Published:Updated:

வனக்கணக்கு!

வனக்கணக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
வனக்கணக்கு!

வனக்கணக்கு!

புலிகளை எப்படிக் கணக்கெடுப்பார்கள், அவற்றைக் கண்களால் பார்த்தா, அதுவும் அவற்றின் வாழிடத்திலேயேவா? புலிகளை ஏன் கணக்கெடுக்க வேண்டும்? ஒரே புலியை மீண்டும் கணக்கெடுத்துவிட்டால் என்ன செய்வது? பார்ப்பது ஏற்கெனவே பார்த்த புலியில்லை என்பதை எப்படித் தெரிந்துகொள்வார்கள்?

வனக்கணக்கு!

புலிகள் கணக்கெடுப்புக்காகக் களக்காடு-முண்டந்துறை வனப் பகுதிக்குள் நுழையும் வரை பல கேள்விகளும் மனச்சுவர்களில் முட்டி மோதிக்கொண்டிருந்தன.  சிலிகான் படிகங்கள், பராமரிப்பு கவர்கள், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (Plaster of Paris) போன்றவற்றையும், உணவுக்குத் தேவையான அரிசி, காய்கறி, மளிகை சாமான்கள் என்று ஆளொன்றுக்குக் குறைந்தது பத்துக் கிலோ மூட்டைகளையும் எங்களுக்கான உடை, இரவுக் குளிரைச் சமாளிப்பதற்குப் போர்வை போன்ற பொருள்களையும் சுமந்துகொண்டு கணக்கெடுப்புக்காகக் காடேறத் தொடங்கினோம்.

முண்டந்துறை வனச்சரகத்தில் உள்ள பூங்குளம் என்ற பகுதிக்குத்தான் நாங்கள் சென்றிருந்தோம். மொத்தம் ஆறு நாள்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும். அது மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டது.

1. முதல் மூன்று நாள்களுக்கு ஊனுண்ணிகள் (வேட்டையாடிகள்) கணக்கெடுப்பு (புலிகள் மட்டுமன்றி மற்ற விலங்குகளான சிறுத்தை, காட்டு நாய் போன்றவற்றின் தடயங்கள் கண்ணில் பட்டால் அவற்றையும் பதிவு செய்ய வேண்டும்).

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வனக்கணக்கு!புலிகளைக் கணக்கெடுப்பது அவற்றை நேரில் பார்த்து மட்டுமல்லாமல் மேலும் சில முறைகளில் செய்யப்படுகிறது. கண்ணில் படுவது (அதிர்ஷ்டமிருந்தால் மட்டுமே அது நடக்கும்), அதன் எச்சம், கால்தடம், வேட்டையாடி விட்டுச்சென்ற மிச்சம் போன்றவற்றையும் கணக்கெடுக்க வேண்டும். எச்சங்களை சிலிகான் படிகங்களைப் போட்டுக் கெட்டுப்போகாமல் பராமரித்து கவரில் பாதுகாப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எச்சங்களை ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்புவார்கள். அவர்கள் அந்த எச்சங்களை ஆய்வுசெய்து ஒரே புலியின் எச்சம், வெவ்வேறு புலிகளின் எச்சம் என்று தனித்தனியாகப் பிரித்து, அது எங்கிருந்து சேகரிக்கப்பட்டதோ அங்கு வாழும் புலிகளைக் கணக்கிடுவார்கள். புலியின் கால்தடங்களை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போட்டு அச்செடுத்துக் கொள்ளவேண்டும். மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே புலிகளின் உள்ளங்காலிலும் ரேகைகள் இருக்கும். அது மெல்லியதாகக் கால்தடங்களில் பதிந்திருக்குமாம். பிளாஸ்டர் மூலம் அச்செடுக்கும்போது அந்தத் தடயங்கள் பதிவாகும். அதைக் கொண்டுவந்து சேகரிக்கப்படும் மற்ற அச்சுகளோடு பொருத்திப் பார்த்து அதேபோல் ஒரே புலியினுடையதா வெவ்வேறு புலிகளா என்று அறிந்து பதிவு செய்துகொள்வார்கள். புலிகள் அபூர்வமாகக் கண்ணில் பட்டால் அவற்றையும் பதிவுசெய்ய வேண்டும்.

புலி கண்ணில் படும் இடத்தில் மற்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டிருந்தால் அந்தத் தடயங்கள் அனைத்துமே அதனுடையதாகத்தானிருக்கும். அதற்குக் காரணம் “புலிகள் கூட்டமாக வாழும் உயிரினமில்லை. அது தனித்துத்தான் வாழும். ஒவ்வொரு புலியும் அதற்கான எல்லையை வகுத்திருக்கும். அந்த எல்லை குறைந்தது ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவு இருக்கும். ஆகவே அங்கு வேறு எந்தப் புலியும் இருப்பதற்கு வாய்ப்பில்லை”

2. இரண்டாம் மூன்று நாள்களுக்குத் தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு (மான் வகைகள், குரங்கு வகைகள் போன்ற விலங்குகள்).

3. கடைசி நாள் தாவர வகைகள் கணக்கெடுப்பு.

புலிகளைத்தானே கணக்கெடுக்க வந்தோம். ஏன் இவற்றையெல்லாம் கணக்கிடவேண்டும்?

ஆதிக்க உயிரினங்கள், தலைமை உயிரினங்கள், குடையுயிரினங்கள், உய்யநிலை இணைப்பு உயிரினங்கள், மீள் சிறப்பு உயிரினங்கள் என்று காட்டுயிர்கள் பல வகைப்பாடுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவற்றில் புலிகள் தலைமை உயிரின வகையைச் சேர்ந்தவை.

