Published:Updated:

7 மாடுகள்... மாதம் ரூ. 90,000 வருமானம்...‘கார் ஷெட்’டில் மாடுகள் வளர்க்கும் ஐ.டி தம்பதி!

7 மாடுகள்... மாதம் ரூ. 90,000 வருமானம்...‘கார் ஷெட்’டில் மாடுகள் வளர்க்கும் ஐ.டி தம்பதி!
பிரீமியம் ஸ்டோரி
News
7 மாடுகள்... மாதம் ரூ. 90,000 வருமானம்...‘கார் ஷெட்’டில் மாடுகள் வளர்க்கும் ஐ.டி தம்பதி!

கால்நடை

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழக அளவில் நாட்டு மாடுகள் பற்றி மிகப்பெரிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் போராட்டத்தின்போது மிகப்பெரிய விவாதமாக இருந்தது, நாட்டு மாடுகளின் பாதுகாப்பு. இந்திய நாட்டு மாட்டினங்கள் சர்வதேச சதியால் எப்படி அழித்தொழிக்கப் படுகின்றன என்பதை முகநூல், வாட்ஸ்அப் போன்றவை மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டார்கள். இனிமேலும் நாட்டு மாடுகளைப் பாதுகாக்கா விட்டால், அடுத்த தலைமுறைக்குக் காண்பிப்பதற்கு மாடுகள்கூட இருக்காது என விவாதங்கள் பெருகின. அதேபோல் நாட்டு மாட்டுப் பால்தான் சத்துமிக்கது என்ற பிரசாரமும் ஒருபுறம் தீவிரமடைந்தன. இந்தப் பிரசாரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த ப்ரீதா-மணிகண்டன் தம்பதி, நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.டி துறையில் வேலை பார்த்துக்கொண்டே சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள சுரேந்தர் நகரில் பகுதி நேரமாக நாட்டு மாடுகளைப் பராமரித்து வருகின்றனர்.

7 மாடுகள்... மாதம் ரூ. 90,000 வருமானம்...‘கார் ஷெட்’டில் மாடுகள் வளர்க்கும் ஐ.டி தம்பதி!

ஒரு விடுமுறை நாளில் மாடுகளைப் பராமரிக்கும் வேலைகளில் இருந்த ப்ரீதா, மணிகண்டன் ஆகியோரைச் சந்தித்தோம்.

“ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த வரைக்கும் எங்களுக்கு நாட்டு மாடுகள் பத்தி எதுவுமே தெரியாது. அந்தப் போராட்டம் சூடுபிடிச்சதுக்கப்புறம்தான் இது நம்முடைய பாரம்பர்யத்தைக் காக்க நடக்கிற போராட்டம்னு புரிஞ்சது. உடனே, நாங்க கிளம்பி கரூர் மாவட்டத்துல இருக்குற ‘வானகம்’ பண்ணைக்குப் போனோம். அங்க இயற்கை வழியில நாட்டு மாடு வளர்க்குற முறைகளைக் கத்துக்கிட்டு, வீட்டுத் தேவைக்காக ஒரு மாட்டை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சோம். இப்போ நிறைய மாடுகளை வளர்த்துட்டுருக்கோம்” என்று முன்னுரை கொடுத்த ப்ரீதாவைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார், மணிகண்டன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
7 மாடுகள்... மாதம் ரூ. 90,000 வருமானம்...‘கார் ஷெட்’டில் மாடுகள் வளர்க்கும் ஐ.டி தம்பதி!

“என்னுடைய குழந்தைக்கு நல்ல பால் கிடைக்கணும் அப்படிங்கிற நோக்கத்துலதான் இதை ஆரம்பிச்சோம். ஆனா, இப்ப எங்க ஏரியாவிலேயே நாற்பது வீடுகள்ல இருந்து எங்ககிட்ட பால் வாங்கிட்டுப் போறாங்க. சந்தையில் கிடைக்குற பாலைவிட இந்தப் பாலின் விலை அதிகமா இருந்தாலும், ஆரோக்கியமானதுனு உணர்ந்து தயங்காம வாங்கக்கூடிய மக்களும் இருக்குறாங்க. நான் சிறுசேரில இருக்குற ஒரு நிறுவனத்துல வேலை செய்றேன். ப்ரீதா, தரமணியில் இருக்குற ஒரு நிறுவனத்துல வேலை செய்றாங்க. நாட்டு மாடுகள் மேல அதிக ஆர்வம் இருக்குறதாலதான் இந்தச் சிட்டிக்குள்ளேயே எங்களால வளர்க்க முடியுது. எங்க வீட்டுல கார் ஷெட்டுக்காக ஒதுக்குன 800 சதுர அடி இடத்துலதான் மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சோம். இப்போ  மாடுகள் அதிகமானதால பக்கத்திலேயே இன்னொர் 1200 சதுர அடி இடத்துல விரிவாக்கம் செய்திருக்கோம். ஒரு மாட்டுல ஆரம்பிச்சோம். இப்போ, காங்கிரஜ், சாகிவால், கிர், தார்பார்க்கர்னு 7 மாடுகளும் 7 கன்னுக்குட்டிகளும் இருக்கு.

7 மாடுகள்... மாதம் ரூ. 90,000 வருமானம்...‘கார் ஷெட்’டில் மாடுகள் வளர்க்கும் ஐ.டி தம்பதி!

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கத்துல எங்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலமிருக்கு. அங்க 5 மாடுகள், 10 கன்னுக்குட்டிகள் இருக்கு. நாட்டுமாட்டுப் பால் விற்பனையோடு, மாடுகள்ல இருந்து கிடைக்கிற சாணத்தைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களையும் தயாரிச்சு விற்பனை செய்றோம். இந்தப் பொருள்களைத் தயாரிக்கிறதுக்கும் நாங்க பயிற்சி எடுத்துருக்கோம்.

மாடுகளுக்குத் தேவையான பசும்புல்லை மாதவரத்துல வாங்கிக்கிறோம். தேவையான அளவு வைக்கோல், உளுந்துபொட்டு, அரிசித் தவிடு, தீவனங்கள்னு வாங்கி வெச்சுக்குவோம். தவிடு எல்லாம் ஆலந்தூர் மார்க்கெட் பகுதியிலயே கிடைக்குது. மாடுகளைப் பராமரிக்க நிரந்தரமா ஒருத்தரை அமர்த்திருக்கோம். பால் கறந்து கொடுக்க ஒருத்தரை அமர்த்திருக்கோம். மாடுகள் சினையானவுடன் அச்சரப்பாக்கத்துக்குக் கொண்டு போயிடுவோம். கன்னு போட்டவுடன் திரும்பவும் இங்கே அழைச்சிட்டு வந்திடுவோம். நாட்டு மாடுகள் பத்தி எல்லோருக்கும் தெரியணும், அதோட பாலை எல்லோரும் சுவைச்சுப் பார்க்கணும்னுதான் இங்க வெச்சு மாடுகளைப் பராமரிச்சிட்டுருக்கோம்” என்றார்.

நிறைவாக வருமானம் குறித்துப் பேசிய ப்ரீதா, “இப்போ 7 மாடுகள்ல இருந்து ஒரு நாளைக்கு 40 லிட்டர்ல இருந்து 50 லிட்டர் வரை பால் கிடைக்குது. ஒரு லிட்டர் பால் 100 ரூபாய்னு  விற்பனை செய்றோம். விற்பனையாகாம தேங்குற பாலை நெய்யாக்கி விற்பனை செய்றோம். பால், நெய் விற்பனை மூலமா மாசத்துக்கு 90,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச்செலவு, சம்பளம் எல்லாம் சேர்த்து 60,000 ரூபாய் போக மாசம் 30,000 ரூபாய் லாபமாக் கிடைச்சிட்டுருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு

ப்ரீதா, செல்போன்:98414 17443.

- இ.மோகன்,  படங்கள்: தே.அசோக்குமார், ஆ.வள்ளிசௌத்திரி

விற்பனைக்குக் கைகொடுக்கும் மாநகரம்

“நாட்டு மாட்டுப் பால், நெய், வறட்டி, பஞ்சகவ்யா, தொழுவுரம், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி, விபூதி, கோ அர்க், சாம்பிராணினு தயாரிக்கிறோம். மாடித்தோட்டம் வெச்சிருகிறவங்க இயற்கை இடுபொருள்களை வாங்கிக்கிறாங்க. விபூதி, கோ அர்க் பத்தின விவரம் தெரிஞ்சவங்களும் தேடி வந்து வாங்கறாங்க. கிராமங்கள்லதான் சந்தையைத் தேடி அலைய வேண்டியிருக்கும். மாநகரப்பகுதிங்கறதால விற்பனைக்குப் பிரச்னையேயில்ல” என்கிறார் ப்ரீதா.

“தரமான பாலுக்காக தாராளமா செலவு செய்யலாம்!”

ஒரு லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு ப்ரீதா-மணிகண்டன் தம்பதியிடம் வாங்கி, பயன்படுத்தி வருகின்றனர் சென்னை, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதுகுறித்தான அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றனர்.

7 மாடுகள்... மாதம் ரூ. 90,000 வருமானம்...‘கார் ஷெட்’டில் மாடுகள் வளர்க்கும் ஐ.டி தம்பதி!

சங்கீதா: “இப்பலாம் எல்லா பொருள்கள்லயும் கலப்படம் இருக்கிறதால, உணவு எல்லாமே நஞ்சு கலந்த மாதிரிதான் இருக்கு. அதுல ஆரோக்கியமான உணவு வகைகள் பத்தின விழிப்பு உணர்வு இப்பதான் கொஞ்சமா கொஞ்சமா வளர ஆரம்பிக்குது. அப்படிதான் ஏ2 பால் பத்தி கேள்விப்பட்டோம். விலை அதிகமாக இருக்கறதா சொன்னாலும் தரத்திற்காக விலையில கொஞ்சம் சமரசம் செய்துகொள்ளலாம். விலையில சமரசம்னாலும் அது ரொம்ப பெரிய அளவுல இல்லை. தரமான பாலுக்காக தாராளமா செலவு செய்யலாம்.”

ப்ரியா: “மூணு, நாலு மாசமாதான் இந்த பால் வாங்கிட்டு இருக்கோம். ஆரம்பத்துல விலை கேட்டவுடனே கொஞ்சம் அதிகமா தோணினாலும் மார்க்கெட்ல கலப்படத்தோட வர்ற பால்கூட 60 ரூபாய்க்கு விக்குது. இப்படியிருக்கிற சூழ்நிலையில ஆரோக்கியத்துக்காக கொஞ்சம் அதிகம் செலவு பண்ணி வாங்குறதுல தப்பில்ல.”