Published:Updated:

ஆத்திரத்தில் பழிவாங்கிய வனத்துறை அதிகாரிகள்: சுந்தரி யானைப் பாகன் சிறையிலடைப்பு!

ஆத்திரத்தில் பழிவாங்கிய வனத்துறை அதிகாரிகள்:  சுந்தரி யானைப் பாகன் சிறையிலடைப்பு!
ஆத்திரத்தில் பழிவாங்கிய வனத்துறை அதிகாரிகள்: சுந்தரி யானைப் பாகன் சிறையிலடைப்பு!

ஆத்திரத்தில் பழிவாங்கிய வனத்துறை அதிகாரிகள்: சுந்தரி யானைப் பாகன் சிறையிலடைப்பு!

நெல்லையில் உயிரிழந்த சுந்தரி யானை உடலை அடக்கம் செய்ய அதன் பாகனிடம் வனத்துறையினர் பணம் பறித்த தகவல் வெளியானதால், ஆத்திரம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் பாகன் அசன் மைதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த பீர் முகமது என்பவரின் யானைக்கு பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த அசன் மைதீன் என்பவர் பாகனாக செயல்பட்டு வந்தார். 85 வயதான இந்த யானை முதுமை காரணமாக பலவித நோய்களால் பாதிக்கப்பட்டது. யானையின் இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. அத்துடன், யானையின் பற்கள் விழுந்துவிட்டதால் உணவு சாப்பிட முடியாத நிலை உருவானது. அதனால் சாப்பாடு, அவல், பழங்கள் உள்ளிட்டவை மட்டுமே சாப்பிட்டு வந்த சுந்தரி யானை, 3-ம் தேதி மாலை மாரடைப்பால் உயிரிழந்தது. 

யானைக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு அமைப்புகள் முன்வந்தன. ஆனால், வனத்துறை அதிகாரிகள் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். யானையை முதுமலை சரணாலயத்துக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்த வனத்துறை அதற்கான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அதனால் 20 நாள்களுக்கும் மேலாக நெல்லையில் உள்ள கால்நடை மருத்துவமனையிலேயே அசன் மைதீனும் அவரது உதவியாளர் ராஜேஸ்வரனும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே  சிகிச்சை அளித்தும் யானையைக் காப்பாற்ற முடியவில்லை. 

இந்த தகவல் கிடைத்த பின்னரும் கூட உடனடியாக வராத வனத்துறையினர், பலமணி நேரத்துக்குப் பின்னர் வருகை தந்து யானையை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். யானையை தூக்கிச் சென்ற லாரி மற்றும் குழி வெட்ட பயன்படுத்திய பொக்லைன் ஆகியவற்றுக்கு பணம் கொடுக்க பாகன் அசன் மைதீனிடம் 17,000 ரூபாயை வனத்துறையினர் கேட்டுள்ளனர். அவரிடம் பணம் இல்லாமல் தவித்த நிலையில், அங்கிருந்த அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா 10,000 ரூபாய் கொடுத்துள்ளார். 

அதைப் பெற்ற பாகன் அசன் மைதீன் வனத்துறையிடம் கொடுத்துள்ளார். மீதிப் பணத்தை கடன் வாங்கியாவது கொடுத்து விடுவதாக உறுதிஅளித்துள்ளார். வனத்துறையினரின் இந்தச் செயல் பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்தது. அதனால் இது குறித்த தகவல் வாட்ஸ்அப் வழியாக பொதுவெளியில் கசிந்து சர்ச்சைக்கு உள்ளானது. இதில் ஆத்திரம் அடைந்த வனத்துறையினர் பாகன் அசன் மைதீனை அழைத்துள்ளனர். வனத்துறை அலுவலகத்துக்குச் சென்ற அவரிடம் வாங்கிய 10,000 ரூபாய் பணத்தை திருப்பிக்கொடுத்த வனத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவசரமாக ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தனர். 

பாகன் அசன் மைதீன் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி பிரிவு 2 (5) (அட்டவணைக்கு உட்பட்ட விலங்குகளை வைத்திருத்தல்) பிரிவு 43 (1) (2) (அட்டவணைக்கு உட்பட்ட வனவிலங்குகளை வேறு மாநிலத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு கொண்டு வந்து, 30 நாள்களுக்குள் பதிவு செய்யாமல் இருந்தல்) பிரிவு 49 (அனுமதி பெறாத நபரிடம் வன விலங்கை விலைக்கு வாங்குதல்) பிரிவு 49A (a) (சட்ட விரோதமாக வனவிலங்கை வைத்திருத்தல்) பிரிவு 51 (தவறான ஆவணங்கள் வைத்திருத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதில் பிரிவு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் (1972) பிரிவு 51-ன் படி கைது செய்யப்பட்டவருக்கு 3 வருடம் சிறைத்தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம். ஜாமீனில் வெளி வரமுடியாத இந்த சட்டப்பிரிவும் பாகன் மீது தொடரப்பட்டிருக்கிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ``கடந்த 15 வருடங்களுக்கு முன்பே இந்த யானை கேரளாவின் ராணி என்ற இடத்தில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளது. அதன் பின்னர் பல ஆண்டுகளாகவே நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், குமரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோயில் விழாக்களிலும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளிலும் தனியார் வீட்டு சுபநிகழ்வுகளிலும் பங்கேற்று இருக்கிறது. 

அப்போதெல்லாம், வனத்துறையினருக்கு இந்த யானையின் ஆவணங்கள் தவறானவை என்பது தெரியாத நிலையில், தற்போது அவர்கள் அடக்கத்துக்கு 10,000 ரூபாய் பணம் பறித்த தகவல் வெளியானதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பாகனை பழிவாங்கி இருக்கிறார்கள். ஏற்கெனவே யானை இறந்த துக்கத்தில் கதறிக் கொண்டிருந்த பாகனை வனத்துறை சிறையில் அடைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. யானையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போதிலும் உள்நோக்கத்துடன் பாகனை மட்டும் சிறையில் அடைத்திருப்பது கண்டனத்துக்குரியது’’ என்கிறார்கள். 

இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டதற்கு, ‘’இந்த யானையை கேரளாவில் உள்ள ராணி என்கிற இடத்தில் இருந்து 10 நாள்களுக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு மட்டுமே அந்த மாநில வனத்துறையிடம் அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அங்கே கொண்டு செல்லாமல் இங்கேயே வைத்துள்ளனர். முறைப்படி அனுமதி பெற்று யானையை வாங்கியதற்கான ஆவணங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை. சில ஆவணங்கள் போலியானவையாக இருக்கின்றன. சட்டத்துக்கு விரோதமாக யானையை வைத்திருந்ததற்காக பாகனை கைது செய்துள்ளோம். மற்றொருவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’’ என்று முடித்துக்கொண்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு