Published:Updated:

ஜீரோபட்ஜெட்... ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கிழங்கு, மிளகு, துவரை... குறைவான செலவு, நிறைவான லாபம்!

சில்வர் ஓக்+மிளகு+கிழங்கு தோட்டத்தில் சந்தோஷ்-சுப்ரீத்
பிரீமியம் ஸ்டோரி
சில்வர் ஓக்+மிளகு+கிழங்கு தோட்டத்தில் சந்தோஷ்-சுப்ரீத்

பக்கத்து வயல்

ஜீரோபட்ஜெட்... ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கிழங்கு, மிளகு, துவரை... குறைவான செலவு, நிறைவான லாபம்!

பக்கத்து வயல்

Published:Updated:
சில்வர் ஓக்+மிளகு+கிழங்கு தோட்டத்தில் சந்தோஷ்-சுப்ரீத்
பிரீமியம் ஸ்டோரி
சில்வர் ஓக்+மிளகு+கிழங்கு தோட்டத்தில் சந்தோஷ்-சுப்ரீத்

ர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பெரியபட்னா பகுதி விவசாயிகள், புகையிலை சாகுபடியைத் தவிர்த்துவிட்டு இயற்கை விவசாயத்துக்குத் திரும்பி வருகிறார்கள். பல லட்சம் வருமானம் தரக்கூடிய ஒரு பயிரைத் தவிர்த்துவிட்டு, இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்திருப்பதன் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்ரீத்திடம் செல்போனில் பேசினோம். ‘நேரடியாக வாருங்கள்; விரிவாகப் பேசுவோம்’ என்றார்.

அழைப்பை ஏற்று, அவரைச் சந்திக்கப் பயணமானோம். பேருந்தில் சென்று, மைசூரு- மங்களூரு சாலையில் இருக்கும் பெரிய பட்னாவில் இறங்கி, ஹாசன் செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ பேருந்தில் பயணித்தால் வருகிறது பெட்டாபுரா. பெட்டபுராவில் நமக்காகக் காத்திருந்த சுப்ரீத்தின் தம்பி சந்தோஷ், அங்கிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள அடுகூர் என்ற கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.கிராமத்துக்குச் செல்லும் வழியெங்கும் மேடு பள்ளங்களாக நீண்டன நிலங்கள். மானாவாரியில் கேழ்வரகு அறுவடை நடந்துகொண்டிருந்தது. ‘சில்வர் ஓக்’ மரங்களும், பாக்குத் தோட்டங்களும், சந்தன மரத் தோட்டங்களும் கண்ணைப் பறித்தன. ஓட்டு வீடுகளுக்கு முன்மாதிரியான மடிக்கேரி மாடல் வீடுகள் கிராமத்தின் பழைமையைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன. ஊருக்கு முகப்பிலேயே இருந்த மடிக்கேரி மாடல் வீட்டிலிருந்து வெளியே வந்து நம்மை வரவேற்றார் சுப்ரீத் வான்கடே.

சில்வர் ஓக்+மிளகு+கிழங்கு தோட்டத்தில்
சில்வர் ஓக்+மிளகு+கிழங்கு தோட்டத்தில்

“தமிழ்நாட்டின் ஊட்டியைப்போல் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? இங்கிருந்து குடகு மாவட்ட எல்லை 5 கி.மீ தான். குடகில் நினைத்தால் மழை பெய்யும். குளிர்காற்று வீசும். எப்போதும் இதமான சூழல் நிலவும். அதேபோலத்தான் இங்கேயும்” என்றவர் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பேசினார். “பி.காம் படித்திருக்கிறேன். எங்களுக்கு 18 ஏக்கர் நிலமிருக்கிறது. நானும் என் தம்பி சந்தோஷும் சேர்ந்து விவசாயத் தைப் பார்த்துக்கொள்கிறோம். நாங்கள் இருவருமே படித்துவிட்டு வேலைக்குப் போக வேண்டும் என்பதுதான் எங்கள் பெற்றோரின் விருப்பம். நாங்கள் படித்துக் கொண்டிருந்த போது இந்தப் பகுதியில் புகையிலைச் சாகுபடிதான் அதிகம் நடந்துகொண்டிருந்தது. ஒப்பந்த முறையில் புகையிலை நிறுவனங் களுக்கு உற்பத்தி செய்து கொடுப்பார்கள்.

