Published:Updated:

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

தனது தோட்டத்தில் நாட்ராயன்
பிரீமியம் ஸ்டோரி
தனது தோட்டத்தில் நாட்ராயன்

ஆய்வு

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

ஆய்வு

Published:Updated:
தனது தோட்டத்தில் நாட்ராயன்
பிரீமியம் ஸ்டோரி
தனது தோட்டத்தில் நாட்ராயன்

“பிற தொழிலாளர்களைப் போலவே விவசாயிகளுக்கும் தொழில் மற்றும் வாழ்க்கையை நடத்துவது எளிமையாக இருக்க வேண்டும். இதற்காக ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற முறையைப் பின்பற்ற ஊக்குவிக்க இருக்கிறோம். ஜீரோ பட்ஜெட் விவசாயம் மூலம் அடிப்படை விஷயங்களுக்குத் திரும்பப்போகிறோம். இது புதிய விஷயம் அல்ல. நாம் இந்த முறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். சில மாநிலங்களில் இந்தமுறை முன்னரே பின்பற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள விவசாயிகள் இதற்கான பயிற்சிக்குத் தயாராக இருக்கிறார்கள். இதுபோன்ற முயற்சிகள் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த உதவும்” இது 2019-20-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய வார்த்தைகள்.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

விவசாயத் தற்கொலைக்குக் காரணம் இடுபொருளின் விலை உயர்வு. அதற்கு மாற்றாக இருக்கிறது இயற்கை விவசாயம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தைப் பட்டி தொட்டியெல்லாம் கொண்டுசென்றார். பல முன்னோடி விவசாயிகளை உருவாக்கினார். இயற்கை விவசாயம் என்ற தற்சார்பு விவசாயத் தொழில்நுட்பங்கள் விவசாயிகள் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்த நேரத்தில் அறிமுகமானது சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் என்னும் செலவு குறைந்த வேளாண்மை முறை. வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு பெற்ற இந்தச் சித்தாந்தத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது பசுமை விகடன்.

சுபாஷ் பாலேக்கரை அழைத்து வந்து, 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் திண்டுக்கல், ஈரோட்டில் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டன. அதன் விளைவாக ஏராளமான விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் சித்தாந்தத்திற்கு மாறினார்கள். அதன்மூலம், இடுபொருள் செலவு குறைந்து போதுமான வருமானம் பார்த்துவருகிறார்கள். ஒரு விவசாயி, ஒரு நாட்டுப்பசுவை வைத்துக்கொண்டு 30 ஏக்கர் விவசாயம் செய்ய முடியும், எந்த விதமான இடுபொருளும் வாங்காமல் மாட்டுச் சிறுநீர், சாணம் போன்றவையே போதும்” இதுதான் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் அடிப்படை. இந்தச் சித்தாந்தம் செயல்பாட்டுக்கு வந்தபோதே ரசாயன இடுபொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்தன. இது அறிவியல் ரீதியாகச் சாத்தியமில்லையென ரசாயன இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்கள் வேளாண் அறிஞர்கள் மூலமாகப் பரப்புரை மேற்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் வெற்றியை, விவசாயிகள் அனுபவபூர்வமாக உணரத்தொடங்கி னார்கள். இந்தியா முழுவதும், ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து அறிவியல்பூர்வமாக முழுமையாக ஆய்வு செய்து வருகிறது, தேசிய வேளாண் அறிவியல் மையம்.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

ஆந்திர மாநிலம் இயற்கை வேளாண்மைக்கான ஆலோசகராகச் சுபாஷ் பாலேக்கரை அறிவித்தது. தொடர்ந்து தற்போது மத்திய அரசும் ஊக்கம் கொடுத்த நிலையில், ஆடிப்போய்விட்டன இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்கள். இந்த நிலையில், தேசிய வேளாண் அறிவியல் அகாடமி என்கிற அரசு உதவி பெறும் அமைப்பு, “சரியான அறிவியல் மதிப்பீடு இல்லாத காரணத்தால், இப்போதைக்கு ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கடந்த வாரம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

இதுகுறித்து தேசிய வேளாண் அறிவியல் அகடாமியின் தலைவர் பஞ்சாப் சிங், “விவசாயிகளின் வருமானம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகுறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். வேளாண் விஞ்ஞானிகள் என்ற வகையில், 10 சதவிகிதம் வேதியியல் அடிப்படையிலான விவசாயத்திலிருந்து விலகிச்செல்ல வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்கிறோம். ஆனால் அதற்குச் சரியான அறிவியல் சரிபார்ப்பு அல்லது மதிப்பீடு இருக்க வேண்டும். அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு முறையை அங்கீகரிப்பதில் தயக்கம் இருக்கிறது.

