Published:Updated:

ஊருக்குள் புகுந்து ஆட்டைக் கடித்துக்கொன்ற சிறுத்தை! அச்சத்தில் பொதுமக்கள்

பி.ஆண்டனிராஜ்
ஊருக்குள் புகுந்து ஆட்டைக் கடித்துக்கொன்ற சிறுத்தை! அச்சத்தில் பொதுமக்கள்
ஊருக்குள் புகுந்து ஆட்டைக் கடித்துக்கொன்ற சிறுத்தை! அச்சத்தில் பொதுமக்கள்

நெல்லை மாவட்டத்தில் ஊருக்குள் நுழைந்த சிறுத்தை, வீட்டின் அருகில் கட்டிப்போடப்பட்டிருந்த ஆட்டைக் கடித்துக் குதறிக் கொன்றதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் திருப்பதியாபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டக் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் அடிக்கடி சிறுத்தைகள் நுழைந்து வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு, நாய் போன்றவற்றை அடித்துக் கொல்வதை வழக்கமாக வைத்துள்ளன. இந்த நிலையில், ஊருக்குள் நுழைந்த சிறுத்தை சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த ஆட்டைக் கடித்துக் குதறியது. 

ஆட்டின் அலறல் சத்தம் கேட்டு சுப்பிரமணியனும் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் வந்து பார்த்தபோது, அங்கிருந்து சிறுத்தை தப்பிச் சென்றது. உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் அந்தப் பகுதியில் பதுங்கி உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்தனர். இந்தச் சம்பவத்தால் திருப்பதியாபுரம் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மீண்டும் எந்த நேரத்திலும் ஊருக்குள் நுழையும் ஆபத்து இருப்பதால் மிகுந்த பயத்துடனேயே இருக்கிறார்கள். விளை நிலங்களுக்குச் செல்பவர்கள் தனியாகச் செல்வதற்கு அச்சம் அடைந்து மொத்தமாகவே செல்லும் நிலைமை உள்ளது. அதனால் கிலியை ஏற்படுத்தும் சிறுத்தையை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.