Published:Updated:

வாடிக்கையாளர்களை கவர பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இணைப்பைத் துண்டித்த தனியார் நிறுவன ஊழியர்!

கொரட்டூர் பகுதியில் ஏர்டெல் நிறுவன ஊழியர் ஒருவர் பொது இடங்களில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் இணைப்பு பெட்டிகளைச் சேதப்படுத்தி, வாடிக்கையாளர்களை தங்கள் நிறுவனத்தின் சந்தாதாரர்களாக மாற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தொழில் நிறுவனங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என மிக நெருக்கமான மக்கள் தொகைக் கொண்ட பகுதி சென்னை கொரட்டூர். இப்பகுதியில் ஏர்டெல், ஜியோ, வோடாபோன் என மற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாகத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தான் பி.எஸ்.என்.எல்-க்கு அதிகமான சந்தாதாரர்கள் இருக்கின்றனர். அதன் காரணமாக அந்தப்பகுதியில் 10 அடி தூரத்திற்கு ஒரு சேவை இணைப்பு பெட்டியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அமைத்திருக்கிறது.

இந்நிலையில், சீரான வேகத்திலும், தரத்திலும் சேவைகளை அனுபவித்துக்கொண்டிருந்த கொரட்டூர் வாடிக்கையாளர்களுக்குக் கடந்த சில மாதங்களாகச் சேவை தரம் மிகவும் மோசமாகி இருக்கிறது. காரணமே இல்லாமல், இணைப்பு துண்டிப்பு ஏற்படுவது, இணைய வேகம் சரிந்து விடுவது என வாடிக்கையாளர்கள் சேவை தொடர்பாக கொரட்டூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர்.

கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி
கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி

பி.எஸ்.என்.எல் ஊழியர்களும் புகார் தொடர்பாக ஆய்வு நடத்தி மீண்டும் சரி செய்து கொடுத்து வந்துள்ளனர். ஆனால், இணைப்பு சீரமைக்கப்பட்டு சில நாள்களிலேயே மீண்டும் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகிப் போகவே ஊழியர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் கொரட்டூர் பி.எஸ்.என்.எல் ஊழியர் அப்பன்ராஜ் என்பவர் வழக்கம் போல் இணைப்பு பெட்டிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் 31-ம் தெருவில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் இணைப்புப் பெட்டியை ஆய்வு செய்ய ஊழியர் அப்பன்ராஜ் சென்றுள்ளார். அப்போது அந்த இணைப்பு பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு நபர் ஒருவர் இணைப்புகளைத் துண்டித்துக் கொண்டிருந்ததை கண்டிருக்கிறார். அந்த நபரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த அப்பன்ராஜ் அவரை பிடித்து பொதுமக்கள் உதவியுடன் கொரட்டூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

ஊழியர் அப்பன்ராஜ், கொடுத்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிடிபட்ட நபரை விசாரித்துள்ளனர். அதில், பிடிபட்டவர் சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (40) என்பதும், அவர் பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. பி.எஸ்.என்.எல் இணைப்புகளைச் சேதப்படுத்தி அதன் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களைக் கவர முயன்றதும் விசாரணையில் அம்பலமானது.

இது குறித்து விசாரிப்பதற்காக முதலில், கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குச் சென்றோம். நம்மிடம் இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய பகுதிவாசிகள் , "கடந்த 6 மாசமா திடீர்,திடீர்னு பி.எஸ்.என்.எல் கனெக்க்ஷன் கட்டாகிடும். நாங்களும் புகார் கொடுப்போம், பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வந்து பார்த்துச் சரி செய்ய ஓரிரு நாளாகிடும். ஆனா ,மறுபடியும் அதே பிரச்னை கொஞ்ச நாள் கழிச்சு வரும். நாங்க திரும்பவும் புகார் கொடுப்போம். ஆனால், திரும்பவும் இதே மாதிரி நடக்கும். இதனால, வெறுப்பாகிப் போன நெறைய பேரு செரி நெட், ஹாத்வே, ஏர்டெல்னு மாறிட்டாங்க. சிலர் மட்டும் மாற மனசில்லாம புகார் மேல புகார் கொடுத்துட்டு புலம்பிகிட்டு இருந்தோம்.

தூண்டிக்கப்பட்ட இணைப்பு பெட்டி
தூண்டிக்கப்பட்ட இணைப்பு பெட்டி

இப்ப தான் தெரியுது வேற கம்பெனி காரங்க இது மாதிரி பண்றாங்கன்னு. கனெக்க்ஷன் லைனை புடுங்கி விட்டுட்டு பக்கத்துலயே ஒரு மாசத்துக்கு 500 ரூபா தான், ஹை ஸ்பீட் இன்டர்நெட்னு போஸ்டர் ஒட்டிட்டு போய்டுறாங்க." என்று நம்மிடத்தில் புலம்பினர்.

அதைத் தொடர்ந்து, கொரட்டூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தோம். அவர்கள், "கடந்த 6 மாசமாவே சேவை திருப்தியா இல்ல, கனெக்க்ஷன் பிரச்னை. அது இதுனு புகார் மேல புகார்கள் வந்துகிட்டே இருந்துச்சு. எல்லாம் சரியா இருக்கும், ஆனா, கனெக்க்ஷன் பாக்ஸ்ல மட்டும் ஒயர் துண்டாகி இருக்கும். நாங்களும் ஆரம்பத்துல பெருசா கண்டுக்கல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுக்கு பிறகு தொடர்ந்து இதே பிரச்னை வரவும் தான், தெரிஞ்சுது யாரோ நோக்கத்தோடு இப்படி பண்றாங்கன்னு. சரியா காலை 8 மணியில இருந்து 10 மணிக்குள்ள தான் இது மாதிரி நடக்கும். அதனால, அடிக்கடி கண்காணிச்சிக்கிட்டே இருந்தோம். நேற்று முந்தைய நாள் இந்த காரியத்த செஞ்ச ஒருத்தர் சிக்குனாரு. போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துருக்கோம். அவங்க விசாரிச்சிட்டு இருக்காங்க" என்றனர்.

பிடிபட்ட ஜெயபிரகாஷ்
பிடிபட்ட ஜெயபிரகாஷ்

கடைசியாக கொரட்டூர் காவல்நிலையத்திற்குச் சென்றோம். போலீசார், " பி.எஸ்.என்.எல் ஊழியர்கள், ஜெயபிரகாஷ் என்ற நபரை பிடித்து வந்து இணைப்பு பெட்டிகளைச் சேதப்படுத்தியதாகப் புகாரளித்தனர். அந்த நபரை விசாரித்ததில் அயனாவரத்தைச் சேர்ந்த நபர் என்று தெரியவந்தது. ஏர்டெல் நிறுவனத்தில் கள பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். பி.எஸ்.என்.எல் இணைப்புகள் அதிகளவில் இருக்கும் பகுதிகளுக்குச் சென்று இணைப்புகளைச் சேதப்படுத்தி விட்டு, பின்னர் நிறுவன ஊழியர்களை அனுப்பிச் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் , "ஏர்டெல் நிறுவனத்தில் இணைந்துவிட்டால் இன்டர்நெட் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும். எந்த பிரச்னையும் வராது" என்று மூளைச்சலவை செய்து பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை தங்கள் நிறுவனத்தின் பக்கம் இழுத்து வந்துள்ளார்.

அந்த நபரிடம் இருந்து போன் மற்றும் இணைப்பைத் துண்டிக்கப் பயன்படுத்திய சாதனங்களைக் கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு