோட சீரமைச்சு ஆழப்படுத்தினோம். இப்போ ரெண்டு வருஷமா கண்மாய்ல தண்ணியைப் பார்க்க முடியுது.


ஐயாவிடம் நேரடியாகப் பயிற்சி எடுத்துக்குற வாய்ப்பு எனக்குக் கிடைக்கல. அவரோட மறைவுக்குப் பிறகுதான் வானகத்துல பயிற்சியில கலந்துகிட்டேன். இயற்கை விவசாயத்தைப் பத்தி முழுமையா தெரிஞ்சுகிட்டேன். நம்மாழ்வார் ஐயா பேசுன வீடியோக்கள், அவர் எழுதிய, அவரைப் பத்தின புத்தகங்களைப் படிச்சேன். அப்பாவிடமிருந்து 2 ஏக்கர் நிலத்தை எனக்காக வாங்கி, ஐயா சொன்ன முறையில இயற்கை விவசாயத்துல எள் பயிரிட்டு நல்ல மகசூல் எடுத்தேன். மகசூலைப் பார்த்து ரசாயன விவசாயியான எங்க அப்பாவே மலைச்சு போனார்.

சீரமைக்கப்பட்ட கண்மாய்
சீரமைக்கப்பட்ட கண்மாய்

‘நம்ம வீடு… நம்ம விவசாயம்னு மட்டும் இருந்துடக் கூடாது. ஊரையும் முன்னேத்த முயற்சி எடுக்கணும்’னு ஐயா சொல்வார். அதுலயும் தண்ணீர் சேமிப்புக்கும், மரங்கள் வளர்ப்புக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். ‘ஆளுக்கொரு மரக்கன்னு நடுங்கய்யான்னா… இடம் இல்லை, நேரமில்லைன்னு சொல்றாங்க. ஒரு சதுர அடி இடத்துல ஒரு பப்பாளியும், ரெண்டு சதுர அடி இடத்துல ஒரு முருங்கையும், மூணு சதுர அடி இடத்துல வேம்பும் நடலாம். மரக்கன்னு நட்டா மட்டும் போதாது. தண்ணி ஊத்திப் பராமரிக்கணும்.

எந்த மரமும் சுத்தமான தண்ணிய எதிர்பார்ப்பதில்ல. சமையலறை, குளியலறைக் கழிவு நீரைத் திருப்பிவிட்டாலே போதும். தண்ணீரைத் தேங்க விடாம உறிஞ்சுறதுனால கொசுத் தொல்லையும் இருக்காது. இதற்கும் இடமில்லன்னா, தொட்டிச்செடிகளை வளர்க்கலாம், அதற்காக அழகுக்காக வளர்க்கிறேன்னு ‘குரோட்டன்ஸ்’களை வளர்க்க கூடாது. துளசி, நிலவேம்பு, ஓமவள்ளி, கற்றாழைன்னு மூலிகைளைத்தான் வளர்க்கணும். மனுசனாப் பொறந்த எல்லாரும் ஏதாவது ஒரு மரக்கன்றை நட்டுப் பராமரிக்கணும். இல்லன்னா நாம பொறந்ததற்கு என்னய்யா அர்த்தம் இருக்கு?’ன்னு ஐயா சொன்ன வார்த்தைகள்தான் மரக்கன்று வளர்ப்பைத் தூண்டுச்சு.

நம்மாழ்வார் ஓவியம்
நம்மாழ்வார் ஓவியம்

இதை ஊருல உள்ள நண்பர்கள்கிட்ட எடுத்துச் சொன்னேன். ‘விதை இல்லேன்னா எதுவும் இல்ல’ன்னு ஐயா சொல்வார். அதனால, ‘விதை இயக்கம்’னு பேர் வச்சோம். ஒண்ணாச் சேர்ந்து மரக்கன்று நட்டு பராமரிச்சுட்டு வர்றோம். இப்போ 150-க்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்கத்துல இருக்காங்க. வாரத்துல சனிக்கிழமை கூட்டம் போடுவோம். ஞாயித்துக்கிழமை மரக்கன்று நடுவோம்” என்றார்.

