Published:Updated:

`நானே துணிச்சலாக இறங்கிவிட்டேன்!'- முதலையோடு சண்டையிட்டு தோழியைக் காப்பாற்றிய 11 வயது சிறுமி

அப்போதும் சிறுமியின் கையைக் கவ்வியிருந்த முதலை, பிடியை நழுவவிடாததால் முதலையோடு மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கியிருக்கிறார்.

முதலை
முதலை

ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ரெபெக்கா என்ற 11 வயதுச் சிறுமி, முதலையுடன் சண்டையிட்டு தன் தோழியை மீட்ட செய்தி வைரலாகியுள்ளது.

முதலை
முதலை

ஜிம்பாப்வே நாட்டின் சின்டெரெலா கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச்சிறுமிகள், அருகிலுள்ள ஏரியில் குளிப்பதற்காகக் சென்றுள்ளனர். அனைவரும் குளித்துவிட்டு வெளியேறும்போது லடோயா முவாமி என்ற 9 வயதுச் சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டுள்ளனர். அச்சிறுமி, கழுத்தளவு நீரில் தத்தளித்தபடியிருக்க, அவளது கையைப் பிடித்து யாரோ நீருக்குள் இழுப்பதுபோல் தெரிந்திருக்கிறது.

அருகில் சென்று பார்க்கையில் பெரிய முதலையொன்று அவளது கையைப் பிடித்து இழுப்பது தெரிந்திருக்கிறது. உடனே முதலையின் மீது ரெபெக்கா தாவிக்குதித்திருக்கிறார். அப்போதும் சிறுமியின் கையைக் கவ்வியிருந்த முதலை, பிடியை நழுவவிடாததால் முதலையோடு மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கியிருக்கிறார். முதலையின் கண்களைக் குறிவைத்து வெறுங்கையாலேயே மாறிமாறிக் குத்தியிருக்கிறார். இதனால் நிலைகுலைந்த முதலை, லடோயாவின் கையை விட்டிருக்கிறது. உடனே அச்சிறுமியை இழுத்தபடி நீந்திக் கரையேறிக் காப்பாற்றியிருக்கிறாள்.

முதலை
முதலை

தன் தோழியைக் காப்பாற்றியது குறித்து ரெபெக்காவிடம் கேட்டதற்கு, "எங்களுடைய குழுவிலேயே நான்தான் சீனியர். எனவே, அவளைக் காப்பாற்றுவதற்காக நானே துணிச்சலாக இறங்க வேண்டியதாகிவிட்டது" என்று கூறியிருக்கிறார்.

முதலையிடம் கடிபட்ட சிறுமிக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. `விரைவில் சரியாகிவிடும்' என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.