Published:Updated:

திருவாரூரில் பனை திருவிழா கொண்டாடிய மக்கள்... ஆயிரக்கணக்கில் குவிந்த பனை விதைகள்!

இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்த பனை மரங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் அரிதாகிப் போனதுதான் துரதிர்ஷ்டம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களை ஒப்பீடும்போது, காவிரி டெல்டா மாவட்டங்களில் பனை மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் பனை மரங்களின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் சுற்றுச்சூழல் அமைப்பினரும் அவ்வப்போது மிகுந்த ஆர்வத்துடன் பனை விதைகளைச் சேகரித்து, இவற்றை நடவு செய்து, பனை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பனை திருவிழா
பனை திருவிழா

இந்நிலையில்தான், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ரிஷியூரில் நடைபெற்ற பனை திருவிழா, பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. பனை விதைகளை நடவு செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், பனைப் பொருள்களை காட்சிப் படுத்துதல், டெல்டாவில் மிகவும் அரிதாகிப் போன, பனை ஏறும் தொழிலாளர்களைக் கண்டுபிடித்து கௌரவித்தல், பனங்கிழங்கு சாக்லேட் அறிமுகம் செய்தல் என இத்திருவிழா பல வகைகளிலும் அசத்தியது.

கருப்பட்டி, பனங்கிழங்கு உள்ளிட்ட பனை சார்ந்த உணவுப் பொருள்கள் அனைத்துமே மனித உடலுக்கும் பல வகைகளிலும் நன்மை பயக்கக்கூடியது. பனை மரங்கள், கடும் வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளரக்கூடியது. நிலத்தடி நீரை சேமித்து வைத்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்கது. புயல் தடுப்பு அரணாகவும் பனை மரங்கள் விளங்குகின்றன. இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்த பனை மரங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் அரிதாகிப்போனதுதான் துரதிர்ஷ்டம்.

இந்நிலையில்தான் ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையில் பனை விதைகளை விதைப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடும் பொதுமக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த ரிஷியூரில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஏற்பாட்டில் பனை திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.

பனை மரம்
பனை மரம்

இவ்விழாவின் கூடுதல் சிறப்பாக, அதங்குடி, அனுமந்தபுரம், பெரம்பூர், ரிஷியூர் உள்ளிட்ட ஊராட்சிகளும் இவ்விழாவில் கைகோத்தது. இவ்விழாவை தொடங்கி வைத்து உரையாற்றிய திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், ``விவசாய நிலங்களில் பனையை வளர்க்க விவசாயிகள் முன் வர வேண்டும், பனைப் பொருள்களை அனைவரும் பயன்படுத்த வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமான சேவைகளைச் செய்ய வேண்டும்" என்றார். பனங்கிழங்கிலிருந்து தயார் செய்யப்பட்ட சாக்லேட் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பனையின் சிறப்பியல்புகளை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்துப் பாடத்திட்டங்களிலும் பாடமாக வைக்க வேண்டும், அரசு விழாக்களில் பனை பொருள்களைப் பரிசாக வழங்க வேண்டும், ரேஷன் கடைகளில் பனைவெல்லம் வழங்க முன் வர வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பனை ஏறும் தொழிலாளர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டார்கள். பனை விதைகள் நடும் செய்யும் பணி. நீடாமங்கலம் அடுத்த கொத்தமங்கலத்தில் தொடங்கி முல்லைவாசல், பெரம்பூர், கட்டையடி, நன்மங்கலம் சாலை, ரிஷியூர், பச்சைக்குளம், வாழாச்சேரி வரையிலும் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ரிஷியூர், அதங்குடி, அனுமந்தபுரம், பெரம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சாலைப்பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பனை ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் பங்கெடுத்து வருவது பெரும் வெற்றி.

பனை
பனை

நம்மிடம் மிகுந்த மகிழ்ச்சியோடு பேசிய கீரின் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, ``டெல்டா மாவட்டங்கள்ல பொதுவாகவே பனை மரங்களோட எண்ணிக்கை ரொம்ப குறைவு. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் போலவே இங்கேயும் அதுக்கு நிகராக பனை மரங்களை உருவாக்கணுங்கிறதுதான் எங்களோட நோக்கம். இதுக்கான தொடக்கப்புள்ளியாக, பனை திருவிழா நடத்தப் போறோம்னு சமூக வலைதளங்கள்ல அறிவிப்பு வெளியிட்டதுமே, நிறைய பேர், பனை விதைகளை சேகரிச்சு எங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. 12 கிலோமீட்டருக்குத்தான் திட்டமிட்டுருந்தோம்.

ஆனால், தேவைக்கு மேலேயே பல்லாயிரக்கணக்கான பனை விதைகள் சேர்ந்து எங்களை சந்தோஷத்துல திக்குமுக்காட வச்சிடுச்சு. டெல்டா மாவட்டங்கள் முழுவதுமே பரவலாகப் பனை மரங்களை வளர்த்தெடுக்கும் முயற்சியில ஈடுப்படப் போறோம். தென் மாவட்டங்களுக்கு நிகராக, டெல்டாவுலயும் பனை மரங்கள் காட்சி அளிக்கணும். இதை ஒரு சபதமாகவே நாங்க நினைக்குறோம். ஏற்கெனவே பல சுற்றுச்சூழல் அமைப்புகளும் இளைஞர்களும் இதுக்கான தீவிர முயற்சியில ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க. இதுல எங்களோட கிரீன் நீடா அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும்” என உறுதிப்பட தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு