Published:Updated:

’’உலகத்தோட எல்லா பிராண்ட் காரும் என்கிட்ட இருக்கு!”

கார் ஆல்பம்: வாசகர் பேட்டி

பிரீமியம் ஸ்டோரி

எறும்புகள் கூட்டமாக நிற்பதைப்போல் இருக்கும் லேமினேஷன் செய்யப்பட்ட அந்த போட்டோவில், உலகில் உள்ள 2,204 கார்களின் போட்டோ கலெக்‌ஷன் உள்ளது. இதில் ஏதாவது ஒரு காரின் படத்தைக் காட்டி, எந்த கம்பெனி கார், மாடல் என்ன என்று கேட்டால் டக் டக்கென கார் தயாரிக்கப்பட்ட ஆண்டு தொடங்கி அதன் முழு ஜாதகத்தையும் கூறி ஆச்சர்யப்படுத்துகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ஈஸ்வர். வெறும் 40 நாள்களில் உலகின் முதல் காரான பென்ஸ் முதல் டெஸ்லா வரை கிட்டதட்ட 98 சதவீத கார்களின் கலெக்‌ஷென்களைச் சேகரித்து அசத்தியிருக்கும் ஈஸ்வரைச் சந்தித்தேன்.

``பிஇ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிச்சிருக்கேன். அப்பா ராஜேந்திரன் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்துறார். அம்மா உஷா ஹவுஸ் ஒய்ஃப். அக்கா காவியா சிட்டி யூனியன் வங்கியில் உதவி மேலளாராகப் பணிபுரிகிறார். இதுதான் என்னோட குடும்பம். என்னோட குடும்பத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோனோ, அதே அளவுக்குக் கார்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

அதற்குக் காரணம் என்னோட தாத்தா போட்ட விதை. தாத்தா கள்ளக்குடி மாணிக்கம் தமிழ் சினிமாவுல மஞ்சள் நிலா, கோயில் புறா என இளையராஜா மியூசிக்ல இரண்டு படங்கள் தயாரிச்சிருக்கார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடத்திய கள்ளக்குடி போராட்டத்தில் அவருக்குத் துணையாக இருந்து அனைத்தையும் செய்தவர்; அவருடன் தொடர் நட்பில் இருந்தவர்.பாரம்பர்யமான குடும்பம் என்பதால், தாத்தா மாணிக்கம் அப்பவே அம்பாஸடர் கிராண்ட், கான்ட்டஸா என இரண்டு கார்கள் வச்சிருந்தார்.

எனக்கு விவரம் தெரியாத வயசுலேயே என்னை கார்ல வச்சுக்கிட்டு சுத்துறதுதான் என் தாத்தோவோட முதல் வேலையா இருந்திருக்கு. இதுதான் கார்கள் மேல காதல் வர்றதுக்கு எனக்குள்ள விதையாகவும் விழுந்திருக்கு.

அப்பவே ரோட்டுல எந்த கார் போனாலும் அது என்ன கார், எந்த கம்பெனினு கேட்க ஆரம்பிச்சுட்டேன். அப்படியே கல்லூரி வரைக்கும் வளர்ந்து வந்துட்டேன்.ரோட்டுல வித்யாசமா, ஸ்டைலிஷா கார் ஏதாவது போன காரோட பேர மனசுல ஏத்திக்கிட்டு கூகுள்ல தேடி அதன் முழு விவரத்தையும் தெரிஞ்சுக்குவேன்.

என்னோட ஃப்ரெண்ட்ஸ் கார் வாங்கணும்னா என்கிட்டதான் ஐடியா கேப்பாங்க. சும்மா இருக்கும்போது, கார்களின் படங்களை போட்டோ எதுவும் பாக்காமலே நோட்டுல வரைஞ்சுடுவேன்.

இந்தச் சூழ்நிலையில்தான் கொரோனா இரண்டாவது அலை பரவலின்போது லாக்டவுன் வந்துச்சு. `வீட்டுல சும்மாதானே இருக்கோம்; உலகில் உள்ள அனைத்து கார்களின் போட்டோக்களை கலெக்‌ஷன் செஞ்சா என்ன’னு மனசுக்குள்ள தோன்றியது. உடனே கடந்த மே மாதம் 1 -ம் தேதி லேப்டாப்ல கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளத்துல கார்களின் போட்டோக்களைத் தேடிச் சேகரிக்கத் தொடங்கினேன். டாடா, மஹிந்திரா, மாருதி சுஸூகி, செவர்லே, ரோல்ஸ்ராயஸ், ஸ்கோடா, இந்துஸ்தான், ஆடி, பென்ஸ், ஜாகுவார் உள்ளிட்ட பல மாடல் கார்களின் போட்டோக்கள் எனக்குக் கிடைச்சது.

’’உலகத்தோட எல்லா பிராண்ட் காரும் என்கிட்ட இருக்கு!”
’’உலகத்தோட எல்லா பிராண்ட் காரும் என்கிட்ட இருக்கு!”

கிட்டதட்ட 131 பிராண்ட் கார்கள் என மொத்தம் 2,204 கார்களின் போட்டோக்களை கலெக்‌ஷன் செஞ்சேன். அதை ஒரே ஃப்ரேமுக்குள்ள வர்ற மாதிரி எடிட் செய்து ஒவ்வொன்றாக அடுக்கி கொலாஜ் செய்து பெரிய சைஸ்ல பிரின்ட் போட்டு லேமினேஷன் செஞ்சேன். போட்டோவைப் பார்த்த அனைவரும் உலகத்துல இவ்வளவு கார் இருக்காடானு கேட்டு ஆச்சர்யப்பட்டாங்க. உலகத்தோட முதல் காரான பேட்டன் பென்ஸ் தொடங்கி, இப்ப ஃபேமஸா இருக்குற டெஸ்லா வரை என்னோட போட்டோ கலெக்‌ஷன்ல இருக்குது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட கார்களும் இதில் இருக்கு. என்னோட கார் கலெக்‌ஷன் போட்டோ கொலாஜை `ஓப்பன் சீ’ என்ற வெப்சைட்டில் பதிவு செஞ்சிருக்கேன்.இதற்கு முன் இதே முறையில் அமெரிக்காவைச் சேர்ந்த பீப்பிள் என்ற ஆர்ட்டிஸ்ட்தான் 13 வருடங்களாக, தான் வரைஞ்ச ஓவியங்களை இதேபோல் கொலாஜ் செய்து வெப்சைட்டில் பதிவு செஞ்சிருந்தார். அது பெரிய தொகைக்கு ஏலம் போனது.

நான் பிராண்ட் வகையில் 99 சதவீத கார்களும், மாடல் வகையில் 98 சதவீத கார்களின் போட்டோ கலெக்‌ஷனும் வச்சிருக்கேன். கிட்டத்தட்ட உலகில் உள்ள கார்களின் 99 சதவீத கலெக்‌ஷன் எங்கிட்ட இருக்கு. வெப்சைட் கம்பெனி நடத்துற ஏலத்துல என்னோட கார் கலெக்‌ஷன் கொலாஜும் ஏலத்துக்குப் போனா செமையா இருக்கும்ல!

எங்கிட்ட போட்டோ கலெக்‌ஷன்ல இருக்குற கார்களை நிஜத்துல கொஞ்சமாவது வாங்கணும் என்கிற பெரும் ஆசை எனக்கு இருக்கு.அதுக்காக ஓடிக் கொண்டே இருக்கேன். நிச்சயம் அது நடக்கும்!” என நம்பிக்கை மின்னப் பேசுகிறார் கார்களின் காதலனான ஈஸ்வர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு