Published:Updated:

குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் முன்பு இதைக் கொஞ்சம் யோசிங்க! #WorldMonkeyDay

ஓர் ஆய்வின்படி ஒரு நாளைக்கு 6,000 குரங்குகள் ஏதாவது ஒரு வகையினால் பாதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சாலையில் நடக்கும் விபத்துகள், உணவு முறை மாற்றம், மக்கள் சில நேரங்களில் வன்முறையைக் கையாளுதல் போன்றவற்றால் இந்நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் முன்பு இதைக் கொஞ்சம் யோசிங்க! #WorldMonkeyDay
குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் முன்பு இதைக் கொஞ்சம் யோசிங்க! #WorldMonkeyDay

மெரிக்காவில் உள்ள மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கேசி சூர் மற்றும் எரிக் மில்லிகின் ஆகிய இரு மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'குரங்குகள் தினம்' ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் உலகம் முழுவதும் குரங்குகளின் பாதுகாப்பு மற்றும் அரிய வகை இனங்கள் பற்றி மக்களுக்கு விலங்கு நல ஆர்வலர்களால் பிரசாரம் செய்யப்படும்.

குரங்குகளிலிருந்து மனிதன் வந்தான் என்பது மெஞ்ஞானமும், விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்ட விஷயம். மனிதர்களுக்கும், குரங்குகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அவற்றின் சில பரிணாமம் கழித்துதான் மனிதன் தோன்றினான். முகம், உள்ளங்கை உள்ளங்கால்களில் தவிர உடல் முழுவதும் ரோமம் நிறைந்த விலங்கு குரங்கு. கூட்டமாக வந்து மனிதனை சில நொடியிலேயே குஷிப்படுத்திவிடும். குரங்கு ஒரு பாலூட்டி விலங்கு. குரங்குகளில் 14 முதல் 16 சென்டிமீட்டர் வளரும் சிறிய குரங்கிலிருந்து, ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் பெரிய குரங்குகள் வரை உள்ளன. குரங்குகள் ஓர் அனைத்துண்ணி. பழங்கள், இலைகள், தானியங்கள்,  கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற உயிரினங்களைக்கூட குரங்குகள் உண்கின்றன. குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் இணைக்கிறது. குரங்குகள் மரத்திலும், நிலத்திலும், காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்றன. சரி, நம்மூர் குரங்குகளின் நிலை தற்போது எப்படி இருக்கிறது?

நம்மூர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மந்தி, கருமந்தி, சோலை மந்தி போன்ற அரிய வகையினங்கள் காணப்படுகின்றன. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாகச் சோலை மந்திகள் காணப்படும். அவை பெரும்பாலும் உயரமான மரங்களில் உச்சியில் காணப்படுகிறது. இப்பொழுது அவை வாழ்க்கைப் போராட்டத்தில் இருக்கின்றன. அதன் வாழிடங்களை மனிதர்கள் சூறையாடியதால் நகர்ப்புறங்களிலும்,சாலைகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. காரணம், நாம் அங்குள்ள மரங்களை வெட்டி அதற்குப் பதிலாக பசுமையான டீ எஸ்டேட்களாக செய்து வைத்திருப்பதுதான். இதோடு மட்டுமல்லாமல் அவை விரும்பிச் சாப்பிடும் பழ மரங்களை அழிப்பதால் அதன் உணவுச் சங்கிலியும் மாறி விடுகிறது. தேவையில்லாத பொருள்களைச் சாப்பிடுவதால் ஜீரண மண்டல நோய்த் தொற்று போன்றவற்றினால் சில குரங்குகள் உயிழந்தும் விடுகின்றன.

சுற்றுலா வருகின்ற மக்கள், அவற்றுக்குப் பழக்கம் இல்லாத பொருள்களைக் கொடுப்பதால் உணவுப் பழக்கமும் மாறுகின்றன. ஒரு தடவை உப்பு மற்றும் மசாலா சுவைகளுக்கு பழகிக் கொண்டால் அடுத்த முறையிலிருந்து ருசியான பொருள்களையே சாப்பிட ஆரம்பித்துவிடும். இப்பழக்கம் நீடிக்கவே, பின்னர் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பிடுங்கிச் சாப்பிட ஆரம்பித்து விடுகிறது. சில நேரங்களில் பிடுங்கிற பழக்கம் உச்சகட்டத்தையும் அடையும் எனலாம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது பெரும்பாலும் குரங்குகளையே நாம் குற்றம் சாட்டுவோம். ஆனால், உண்மையில் தவறு நம் மீதுதான்.

இன்னும் வால்பாறை, சாடிவயல் போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டியுள்ள கிராமங்களில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருள்ளை எடுத்துச்செல்கின்றன. அதனுடைய வாழிடத்தையும், உணவுப் பழக்கத்தையும் அழித்து விட்டோம். அதனால் அதற்குத் தேவையான பொருள்ளை அவை காட்டுக்கு வெளியிலிருந்து எடுத்துக்கொள்கின்றன. காட்டைவிட்டு சாலைகளுக்கும் வருகின்றன. ஓர் ஆய்வின்படி ஒரு நாளைக்கு 6,000 குரங்குகள் ஏதாவது ஒரு வகையினால் பாதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சாலையில் நடக்கும் விபத்துகள், உணவு முறை மாற்றம், மக்கள் சில நேரங்களில் வன்முறையைக் கையாளுதல் போன்றவற்றால் இந்நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

இங்கு சாலை விபத்தினால் பாதிக்கப்பட்ட உண்மை நிலையைப் பதிவு செய்கிறேன். சில நாள்களுக்கு முன்பு அதிரம்பள்ளி போகும் சாலையில் விபத்து ஒன்றில் ஒரு குரங்கு அடிப்பட்டு விட்டது. அதன் தாய் மூன்று நாள்களாக தன் இரத்தம் வழிந்த குட்டியை சாலையோரத்திலே வைத்துக்கொண்டு எங்குச் செல்லாமல் இருந்தது. இக்காட்சி பார்ப்போரை நெகிழச் செய்தது. இதற்கு முக்கியக் காரணம் சாலையோரங்களில் தின்பண்டங்களை வீசுவதால் அதை எடுக்க சாலையைக் கடப்பதுதான். வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் படி குற்றமாகும் அதையும் மீறிக் கொடுப்பதால் சில உயிரினங்கள் இறக்க நேரிடுகிறது. இதைத் தடுக்க அரசாங்கமும் வனத்துறையும் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டால் இது போன்ற சம்பவங்களிலிருந்து அவற்றைக் காப்பாற்றலாம் என்பது வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது

ஏற்கெனவே அவற்றின் இருப்பிடத்திற்கு ஆபத்து விளைவித்துவிட்டோம்; இப்படி உணவுகள் கொடுத்து பழக்கப்படுத்தி அவற்றின் இருப்பிற்கும் ஆபத்து ஏற்படுத்திவிடக் கூடாது என்பதே இந்த தினத்தில் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டிய விஷயமாகும்.