பஞ்சாப் சிங்
பஞ்சாப் சிங்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் இயற்கை வேளாண்மை செய்தனர். ஆனால் காலப்போக்கில், நாட்டின் உணவுக்கான தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்கி யுள்ளோம். மேலும், விவசாயிகள் பணம் சம்பாதிக்கக்கூடிய வசதியையும் உருவாக்கி இருக்கிறோம். ஒரு பசுவின் மூலம் கிடைக்கும் சாணம் 30 ஏக்கருக்குப் போதுமானது என்ற அறிவியலற்ற கூற்றுகளை நிரூபிக்காத ஒரு முறைக்காக, இப்போதுள்ள அனைத்தையும் கைவிட முடியாது. சில சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் நீண்ட காலத் தாக்கத்தைத் தீர்மானிக்க ஒரு வருடச் சோதனை மிகக் குறைவுதான்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இது இயற்கை விவசாயிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங் களை எழுப்பியுள்ளது.

இதுபற்றி தேசிய வேளாண் அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜீரோ பட்ஜெட் தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் முடிவின்படி, இந்த முறை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அந்தக் குழுவில் விஞ்ஞானிகள், கொள்கை முடிவு எடுப்பவர்கள், தொண்டு நிறுவனங்கள், உரம், விதை மற்றும் பயிர் பாதுகாப்பு ரசாயன உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் உள்பட 75 நபர்கள் கலந்துகொண்ட தாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஜீரோபட்ஜெட் விவசாயிகள் யாரும் இல்லை. ரசாயன நிறுவன பிரதிநிதிகள் ஜீரோபட்ஜெட் விவசாயத்தை எப்படி ஆதரிப்பார்கள். அந்த அறிக்கையின் பின்னணியில் வணிக நிறுவனங்கள் இருக்கலாம் என்கிறார்கள் விவசாயிகள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

மத்திய அரசு ஆதரிக்கத் தயாராக இருக்கும் நிலையில், செப்டம்பர் 14-ம் தேதி பசுமை விகடன் சார்பில் விழுப்புரத்தில் வேஸ்ட் டீகம்போஸர் பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி, ‘‘ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை முன்னெடுத்து வருகிறோம். பட்ஜெட்டில் அறிவித்தபடி ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை முன்னெடுக்கும் முயற்சியில் இருக்கிறோம். ஒரு மாவட்டத்துக்கு நான்கு விவசாயிகள் தேர்வு செய்யப் படுவார்கள். அவர்களுக்கு ஆந்திராவில் பயிற்சி கொடுக்கப்படும். அதன்பிறகு, பயிற்சி பெற்ற விவசாயிகளை வைத்து மற்ற விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும்’’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

மத்திய, மாநில அரசுகள் ஆதரிக்கத் தயாராவதை விரும்பாத வியாபாரிகள், ஜீரோ பட்ஜெட் சித்தாந்தத்தை முடக்குவ தாக வேதனைப்படுகிறார்கள் ஜீரோ பட்ஜெட் விவசாயிகள். இதுகுறித்துப் பேசிய வேளாண் இணை இயக்குநர் (ஓய்வு) நாட்ராயன், “சுபாஷ் பாலேக்கரின் ஜீரோபட்ஜெட் சித்தாந்தம் வெற்றிகர மானது. இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அதைப் பின்பற்றி வெற்றி விவசாயிகளாக இருக்கிறார்கள். அவர்களது வருமானத்தைப் பார்த்து மற்ற விவசாயி களும் இந்த முறையைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். அனைத்து மாநில விவசாயிகளும் ஜீரோபட்ஜெட் முறைக்கு மாறும் நிலை உருவாகிவிடும். இதை உணர்ந்துகொண்ட மத்திய அரசு, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்கத் தயாராகி வருகிறது.

