Published:Updated:

திருட்டுக்கு இடைஞ்சல்? - 20 நாய்களை விஷம் வைத்துக் கொன்ற மர்மக் கும்பல்!

திருட்டுக்கு இடைஞ்சல்? - 20 நாய்களை விஷம் வைத்துக் கொன்ற மர்மக் கும்பல்!
திருட்டுக்கு இடைஞ்சல்? - 20 நாய்களை விஷம் வைத்துக் கொன்ற மர்மக் கும்பல்!

நாடோடி மனிதர் வேட்டையாடத் தொடங்கியதிலிருந்து தனக்குத் துணையாக நாய்களை வளர்த்துவந்தான். விலங்குகளிடம் இருந்து தன்னைப் பாதுகாக்கவும், திருடர்களிடம் இருந்து தங்களது சொத்துகளைப் பாதுகாக்கவும், செல்லப்பிராணியாகவும் நாய்கள் மனிதர்களுடன் இணக்கமாக பழகிவருகிறது.

மனிதனுக்குப் பாதுகாப்பாக இருக்கும் அதே நாய்கள், தங்களுக்குத் தொந்தரவாக இருப்பதாகத் திருடர்கள் நினைத்ததன் விளைவாக 20-க்கும் மேற்பட்ட நாய்கள் கரசங்கல் பகுதியில் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. இறைச்சியில் விஷம் கலந்து நாய்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவம் அந்தக் கிராமத்தையே பெரும் துயரில் ஆழ்த்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில் கடந்த ஓர் ஆண்டு காலமாக வீட்டில் கட்டி வைத்திருக்கும் கால்நடைகள் தொடர்ந்து காணாமல் போய்வந்தன. நள்ளிரவில் தொடர்ந்து கால்நடைகள் திருடு போனதையடுத்து இப்பகுதியினர் வீட்டில் நாய்களை வளர்க்க ஆரம்பித்தனர். நள்ளிரவில் திருட வருபவர்களைக் கண்டால் நாய்கள் குறைக்க ஆரம்பித்துவிடும். இதனால் கடந்த 6 மாதமாகக்  கால்நடைகள் திருட்டு குறைந்து வந்துள்ளது.

இதனால் அப்பகுதியினர் நாய்களை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதனால் இரவு நேரங்களில் திருடுவதற்கு நாய்கள் தடையாக இருந்து வந்தன. இதற்கிடையே கரசங்கால் கிராமத்தில் நேற்று இறைச்சி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் விஷம் வைத்து நள்ளிரவில் நாய்களுக்குக் கொடுத்துவிட்டனர். இதைச் சாப்பிட்ட 20 நாய்கள் அந்தக் கிராமத்தில் ஆங்காங்கே இறந்துகிடந்தன. சில நாய்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. அந்த நாய்களைக் கிராமத்தினர் காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. ‘விஷம் கலந்த உணவைக் கொடுத்ததால் சுமார் 20க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துவிட்டன. நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்றவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கரசங்கால் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.