ஒரு ஏக்கரிலிருந்து ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் உத்தரவாதமான வருமானம். புகையிலை உற்பத்தி செய்வதற்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அபரிமிதமாக இருக்கும். காரணம், பணம் தான். கம்பெனிகள் தரமான புகையிலைக்கு நல்ல விலை கொடுக்கும். தரம் குறைந்தால் ஏறெடுத்துக்கூட பார்க்காது. நோய் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பூச்சிக் கொல்லிகளைக் கண்மூடித்தனமாக வாங்கி வந்து தெளிப்பார்கள். களையெடுப்பது, தண்ணீர் பாய்ச்சுவது என்று எப்போதும் புகையிலை வயலிலேயே இருப்பார்கள்.

தோட்டத்தில் சந்தோஷ்-சுப்ரீத்
தோட்டத்தில் சந்தோஷ்-சுப்ரீத்

அந்தவகையில் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக எங்கள் தாயாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது, ‘அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரைக் காப்பாற்றுவது கடினம்’ என்று சொன்னார்கள் மருத்துவர்கள். பிறகு, அம்மா இறந்துவிட்டார். அவருடைய இறப்புக்குக் காரணம் பூச்சிக்கொல்லிகளுக்கிடையே வேலை செய்து வந்ததுதான் என்பதைப் புரிந்து கொண்டோம். உறவினர்கள் சிலரும் என்ன நோய் என்றே தெரியாமல் இறந்து போனார்கள். தொடர்ந்து புகையிலை சாகுபடி மேற்கொண்டால் அப்பாவையும் பறிகொடுத்துவிடுவோம் என்று நினைத்து, புகையிலைச் சாகுபடியை நிறுத்த சொன்னோம். ‘புகையிலை சாகுபடி செய்யாவிட்டால் வருமானத்துக்கு என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டார் அப்பா. ‘நான் படிப்பை நிறுத்திவிடுகிறேன். தம்பி மட்டும் படிக்கட்டும், நான் விவசாயத்தைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு விவசாயத்தைக் கையில் எடுத்தேன். எனக்கு எல்லாமுமாக இருந்த அம்மாவின் மரணம்தான், என்னை இந்தப் பாதையில் பயணிக்க வைத்தது” என்று சொல்லி சற்று இடைவெளிவிட்டவர், தொடர்ந்தார்.

துவரைச் சாகுபடி வயல்
துவரைச் சாகுபடி வயல்

“எங்களுடைய நிலங்களில் பெரும்பாலும் புகையிலைச் சாகுபடிதான் நடந்து கொண்டிருந்தது. உடனடியாக அதை நிறுத்தினோம். எப்படி விவசாயத்தை முன்னெடுக்கலாம் என்று யோசனை யிலிருந்தேன். அப்போது, சுபாஷ் பாலேக்கர் (ஜீரோபட்ஜெட்) நிறைய இயற்கை விவசாயப் பயிற்சிகளைக் கர்நாடகத்தில் நடத்திக்கொண் டிருந்தார். அவர் நடத்திய ஒரு பயிற்சியில் கலந்து கொண்டேன். ரசாயன விவசாயத்தின் தீமைகள் பற்றி மேலும் தெரிந்துகொண்டதோடு ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் முறைகளையும் தெரிந்துகொண்டேன்.

