Published:Updated:

ஆன்லைன் விற்பனையில் விஷ ஜந்துக்கள்! கடத்தல் வலையில் சிலந்திகள்! #AnimalTrafficking அத்தியாயம் 12

ஆன்லைன் விற்பனையில் விஷ ஜந்துக்கள்! கடத்தல் வலையில் சிலந்திகள்! #AnimalTrafficking அத்தியாயம் 12
ஆன்லைன் விற்பனையில் விஷ ஜந்துக்கள்! கடத்தல் வலையில் சிலந்திகள்! #AnimalTrafficking அத்தியாயம் 12

லை, உலகின் ஆகச்சிறந்த சொல்லும் செயலும் வலைதான். விழுவது, விழவைப்பது என்கிற சுற்றுவட்ட பாதையில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒன்றில் சிக்கியிருக்கிறான். உணவு, உடை, வேலை, வருமானம், விளம்பரம், வியாபாரம், பொழுதுபோக்கு என ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு வலை இருக்கிறது. உலகம் அதைச் சுற்றியே இயங்கிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க  நிகழும் விலங்குகள் கடத்தலுக்குப் பின்னாலும் ஒரு வலை விரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட உலகின் அத்தனை விலங்குகளுக்கும் வலை விரித்துவிட்டார்கள். சிங்கத்திலிருந்து, சிலந்தி வரை சிக்கிக் கொள்கிற மாய வலை அது. நம்மைப் பொறுத்தவரை சிலந்தி என்பது 'சொல்', கடத்தல் உலகில் அது 'செயல்'!

சிலந்திகளைக் கடத்துவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அத்தனை காரணங்களும் மருத்துவ காரணங்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு சிலந்தியும் ஒரு மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளன. இன்றைய அவசர உலகத்தில் ஓய்வு என்ற விஷயத்தை அடுத்து மனிதன் அதிகம் நாடுகின்ற இன்னொரு விஷயம் மருத்துவம். புற்று நோய், நுரையீரல் பாதிப்பு, ஆண்மைக் குறைவு என உலகம் தினம் தினம் தேடுகிற ஆரோக்கியத்திற்குப் பின்னால் சிலந்தியின் விஷம்  இருக்கிறது என்பதுதான் சிலந்தியின் கடத்தலுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

டரன்டுலா (TARANTULA)

100-க்கும் மேற்பட்ட சிலந்திகளின் நஞ்சுகளைச் சோதனை செய்த யேல் (Yale) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் “பெருவியன் பசுமை வெல்வெட் டரன்டுலாஸ்” என்கிற சிலந்தியின் விஷத்தில் ஒரு வகை புரோட்டீன் இருப்பதை அடையாளம் கண்டனர். இந்த புரோட்டின் வலியைக் கடத்தும் நியூரான்களில் சேர்ந்து பயணிக்கும்போது, அந்த நியூரான்களின் செயல்திறன் குறைந்ததைக் கண்டறிந்தனர். எதிர்கால மருத்துவ உலகில் டரன்டுலாஸ் சிலந்தியின் விஷம் முக்கியமான  வலி நிவாரணியாக இருக்கும் என அவர்கள் கணித்தார்கள். 

BLACK WIDOW (கறுப்பு விதவை)

உலகத்தில் இருக்கிற உயிரினங்களில் ஆண், பெண் இனப்பெருக்க உறவின்போதே பெண் பூச்சிகளால் கொல்லப்படுகிற இரண்டு உயிரினங்களில் ஒன்று மெண்டிஸ். இன்னொன்று ப்ளாக் விடோ சிலந்தி. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பூச்சிகளும் இணைந்திருக்கும்போதே மென்டிஸ் பூச்சி தன்னுடைய ஆண் துணையின் தலையைக் கடித்துத் தின்றுவிடும். ஆனாலும், தலைபோன பிறகும் இனப்பெருக்க செயல் தொடர்ந்து நிகழும். ப்ளாக் விடோ சிலந்தி இனப்பெருக்க செயல் முடிந்த அடுத்த நொடி தன்னுடைய ஆண் துணையைக் கடித்துச் சாப்பிட்டுவிடும். அதனால் கறுப்பு விதவை எனப் பெயர்பெற்றது. உலகிலுள்ள 205 விஷச் சிலந்தி வகைகளில் 40 சதவிகித சிலந்திகளின் விஷம் மருத்துவ உலகில் மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக பிளாக் விடோ என்கிற சிலந்தியின் விஷம் மருத்துவப் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த விஷத்தில் லட்ரோடாக்சின் (latrotoxin) உள்ளது, இது ஒரு புரதம். சிலந்தியின் நச்சிலுள்ள புரதமானது நியூரான்களில் செல் இறப்பைத் தடுக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. எலிகளை வைத்து இந்தச் சோதனை செய்திருக்கிறார்கள். இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தும் பட்சத்தில் மனிதர்களுக்குப் பக்கவாதம் வருவது குறைந்தபட்சம் தடுக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

போனுட்ரியா நிக்ரிவென்டர் (Brazilian Wandering Spider)

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் காட்டுப் பகுதிகளில் வேண்டரிங் வகை சிலந்திகள் அதிகம் காணப்படுகின்றன. இதன் கொடுக்கில் இருந்து வெளியேறும் திரவம், அதிக விஷத்தன்மை வாய்ந்தது. போனுட்ரியா சிலந்தி விஷத்தின் மருத்துவக் குணம் தொடர்பாக பிரேசில் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர். சிலந்தியிடம் இருந்து ‘பிஎன்டிஎக்ஸ்2-6’ எனப்படும் விஷம் உறிஞ்சி எடுக்கப்பட்டது. இந்த விஷம் ஆண்மைக் குறைவுக்கு சிறந்த மருந்தாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வேறு எந்தக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் சிலந்தி மனிதர்களிடமிருந்து தப்பி இருக்கும். ஒவ்வொரு உயிரினம் கடத்தப்படவும் கொல்லப்படவும் முக்கிய காரணமாக இருப்பது ஆண்மைக் குறைவு என்கிற விஷயமே. 

ஆண்மைக் குறைவு என்கிற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் சிலந்தி விற்பனையும் கடத்தலும் நடைபெறுகிறது. ஆன்லைனில் சிலந்தி வேண்டும் என டைப் செய்தால் உலகின் மிக முக்கியமான அத்தனை சிலந்திகள் விற்பனைக்கு இருக்கின்றன. எல்லாச் சிலந்திகளுமே டாலர்களில்தான் விற்பனைக்கு இருக்கின்றன. ஆன்லைனில், காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு இனப்பெருக்கம் செய்த சிலந்திகள் என விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், சில இணையதளங்கள் காடுகளில் பிடிக்கப்பட்ட சிலந்திகளை அதன் குணமறியாமல் விற்றுவிடுகின்றனர். வீடுகளில் வளர்ப்பதற்கு விஷச் சிலந்திகளை வாங்குகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம். உண்மையில் எந்த மாதிரியான மனநிலையில் சிலந்திகளை வாங்குகிறார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.  இணையதளத்தில்  விற்பனைக்கு இருக்கிற சிலந்திகள் அனைத்தும் விஷம் நிறைந்தவை. சிலந்திகளின்  விளம்பரப் பக்கத்தில் “சிலந்திகள் விஷம் நிறைந்தவை, சிலந்திகளை வாங்கும் முன்பு அவற்றை எப்படி வளர்ப்பது எனப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிலந்திகள் உணவாக எடுத்துக்கொள்ளும் பூச்சிகளை ஒரு பிராண்டின் பெயரில் பாக்கெட்டில் அடைத்து அதற்குக் கீழே வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். அதற்குத் தனி விலை.  சிலந்திகளை வாங்குவோர் அதன் உணவையும் வாங்க வேண்டுமென்பது ஆன்லைன் மந்திரம். குறைந்தபட்ச விலை 30 டாலர்களிலிருந்து 300 டாலர்கள் வரை விற்பனைக்கு இருக்கிறது. மேலும் தகவலுக்கு அணுகவும் எனச் சில எண்களை  கொடுத்திருக்கிறார்கள். எண்களைச்  சோதனை செய்ததில் சீனா எனக் காட்டியது. ஒவ்வொரு நாட்டிலும் இன்றைய தேதியில் என்ன விலங்கு விற்பனைக்கு இருக்கிறது? என்ன விலை? என்பது வரை 'இன்றைய விலங்கு விலை நிலவரம்' சொல்ல இணையதளங்கள் இருப்பது இனி எந்த விலங்கு இனத்தையும் உயிரோடு விடவே மாட்டார்களா என்கிற பயத்தை உண்டாக்குகிறது. எல்லாமே இணையம் என மாறிவிட்ட டிஜிட்டல் உலகில் இதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. சிலந்தி ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

கம்போடியா, தாய்லாந்து, சீனா, கொலம்பியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சிலந்தி உணவாக இருப்பதால் சட்டவிரோதமாகச் சிலந்திகள் கடத்தப்படுகின்றன. உணவுக்காக, மருந்துக்காக என சூட்கேஸுகளில் மறைத்து வைத்துக் கடத்துவதே சிலந்தியின் உயிருக்குப் பாதுகாப்பானது. இறந்துபோன சிலந்திகளை டீலர்கள் பெரும்பாலும் வாங்குவதில்லை. ஃப்ரெஷ் ஜூஸ் என்பதுபோல, ஃப்ரெஷ் பீஸுக்குதான் இங்கு  மரியாதை.  கடத்தலில் மிக முக்கியப் போக்குவரத்துக்கு சர்ஃபேஸ் என்று பெயர். நிலத்தின் ஊடாக நிகழ்கிற கடத்தல்களுக்கு முக்கிய பலமே இவ்வகை போக்குவரத்துதான். இவ்வகைக் கடத்தலில் பெரிய சிக்கல்கள் இருப்பதில்லை. அப்படியே சிக்கினாலும் கவனிக்கிற விதத்தில் கவனித்துவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், அவை நாடு விட்டு நாடு கடத்தப்படுவதில்தான் பெரிய சாகசம் இருக்கிறது. “குளிர்பான டப்பா, சாக்லேட் பாக்ஸ், ஷூ, புத்தக பார்சல், கிஃப்ட் பாக்ஸ், மொபைல் பாக்ஸ் என எல்லாமே காற்று வழி கடத்தல்கள்தான்.  அவ்வளவு எளிதில் ஒரு ஈயைக்கூட விமான நிலையங்களில் இருந்து விமானத்திற்குக் கொண்டு போய்விட முடியாது. அவ்வளவு சோதனைகள் இருக்கின்றன. அப்படியிருந்தும்  பின் எப்படிக் கடத்துகிறார்கள்? 

கூரியர் மூலம் கடத்துவதே இப்போதைய ட்ரெண்ட். பிரபலமான நிறுவனம் தினமும் தன்னுடைய பார்சல்களைக் குறிப்பிட்ட கூரியர் நிறுவனத்தின் மூலம் பல நாடுகளுக்கும் அனுப்புகிறது. அப்படியான பார்சல்கள் கூரியர்  நிறுவனத்தின்  பலகட்ட சோதனைக்குப் பிறகே விமான நிலைய கார்கோவிற்கு வரும். அந்நிறுவனத்தின் பார்சல்களை சுங்க அதிகாரிகள் பரிசோதித்துப் பார்ப்பதில்லை. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனப் பார்சல்களில் எதையும் கடத்துவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் நிறுவனத்தின் மதிப்பு மற்றும் நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடம் எப்போதும் கெடுத்துக்கொள்ள தயாராக இல்லை. அப்படி ஏதேனும் கூரியர்  நிறுவனம் மூலமாகக் கடத்துவது தெரிய வந்தால் நிறுவனத்தின் உரிமை எந்த விசாரணையும் இன்றி ரத்து செய்யப்படும். இதைப் பயன்படுத்துகிற கடத்தல்காரர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் கடத்தல் பொருள்களை விமான நிலையத்திற்கு அனுப்புகிறார்கள். சோதனையில் தப்புகிற பார்சல் சேர வேண்டிய இடத்திற்குச் சேர்ந்து விடுகிறது. 30  சதவிகித 'ஏர்'  கடத்தல்கள் இப்படியான முறையில்தான் வெற்றிகரமாகக் கடத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு அயன் திரைப்படத்தில் வரும் 'காதி' என்கிற பெயரில் வரும் ஒரு பார்சலை சுங்க அதிகாரிகள் சோதனை செய்யாமல் இருப்பார்கள். ஆனால், பட நாயகன் அதில்தான் கடத்துகிறார்கள் எனச் சொல்லி கடத்தலைக் கண்டறிவார். அதே டெக்னிக்தான். சிலந்திகள் அதிகமாகக் கடத்தப்படுவது மருத்துவத் தேவைக்காகத்தான். உலகமெங்கும் கடத்தப்படுகிற சிலந்திகளில் 70 சதவிகிதம் சீனாவிற்கே வந்து சேருகின்றன. 2017-ம் வருடம் சீன நாட்டின் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பான நேரங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் எண்ணிக்கை 44 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கின்றது. அதில் எவ்வளவு பார்சல்களை முழுவதும் சோதித்து அனுப்புவார்கள் என யோசித்துப் பாருங்கள். அங்கிருந்து தப்பிப் பிழைப்பதுதான் பணமாகிறது, இன்னொரு நாட்டில் பவராகிறது!

விதி யாரை விட்டது, சிலந்தியை மட்டும் போ என விட்டுவிட!