ஏற்கெனவே ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம் மற்றும் இயற்கை வழி விவசாய முறைகளால் உரம், பூச்சிக்கொல்லி விற்பனை குறையத் தொடங்கியுள்ளது. இது ரசாயன இடுபொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு ஆதரவு தெரிவித்தால் எதிர்காலத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என அச்சம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காகத் தற்போது, இது நிரூபிக்கப்படாத அறிவியல் முறையென தேசிய அறிவியல் அகாடமி மூலமாக மத்திய அரசை அணுகுகிறார்கள். நான் ஜீரோ பட்ஜெட் விவசாயி. இந்தியாவின் பல மாநிலங்களில் ஜீரோ பட்ஜெட் விவசாயப் பண்ணைகளை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அவர்களது அனுபவங்கள் ஆச்சர்யமூட்டுவதாக உள்ளது. எனது தோட்டத்தில் செவ்வாழைச் சாகுபடி செய்கிறேன். அதன் மகசூல் எங்கள் பகுதி விவசாயிகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. எங்கள் பகுதியில் ஒரு செவ்வாழைத் தார் சராசரியாக 14 கிலோ எடை இருக்கும். ஆனால், எனது தார் 40 கிலோ எடை இருக்கிறது. இதைவிட என்ன உதாரணம் வேண்டும்? இப்படியொரு எதிர்ப்பு ஏற்படும் என்பது எதிர்பார்த்ததுதான். இந்த எதிர்ப்பின் மூலம் இது மிகச் சிறந்த சித்தாந்தம் என்பது நிரூபணமாகியுள்ளது.

தனது தோட்டத்தில் நாட்ராயன்
தனது தோட்டத்தில் நாட்ராயன்

ஜீரோ பட்ஜெட் விவசாயம் அதிகரித்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும். இதைப் புரிந்துகொண்ட வணிகர்கள் முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், இதற்கு யார் உதவியும் தேவையில்லை. தற்சார்பு முறை விவசாயமான ஜீரோபட்ஜெட் விவசாயம் அதிகரிக்கவே செய்யும். இது காலத்தின் கட்டாயம்’’ என்றார் உறுதியுடன்.

அரசின் முயற்சிகளுக்கு முன்பாகவே நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை முழுவீச்சில் செயல்படுத்தி லாபம் பார்த்துவருகின்றனர். தமிழ்நாட்டில் பல பயிர்கள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் வெற்றிகரமாகப் பயிரிடப் பட்டுள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இதில் நல்ல லாபமும் பார்த்துவருகின்றனர். இயற்கையாகக் கிடைக்கும் உரங்களை மீண்டும் மண்ணிலேயே செலவிடுவதால் மண்வளம் பெருகும்; தேவையற்ற வேதி உரங்களின் பயன்பாடும் குறையும். முழு இயற்கை வழி விவசாயம் என்பதால் நல்ல லாபமும் பெறலாம்.

பசுமைப்புரட்சி வருவதற்கு முன்பு, இயற்கை விவசாயம்தான் அனைவரும் செய்துவந்தனர். ஆனால், அதில் அதிக மகசூல் எடுக்க முடியாது. எனவே ரசாயன விவசாயத்துக்கு மாறுங்கள் என விவசாயி களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்படி அறிவுரை சொன்னவர்களில் முக்கியமானவர் மூத்த வேளாண் விஞ்ஞானி. எம்.எஸ்.சுவாமிநாதன். இன்று அவரே, ‘அதிக ரசாயன இடுபொருள்கள் பயன்பாடு காரணமாக மண்வளம் கெட்டுவிட்டது. எனவே சூழலுக்கு ஏற்ற விவசாயம்தான் சிறந்த வழியெனத் சொல்கிறார். இன்றைக்குத் தேசிய வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடும் சுவாமிநாதனின் ஆரம்பக் கட்ட செயல்பாடு போலவே உள்ளது. ஆனால், இந்த முறை விவசாயிகள் ஏமாறத் தயாராக இல்லை. அரசு முழு வீச்சில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். அதன்மூலம்தான் இயற்கை விவசாயம் அதிகரிக்கும். மத்திய அரசின் கொள்கையான விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.

“ஆண்டுக்கு 1 லட்சம் செலவு மிச்சம்!”

ஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர்க் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். இவர் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடித்து வருகிறார். “எனக்குப் புன்னைநல்லூர்லயும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலயும் நிலம் இருக்கு. 20 ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். ரசாயன முறையில் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தப்ப ஏகப்பட்ட சவால் களைச் சந்திச்சுக்கிட்டு இருந்தேன். குறிப்பாக, குறுவைச் சாகுபடி சமயத்துல தண்ணிப் பற்றாக்குறை ஏற்பட, ரசாயன உரங்களோட உஷ்ணத்தால, உடனே காய்ச்சல் அதிகமாகிப் பயிர் எரிஞ்சிப்போயிடும். ஏக்கருக்கு 10 மூட்டைக்கூட மகசூல் கிடைக்காது. சில சமயம் அறுவடைச் செலவுக்குக்கூட, விளைச்சல் தேறாமல் போய், பயிரை நிலத்துலயே மடக்கி உழுதிருக்கோம். அப்பெல்லாம் பூச்சி, நோய்த்தாக்குதலும் அதிகமாக இருந்துச்சு.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

என்னதான் பூச்சி மருந்து அடிச்சாலும் அடுத்த நாலஞ்சு நாள்தான் பூச்சி வராமல் இருக்கும். அதுக்குப் பிறகு மறுபடியும் படிப்படியா, தாக்குதல் ஆரம்பிச்சிடும். ஆனா, ஜீரோ பட்ஜெட் முறையைக் கடைப்பிடிச்சி இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சதுல இருந்து, அதுமாதிரியான பிரச்னையே இல்லை. 2014-ம் வருஷம் குறுவை நெல் அறுவடைக்கு வர்ற சமயத்துல எங்க ஊர்ல கடுமையான காத்து, மழை. என் வயலைத் தவிர மத்த விவசாயிகளோட வயல்ல இருந்த பயிர் எல்லாம் கீழே சாய்ஞ்சிடுச்சு. ரசாயன முறையில, கதிர் முற்றிப் பழுப்பு நிறத்துக்கு வரும்போது, தண்டுப் பகுதி பழுப்பு நிறத்துக்கு மாறி வலுவிழுந்திருக்கும். அதனால கொஞ்சம் வேகமா காத்தடிச்சாலே கீழே சாஞ்சிடுது.

ஆனால், இயற்கை முறையில அறுவடை வரைக்குமே தண்டு பச்சையாகவே இருக்கு. அந்த வருஷம் எனக்கு ஏக்கருக்கு 30 மூட்டை மகசூல் கிடைச்சது. நெல்மணிகள் நல்லா திரட்சியாகவும் இருந்துச்சு. ஆனால் மத்த விவசாயிகளுக்கு 20 மூட்டை நெல்கூடத் தேறலை. நான் ரசாயன விவசாயம் செஞ்சிக்கிட்டு இருந்தப்ப, என்னோட நிலம், கட்டாந்தரை மாதிரி மண்ணு இறுகிக் கிடக்கும்.

அப்போ, களைகளும் அதிகமாக இருக்கும். அதைப் பிடுங்கி அப்புறப்படுத்துறதே பெரும்பாடா இருக்கும். இயற்கைமுறைக்கு மாறின பிறகு, மண்ணு நல்லா வளமாகி, பொலபொலப்பா இருக்கு. நிலம் முழுக்கப் பரவலாக மண் புழுக்கள் நெளிஞ்சிக்கிட்டு இருக்கு. ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சி விரட்டி, புளிச்ச மோர்க் கரைசல் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இதுக்கு ரொம்பக் குறைவாதான் செலவு பண்றேன். இயற்கைமுறைக்கு மாறினதுனால, ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் செலவு மிச்சம்’’ என நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் ராமலிங்கம்.

தொடர்புக்கு, ராமலிங்கம், செல்போன்: 80989 26888.

“இதுல எல்லாமே அறிவியல்தான்!”

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில், கடந்த 11 வருடங்களாக ‘ஜீரோ பட்ஜெட்’ முறையில் 8 ஏக்கரில் பப்பாளி, வாழை, கொய்யாச் சாகுபடி செய்து வருகிறார் சக்திகுமார். “பசுமை விகடன் நடத்திய சுபாஷ் பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட்’ கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். உரக்கடைகளில் உங்களது உழைப்பைக் கொட்டுற விவசாயிகளே, உங்களது மாடே ஒரு உரத் தொழிற்சாலைதான். ஒரு நாட்டுப்பசுவை வைத்து 30 ஏக்கர் வரை விவசாயம் செய்ய முடியும்’னு பாலேக்கர் சொன்னது என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. அந்த வருஷமே ஜீரோ பட்ஜெட் முறையில விவசாயத்தை ஆரம்பிச்சேன். முதலில் 2 ஏக்கர்ல ரெட்லேடி பப்பாளிச் சாகுபடியைச் செஞ்சேன். தொடர்ந்து, வாழை, கொய்யாச் சாகுபடியைச் செஞ்சிக்கிட்டு இருக்கேன். ஊடுபயிர், வேலிப்பயிர், மூடாக்கு எல்லாம் அறிவியல்பூர்வமானவை. இந்தமுறையில தயார் செய்யுற இடுபொருள்களுக்கு மூலதனமே சாணமும், மாட்டுச் சிறுநீரும்தான். நாட்டுச்சர்க்கரை, தட்டைப்பயிறு என எதுக்கும் செலவு செய்யக்கூடாதுங்கிறது தான் இதோட நோக்கம். நாட்டுச்சர்க்கரைக்குப் பதிலாகப் பனம்பழம், அழுகிய பழங்களைப் பயன்படுத்தலாம். வேலிப்பயிராகக் கரும்பு நட்டு வெச்சா அதை ரெண்டா கீறிப் பயன்படுத்திக்கலாம். இதெல்லாம் யாரும் யோசிக்காத விஷயம்.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

ஊடுபயிராகப் பயறுவகைகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்துறதுக்காகச் செண்டுமல்லி, ஊடுபயிரா விதைக்குற அகத்தி மரமாகி, அந்தக் கம்புகளை வாழைக்கு முட்டுகொடுக்கப் பயன்படுத்தியிருக்கேன். மூடாக்கு போடுறதால களைகள் கட்டுப்பட்டு, நுண்ணுயிர் பெருக்கமும் உண்டாகியிருக்கு. மூடாக்குக்கு இணையா எந்த ரசாயன உரமும் இன்னும் கண்டுபிடிக்கப்படலை. ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், மூடாக்கு, ஈரப்பதம் இந்த நாலும்தான் ஜீரோ பட்ஜெட் தேரின் நான்கு சக்கரங்கள். இதில், நாட்டு மாடு மூலமா முதல் ரெண்டும் சாத்தியமாகுது. மூடாக்கு போட்டாலே ஈரப்பதம் தானாக வந்துடும். இப்படி ஜீரோ பட்ஜெட் விவசாயத்தோட பயன்களைச் சொல்லிக்கிட்டே போகலாம். நாட்டு மாடுகளோட பெருக்கத்துக்கு முக்கியக் காரணமே ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான். பாப்பாளியை ரசாயன முறையில சாகுபடி செய்யும்போது தண்டு அழுகல் நோய் அதிகமா வரும். ஆனா, ஜீரோ பட்ஜெட் முறை இயற்கை வேளாண்மையில இப்படிப்பட்ட பாதிப்பே இல்லை. பழங்கள் நல்லா திரட்சியா, சுவையா, பளபளப்பா இருக்கும். அதனால நல்ல விலையும் கிடைக்குது. செலவும் குறைஞ்சு நல்ல லாபம் பார்க்க முடியுது. இதுக்கு நான் மட்டுமில்ல தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகளும் உதாரணமா இருக்காங்க’’ என்றார்.

தொடர்புக்கு, சக்திகுமார், செல்போன்: 94443 36353.

“எனது பண்ணையே ஆய்வகம்... நானே விஞ்ஞானி!”

ஜீரோபட்ஜெட் முறையில் நெல், வாழை, கரும்பு, கடலை, அரசாணி, அவரை, பூசணி ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறார் ஈரோடு அடுத்துள்ள சின்னியம்பாளையம் கிராம விவசாயி லோகநாதன்.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

‘‘பசுமை விகடன் ஏற்பாடு செஞ்சிருந்த சுபாஷ் பாலேக்கரின் ஜீரோபட்ஜெட் பயிற்சி வகுப்பு 2008-ம் வருஷம் ஈரோட்டுல நடந்திச்சு. அதுல கலந்துகிட்டேன். என்னோட 6 ஏக்கர் நெலத்துல ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஆரம்பிச்சேன். இதுக்கு உயிர்நாடி நாட்டு மாடுகதான். ஒரு ஜோடி நாட்டுப்பசுவை வாங்குனேன். அதோட கழிவுல இருந்து ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம், பூச்சிவிரட்டினு நானே தயாரிச்சு பயிர்களுக்குக் கொடுத்தேன். இடுபொருள் செலவு அதிகம், மகசூல் குறைவு, சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவில் விஷம் இதெல்லாம் ரசாயன விவசாயம் கொடுக்கும் பரிசு. எந்தப்பயிரா இருந்தாலும் ஏக்கருக்கு அடியுரமா 4 மூட்டை டி.ஏ.பி, மேலுரமா 2 மூட்டை யூரியா, 2 மூட்டைக் காம்ப்ளக்ஸ் உரம், 1 மூட்டைப் பொட்டாஷ், 1 மூட்டை சல்பேட் போடணும். அதோட பூச்சிக்கொல்லி, வளர்ச்சிஊக்கினு கொடுத்துகிட்டே இருக்கணும். நடவுக்கு முன்னாடி களைக்கொல்லி தெளிக்கணும்.

ரசாயன விவசாயத்துல நெல் பயிருக்கான உரச்செலவு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய். கடலைக்கு 20 ஆயிரம் ரூபாய். வாழைக்கு 30 ஆயிரம் ரூபாய். பருத்திக்கு 40 ஆயிரம் ரூபாய்ச் செலவாகும்.

ஆனால், ஜீரோ பட்ஜெட் விவசாயத்துல இடுபொருள் தயாரிப்புச் செலவு அதிகப் பட்சம் ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய்தான். இயற்கை இடுபொருள் கொடுக்குற மண்ணுல நுண்ணியிர்கள் பெருகி மண்ணை வளமாக்குது. இது அறிவியல் தானே? இது ஏன் விஞ்ஞானிகளுக்குப் புரியமாட்டேங்குது. ரசாயன விவசாயத்துல 12 மாசத்துல அறுவடைக்கு வர்ற வாழை, ஜீரோபட்ஜெட் விவசாயத்துல 2 மாசத்துக்கு முன்னாடியே அறுவடைக்கு வந்திடுது. எடையும் கூடுதலா கிடைக்குது. ரசாயன விவசாயத்துல ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் உரச்செலவு பிடிக்கும். ஆனா, ஜீரோ பட்ஜெட் விவசாயத்துல இடுபொருள் செலவு வெறும் 5 ஆயிரம் ரூபாய்தான். பத்து வருஷமா ஜீரோபட்ஜெட் விவசாயம் செய்றேன். ஒரு மாட்டை வெச்சு 30 ஏக்கருக்கும் மேலேயே விவசாயம் பாக்க முடியும். பல விவசாயிகள் என் தோட்டத்தை வந்து பார்த்துட்டு போறாங்க. ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் அருமையான அறிவியல் முறைங்கிறதுக்கு என்னோட பண்ணையே ஓர் உதாரணம்தான்’’ என்றார்.

தொடர்புக்கு, லோகநாதன், செல்போன்: 98655 90883.

ரசாயன உரக் கம்பெனிகளுக்குக் கொடிபிடிக்கும் விஞ்ஞானிகள்!

புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த சுபாஷ் பாலேக்கரிடம் இதுகுறித்துக் கேட்டோம்.

‘‘நான் கற்றுக்கொடுத்துவரும் இந்த இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம், நாட்டில் பல ஆண்டுகளாகப் பின்பற்றிவருவதுதான். செயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், ஜீரோ பட்ஜெட் விவசாய முறையைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (National Academy of Agricultural Sciences) என்பது அரசு உதவி பெறும் ஓர் அமைப்பு. இந்த அமைப்பில் உள்ளவர்கள் ரசாயன உரக் கம்பெனிகளுக்கும் பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கும் ஆதரவாகக் கொடிபிடித்துக் கொண்டுள்ளார்கள். இதன் தலைவர் பஞ்சாப் சிங், ஜீரோ பட்ஜெட் பண்ணையை நேரில் பார்த்தவரல்ல; என்னுடைய புத்தகங்களைக்கூடப் படித்திருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை விவசாயிகள் வெற்றிகரமாகச் செய்துவருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும், செயற்கை விவசாய ஆதரவு விஞ்ஞானிகள் இந்தப் பண்ணைகளுக்குச் சென்று பார்க்கலாம்.

என் அனுபவத்தில் முறையாக எனது விவசாய முறையைப் பின்பற்றினால், ஏக்கருக்கு 6,00,000 ரூபாய் லாபம் கிடைக்கும். செலவு குறைந்த இந்த விவசாய முறையை இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து, ரசாயன முறையைக் காட்டிலும் கூடுதல் மகசூல் கிடைக்கிறது என்று அண்மையில் பதிவுசெய்துள்ளார்கள். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற இயற்கைத் தொழில்நுட்பம். நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளும் பின்பற்றினால், இரண்டு மடங்கு அல்ல; பல மடங்கு வருமானத்தை அதிகரிக்க முடியும். மத்திய அரசு நாடு முழுவதும் 600 வட்டாரங்களில் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண் முறையைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன’’ என்றார் உற்சாகத்துடன்.