கிழங்குச் சாகுபடி
கிழங்குச் சாகுபடி


மொத்தமுள்ள 18 ஏக்கரிலும் ஆண்டு வருமானம் கொடுக்கக்கூடிய பயிர்களைச் சாகுபடி செய்வது சிரமம். அதனால், 8 ஏக்கரில் சந்தன மரங்கள், சில்வர் ஓக் மரங்களை நடவு செய்தோம். 5 ஏக்கரில் பாக்குத் தோட்டம் என 13 ஏக்கர் நிலத்தை மரப்பயிர்களுக்கு ஒதுக்கிவிட்டோம். இதிலேயே சுமார் அரை ஏக்கரில் விதை உற்பத்திக்காகக் கிழங்கு வகைகள், மஞ்சள், இஞ்சி சாகுபடி செய்து வருகிறோம். 3 ஏக்கரில் சில்வர் ஓக், கிழங்கு வகைகள் ஆகியவற்றையும், 2 ஏக்கரில் மானாவாரியாகத் துவரை, பூசணி, மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறோம். கிழங்கு வகைகளுக்குத் தண்ணீர் வசதி இருந்தால் போதும். எந்தவித இடுபொருளும் இல்லாமல் நன்றாக வளர்ந்து வந்துவிடுகிறது. அறுவடையைத் தவிர, வேறு செலவுகள் இருக்காது. சந்தன மரங்களைப் போன்றே சில்வர் ஓக் மரங்களும் இந்தப் பகுதியில் நன்றாக விளைகின்றன. இதை 10 ஆண்டுகளில் அறுவடை செய்துவிடலாம்” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

கிழங்கு
கிழங்கு


“3 ஏக்கரில் சில்வர் ஓக், அதுக்கிடையில் கிழங்கு வகைகளைச் சாகுபடி செய்கிறேன். சில்வர் ஓக் மரங்களில் மிளகுக் கொடிகளை ஏற்றி விட்டிருக்கிறேன். இங்கே விளையும் கிழங்குகளைக் கேரளாவுக்குத்தான் அனுப்பு கிறோம். கிழங்கு வகைகளுக்குக் கேரளாதான் முக்கியச் சந்தையாக இருக்கிறது. இந்த 3 ஏக்கரில் கிழங்குகள், மிளகு மூலம் 6 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. பாக்கு, துவரை உள்ளிட்ட பயிர்கள் மூலம் 9 லட்சம் ரூபாய் வருமானம் என்று மொத்தம் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

சில்வர் ஓக்+சந்தன மரச்சாகுபடி
சில்வர் ஓக்+சந்தன மரச்சாகுபடி

நான் சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய முறையைப் பின்பற்றி வருவதால் செலவுகள் பெரிதாக இல்லை. 15 லட்சத்தில் 3 லட்சம் ரூபாய் செலவாகும். அதுபோக 12 லட்சம் நிகர லாபமாக எடுத்து வருகிறேன். இன்னும் 2 ஆண்டுகளில் சில்வர் ஓக் மரங்களை அறுவடை செய்துவிடுவோம். சந்தன மரம் வளர்ந்து பலன் கொடுப்பதற்கு இன்னும் 15 ஆண்டுகளுக்கு மேலாகும்” என்றவர் நிறைவாக,

பாக்குத் தோட்டம்
பாக்குத் தோட்டம்

“மண்ணுக்கும் சூழலுக்கும் எந்தத் தீங்கும் ஏற்படுத்தாமல் லாபம் எடுத்துக்கொண் டிருக்கிறேன். இந்த வருமானத்தை மற்ற விவசாயிகளிடமும் சொல்லி வருகிறேன். இதைப் பார்த்து, இயற்கை விவசாயத்திலும் லாபம் பார்க்க முடியும் என்று நம்புகிறார்கள். அதனால் நிறைய விவசாயிகள் புகையிலைச் சாகுபடியை படிப்படியாக நிறுத்தி வருகிறார்கள். என் முயற்சியைப் பாராட்டி, மாநில அரசு ‘கிரிஷி ரத்னா’ விருதையும், பல தன்னார்வ அமைப்புகள் பல்வேறு விருதுகளையும் அளித்திருக்கின்றன” என்று சொல்லி விடை கொடுத்தார்.

உங்கள் பணி தொடரட்டும் என்று சொல்லி விடைபெற்றோம்.தொடர்புக்கு: சுப்ரீத்

செல்போன் 95356 9580

துவரைச் சாகுபடி
துவரைச் சாகுபடி

மானாவாரி பரங்கிக்காய், துவரையில்
ஆண்டுக்கு ரூ.2,80,000


மானாவாரி துவரை சாகுபடி குறித்துப் பேசிய சுப்ரீத்தின் தம்பி சந்தோஷ், “மானாவாரி விவசாயத்துக்காக 2 ஏக்கர் ஒதுக்கி இருக்கிறோம். மழையைப் பொறுத்து ஜூன், ஜூலை மாதத்தில் விதைப்பு நடக்கும். முதலில் 2 சால் உழவு ஓட்டி ஏக்கருக்கு 100 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவிவிடுவோம். பிறகு இன்னொரு சால் ஓட்டி, 10 கிலோ துவரை விதையை விதைப்போம். நாங்கள் விதைப்பது, ‘சீமை தொகரே’ என்கிற ரகம். இது மகசூல் தருவதற்கு 8 மாதங்கள் ஆகும். ஒவ்வொரு சாலுக்குள்ளும் பரங்கிக்காய் விதைகளை ஓர் அடி இடைவெளியில் விதைப்போம். பிறகு, வரப்பைச் சுற்றி தட்டைப்பயறு விதைகளை விதைப்போம். விதைத்த பிறகு எந்தப் பாசனமும் செய்வதில்லை. மழையின் கருணையால் தானாகவே விளையும். 15-ம் நாளுக்கு மேல் ஜீவாமிர்தம் 150 லிட்டர் தெளிப்போம். 20 நாளுக்கு மேல் களை எடுப்போம். பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க 30-ம் நாளில் பீஜாமிர்தம் தெளிப்போம். சற்று இடைவெளிவிட்டு ஜீவாமிர்தத்தைத் தெளிப்போம். 40-ம் நாளுக்கு மேல் பூச்சித் தாக்குதல் கொஞ்சம் அதிகமாகத் தென்படும். அந்தச் சமயத்தில் அக்னி அஸ்திரத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி கணக்கில் தெளித்து விடுவோம். தேவைப்பட்டால் 60-ம் நாளில் களை எடுப்போம். அவ்வளவுதான் 90-ம் நாளுக்கு மேல் பரங்கிக்காய் அறுவடை தொடங்கும். வாரத்துக்கு 3 டன் என்ற கணக்கில் 3 வாரத்தில் 9 டன் பரங்கிக்காய் கிடைக்கும். ஒரு கிலோ 10 ரூபாய் என்ற கணக்கில் 9,000 கிலோவுக்கு 90,000 ரூபாய் வருமானம். வரப்பில் பயிரிடப்பட்டிருக்கும் தட்டைப்பயறு 20 கிலோ கிடைக்கும். அதை வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வோம்.

துவரைச் சாகுபடி
துவரைச் சாகுபடி

8 மாதங்களில் துவரை அறுவடைக்கு வரும். ஏக்கருக்கு 1,000 கிலோ துவரை கிடைக்கும். ஒரு கிலோ 100 ரூபாய் என்ற கணக்கில் 1 லட்சம் ரூபாய் வருமானம். பரங்கிக்காய், துவரை, அறுவடை, களை என்று 50,000 ரூபாய் செலவாகும். அதுபோக 1,40,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். இரண்டு ஏக்கருக்கும் சேர்த்து 2,80,000 ரூபாய் லாபம். துவரம்பொட்டை மாடுகளுக்குக் கோடைக்காலத்தில் உணவாகப் பயன்படுத்திக்கொள்வோம். துவரை அறுவடை முடித்து மக்காச்சோளம் பயிர் வைப்போம். மக்காச்சோளத்துக்கு உழவைத் தவிர, பெரிய செலவில்லை. சொல்லப்போனால் மக்காச்சோளச் சாகுபடிக்கான முன் தயாரிப்புக்காகவே துவரை பயிர் செய்கிறோம். துவரைக்குக் கொடுத்த ஊட்டமே மக்காச்சோளம் வளர்வதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. துவரை அறுவடை முடிந்து ஜனவரி, பிப்ரவரியில் விதைத்து மார்ச், ஏப்ரலில் அறுவடை செய்து விடுவோம். மீண்டும் ஜூன், ஜூலையில் விதைக்க ஆரம்பித்துவிடுவோம். இதுதான் எங்கள் மானாவாரி விவசாயம்” என்றார்.

கொள்ளுக் கரைசல்
கொள்ளுக் கரைசல்

கொள்ளுக் கரைசல் தயாரிப்பு

கொள்ளுக் கரைசல் தயாரிப்பது குறித்துப் பேசிய சுப்ரீத், “நன்றாக வளர்ந்த கொள்ளுச் செடிகளை 50 கிலோ அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ‘டிரம்’மில் போட வேண்டும். அதில் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதோடு 20 லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலக்க வேண்டும். பிறகு, கம்பால் கலக்கி விட வேண்டும். இது போன்று தொடர்ந்து 25 நாள்களுக்குத் தினமும் கலக்கி வந்தால் கொள்ளுக் கரைசல் தயார். இந்தக் கரைசலை வடிகட்டி நேரடியாகவும் தெளிக்கலாம். 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் என்ற கணக்கில் கலந்தும் தெளிக்கலாம். இது பூச்சிவிரட்டியாகவும், வளர்ச்சியூக்கியாகவும் செயல்படுகிறது. இதன்மூலம் நல்ல பலன் கிடைக்கிறது” என்றார்.

இஞ்சி
இஞ்சி

7 வகை இஞ்சி... 5 வகை மஞ்சள்!

“இயற்கை விவசாயத்துக்கு மாறிய பிறகு, கிழங்கு வகைகளைத் தோட்டத்தில் ஆங்காங்கே சாகுபடி செய்து வருகிறேன். இங்கே விளைவதைக் கிழங்கு மேளாக்கள், விதைத் திருவிழாக்களில் காட்சிக்கு வைக்கிறேன். பாரம்பர்ய ரகங்கள் விதை உற்பத்திக்காகவே மாங்காய் இஞ்சி, நீல இஞ்சி, கறுப்பு இஞ்சி, வெள்ளை இஞ்சி, ரிகோடி இஞ்சி, ஹிமாச்சல் இஞ்சி, மாறன் இஞ்சி என்று 7 வகையான இஞ்சி ரகங்களைச் சாகுபடி செய்திருக்கிறேன்.

கிழங்கு
கிழங்கு
கிழங்கு
கிழங்கு
மஞ்சள்
மஞ்சள்

அதே போன்று மஞ்சளில் கறுப்பு மஞ்சள், வெள்ளை மஞ்சள், சிவப்பு மஞ்சள், நீல மஞ்சள், பிரதீபா மஞ்சள் என்று 5 ரக மஞ்சள் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறேன். இதைத் தவிர ஒவ்வோர் ஆண்டும் கிழங்குகளுக்கான மேளா நடைபெறும். அதற்காகச் சிங்க கால் கிழங்கு, நாய்வால் கிழங்கு என்று சுமார் 60 கிழங்கு ரகங்களைத் தோட்டம் முழுவதும் ஆங்காங்கே சாகுபடி செய்து வருகிறேன். இதை ஆர்வமாகப் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்குக் கொடுத்து விதைப் பரவலாக்கமும் செய்து வருகிறேன். கிழங்கு சம்பந்தமான முயற்சிகளுக்கு மைசூரில் உள்ள சகஜ சம்ருதா அமைப்பு எனக்கு உதவிகளைச் செய்து வருகிறது” என்கிறார் சுப்ரீத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism