Published:Updated:

சீரான வருமானம் தரும் சிவப்புக்கீரை சாகுபடி... `மகசூல் மந்திரம்' சொல்லும் இளைஞர்!

கீரை பறிக்கும் அஸ்கா பாரதி
கீரை பறிக்கும் அஸ்கா பாரதி

கீரையின் மகத்துவம் மக்களுக்கு தெரிய தொடங்கியுள்ளதால் அதற்கான தேவை அதிகரித்து வருகிறது.

கிராமத்தில் யாரையாவது சீண்டினால், ``என்னைப் பார்த்தால் கிள்ளுக் கீரையா தெரியுதா?" என கோபத்தில் கேட்பார்கள். கீரை என்றால் சாதாரணம் என நினைப்பவர்கள் மத்தியில் கீரையை மட்டுமே பிரதான விவசாயமாகச் செய்து அசத்தி வருகிறார் கன்னியாகுமரி மாவட்டம் வடக்குப் பேயன்குழியைச் சேர்ந்த இளைஞர் அஸ்கா பாரதி. புதுக்குளம் ஏலாவில் உள்ள அஸ்கா பாரதியின் கீரைத்தோட்டத்துக்கு ஓர் காலை வேளையில் சென்றோம். சிவப்புக் கம்பளம் போர்த்தியதுபோன்று வளர்ந்து நின்ற கீரைகளைப் பிடுங்கி சந்தைக்குக் கொண்டு செல்லும் முனைப்பில் இருந்தார் அஸ்கா பாரதி. கீரையைக் கட்டாகக் கட்டி சந்தைக்கு எடுத்துச் செல்ல வந்திருந்த வியாபாரிகளை அனுப்பிவிட்டு நம்மிடம் பேசினார் அஸ்கா பாரதி.

``எனக்கு விவரம் தெரிஞ்சதில இருந்து அப்பா கீரை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கிறார். அதில இருந்து தொடர்ச்சியா நாங்க செய்துகிட்டு இருக்கோம். புடலை, பாகல், வெண்டை, பூசணி எல்லாம் முன்னாடி போட்டிருந்தோம். இப்ப கீரையும் வெண்டையும் செய்துகிட்டு இருக்கோம். கீரைல சிவப்புக் கீரையும், பச்சக் கீரையும் போட்டிருக்கோம். ரெண்டுமே ஒரே டேஸ்ட்டுதான். கலர்தான் வேற. மூணு ஏக்கர்ல கீரை போட்டிருக்கோம். க்ளைமேட் நல்லா இருந்துச்சுன்னா 25-ல இருந்து 28 நாள்ல கீரையைப் பிடுங்கி சந்தைக்கு அனுப்பலாம்" என்று முன்னுரை கொடுத்தவர், கீரை விதைப்பு பற்றிப் பகிர்ந்து கொண்டார்.

சிவப்புக் கீரை
சிவப்புக் கீரை

``முதல்ல நிலத்தைக் கிளைச்சு, மண்ணைப் பொடியாக்கி, சைடுல விழும்பு பிடிப்போம். அப்புறம் கோழி உரம் போட்டு தண்ணி நனச்சு விடுவோம். ஒரு நாள் காயப்போட்டுட்டு அதுக்கு மேல கீரை விதையை வெதப்போம். வெதச்சு ரெண்டு வாரம் கழிச்சு, ஒரு ஏக்கருக்கு ரெண்டு டெம்போ கோழி ஓரம் போடுவோம். ஒரு ஏக்கருக்கு விதைக்க தரத்த பொறுத்து ரெண்டு கிலோயில இருந்து மூணு கிலோ வரை விதை தேவைப்படும். வெதச்ச மூணாவது நாள்ல மொளச்சு வரும். நாளான வித்துன்னா மொளைய்க்க நாலு நாளு, அஞ்சு நாளு ஆகும். ஒரு ஏக்கர்ல எவ்வளவு கீரை நிக்கும்னு நாங்க கணக்கு பாக்கிறது இல்ல. ஒரு ஏக்கர்ல கீரை போட 50,000 ரூபா செலவு ஆவும். செல சமயம் மூணு மாசம் தொடர்ந்து மழை இருந்தா ஒண்ணும் பண்ண முடியாது.

பனி பெஞ்சா இலையெல்லாம் ஒருமாறி கரிஞ்சிரும். வெதச்சி ஒரு வாரத்துல வெட்டுக்கிளி எலய வெட்டாம இருக்கவும், உரம் போட்டு கழிஞ்ச உடனயும் புழு வராம இருக்கவும் மருந்தடிப்போம். களை பறிக்கவே 25,000 ரூபா ஆயிரும். வாழை எல்லாம் ஒரு வருஷத்த பயிர், இது ஒரு மாசத்துல பயன் கொடுக்கும்" என்றவர்,

தினசரி வியாபார கணக்கைச் சொன்னார்.

``ஒரு கெட்டு கீரை பத்து ரூபாய்க்கு விக்கிறோம். ஒரு கைப்பிடி அளவுதான் ஒரு கெட்டு கீரை. நல்ல சொதையா வந்தா ஒரு கீரையும் ஒரு கெட்டுல நிக்கும். அல்லாட்டு நாலு கீர, அஞ்சு கீர, செல நேரம் பத்து கீரயும் நிக்கும்.

அறுவடை செய்யப்பட்ட கீரைகள் விற்பனைக்குச் செல்கின்றன
அறுவடை செய்யப்பட்ட கீரைகள் விற்பனைக்குச் செல்கின்றன

திங்கள் சந்தை, கருங்கல், திக்கணங்கோடுல இருந்து யாவாரிங்க இங்கயே வந்து கீர வாங்கிட்டு போவாங்க. இங்க கெட்டுக்கு பத்து ரூபாய்க்கு வாங்கி அவங்க பதினைஞ்சு ரூபாய் வச்சு விப்பாங்க. இல்லன்ன பிரிச்சு விப்பாங்க. ஒரு நாளு எண்ணூரு கட்டு, ஆயிரம் கட்டும் போவும். செல நாளு இருநூறு கெட்டு போற நாளும் உண்டு. கல்யாண வீடு சீசன் இல்லாம இருந்தா நல்லா போவும். அதுபோல வெள்ளிக் கிழமை, செவ்வா கிழமையும் போவும்" என்றவர் கீரை விவசாயத்தில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டது பற்றி விவரித்தார்.

``எனக்கு இருபத்தி எட்டு வயசு ஆகுது. டிப்ளோமோ ஆட்டோ மொபைல் படிச்சிருக்கேன். படிக்கும்பவே அப்பாக்கூட கீரை விவசாயம் செஞ்சுட்டுதான் இருந்தேன். இந்த விவசாயம் பிடிச்சதுனால பண்ணுறேன். அப்பா, அம்மா, அண்ணன் எல்லாரும் சேர்ந்துதான் கீர வெவசாயம் செய்யுறோம். காலையில அஞ்சர மணிக்கு இங்க வந்திருவோம். பத்து மணின்ன முடிச்சுட்டு வீட்டுக்குப் போயிட்டு சாயந்திரம் மறுபடியும் வருவோம். ஒரு வயல்ல நஷ்டம் வந்தா, இன்னொரு வயல்ல லாபம் வரும். அதனால இந்த வெவசாயத்துல நாங்க கணக்கு பாக்குறதே இல்ல. கீரை போட்டிருக்கிற இடம் எல்லாமே குத்தகைதான். களை எடுக்க மட்டும்தான் ஆளுவச்சி வேலை செய்றோம். இப்ப கள எடுக்கவும் ஆளு இல்ல. அதனால இப்ப இருக்கிறத அப்பிடியே கொண்டுபோலாம்னு நினைக்கிறோம்" என்றபடி விடை கொடுத்தார். சிவப்புக் கீரை விவசாயத்திலும் சிறப்பான வருமானம் ஈட்டலாம் என்பதற்கு அஸ்கா பாரதி ஒரு எடுத்துக்காட்டு.

கீரை பராமரிப்பில் அஸ்கா பாரதி
கீரை பராமரிப்பில் அஸ்கா பாரதி

கீரை வளர்ப்பு பற்றி அஸ்கா பாரதி பகிர்ந்த குறிப்பு:

> கீரைக்கு டெய்லி தண்ணி நனைக்கணும். காலையில தண்ணீர் தெளித்தால் வெயில்ல உடனே காய்ந்துவிடும். எனவே சாயங்காலம் நேரத்தில தண்ணீர் தெளித்தால் ஈரப்பதம் காலையில வரைக்கும் நிக்கும்.

> மூணு ஏக்கர்ல கீரை பயிரிட்டால் சராசரியா ஒரு நாள் ஐநூறு கட்டு பிடுங்கினாலும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும். கீரை, மாதத்தில் எல்லா நாளும் வருமானம் கொடுக்கும்.

> நாம வெதக்கிற கீரையில இருந்தே அடுத்த சாகுபடிக்கான விதைகளை உற்பத்தி செய்யலாம். அதுக்காக குறிப்பிட்ட கீரைகளை பிடுங்காம வெதைக்கு விட்டிருவாங்க. நல்லா வளர்ந்த கீரையை மட்டும்தான் பிடுங்குவார்கள். காலையில் கீரை பிடுங்கி எடுத்த இடத்தில் மட்டும் உடனே தண்ணீர் விடுவார்கள்.

> சிவப்புக் கீரையும், பச்சைக் கீரையும் ஒரே டேஸ்ட்தான். இருந்தாலம் சிவப்பு கீரைகளையே மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். நூறு கட்டு சிவப்பு கீரை விற்பனையானால், ஐந்து கட்டு பச்சை கீரை விற்பனையாகும். கீரையின் மகத்துவம் மக்களுக்கு தெரிய தொடங்கியுள்ளதால் அதற்கான தேவை அதிகரித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு