Published:Updated:

``சிட்டுக்குருவிகளுக்கு நாம் செய்த மிகப்பெரிய துரோகம்!" சிட்டுக்குருவிகளுக்கு வீடு அமைக்கும் பாண்டியராஜன்

``சிட்டுக்குருவிகளுக்கு நாம் செய்த மிகப்பெரிய துரோகம்!" சிட்டுக்குருவிகளுக்கு வீடு அமைக்கும் பாண்டியராஜன்
``சிட்டுக்குருவிகளுக்கு நாம் செய்த மிகப்பெரிய துரோகம்!" சிட்டுக்குருவிகளுக்கு வீடு அமைக்கும் பாண்டியராஜன்

``சிட்டுக்குருவிகளுக்கு நாம் செய்த மிகப்பெரிய துரோகம்!" சிட்டுக்குருவிகளுக்கு வீடு அமைக்கும் பாண்டியராஜன்

க்வீச்… க்வீச்… என ரீங்காரம் இட்டுக் கொண்டு மரப்பெட்டியின் அருகே அங்கும், இங்கும் பறந்துகொண்டிருந்தன சிட்டுக்குருவிகள். இது ஏதோ கிராமத்தில் நடக்கும் காட்சியில்லை. கோவை, போத்தனூரில்தான் இந்தக் காட்சிகள். சக மனிதர்களின் வலிகளையே உணராத இந்த யுகத்தில், சிட்டுக்குருவிகளைக் காப்பதற்காக, 'சிட்டுக்குருவி காப்பு இயக்கம்' என்று ஓர் இயக்கத்தை ஆரம்பித்து, அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார் கோவையைச் சேர்ந்த ``சிட்டுக்குருவி பாண்டியராஜன்”.

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் இந்த வாரம் கடைப்பிடிக்கப்படவிருக்கிறது. `சிட்டுக்குருவிகளே இல்ல, அத அழிச்சுட்டோம்' என்று சிட்டுக்குருவிகள் குறித்து நம்மில் பெரும்பாலானோர் கருத்துகளைத் தெரிவித்து வருகிறோம். ஆனால், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க நம்மில் பெரும்பாலானோர் முயற்சி செய்திருக்க மாட்டோம்.

இந்நிலையில், கோவையில் சிட்டுக்குருவிகள் இருக்கும் இடத்திற்கு எல்லாம் சென்று, இவர் இலவசமாக பாக்ஸ் கொடுத்து வருகிறார். இதனால், இவரது பெயர் முன்பு சிட்டுக்குருவி இணைந்துவிட்டது. இவரது சிட்டுக்குருவி காப்பு இயக்கத்தின் பாக்ஸ்கள் இல்லாத ஏரியாவே கோவையில் இல்லை என்ற அளவுக்கு இதில் மும்முரமாக இறங்கியுள்ளார். ஆனால், பாண்டியராஜனின் முழுநேர வேலை இது இல்லை. இவர் டர்னராகப் பணிபுரிந்து வருகிறார்.

போத்தனூரில் உள்ள ஒரு பேக்கரியில், இவர்கள் இயக்கம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிட்டுக்குருவி பாக்ஸ் அருகே, பாண்டியராஜனைச் சந்தித்தோம். "நான் 10-வது வரை படிச்சுருக்கேன். சின்ன வயசுல இருந்தே சூழல் மீது அதிக அன்பு. எல்லா உயிர்களிடமும் அன்பாக நடந்து கொள்வேன். ரோட்ல நாய், பூனை அடிப்பட்டு கிடந்தாக்கூட, அத வீட்டுக்குக் கொண்டுவந்து பார்த்துப்பேன். ஒரு கம்பெனில வேலைக்குப் போய்ட்டு இருந்தப்ப சூழல் சம்பந்தமா பணிகள் செய்யணும்னு யோசிச்சேன்.

அப்பறம்தான் நம்மாழ்வார் ஐயாவ பின் தொடர ஆரம்பிச்சேன். அவரோட பயிற்சி வகுப்புகள்ல கலந்துக்கிட்டேன். 2010-ல மரம் நடும் பணிகளைச் செய்தேன். ஒரு கட்டத்துல சிட்டுக்குருவி எண்ணிக்கை ஏன் குறையுதுணு யோசிச்சேன். மஹாராஷ்டிராவில் உள்ள முகமது தாலிவர் பற்றி படிச்சேன். சிட்டுக்குருவி சம்பந்தம்மா நிறைய ஆய்வுகள், களப்பணிகள்ல அவர் ஈடுபட்டிருந்தார். முழுக்க முழுக்க மனிதனை நம்பி வாழ்ற சிட்டுக்குருவிகளைக் காக்க, இந்தியாவிலேயே முதல்முறையாக செயற்கை முறைல பாக்ஸ் வைக்கத் தொடங்கினார்.

அதைப்பார்த்து நானும் கோவைல பாக்ஸ் வைக்கத் தொடங்கினேன். ஆரம்பத்துல, பாக்ஸ் அளவுல சில தவறுகள் செய்தேன். போகபோக அத சரி பண்ணிட்டோம். அந்த பாக்ஸ்லயே என்னோட செல்போன் நம்பரும் இருக்கும். அதைப்பார்த்து நிறைய பேர் போன் பண்ணுவாங்க" என்று பாண்டியராஜன் சொல்லிக்கொண்டிருக்கும்போது, நாம் நின்றுகொண்டிருந்த பேக்கரியின் உரிமையாளர் வந்தார். 'பாண்டி… போனவாரம்தான் இந்த பாக்ஸ்ல 4 குஞ்சுங்க வெளிய போச்சு. நிறைய பேர் வந்து பாக்ஸ் கேக்கறாங்கப்பா. உங்கக் கிட்ட பேச சொல்லிருக்கேன்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

மீண்டும் பாண்டியராஜன் தொடர்ந்தார். "எங்க இயக்கத்தை என்.ஜி.ஓ-வாக மாற்ற எனக்கு விருப்பமில்லை. நான் லேத் வொர்க் ஷாப் வெச்சுருந்தேன். ஆனா, குறுந்தொழில் நிறுவனங்கள் மீது விழுந்த அடில நானும் சிக்கிட்டேன். அதனால, வேலை கம்மி ஆகிடுச்சு. இப்ப, கான்ட்ரேக்ட் அடிப்படைல வெளியே போய் வேலை செஞ்சுட்டு இருக்கேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. ஒரு சிட்டுக்குருவி பாக்ஸ் செய்ய சராசரியா 80 ரூபாய் ஆகும். கோவை மட்டும் இல்ல, சென்னை, மதுரை, ஈரோடு, திருப்பூர்ல இருந்தும் பாக்ஸ் கேக்கறாங்க. பொருளாதாரம் சரியில்லாததால, எல்லாருக்கும் பாக்ஸ் கொடுக்க முடியறது இல்ல. இப்ப ஒரே பாக்ஸ்ல மூணு குருவிங்க தங்கற மாதிரி பாக்ஸ் தயாரிக்கறோம்.

சிட்டுக்குருவி அழிவின் விளிம்பில் எல்லாம் இல்லை. நம்மோட வாழ்க்கை முறை மாறினதுதான், அதோட எண்ணிக்கை குறைய காரணம். செல்போன் டவர்லாம் அதுக்குக் காரணம் இல்ல. எத்தனையோ செல்போன் டவர் பக்கத்துலயே நாங்க பாக்ஸ் வெச்சுருக்கோம். முன்னாடி ஓட்டு வீடுதான் அதிகம். சிட்டுக்குருவிங்க அதுல கூடு கட்டி வாழும். ஆனா, இப்ப ஓட்டு வீடுகள் எல்லாம் மாடி வீடுகளா மாறிட்டு இருக்கு. அதனால, சிட்டுக்குருவி கூடுகட்ட இடமில்லை. அதனாலதான், அதோட எண்ணிக்கை குறைஞ்சுருச்சு. மனுசன நம்பற ஒரே பறவை இனம் சிட்டுக்குருவிதான். இந்த உலகம் மனுசனுக்கானது மட்டுமல்ல. எல்லா உயிர்களுக்கும் சமமானது. மனுசன் வாழ எப்படி உரிமை இருக்கோ, அதே மாதிரி சக உயிர்கள் வாழவும் உரிமை இருக்கு என்பதை மனுசன் புரிஞ்சுக்கிட்டா போதும்" என்று உறுதியான குரலில் முடித்தார்.

பாண்டியராஜனைச் சந்தித்துவிட்டு திரும்பும்வழியில், கடை ஒன்றில் இருந்த சிட்டுக்குருவி பாக்ஸில், புதிதாக பூமிக்கு வந்துள்ள தங்களது குஞ்சுகளுக்கு, தாய் மற்றும் தந்தை சிட்டுக்குருவிகள் மாற்றி மாற்றி உணவளித்துக்கொண்டிருந்தன. மனிதனைச் சார்ந்து வாழும் ஓர் உயிருக்கு நாம் அனைவரும் செய்ய வேண்டிய அறம், அதை அறவணைப்பதுதான்.

அடுத்த கட்டுரைக்கு