விதை இயக்கத்தின் இளைஞர்கள்
விதை இயக்கத்தின் இளைஞர்கள்

மரக்கன்று வளர்ப்புக் குறித்துப் பேசிய பிரசன்ன கண்ணன், ‘‘எங்க ஊர் முழுக்கச் சுக்காம்பாறைதான். வீடு கட்ட அடித்தளம் போடவே சிரமப்படுவாங்க. ஆனா, அந்த நிலத்துலயும் மரம் வளர்க்கணும்கிறதுதான் எங்க நோக்கம். கன்று நடத் தேர்வு செஞ்ச இடத்துல தினமும் ஒரு குடம் தண்ணி ஊத்துவோம். மறுநாள் தண்ணி ஊத்துன இடம் பொதும்பியிருக்கும். பொதும்புன இடம்வரைக்கும் முடிஞ்ச வரைக்கும் குழியாத் தோண்டுவோம். இதே மாதிரி 10 நாள்கள் வரைக்கும் முதல் நாள் தண்ணி ஊத்தி, மறுநாள் குழி தோண்டுவோம். அதன்பிறகு குழிக்குள்ள மக்காசோளத் தோல், கரும்புச்சக்கை, காய்ந்த இலைதழைகள் அதோட சேர்த்து மட்கிய சாணம் போட்டுக் காயவிட்டுக் கன்று நடவு செய்வோம்.

மரத்தின் தூர்பகுதியில் சோற்றுக்கற்றாழை
மரத்தின் தூர்பகுதியில் சோற்றுக்கற்றாழை


ஈரப்பதத்தைக் காக்கும் சோற்றுக்கற்றாழை

குழி எடுத்துக் கன்று நடும்போது சோற்றுக்கற்றாழையும் சேர்த்து நடவு செய்வாராம் ஐயா. உயிர் தண்ணீருக்குப் பிறகு அவர், மறு தண்ணீர் ஊத்துறதே இல்ல. ‘காற்று, பனியில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து கொள்ளும் சோற்றுக்கற்றாழை, மரத்தோட வேர்ப்பகுதியைப் பாதுகாப்பதுடன் மரத்திற்கும் ஈரப்பதத்தைக் கொடுக்கும்’னு சொல்வாராம். அதனால நாங்களும் எல்லா மரக்கன்றுகளின் தூரிலும் சோற்றுக்கற்றாழை நட்டுறுக்கோம். அதோட, ஒமவள்ளி, பிரண்டை, நொச்சி, ஆடாதொடை உள்ளிட்ட மூலிகைகளை உயிர் மூடாக்காக நட்டுறுக்கோம். இயற்கை விவசாயம் செய்யுற விவசாயிகள் மூலிகைப் பூச்சிவிரட்டிக்காக இதை எடுத்துக்கிறாங்க” என்றார்.

சாலையோரத்தில் வளரும் மரங்கள்
சாலையோரத்தில் வளரும் மரங்கள்


எளிய முறையில் போத்து நடவு
போத்து நடவு குறித்துப் பேசிய பிரவீன், ‘‘மரத்தின் கிளைகள், தண்டு பகுதிகளை வெட்டி நடவு செய்யும் முறையை ‘போத்து நடவு’ என்கிறோம். ஆல், அரசு, உதியம், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை ஆகிய மரங்களை இந்த முறையில் நடவு செய்யலாம். இதில், உதியம், வாதமடக்கி வேகமா வளரும். நடவுக்குத் தேர்வு செய்யும் மரங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன மரமாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், மணிக்கட்டுக் கனத்தில் வளைவு இல்லாமல் 8 முதல் 10 அடி உயரத்தில் நேராக இருக்க வேண்டும். கிளைகளில் உள்ள இலைகளை, காம்புகளை உதிர்த்துவிட வேண்டும்.

அடிப்பகுதியின் தோலை நீக்கிச் சீவி, அதில் கற்றாழை ‘ஜெல்’லைத் தடவி குழிக்குள் ஊன்ற வேண்டும். அதன் உச்சிப்பகுதியில் பசுஞ்சாணத்தை உருண்டைபோலப் பிடித்து வைக்க வேண்டும். நடவு செய்த 25 முதல் 30-ம் நாளில் வேர் பிடிக்கத் துவங்கும். 45 முதல் 50-ம் நாளில் இலைகள் துளிர்விடுவதைப் பார்க்கலாம். இந்த முறையில் 10 அடி இடைவெளியில் அடுத்த கிளையை நடலாம். ஆடி முதல் மார்கழி மாதம் வரை பருவமழையும், பனிப்பொழிவும் இருப்பதால், இந்தக் காலம் போத்து முறை நடவுக்கு ஏற்றது. 10 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும். ஓராண்டு வரையில் கண்ணும் கருத்துமாகப் பார்த்தால் போதும். வேறெந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை” என்கிறார்.

வளர்ந்து வரும் மரங்கள்
வளர்ந்து வரும் மரங்கள்

‘‘25 வருஷமா குப்பை கொட்டும் இடமாக இருந்த 2 ஏக்கர் கண்மாயை ஊராட்சி மன்றத்தின் அனுமதியோட சீரமைச்சு ஆழப்படுத்தினோம். இப்போ ரெண்டு வருஷமா கண்மாய்ல தண்ணியைப் பார்க்க முடியுது. கண்மாய்ல யாரும் குளிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கோம். மேய்ச்சலுக்குப் போகுற ஆடு, மாடுங்க தாகம் தீரத் தண்ணீர் குடிச்சுட்டுப் போகுறதைப் பார்க்கும்போது மனசுக்கு ஆனந்தமா இருக்கு” எனக் கண்மாய்ச் சீரமைப்பைப் பற்றிச் சொன்னார் ராகவன்.

மண்ணரிப்பைத் தடுக்கும் பனை
மண்ணரிப்பைத் தடுக்கும் பனை

மண்ணரிப்பைத் தடுக்கும் பனை

பனை விதை நடவைப் பற்றிப் பேசிய காளிராஜ், ‘‘எங்க கிராமத்துல உள்ள ஊருணி, கண்மாய், குளங்கள் கரைகளைச் சுற்றிலும் 2,000-க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஊன்றியிருக்கோம். பனைமரத்தோட சல்லிவேர்கள் பரவலா ஊடுருவிப் போறதால மண்ணை இறுக்கமா பிடிச்சு மண் அரிப்பு ஏற்படாமத் தடுக்கும். கரையும் பலப்படும். தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்கள்ல இருந்து பனம்பழங்களைச் சேகரிக்கிறோம். நன்கு பழுத்த பழங்களின் சதைப்பகுதியை கையாலேயே பிதுக்கி எடுத்த விதைகளை 10 நாள்கள் வரைக்கும் வெயில்ல உலர வைக்கணும். இதில் வண்டு துளைத்த கொட்டைகளைக் கழிச்சுடுவோம்.

10 அடி இடைவெளியில ஓர் அடி ஆழம், ஓர் அடி அகலத்துல குழி எடுத்து விதையின் கண் பாகம் கீழ்நோக்கி இருக்கும்படி நட்டுடுவோம். கொஞ்சம் மட்கிய குப்பையைக்கூடக் குழிக்குள் போட்டு நடலாம். தண்ணி ஊத்தணும்னு அவசியமில்ல. ஆனா, தண்ணி ஊத்துனா பட்டுப்போகாம இருக்கும்னு கண்மாய்ல இருந்து தண்ணி எடுத்து 6 மாசம் வரைக்கும் தண்ணீர் ஊத்தினோம்” என்றார்.

பிரசன்ன கண்ணன், பிரவீன், ராகவன், அருண்சங்கர், காளிராஜ்
பிரசன்ன கண்ணன், பிரவீன், ராகவன், அருண்சங்கர், காளிராஜ்

நிறைவாகப் பேசியவர்கள், ‘‘வைப்பாறு வடிநிலக் கோட்டத்தின் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 300 ஏக்கர் பரப்பளவிலான கண்மாய் இருக்கு. சிவகாசி தாலுக்காவிலேயே இதுதான் பெரிய கண்மாய். இந்தக் கண்மாயை 2019-ல் அரசு உதவியுடன் ஊர்மக்கள் இணைந்து குடிமராத்து செய்தோம். இப்போ பெய்ஞ்ச மழையில கண்மாய் முழுக்கொள்ளவை எட்டியிருக்கு. ஆனா, கண்மாயைச் சுற்றியுள்ள 2,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்யாமல் சும்மா கிடக்கு. அதை அகற்றிட்டு மண்ணை வளமேற்றி, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, இயற்கை விவசாயம் செய்ய வைப்பதே அடுத்த இலக்கு” என்றனர் உற்சாகத்துடன்.

நம்மாழ்வார் வழி பின்பற்றி வரும் இளைஞர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.