காட்டைக் காப்பதற்கு இவை உயிர்த்திருப்பது மிக முக்கியமானது. குறைந்த அளவிலான தலைமை உயிரினங்கள் காட்டின் சுற்றுச்சூழலையும் காட்டுயிர்களின் வாழிடத்தையும் காப்பதில் பெரும்பங்கு வகிக்கும். அதன் அழிவு மற்ற உயிர்களுக்கு வாழிடச் சிக்கல்களை உருவாக்கி அவற்றை அழிவுக்கான பாதையில் இட்டுச்செல்வதாகக் கருதப் படுகிறது.

புலி என்ன சாப்பிடும்? புள்ளிமான், கடமான், காட்டு மாடு போன்ற தாவர உண்ணிகளை. அவை எதைச் சாப்பிடுகின்றன? தாவரங்களை. தாவரங்கள் எப்படிப் பெருகுகின்றன? தாவர உண்ணிகள் சாப்பிட்டுவிட்டுப் பல்வேறு இடங்களில் போடும் எச்சங்களின் மூலமாகப் பரவுவதால் பெருகுகின்றன.

இதில் புலிகள் இறந்துவிட்டால் தாவர உண்ணிகள் எண்ணிக்கையில் பெருகி வாழிடச் சிக்கல் ஏற்படும். புலிகளுக்கான போதிய உணவு இல்லாத அளவுக்குத் தாவர உண்ணிகள் குறைந்துவிட்டால் பசியில் புலிகளும் இறக்கும், தாவரங்களும் பெருகமுடியாமல் அழியத்தொடங்கும். இப்படிப் பல காட்டுயிர்களின் வாழ்வுக்குப் புலியின் இருப்பு தேவைப்படுவதால் அதைக் கணக்கிடும்போது அவற்றுக்கு உணவாகும் தாவர உண்ணிகளையும், அந்தத் தாவர உண்ணிகளுக்கு உணவாகும் தாவரங்களையும் கணக்கெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

வனக்கணக்கு!இஞ்சிக்குழியில் ஓர் இரவு தங்கிவிட்டு மறுநாள் அங்கிருந்தே கணக்கெடுப்பைத் தொடங்கினோம். பூங்குளம் வரம்புக்குட்பட்ட தாவர உண்ணிகளைக் கணக்கிடுவதற்கான டிரான்செக்ட் லைன் அங்கிருந்து தொடங்கு வதால் முதலில் அவற்றைக் கணக்கெடுத்துக் கொண்டே வெள்ளச்சிப்புடவுவரை பயணித்தோம். அங்கிருந்து தொடங்கிய புலிகள் கணக்கெடுப்பில் எங்குமே புலி இருப்பதற்கான தடங்கள் கிடைக்காமல் சோர்ந்துவிட்டோம்.

ஆனால், வனக்காவலர்களான ராமையாவும் மணிகண்டனும் ‘இங்கெல்லாம் அதிகமாகப் புலிகள் வராது, வந்தாலும் அவற்றின் தடயங்கள் கிடைக்குமளவுக்கு இங்கு ஈரநிலங்கள் இல்லை. இன்னும் உயரம் செல்லவேண்டும்’ என்று பயணத்தை ஊக்கப்படுத்தினார்கள். அங்கிருந்து சுமார் பத்துக் கிலோமீட்டர் உயரம் சென்று பூங்குளத்தை அடைந்தபோது அதிலிருந்து மேலே ஈத்தல் காடு (மூங்கில் குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகை) வழியாகப் பொதிகை மலை நோக்கிப் பயணித்தபோது ஐந்தலைப் பொதிகைக்கும் நாக பொதிகைக்கும் இடையிலிருந்த ஒரு மலைப்பகுதியின் உச்சியில் புலி வேட்டையாடிய காட்டு மாட்டின் மிச்சங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. சுமார் இரண்டு மாதங்களுக்குமுன் வேட்டையாடப்பட்ட காட்டெருதின் எலும்புகளையும், மற்றுமொரு காட்டெருதின் மண்டையோட்டையும் காணமுடிந்தது. இரண்டாவதாகப் பார்த்தது வேட்டையாடி இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஆகியிருக்க வேண்டும். புலி இருப்பதற்கான தடயம் கிடைத்ததைப் பதிவுசெய்துவிட்டு அங்கிருந்து சில கிலோமீட்டர் கீழே பாலத்தடிப்புடவில் (குகை) இரண்டு நாள்கள் தங்கி மேலும் தேடினோம். புலியின் கால்தடங்களைச் சில இடங்களில் பார்க்கமுடிந்தது. தடங்கள் மிக மெல்லியதாக இருந்ததால் அவற்றை அச்செடுக்க முடியவில்லை. அதனால் வேட்டையாடப் பட்டதன் மிச்சங்களை ஒளிப்படம் எடுத்துக் கொண்டு இறங்கத் தொடங்கினோம். இறங்கும் வழியில் தாவர வகைகளையும், விலங்குகளுக்கு ஊறு விளைவிக்கும் களைச்செடிகளையும் கணக்கெடுத்து வந்து வனத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம்.

“இதேபோன்று நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தப் பட்டு அவையனைத்தும் டெஹ்ராடூனிலி ருக்கும் இந்திய வனத் துறையின் தலைமை யிடத்துக்கு அனுப்பப் படும். அங்கிருந்து அங்கீகரிக்கப்பட்ட புலிகளின் எண்ணிக்கை வெளியிடப்படும்” என்றார் வேட்டைத் தடுப்புக் காவலர் ராமையா.

எட்டு நாள்கள் காட்டைச் சுற்றிச் சுற்றியே பயணித்த எங்கள் மனமெங்கும் இன்னும் நிறைந்திருக்கிறது காடு.

க.சுபகுணம் - படம்: மதன்சுந்தர்