Published:Updated:

யானைகள் புத்துணர்வு முகாம்: நெல்லையில் இருந்து புறப்பட்டுச்சென்ற காந்திமதி

யானைகள் புத்துணர்வு முகாம்:  நெல்லையில் இருந்து புறப்பட்டுச்சென்ற காந்திமதி
யானைகள் புத்துணர்வு முகாம்: நெல்லையில் இருந்து புறப்பட்டுச்சென்ற காந்திமதி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற உள்ள யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக, நெல்லை மாவட்டத்தில் இருந்து நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி உள்ளிட்ட 5 யானைகள் புறப்பட்டுச்சென்றன. 

தமிழகத்தில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு, ஆண்டுதோறும் தமிழகஅரசு சார்பாகப் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில், பவானி ஆற்றங்கரையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முகாம், வரும் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் புறப்பட்டுச்செல்லத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில்,  நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் யானை காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி அம்பாள் திருக்கோயில் யானை கோமதி, தென்காசி இலஞ்சி குமாரர் கோயிலுக்குச் சொந்தமான வள்ளி, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் சொந்தமான இரு யானைகள் என 5 யானைகள் லாரிகள் மூலமாக தேக்கம்பட்டி முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டது. 

நெல்லையப்பர் கோயிலின் காந்திமதி யானையை நெல்லைச் சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு அழைத்துவந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், அதை லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு யானையுடன் இரு பாகன்கள், ஒரு உதவியாளர் செல்கின்றனர்.  48 நாள்கள் நடக்கும் இந்த முகாமில், யானைக்கு மருத்துவப் பரிசோதனை, சரிவிகித உணவு, எடை பராமரிப்பு, உடற்பயிற்சி ஆகியவை வழங்கப்பட இருக்கிறது. 

புத்துணர்ச்சி முகாமுக்குச் செல்வதால், யானையின் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியமாக இருக்க உதவுவதாக யானைப் பாகன்கள் தெரிவித்தனர். அத்துடன், மருத்துவர்களின் உதவியுடன் உடற்பயிற்சி, மருந்துகள் வழங்கப்படுவதால், அவற்றின் எடை குறைக்கப்பட்டு ஆரோக்கியம் அதிகரிக்க வாய்ப்பு உருவாவதாகவும் பாகன்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த யானைகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் பக்தர்களும் வழியனுப்பிவைத்தனர்.